Pages

Thursday, May 6, 2021

இஞ்சி புளிக்காய்ச்சல்.

 இது இஞ்சி புளிக்காய்ச்சல் செய்முறை

"இப்போதுள்ள காலகட்டத்தில், "காய்ச்சலுக்கெல்லாம்" செய்முறை எழுதி சந்தோஷபடுகிறார்கள். ஆனாலும்  என்ன....! அந்த உண்மையான  "காய்ச்சலை" கட்டுப்படுத்தும் தன்மை எனக்கிருக்கிறது என்பதில் எனக்கும் நிறையவே பெருமைதான் என இஞ்சி  தன்னுடன் இணையும் புளியிடம்  இரகசியமாக கூறி கேலியுடன் நகைக்குமோ....?" 


இதற்கு முதலில் தனியா( கொத்தமல்லி விரை) ஒரு பெரிய கரண்டி, கடுகு ஒரு ஸ்பூன், உளுந்தம்பருப்பு ஒரு பெரிய ஸ்பூன், வெந்தயம் பெரிய ஸ்பூன் என்ற அளவு எடுத்துக் கொண்டு கடாயிலிட்டு எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து ஆற வைக்கவும். 


பிறகு சிகப்பு வத்தல் பத்து எடுத்து (அடாடா .. இப்படி எண்ணி எடுக்கப்பட்ட  எங்களில் எப்படி ஒன்று குறைந்து போனோம்... "என நினைத்து நினைத்து வியந்து கொண்டிருப்பவை .. ! ! ) தனியாக அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கருக்காமல் வறுத்து ஆற வைக்கவும். 


இஞ்சியை அலம்பி தோல் சீவி நறுக்கி அதே கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். 


முதலில் வறுத்த தனியா, பருப்பு, வெந்தய கலவையை  மிக்ஸியில்  பொடித்து வைத்துக் கொண்டு, மிளகாயையும் நன்கு பொடி செய்து கொள்ளவும். பிறகு அதையும் எடுத்து வைத்தப்பின் இஞ்சியை தண்ணீர் விடாது அரைத்து வைத்துக் கொள்ளவும். 


இது  இறுதியில் இஞ்சியை பொடிக்க தயாராகி கொண்டிருக்கும்  படம்..(நான் எப்படியோ முதலில் வந்து விட்டேனே... என கீழே இருப்பவர்களுடன் பெருமைபட்டுக் கொள்ளுமோ ...?) 

 

இது தனியா, பருப்பு வெந்தயம் கலவை  பொடியை தயாராக்கிய படம்.  ( மேலே என்னைத்தான் படத்தின் ஹீரோவாக  முதலில் காட்டினார்கள். இப்போதும் பொடியாகி நடுவில் வந்து விட்டேன். உன் பெருமை உன்னோடு... அதனால் எனக்கொன்றும் கவலையில்லை. .." என இது அடக்கமாக, இல்லை, அதன் பெருமையை கண்டு அடக்க முடியாமல் பதில் சொல்லுமோ ...? 

   

இது வறுத்த மிளகாய் வத்தல் பொடி... என்னவோ போங்க...! உங்க பெருமையும், புகழும்...யாருக்கு வேணும் இதெல்லாம்..? நமக்கெல்லாம் சிறு வேடங்கள்தான்... இறுதியில் வரும் படத்திற்குத்தான் மொத்தப் புகழும்..... ( நாங்களே... எங்களுடன் வந்த அந்த ஒன்று எங்கே போய் தப்பித்தது என்ற பெரும் குழப்பத்தில் இருக்கிறோம்...") என அலட்டிக் கொள்ளாமல் ஆனால், சற்று காட்டமாக பேசுமோ இது.. ...?


இது இரண்டு பெரிய கோலி அளவு புளி எடுத்து ஊற வைத்து கரைத்த புளி கரைசல். 


அடியேனும் நான்தான்...!! முதலில் "காய்ச்சல் கலவையில்" ஐக்கியமாக காத்திருக்கிறேன். என்ற பெருமையுடன் இது பகிருமோ..? 


இது " அகத்தை சீராக்கும்" பணி என்னுடையது என்ற உறுதியில் அமைதியாக காத்திருப்பவை என்பதால் எதைப்பற்றியும் கவலையுறாது யோக நிலையில் உள்ளது
 

பின் கடாயில் நான்கு  ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு, அதில் அரை ஸ்பூன் கடுகு போட்டு, அது கோபத்தில் படபடவென வெடித்ததும், அதை அமைதிபடுத்த அமைதியாய் இருக்கும் சீரகத்தையும் அதனுடன் சேர்த்து, புளிக்கரைசலை, மஞ்சள் தூளுடன்  கடாயில் அதனுடன்  சங்கமிக்க செய்யவும். 


பிறகு பெருமை பேசியும், பெருமை படாமலும் இருக்கும் மேற்கண்ட தயாரிப்புகளை, அந்த புளிக்கரைசல் சற்று கொதித்ததும், முறையே வத்தல்,  இஞ்சி, இறுதியில் ஹீரோவென கூறிக் கொள்ளும் பொடி வகைகள், என கலந்து கறிவேப்பிலை, பெருங்காயப்பொடி என அனைத்தையும் சேர்த்ததும், அனைத்தும் சேர்ந்து ஒரு புரட்சி செய்த பின் "இஞ்சி, புளிக்காய்ச்சல்  ரெடி" என அது குரல்  கொடுக்கும். 

சூடு ஆறியதும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி வைத்துக் கொண்டு விடலாம்." சூடான சாதத்தில் கலந்து சாப்பிடவும், இட்லி தோசைக்கு எதற்கும் நான் உத்திரவாதம் என பொன்னிறமாக அது மின்னிக் கொண்டே கூறும் அழகே அழகு... "




இதில் பச்சை வேர்கடலையும்  சிறிது வெறும் கடாயில் வறுத்து பொடி செய்து இறுதியில் கலந்து  கொள்ளலாம்.. அப்படி செய்தால் இன்னமும் (நான் இந்த தடவை  சேர்க்கவில்லை. அதன் கையிருப்பு கொஞ்சமாக இருப்பதால், வேறு எதற்காகவாவது தேவைபடுமென அதை வீணில் பெருமைப்பட வைக்கவில்லை... :))  அதனால் வேர்கடலை என்னை மன்னித்து விடுமென உறுதியாக நம்புகிறேன்.)  சுவையாக இருக்கும். நாவிற்கும். சமைக்கும் பதார்தத்திற்கும் சுவையூட்டும் அதையும் விட்டு வைப்பானேன். ..!!

இது நீங்கள் அனைவரும் ஏற்கனவே நிறைய தடவைகள் வீட்டில் செய்து ருசி பார்த்திருப்பவைதான்...! அதிசயமில்லை... ஆனாலும் என் தளத்தில் பதிவுகள், கதைகளுக்கிடையே ஒரு வித்தியாசமான சமையல் பதிவாக இருக்கட்டுமென இஞ்சி புளியின் காய்ச்சலை  அளவுகோல் இல்லாமலேயே  "அளந்திருக்கிறேன்...." :) கொஞ்சம் கூடுதலாகவும் "அளந்திருக்கிறேனோ. .. .? :) ஆனாலும், அன்புடன் படிப்பவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். 🙏. 

 பி. கு.. 
என்னவோ.. எங்கும், எப்போதும்  பார்த்தாலும் இந்த தொற்று செய்திகள். நாங்கள் எங்கும் வெளியில் செல்வதேயில்லை.  வீட்டிற்கு தேவையானது எல்லாமே ஆன்லைன் வர்த்தகத்தில்தான் வாங்குகிறோம். வீட்டில் சிறு குழந்தைகள் இருப்பதால் கவனமாக இருக்க இப்படி ஆண்டவன் அருள் புரிகிறார். மனம் அமைதியாக இருக்கவே இந்த மாதிரி பதிவுகள் எழுதுவதும். படிப்பதுமாக காலம் நகர்கிறது. இறைவன் இந்த தொற்றை விரைவில் அழித்து மக்களுக்கு பழைய மன/உடல்  பலத்தை தர வேண்டுமாய் தினமும் பிரார்த்தித்துக் கொண்டேயுள்ளேன். விரைவில் நம் அனைவரின் பிராத்தனைகள் கண்டிப்பாக பலிக்கும். 🙏. 🙏. 

40 comments:

  1. இஞ்சி புளிகாய்ச்சல் விதத்தை மாறுபட்ட முறையில் சொல்லி சென்றவிதம் அருமை

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் பதிவுக்கு முதலில் வருகை தந்தமைக்கும், வந்து தந்த நல்லதொரு கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இஞ்சி தொக்குதான்.. நான்தான் மாறுபாடாக இஞ்சி புளிக்காய்ச்சல் என பெயர் சூட்டியுள்ளேன். பதிவை ரசித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. இணையம் இருக்கிறவரை வீட்டிற்குள் இருந்து கொள்ளலாம்... இணையம் மூலமே உலகத்தை சுற்றி வரலாம். அப்படி இருக்கையில் மக்கள் ஏன் தேவையில்லாமல் வெளியே வருகிறார்கள் என்பது புரியவில்லை

    மற்றவர்கள் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும் நாம் பாதுகாப்பாக இருப்போம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /இணையம் இருக்கிறவரை வீட்டிற்குள் இருந்து கொள்ளலாம்... இணையம் மூலமே உலகத்தை சுற்றி வரலாம். அப்படி இருக்கையில் மக்கள் ஏன் தேவையில்லாமல் வெளியே வருகிறார்கள் என்பது புரியவில்லை/

      உண்மைதான்... இந்த இணையம் இல்லாவிட்டால், மிகவும் கஸ்டந்தான்.. இப்படி நோயின் தாக்குதல்கள் பற்றி. இதன் மூலம் தெரிந்து கொண்டும் மக்கள் வீணாக வெளியுலகத்திற்கு வந்து நோயை பரப்புவதோடு, தங்களுக்கும் கேடு விளைவித்து கொள்கிறார்கள். ஆண்டவன்தான் இலகுவாக பரவும் இந்த தீநுண்மிக்கு ஒரு விமோசனம் தர வேண்டும்.

      நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நம்மால் பிறருக்கும், நம் வீட்டை சார்ந்தவர்களுக்கும் எந்த தீங்கும் வரக்கூடாதெனில் பத்திரமாக வீட்டிலேயே இருப்போம். நல்லதொரு கருத்துக்கள் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. இஞ்சி புளிகாய்ச்சல் செய்முறையும் படங்களும் அருமை.
    சொல்லி சென்றவிதம் அருமையோ அருமை.

    //" அகத்தை சீராக்கும்" பணி என்னுடையது என்ற உறுதியில் அமைதியாக காத்திருப்பவை என்பதால் எதைப்பற்றியும் கவலையுறாது யோக நிலையில் உள்ளது. //

    மிகவும் ரசித்தேன்.


    //எதற்கும் நான் உத்திரவாதம் என பொன்னிறமாக அது மின்னிக் கொண்டே கூறும் அழகே அழகு... "//

    ஆமாம், அழகே அழகுதான்.

    பாதுகாப்பாக இருப்போம். மக்களுக்கு மனபலம், உடல் ஆரோக்கியம் கிடைக்க உங்களுடன் சேர்ந்து பிரார்த்தனைகள் செய்கிறேன்.

    படி படியாக இயல்பு வாழ்க்கை திரும்பும் என்று நம்புவோம்.
    நம்பிக்கைத்தான் வாழ்க்கை.


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      புளிக்காய்ச்சல் பதிவை ரசித்துப்படித்து தந்த தங்களது ஊக்கம் மிகுந்த கருத்துரைகள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. தங்களுடைய அன்பான பாராட்டுரைகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

      /படி படியாக இயல்பு வாழ்க்கை திரும்பும் என்று நம்புவோம்.
      நம்பிக்கைத்தான் வாழ்க்கை./

      ஆமாம்... இந்த நம்பிக்கையில்தான் இந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து வருகிறோம். இறைவன் பழைய மாதிரி மக்களை பயமின்றி வெளியில் நடமாட வைப்பான் என்ற நம்பிக்கைதான் இத்தனை பயங்களிலும் சற்று ஆறுதலாக உள்ளது. நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். அனைவரும் ஒருமித்த மனதோடு இறைவனை பிரார்த்தனைகள் செய்வோம்.நல்லதே நிச்சயமாக நடக்கும். நல்லதொரு கருத்துகளுக்கு என் அன்பான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. நாங்கள் இதை புளி இஞ்சி என்று அழைப்போம்.  பெரும்பாலும் தொட்டுக்கொள்ளும் வஸ்துவாகத்தான் உபயோகிப்போம்!  சென்றமுறை முதல் கொரோனா அலையில் இதையும் சேர்த்து விதம் விதமாக இஞ்சி சாப்பிட்டு அவஸ்தைப்பட்டதை எழுதி இருந்தேன்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இதுவும் புளி இஞ்சி தான். நான்தான் வித்தியாசமாக இதற்கு பெயர் தந்துள்ளேன். இதையும் சாதத்தில் கலந்து கொண்டு ஒரு வெள்ளரி, தக்காளி தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம்.
      சென்ற முறை நீங்கள் தொற்று அலையில் இஞ்சியை உணவில் அதிகம் சேர்த்து அவஸ்தை பட்டதை எழுதியிருந்தது நினைவுக்குள் இருக்கிறது. இஞ்சி, பூண்டு, இப்படி எதுவுமே உணவில் அதிகம் சேர்த்தாலும் பிரச்சனைதான். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. நாங்கள் கடலை போடுவதில்லை!   ஒவ்வொன்றும் சொல்வதாக எழுதியிருக்கும் வரிகள் நல்ல கற்பனை.  படபடவென வெடிக்கும் கடுகை அமைதிப்பப்டுத்த சீர் அகம்!  முக்கிய கதாபாத்திரங்களுடன் துணைக் கதாபாத்திரங்களும் சேர்ந்தால்தான் அது முழு வடிவம் பெறும் இல்லையா!  எனவே எல்லாவற்றுக்கும் சம அளவு பெருமை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நானும் நிறைய தடவைகள் போடுவதில்லை. வேர்கடலை உடம்புக்கு நல்லதென்பதால் சில தடவைகள் புளிக்காய்ச்சல்களுக்கும், வேறு தக்காளி வெங்காயம் சேர்த்து வதக்கும் போதும், சில துவையல்களுக்கும் இதைச் சேர்ப்பேன். அவ்வளவுதான்..

      கற்பனையை ரசித்துப் பாராட்டியமைக்கு மிகவும் மன மகிழ்ச்சியடைந்தேன். ஆமாம் . எல்லாவற்றிலுமே சம அளவு பெருமை. நம் உடல் நலத்தை பாது காப்பதிலும் அதற்கு பெருமைதான்... தங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. வெளியில் செல்லாமல் வீட்டுக்குளேயே இருப்பதே நன்மை.  அதேபோல வெளியிலிருந்து முடிந்தவரை எதையும் வாங்காமலிருப்பபதும், யாரையும் அழைக்காதிருப்பதும் உத்தமம்.கவனமாக, பாதுகாப்பாக இருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நாங்கள் இந்த ஒரு வருட காலமாக எங்கும் வெளியில் செல்வதில்லை. வீட்டிலிருக்கும் சிறு குழந்தைகள் நலம் கருதி கடைகளுக்கு கூட செல்வதில்லை. அது போல் வெளி உணவும் வாங்குவதில்லை. எப்போதும் வீட்டின் சமையல்தான். பைப் ரிப்பேர், வேறு எதற்காகவாவது உதவிக்கு ஆள் தேவைபட்டால், அவர் வரும் சமயத்திலிருந்து போகும் வரை முகக்கவசம் அணிந்தபடிதான் இருக்கிறோம்.. பத்திரமாக இருக்கிறோம்/இருப்போம். பிறகு நடப்பது ஆண்டவனின் செயல். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. இஞ்சிப் புளிக்காய்ச்சலும் புளி இஞ்சியும் வேறு வேறு என நினைக்கிறேன்.

    செய்முறையும் எழுதிய விதமும் நன்றாக இருந்தது. சீரகம் அதனுடைய ஆசனையைக் கொண்டுவந்து டாமினேட் பண்ணுமா இல்லை இஞ்சி அந்த வேலையைச் செய்யுமா என யோசிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /இஞ்சிப் புளிக்காய்ச்சலும் புளி இஞ்சியும் வேறு வேறு என நினைக்கிறேன்./

      இல்லை.. இரண்டும் ஒன்றுதான். நான் வைத்த பெயர்கள்தான் வேறு என்ற பிரமையை உண்டாக்கி விட்டது போலும்.வறுத்த பொருட்களோடு இஞ்சியையும் சேர்த்து அரைத்துக் கொண்டு பின் எண்ணெய் விட்டு சுருள வதக்கினால் புளி இஞ்சி. நான் மாற்றத்திற்காக சில பொருட்களை சேர்த்து செய்துள்ளேன். இதில் உள்ள பொருட்கள் தத்தம் வேலையை செய்யும். மொத்தத்தில் ருசியாக இருந்தது. தினமும் இல்லாவிடினும், அவ்வப்போது இஞ்சி கொஞ்சம் சேர்த்தால் உடம்புக்கும் நல்லதுதானே..!உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றிகள் சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. இதற்கு வேர்க்கடலை தேவையில்லைனு தோணுது.

    நல்ல செய்முறை.

    வீட்டிலேயே எல்லோரும் இருப்பதால் கிச்சன் வேலை அதிகமாகிறதோ?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /இதற்கு வேர்க்கடலை தேவையில்லைனு தோணுது. /

      ஆமாம்.. தேவையில்லை.. நம் ருசிக்காகத்தான இதையெல்லாம் சேர்த்தும், சேர்க்காமலும் மாற்றி செய்து பார்க்கிறோம். வேர்கடலையின் வாசனை வந்தால் சிலருக்கு இஞ்சி வாசனை தெரியவில்லை என்பார்கள். இஞ்சியை தூக்கலாக வைத்து நிறைய வறுபடும் பொருட்கள் சேர்க்காது செய்யும் சட்னி சிலருக்கு ரொம்ப பிடிக்கும். வெறும் வறுத்த வேர்கடலை சட்னி தேங்காய் இல்லாமல் (புளி, உப்பு, கொஞ்சம் காரத்துடன்) எங்கள் வீட்டில் பிடிக்கும். அவரவர் விருப்பம்.

      உங்கள் அன்பானபாபாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

      வீட்டிலேயே இருப்பதால் மட்டுமில்லை.. எனக்கு எப்போதுமே கிச்சன் வேலைகள் அதிகந்தான்..இப்போது சற்று கூடுதலாக.. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. இஞ்சித் தொக்கு, புளி இஞ்சி தெரியும். இப்படிப் புளிக்காய்ச்சல் போல் காய்ச்சியதில்லை. அதோடு இதில் எல்லாம் நான்/நாங்க ஜீரகம்சேர்ப்பதில்லை. ஜீரகம் சேர்த்தால் அதன் வாசனை தனி! இதுவும் ஒரு தரம் செய்து பார்க்கிறேன். ஏற்கெனவே விசேஷத்திற்கு வந்த சமையல் மாமி பண்ணின இஞ்சித் தொக்கு ஒரு டப்பா நிறைய இருக்கு! என்ன செய்யறதுனு புரியலை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இதுவும் இஞ்சி தொக்குதான்... புளியை தண்ணீர் விட்டு கரைத்து சற்று எல்லா கலவைகளுடன் கொதிக்க வைத்திருப்பதால், இதற்கு இந்தப் பெயரை வைத்தேன். இஞ்சிபுளித் தொக்கு ஒரு ரெசிபியில் இந்த சீரகத்தையும் சேர்த்திருந்தார்கள்.
      அதனால்தான் நானும் சேர்த்தால் உடம்புக்கு நல்லதுதானே என சேர்த்தேன். ஆனால் அதனால் அதன் வாசனை அதிகமாக தெரியவில்லை. தாங்களும் இதுபோல் செய்து பார்ப்பதாக கூறியமைக்கு மிக்க நன்றி.

      ஓ... உங்கள் வீட்டிலும் இஞ்சித் தொக்கு இருக்கிறதா? உங்கள் மைத்துனரின் வருஷாப்திகத்திற்கு வந்த அந்த மாமி செய்ததா? ஒரு நாள் சாதத்தில் கலந்து சாப்பிடலாமே ...!! ஆனால் அங்கு அடிக்கும் வெயிலுக்கு தினமும் இஞ்சி சேர்த்தாலும் உடம்புக்கு கஸ்டமாக இருக்கும். பார்த்து செலவழியுங்கள். உங்கள் அன்பான கருத்துகளுக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. நீங்கள் சொல்லும் விதம், எல்லாப் பொருட்களையும் மதித்து அவற்றிற்குத் தேடிக் கொடுக்கும் பெருமை எல்லாமும் அருமை. இது உங்களுக்கே கைவந்த கலை! எங்கள் ப்ளாகிற்குத் "திங்க"ற கிழமைக்கு அனுப்பி இருக்கலாமோ? ஶ்ரீராம் ஏன் உங்களைக் கேட்பதில்லையா? இனி இம்மாதிரிப் புது செய்முறை எனில் எ/பி.க்கு அனுப்பி வைங்க. பரவலாக அறிந்து கொள்வார்களே! ரசிகப் பெருமக்கள் கூடுதலாக ஆவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      பதிவை ரசித்து நீங்கள் தந்த பாராட்டுகளுக்கு என் இதயம் நிறைந்த பணிவான நன்றிகள். எ. பிக்கும் அனுப்புகிறேன். ஸ்ரீராம் சகோதரரும் கேட்டிருக்கிறார். நானும் கண்டிப்பாக அனுப்புவதாக கூறியுள்ளேன்.

      /இம்மாதிரிப் புது செய்முறை எனில் எ/பி.க்கு அனுப்பி வைங்க. பரவலாக அறிந்து கொள்வார்களே! ரசிகப் பெருமக்கள் கூடுதலாக ஆவார்கள். /

      ஹா ஹா.எ பிக்கும் நிறைய அனுப்புகிறேன். பொதுவாக படங்கள் எடுத்து சமையல் செய்வதற்குள் கொஞ்சம் நேரம் நிறைய ஆகிறது. அதற்குள் வீட்டில் அவசரபடுத்தி விட்டால், சரியானபடிக்கு படங்கள் எடுக்க இயலாமல் போய் விடும்.ஒரு மாற்றத்திற்காகத்தான் இங்கு பதிவிட்டேன். இரண்டாவது இது அனைவரும் அறிந்த சாதாரண ரெசிபிதானே ...என நினைத்து விட்டேன்! இங்கு உங்களைப்போன்ற அனைத்து சகோதர சகோதரியின் ரசிப்புக்களும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது உங்கள் ஊக்கம் மிகுந்த கருத்துகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. நான் புளிக்காய்ச்சலுக்கே பொதுவாக தனியா வறுத்துப் பொடிக்க மாட்டேன். அப்படிச் செய்த காலமும் உண்டு தான். ஆனால் இப்போதெல்லாம் மிளகை மட்டும் நெய்யில் வறுத்துக் கொண்டு கடுகு, எள், வெந்தயம் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு பொடித்துக் கொள்வேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நானும் புளிக்காய்சலுக்கு தனியா சேர்க்க மாட்டேன்.தனியா சேர்த்தால் சாம்பார் வாசனை வந்து விடும் என நினைக்கிறேன். சிலர் சேர்க்கிறார்கள். உ. ப. க. ப வெந்தயம், கடுகு எள் வத்தல் அவ்வளவுதான் வறுத்துப் பொடிக்கச் சேர்ப்பேன். சிலர் வத்தல் கிள்ளி, பருப்புகளை வறுத்து பொடிக்காமலே செய்வார்கள். அதுவும் வாசனையாக இருக்கும். உங்கள் செய்முறை பிரகாரமும் நன்றாக உள்ளது. நானும் உங்கள் பாணிப்படி ஒரு தடவை மிளகு சேர்த்து செய்து பார்க்கிறேன். உங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. வேர்க்கடலையைப் புளிக்காய்ச்சலுக்கு முழுசாகப் போடுவோம். நீங்க பொடித்துப் போடச் சொல்லி இருக்கீங்க. முற்றிலும் வித்தியாசமான செய்முறைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      புளிக்காய்ச்சலுக்கு வேர்கடலை முழுதாகத்தான் போடுவோம். இல்லை கைகளால் உடைத்து பாதியாக்கியும் போடலாம். பொடித்துப் போடுவது பற்களுக்கு தொந்தரவின்றி இருக்கும். எங்கள் வீட்டில் பெரியவர்களுக்கென்று அப்படிச் செய்தும் பழக்கம். இப்படி போட்டாலும் அதன் வாசனை பரவலாக பரவி நன்றாக உள்ளது. அனைத்து கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. சுவாரஸ்யமான செய்முறை விளக்கம் அருமை சகோ.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      செய்முறை விளக்கம் நன்றாக உள்ளதென கூறியமைக்கும், பதிவை ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கும் மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. கமலாக்கா சூப்பர் போங்க..!!!!!

    இதை நாங்கள் எங்கள் வீட்டில் இஞ்சித் தொக்கு என்று கிட்டத்தட்ட புளிக்காய்ச்சல் போல வெந்தயம் பெருங்காயம் சேர்த்துச் செய்வதுண்டு.

    மாமியார் வீட்டில் தனியா சேர்ப்பாங்க

    பிறந்த வீட்டில் தனியா சேர்க்க மாட்டாங்க புளிக்காய்ச்சலுக்குமே சேர்ப்பதில்லை.

    ஆனால் மாமியார் வீட்டில் தனியா உண்டு புளிக்காய்ச்சலுக்கும்

    அது போல ஜீரகமும் சேர்ப்பதில்லை. எனவே ஜீரகம் சேர்த்துச் செய்து பார்த்துவிடுகிறேன்...வேர்க்கடலையையும் பொடித்துப் போட்டு செய்து பார்க்கிறேன்...

    நன்றி கமலாக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இதுவும் இஞ்சி தொக்குதான் சகோதரி. அதே பக்குவம்தான். அதை எல்லாவற்றையும் அரைத்துக் கொண்டு வதக்குவோம். இது பெயருடன் சற்று மாறுபாடுடன் செய்தது. நானும் புளிக்காய்சலுக்கு தனியா அவ்வளவாக சேர்ப்பதில்லை. இதற்கு ஜீரகமும், தனியாவும் ஒரு வித்தியாசத்திற்கு சேர்க்கலாம் என சேர்த்தேன். வாசனை நன்றாக உள்ளது. உங்கள் பிறந்த வீடு, புகுந்த வீட்டின் முறைகளையும் அறிய தந்தமைக்கு நன்றிகள்.

      நீங்களும் இது போல் செய்து பார்க்கிறேன் என்றதற்கு மிக்க நன்றி சகோதரி. உங்கள் அன்பான ஊக்கமிகும் கருத்துகள் என்னை மகிழ்வடையச் செய்கின்றன.மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. செய்முறைப் படி செய்து பார்க்கிறோம்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இஞ்சி புளிக்காய்சல் பதிவை ரசித்துப் படித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தாங்களும் இது போல் செய்து பார்க்கிறேன் என்றமைக்கு சந்தோஷம். செய்து பாருங்கள். உங்கள் நல்லதொரு கருத்துக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. புளிக் காய்ச்சல்.. புளிக்கே காய்ச்சல்!..
    நல்ல செய்முறை...

    வையம் முழுதும் இறையருள் பெருகட்டும்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /புளிக்கே காய்ச்சல்!./

      ஹா. ஹா.. அதன் காய்ச்சல் அதனுடன் சேர்ந்த அனைத்துக்கும் தொற்றின் கொண்டது.

      செய்முறை நன்றாக உள்ளதென கூறியமைக்கு மனம் நிறைவான நன்றிகள்.

      /வையம் முழுதும் இறையருள் பெருகட்டும்/

      ஆம். இறைவன் துணைதான் இப்போதும், எப்போதும் தேவை.

      தங்கள் கருத்துக்கு நன்றி சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. அன்பு கமலாமா,
    மிகச் சிறந்த கவிதைப் பதிவு. இஞ்சிப் புளி என்று செய்வோம்.
    நீங்கள் காய்ச்சி விட்டீர்கள்.
    அதுவும் அந்தந்தப் பாத்திரங்களின் தன்மையை வர்ணித்த அழகே தனி.
    உங்கள் தமிழ் வன்மையை முன்பிருந்தே படிக்கவில்லையே
    என்று வருத்தமாக இருக்கிறது.
    நல்ல சொல்வளம்,
    இஞ்சியின் காரத்தைக் குறைத்திருக்கிறது.
    நாங்கள் தனியா சேர்ப்பதில்லை.
    மிளகாய், வெல்லம் சேர்த்துச் செய்வோம்.கீதா சொல்லி இருப்பதுதான் உண்மை.
    இது போலச் சிறப்பு திங்கள் கிழமைக்கு வேண்டும். மேலும் மேலும் நல்ல
    செய்முறைகளைச் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இதுவும் இஞ்சி தொக்குதான் சகோதரி. சில மாற்றங்களில் இந்தப் பெயருடன் வந்து விட்டது. பதிவை ரசித்து நீங்கள் தந்த ஊக்கமிகுந்த நல்ல கருத்துரைக்கு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

      நீங்கள் அனைவரும் எழுதாததா சகோதரி? சொல்லப் போனால், சிறப்பாக பதிவுகள் எழுதும் உங்கள் அனைவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்/கொள்கிறேன்.உங்கள் பாராட்டுக்கள் என் எழுத்தை வளமுடன் இருக்கச் செய்யுமென சந்தோஷப்படுகிறேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி. பதில் தர கொஞ்சம் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  18. அன்பு கமலா, எப்போதும் செய்யும் புளி இஞ்சியை எவ்வளவு அழகாக வர்ணித்திருக்கிறீர்கள்! அருமை! காலத்திற்கு ஏற்ற பதிவு. அங்கே கீதா ரெங்கனின் மிளகுஷ்யம் இங்கே உங்களின் புளி இஞ்சி, எல்லாம் பத்தியமயமாக இருக்கிறதே? கொரோனா படுத்தும் பாடோ? 

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்கள் அன்பான நல்லதொரு கருத்துகளுக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரி. நீங்கள் அன்போடு வந்து தந்திருந்த கருத்தை சில நாட்கள் கழித்து பார்த்து விட்டேன். ஆனால் உடனே பதிலளிக்க முடியாத வருத்தமான சூழ்நிலைகள் எனக்கு அமைந்து விட்டது. உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் இன்றுதான் உங்கள் கருத்துக்கு மிகவும் காலதாமதமாக பதில் கருத்து தருகிறேன். மன்னிக்கவும். உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  19. புளி இஞ்சியை உடம்புக்கு நல்லதுன்னா சொல்லுவாங்க. அதைச் சாப்பிட்ட பிறகு, புதிய பதிவு வெளியிடமுடியாத அளவு செய்துவிட்டதா? உங்களை நம்பி நானும் புளி இஞ்சி செய்துபார்க்கலாம் என்று நினைத்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /புளி இஞ்சி சாப்பிட்ட பிறகு, புதிய பதிவு வெளியிடமுடியாத அளவு செய்துவிட்டதா? உங்களை நம்பி நானும் புளி இஞ்சி செய்துபார்க்கலாம் என்று நினைத்தேன்./

      ஹா.ஹா. உங்களின் எதிர்பார்ப்புக்கு என் மனதாற நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய பதிவுகள் வெளியிடுகிறேன். பாதி எழுதியும் எழுதாமலும் இருக்கும் பதிவுகளை சரியான முறையில் கோர்க்க வேண்டும். அதற்குள் என்னென்னவோ மனக்கவலைகள் என்னை அழுத்தி விட்டன. இப்போதுதான் அதிலிருந்து சற்று மீண்டு வந்து கொண்டிருக்கிறேன்.எல்லாம் இறைவன் செயல் என மனச் சமாதானம் அடைந்தாலும், மனம் இன்னமும் கலக்கமாகத்தான் உள்ளது. உங்கள் அனைவரின் அன்பான ஆறுதல்களில் மீண்டு வந்து விடுவேன் என நினைக்கிறேன். மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  20. கமலாக்கா நலம்தானே.. பார்த்து நீண்ட நாள் ஆச்சே என வந்தேன்.

    நல்லதொரு புளிக்குழம்புபோல செய்திருக்கிறீங்கள், பார்க்கவே வாயூறுது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      நான் நலந்தான்.. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்.? நலமாக உள்ளீர்களா? நானும் உங்களை பார்த்து நாளாகி விட்டது. ஆனால் என நினைவுகளில் எப்போதும் நீங்கள் இருக்கிறீர்கள். அங்கெல்லாம் தொற்று குறைந்துள்ளதா? தங்கள் வேலையும் யூடியூப் பணிகளும்,நன்றாக செல்கின்றனவா?

      பதிவை ரசித்து தந்த கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி. உங்கள் அன்பான வருகை ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தருகிறது. மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete