Pages

Thursday, March 18, 2021

மலர்ந்த நினைவுகள்.

 வலையுலக சகோதர சகோதரிகளுக்கு அன்பான வணக்கங்கள். 

இன்று நம் அன்பான சகோதரி வல்லி சிம்ஹன் அவர்கள் தபால்காரரைப் பற்றியும்  அந்தக்கால கடிதங்களின் சிறப்பைப் பற்றியும் தம் வலைப்பதிவில் எழுதியிருந்தார். அவரின் பதிவு பழைய காலத்திற்கே நம்மை கொண்டு சென்றது. அதிலும் பதிவின் முடிவில் "இணையத்தின் இணையற்ற தபால்காரர் நம் வலைப் பதிவுகள்.  "என அவர் முடித்திருக்ககும் வரிகளை ரசித்தேன். ஆம் . உண்மை.... இப்போது மறுபடியும் நம் எழுத்துக்களை வலைப்பதிவுகள் என்ற தபால்காரர் மூலம்  நாம் தினமும் ரசித்துப் படித்துக் கொண்டிருக்கிறோம். நன்றி சகோதரி. 

கடிதங்களின் இடத்தை இப்போதெல்லாம் கைப்பேசி பிடித்துக் கொண்டு விட்டது. கடிதம் எழுத இப்போது எவருக்கும் பொறுமையும், நேரமும் குறைவாக உள்ளது.  கைப்பேசியில் உடனுக்குடன் பேசி, எத்தனை மலைப்பான  தூரங்களையும் நெருக்கமாகி அருகில் வைத்துள்ளோம். 

அப்போதெல்லாம் கடிதங்களில் எழுதும் போது நிறைய விஷயங்கள் இருப்பது போல் தோன்றும். எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் நுணுக்கி எழுதிய பின்னும், இன்னமும் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என்ற கவலையும் வரும்.  பெறுநர் முகவரி பக்கம் மட்டுமே கோடு தாண்டா நேர்மையோடு முகவரிக்கென்றே ஒதுக்குவோம். "அதையாவது விட்டு வை.....அதிலேயும் கிறுக்கினால்,  கார்டு போய் சேர வேண்டியவர்களுக்கு போய் சேராமல் நடுவிலேயே தத்தளித்து தவித்துப் போய் விடும்" என்ற கிண்டலான எச்சரிக்கைகள் வீட்டின் மூத்த உறவுகளிடமிருந்து  வந்து விழும் வரை இன்னமும்  என்ன எழுதுவது என்று யோசிப்பதை நிறுத்த மாட்டோம். 

அந்த காலத்தில் கவனக்குறைவால் தவறான முகவரிகள், இல்லை, மழை, புயல், (அக்காலத்திலெல்லாம் மழை காலத்தில் அவ்வப்போது வரும் புயலை கடும் சூறாவளி மழை   என ஒரே பெயரிட்டுதான் அழைப்போம். இப்போது அதற்கும்  விதவிதமான பெயர்கள் கிடைத்து விட்ட மகிழ்வில், வருடத்திற்கு அதன்  எண்ணிக்கைகள் நம்மை கேட்காமலேயே அதிகரித்து விட்டன.)  போன்றவற்றின் காரணங்களால் கடிதங்கள் அவரவர்களுக்கு சென்று சேராமல் போய் விடும். பதில்கள் வர வில்லையே என மீண்டுமொருமுறை விசாரித்து தெரிந்து கொள்வதற்கு எப்படியும் பத்து நாட்கள் ஆகிவிடும். அதற்குள் நம் மனம் படும் பாடு விவரிக்க இயலாது. 

அந்த நினைவுகளுடன், திரும்பி வராத இடத்திலிருக்கும் என் அன்னைக்கு ஒரு மடல் என நான் என் மன ஆறுதலுக்காக எப்போதோ எழுதினேன். வல்லி சிம்ஹன் சகோதரியின் பதிவுக்கு கருத்து எழுதும் போது கூட அங்கும் அவர்களைப் பற்றித்தான் (எங்கள் அம்மா) குறிப்பிட்டிருந்தேன்.

 திருமணத்திற்கு பின் என்னிடமிருந்து ஒவ்வொரு வாரமும் தவறாது மடல்களை எதிர்பார்க்கும் அன்னையின் நினைவு (அந்த உறவு மட்டுந்தான் நம்  எழுத்தை, அதன் மகிழ்வை, அதனுடன் இழையோடும் சோகத்தை தனதாக்கிக் கொண்டு,  தன் பங்குக்கும் அனைத்தையும்  பிரதிபலிக்க செய்யும் சக்தி வாய்ந்தது.) அதிகரிக்கவே இந்த அன்னைக்கு எழுதிய மடலுக்கு முன் மனதிலுள்ளதையும் பதிவாக இங்கு  எழுதினேன்.  இனி அன்னைக்கு ஒரு மடல். ...

கவிதை என்ற பெயருடன் இது பொருந்தாமல் போகலாம். ஆனால் கவிதை என நினைத்துதான் இதை ஆரம்பித்தேன். ஆரம்ப ஒரு வரியையே இடையில் நிறுத்தாமல் நீண்ட வரியாக எழுதி முடித்திருக்கிறேன். படிப்பவர்களுக்கு என் பணிவான நன்றிகள். 

அன்னைக்கு ஒரு மடல்.... 

அன்னை தந்தை வளர்ப்பினிலே,

அருமையாய் தினம் வளர்ந்து,

குலப்பெருமை குன்றாமல்,

பிறர் குறையேதும் கூறாமல்,

குன்றில் இட்ட விளக்காக திகழ,

விரும்புமந்த இரு உள்ளங்களுக்காக, 

பால் மணம் மறக்கா பருவத்திலே,

பள்ளிப் பாடங்களை

பாங்காய் தினம் கற்று,

மழலை மொழி சொற்களை,

மாற்றியமைக்க பாடுபட்டு,

கற்றதை கண்டு பிறர் களிப்புறவும்,

கல்லாதவைக்கு கடுஞ்சொல்லும் பெற்று,

சற்று, கடுமையும், கனிவுமாக வளர்ந்து,

கடுகளவும் எண்ணம் சிதறாமல்,

கருத்தொன்றி படித்து, 

களை எடுத்த நாற்றாய்,

பள்ளிப் பாடங்களை பரிசீலித்து,

பள்ளிக்கு பின் பல்வேறு கனவுகளுடன்,

கல்லூரியில் கால் பதித்து, 

கற்றதை மேம்படுத்தி,

பாரினில் பிரகாசிக்க, 

பட்டங்கள் பல சுமந்து,

பழுதில்லா பணி தேடி,

தினமும் பல மைல் பயணித்து,

சுமந்த பட்டங்களுடன், சுயமாகி நின்றிட.., 

சுகமான ஒரு வேலைக்காக, 

ஓராயிரம் சுகங்களை உதாசித்து, 

இறுதியில் ஈட்டதொரு,

நல்லதோர் பணியில், 

நாள் பார்த்து அமர்ந்து,

நலங்கள் குன்றினாலும், 

நாள்தோறும் உழைத்து,

நாடு விட்டு நாடு சென்றும், 

நற்பெயர்கள் பலவும்,

நன்கு வாங்கியதில், 

நாட்கள் வருடத்தை சுவைத்திட, ஓரிரு

நரை முடிகளை தலையில் காட்டியதால்,

மனம் பதறிய மாதாவின் சொல் தட்டாது,

அடுத்தவ(ளி)ரின் வாழ்க்கையில்

அ(நா)வசியமாக பிரேவேசித்து,

அனுதினமும் அனுசரிக்க பழகி,

புதிய சொந்தகளை சொர்க்கமாக்கி,

பழைய பந்தங்களை பரணில் கிடத்தி,

பகட்டு வாழ்க்கைக்காக, 

பகல், இரவு பாராது, 

பணத்தை  வாழ்வின் இலட்சியமாக்கி

நோய் துறந்து, பாய் மறந்து,

நேரம் மட்டுமே, நேர்த்தியாய் பார்த்து,

நிமிடங்களை வீணடிக்காமல், 

நிம்மதியை தானமாக்கி, 

சற்று நிதானிக்கும் போது 

நின்று திரும்பினால்,

நீண்ட வாழ்நாளில் 

பாதி காணாமல் போயிருக்க,

நிதர்சனத்தின் கண்கள் சுட்டெரிக்க,

துறந்த நோய்கள் பலவும் துரத்த,

வளர்ந்து விட்ட வாரிசுகளின்,

வசமாகியிருந்த மிகுந்தந்த 

காலங்களின் படிகளில்,

வழுக்கி விழுந்து எழமுடியாமல்,

வருத்தத்தின் பிடியில் வசமாகும் போது,

அம்மா, உன் நினைவு வருகிறது.

அம்மா.. .உன் நினைவு மட்டுந்தான் 

வருத்தங்களோடு வசமாகினாலும், 

வாசமாக  மட்டும் என்னுடன்

வசித்திருப்பேனென்று வருகிறது.... 

தாயே! அன்று என்னைக் காண நீ

தவித்த சோகங்கள் தளர்வின்றி 

இன்று எனைத் தழுவுகிறது.

காத்திருந்து, காத்திருந்து, 

கண் மூடிவிட்ட உன்னை,

காண வந்த என்னிடம் இமை மூடிய

கண்களின் வழியே, நீ 

கேட்ட கேள்விகள் ஓராயிரம்!

அவற்றிக்கு பதிலளிக்க,

அப்போது தெரியாததால்,

இயன்றவரை பதில்சொல்ல,

இப்போது உனைத் தேடுகிறேன்.

தாயே நீ எங்கிருக்கிறாய்?

தனித்திருக்கிறாயா? உன்

தாயுடன் இருக்கிறாயா? உன்

வயது விளைவித்த 

வலிகளின் வலிமையை 

விளக்க, உன் வாரிசுகளின் 

வரவை விரும்பித் தேடியும்

வாராத நிலை கண்டு உன்னை

வளர்த்தவளிடம் விமர்சிக்க

வானுலகம் சென்றனையோ?

எந்திரமாக வாழ்ந்த நான் இந்த

எதார்த்த வாழ்வின் விளக்கம் பெற,

எப்படியும் என்னுடைய

தள்ளாத வயதில், மனம் தளர்ந்து,

தவித்துப் போய் நான் வரும்போது,

தாங்கி பிடித்து அமரவைக்க,

தனியிடம் ஒன்று உன் அருகாமையில்

தக்க வைத்துகொள் தாயே....! 

எப்படியும் எனக்காக இதை நீ செய்வாய்.. 

ஏனெனில் நீ  தியாகங்களின் சிகரம்....

அது உன்னதங்களின் உயரம். 

சிகரங்களுக்கு  பகைமை பாராட்டி

சினம் கொள்ளத் தெரியாது. 


இப்படிக்கு,

உன்னிடம் விரைந்து வர விளையும்,

உன் .............


என் பழைய நினைவுகளை (பிதற்றல்களை என்று கூட சொல்லலாம். ) படித்தவர்களுக்கு என் அன்பான நன்றிகள். 🙏

47 comments:

  1. ஆஆஆஆஆஆ இங்கினயும் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊ:)).. இன்று அதிராவுக்கு வெள்ளி துலாவில என முச்சந்திச் சாத்திரியார் சொன்னார்:).. அது சரியாத்தான் இருக்குது.. இதே நினைவலைகள்தான் கோமதி அக்கா பக்கமும்.. அங்கும் மீயேதான் 1ஸ்ட்டூ எனப் பெருமையுடன் சொல்லிக்கொண்டு தேம்ஸ்க்கு ஓடுகிறேன்ன்.. சத்தே இளைப்பாறிவிட்டு வந்து தொடர்வேன்:))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம்... நீங்கள்தான் முதலில் வருகை தந்து என்னை மகிழ்வுற செய்துள்ளீர்கள். சகோதரி கோமதி அரசு அவர்களும் இதே நினைவலைகளைதான் பதிவாக்கி தந்திருக்கிறார் என அறிந்து கொண்டேன். இப்போதுதான் அவர் பதிவுக்கும் சென்று படித்து கருத்துரை இட்டு வந்தேன். தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி. சிறிது இளைப்பாறி விட்டு உடனடியாக வந்து தந்த கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. அம்மாவுக்கான கடிதம் படித்ததும் மனம் கனத்துப் போய் விட்டது.. ஆரும் நம்மோடிருக்கையில் அருமை தெரியுதே இல்லை நமக்கு.. எப்படிச் சொன்னாலும் புரியுதில்லை, புரிஞ்சாலும் தப்புப் பண்ணுகிறோம், ஆனா, இல்லை என்றானபின்புதான் மனம் அதிகம் தவிக்கும்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை படித்து தந்த கருத்துரைகளை கண்டு என் மனமும் கசிகிறது. ஆமாம் உண்மைதான்... அம்மாவுக்கு கடிதங்கள் எழுதாத போது அவர்கள் வருத்தப்படும் போது அந்த சமயத்தில் அவர்களை சமாதானப்படுத்தி விடுகிறோம். இப்போது அதை நினைக்கையில் எத்தனையோ வேலைகளுக்கு நடுவில் ஒரிரு வரிகள் எழுதியிருந்தால் அவர்கள் எத்தனை சந்தோஷமடைந்திருப்பார்கள் என்று எண்ணும் போது வருத்தம் மேலிடுகிறது. என்ன செய்வது? எல்லாம் ஆண்டவன் விட்ட வழியென இப்படி மனதை தேற்றிக் கொள்ள வேண்டியதுதான். தங்கள் அன்பான கருத்துக்களுக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. ஆரம்பம் தபால்காரர் என நீங்கள் எழுதியதைப் பார்த்ததும், எனக்கு நினைவுக்கு வந்த ஒரு குறுங்கவிதையின் ஒரு பகுதி..

    “தான் விரும்பும் தன் காதலிக்கு
    வேறொருவர் எழுதிய
    காதல் கடிதத்தை
    தன் கையாலேயே
    கொடுத்து வரும்
    தபால்காரர்போல....”

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /தான் விரும்பும் தன் காதலிக்கு
      வேறொருவர் எழுதிய
      காதல் கடிதத்தை
      தன் கையாலேயே
      கொடுத்து வரும்
      தபால்காரர்போல../

      அந்தோ பாவந்தான்...அவர் நிலைமை.. உள்ளே என்ன எழுதியிருக்கிறதென்று படித்துப் பார்க்கவா முடியும்.? ஆனால், சில சமயங்களில், சில ரகசியங்கள் இப்படியும் களவாடபடுவதாக கேள்விபட்டதுண்டு. கவிதையை நினைவு கூர்ந்து இங்கு பதிந்தமைக்கும் நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. இருவருக்கும் ஒரே நினைவு . வல்லி அக்கா பதிவில் நீங்கள் பகிர்ந்த அம்மாவின் நினைவுகள் போல் நான் எழுதிய பதிவு நினைவுக்கு வந்தது நானும் பதிவு போட்டேன் நீங்களும் பதிவு போட்டு இருக்கிறீர்கள்.
    ஒத்த கருத்து உடையவர்களை நட்பாக சேர்த்து இருக்கிறது இறை ஆற்றல்.
    அதிரா சொன்னது போல் நினைவலைகள் சகோதரிகளுக்கு ஒன்றாக வந்து இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /ஒத்த கருத்து உடையவர்களை நட்பாக சேர்த்து இருக்கிறது இறை ஆற்றல்.
      அதிரா சொன்னது போல் நினைவலைகள் சகோதரிகளுக்கு ஒன்றாக வந்து இருக்கிறது./

      ஆமாம். சகோதரி எனக்கும் ஆச்சரியமாக உள்ளது.இருவரும் எப்படி ஒரே சமயத்தில் ஒரே மாதிரி சிந்தித்திருக்கிறோம். அதையேதான் தங்கள் பதிவிலும் கருத்துக்களில் பதிந்து விட்டு வருகிறேன். இறை ஆற்றல் நம் நட்புள்ளங்களை இது போல் என்றும் ஒன்றாக வைத்திருக்க வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன். உங்களின் அன்பான கருத்துரைக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. வளர்ந்து விட்ட வாரிசுகளின்,

    வசமாகியிருந்த மிகுந்தந்த

    காலங்களின் படிகளில்,

    வழுக்கி விழுந்து எழமுடியாமல்,

    வருத்தத்தின் பிடியில் வசமாகும் போது,

    அம்மா, உன் நினைவு வருகிறது.//

    சிறு குழந்தைகளுக்கு எப்போதும் அம்மா வேண்டும்.
    வளர்ந்த குழந்தைகளுக்கு சோகத்தை பகிர மடி சாய்த்து இளைப்பாற தாய் வேண்டும்.(மகிழ்ச்சியான காலங்களில் நம் அம்மாதானே அப்புறம் கடிதம் எழுதி கொள்ளலாம் , அப்புறம் பார்த்து கொள்ளலாம் என்று தள்ளி போட முடியும்)

    //கைப்பேசியில் உடனுக்குடன் பேசி, எத்தனை மலைப்பான தூரங்களையும் நெருக்கமாகி அருகில் வைத்துள்ளோம்//

    இப்போது அது ஒரு வசதி முகம் பார்த்து பேசி விடுகிறோம் உலகம் மிகவும் கிட்டத்தில் வந்து விட்டது.
    மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? சோகமாய் இருக்கிறார்களா? என்பதை அவர்கள் முகம் காட்டி விடுகிறது.


    இப்போது அலைபேசியில் ஒரு வசதி வேலைக்கு போகும் பெண்கள் வீட்டில் மூச்சு விட நேரம் இல்லாமல் வேலை செய்வதால் பேச நேரம் இல்லாதவர்கள் கூட பணி செய்யும் இடத்தில் உணவு இடைவேளையின் போது பேசுகிறார்கள். என் மருமகள் சமையல் செய்து கொண்டே தினம் தன் அம்மாவுடன் பேசி விடுவாள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உண்மைதான்.. சிறு குழந்தைகளுக்கு எப்போதும் அம்மாதான்...என்ன செய்தாலும் தன் அம்மா செய்வது போல் வராது என்ற எண்ணம் முழுமையாக இருக்கும். அதே குழந்தை வளர வளர அதற்கு வேறு தனித்துவமான பிடிமானங்கள் அமையும் போது, தாயின் அருகாமையின் சுகங்களை அவ்வளவாக தவிர்க்கும் பக்குவம் வந்த பின் வருத்தங்களின் போது மட்டும் அம்மாவின் பாதுகாப்பு வேண்டும் என ஆகி விடுகிறது.

      /மகிழ்ச்சியான காலங்களில் நம் அம்மாதானே அப்புறம் கடிதம் எழுதி கொள்ளலாம் , அப்புறம் பார்த்து கொள்ளலாம் என்று தள்ளி போட முடியும் / நீங்கள் சொல்வது போல் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம். அப்படியும் உடனே பகிர இயலாத காலகட்டத்தில் அம்மாதானே..! உடனே சொல்லாததற்கு ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என நினைப்போம். பின் நிதானமாக கடிதங்களில் தெரிவிக்கும் போது அவர்கள் மனம் என்ன வேதனையடைந்திருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளாமல் இருந்து விடுவோம். உங்கள் பதிவில் நீங்கள் எழுதியபடி அப்போது கடிதங்களை உடனுக்குடன் எழுதாத நாட்களுக்காக இப்போது தினமும் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேயுள்ளேன்.

      இப்போதுள்ள வசதிகள் நமக்கும் செளகரியமானதே! இப்போதுள்ள பெண்கள் அம்மா மட்டுமில்லை... பிறந்த வீட்டு சொந்தங்களுடன் முகம் பார்த்து தினமும் அருகிலிருப்பதை போன்று உரையாடிக் கொள்கின்றனர். அந்த வசதி அவர்களுக்காவது கிடைத்திருப்பதை எண்ணி நானும் மகிழ்வடைகிறேன். உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. //அப்போதெல்லாம் கடிதங்களில் எழுதும் போது நிறைய விஷயங்கள் /இருப்பது போல் தோன்றும். எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் நுணுக்கி எழுதிய பின்னும், இன்னமும் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என்ற கவலையும் வரும். //
    என் சின்ன மாமனார் அவர்கள் 25 கார்டில் நிறைய விஷயங்கள் எழுதி விடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அப்போதெல்லாம் நிறைய விஷயங்களை தெரிவித்து எழுதுபவர்கள் அப்படித்தான் எழுதுவார்கள். சில பேர் நறுக்கென்று நாலு வரி மட்டும் எழுதி விட்டு இரு பக்கங்களை காலியாக விடுவார்கள். அதைப் பார்க்கும் போது இதில் ஏதாவது எழுதக்கூடாதா என்ற ஆதங்கம் வரும். ஆனால் நான் என், அம்மா, அப்பா, பாட்டி, அண்ணா, மன்னி என அனைவருக்கும் ஒரே இண்லண்ட் கடிதத்தில் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறேன். அவர்களும் அதே மாதிரி பதில் எழுதி அனுப்புவார்கள். இந்த மாதிரி சில கடிதங்களை நான் இன்னமும் பொக்கிஷமாக பாதுகாப்புடன் வைத்திருக்கிறேன். இப்போது நினைத்தால் பேசிக் கொள்ளும் வாய்ப்புகள் நிறைய வகையில் வந்து விட்டது. (ஆனால், நினைத்தால்தானே:)) ) தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. வணக்கம் சகோதரி

      25 பைசா கார்டில்.. இது முதலில் பத்து பைசாவாக இருந்தது. 25 பைசாவுக்கு ஒரு இண்லண்ட் லெட்டர் கிடைக்கும். போகப் போகத்தான் விலைவாசி ஏற்றம் அதிகமாகியது.

      Delete
    3. 5 பைசாவுக்குக் கூடக் கார்டு விற்றிருக்கிறது. பின்னர் பத்து/பதினைந்து என ஆகி 25 பைசாவுக்கு வந்தது.

      Delete
    4. வணக்கம் சகோதரி

      போஸ்ட் கார்டு ஐந்து பைசாவுக்கு இருந்ததை எங்கள் அம்மா மூலம் கேள்விபட்டுள்ளேன். எனக்கு நினைவு தெரிந்து பத்து பைசாவுக்கு கிடைத்தது. அப்போது இந்த இண்லண்ட் லெட்டர் பதினைந்து பைசாவுக்கு விற்பனையானதோ? இல்லை, அப்போது இந்த கவர் வெளிவர வில்லையோ ? நினைவிலில்லை. தங்களுக்கு தெரிந்திருந்தால் சொல்லவும். தங்கள் மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. இணையம் என்றொரு வாய்ப்பு இல்லாவிட்டால் பெண்களின் இத்தனை திறமை வெளிப்படாமலேயே போயிருக்கும்.

    கவிதை, பதிவு அருமை.

    என் பெரியப்பா இன்லண்ட் எழுதினால் மத்தவங்க சுலபமா படிக்கணும்னு நினைக்கமாட்டார் போல. அன்புடன் எனக்கு எழுதும் கடிதங்களைப்படிப்பது மிக மி கஷ்டம். அவ்வளவு நுணுக்கி எழுதுவார்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உண்மைதான். இணைய வாய்ப்பு இருப்பதால்தான் இத்தனை தூரம் ஒருதாய்மக்கள் போல் நாம் உறவு பாராட்டி பதிவுகளை இட்டு பகிர்ந்து பல விஷயங்எளை பற்றி அறிந்து, தெரிந்து கொண்டு வருகிறோம். அதற்கே இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்துக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

      நாம் அன்றைய வசதிகளை இப்படி நம் நினைவுகளின்பால் நிறுத்தி வைத்துப் பார்ப்பதும், பகிர்ந்து கொள்வதும் சுவாரஸ்யமான அனுபவங்களாகத்தான் உள்ளன.

      உங்கள் பெரியப்பா போலத்தான் சில சமயங்களில் எழுதியிருக்கிறோம்.அது அப்போது நடக்கும்,நிகழும்,எழுத நினைக்கும் சம்பவங்களை பொறுத்தது.:)

      கவிதையும் பதிவும் அருமை என்ற தங்களின் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றிகள். உங்களின் அன்பான கருத்துக்கள் கண்டு மகிழ்வடைந்தேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. இப்போதுதான் கோமதி அக்கா பதிவைப் படித்துவிட்டு வருகிறேன்.  இரண்டு பேருமே வல்லிம்மா பதிவால் ஈர்க்கபப்ட்டு ஒரே விஷயத்தில் பதிவிட்டிருக்கிறீர்கள்.  முன்பெல்லாம் தொடர்பதிவு வருமே...   அது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் கருத்து உண்மைதான். வல்லி சகோதரி பதிவில் சற்று மனம் கலங்கி விட்டது. அதில் அம்மாவின் நினைவுகள் அதிகமாக வந்ததும் இப்பதிவுக்கு காரணம். சகோதரி கோமதி அரசு அவர்களும் அதையே நினைத்து பதிவிட்டிருப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.என் பதிவைப்பார்த்து என்னைப் போல் அவர்களும் ஆச்சரியமடைந்துள்ளார்கள்.

      /முன்பெல்லாம் தொடர்பதிவு வருமே..அது நினைவுக்கு வருகிறது./
      ஹா ஹா. அது தொடர் பதிவு. இது ஒன்றையொன்று தொட்டபடி வந்த பதிவு.:) இரு பதிவுகளும் இப்படி இணை பிரியாமல் வந்ததற்கு வல்லி சகோதரியின் நினைவுகள்தான் காரணம். அவர்களுக்கு என அன்பான நன்றிகள். நீங்களும் இது தொடர் பதிவு என நினைவு கூர்ந்து கருத்து தந்தமைக்கு மிக்க மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. பழைய பந்தங்களை பரணில் கிடத்தி--   மனம் தொட்ட வரி!   தனித்திருக்கிறாயா, உன் தாயுடன் இருக்கிறாயா...   நல்ல கேள்வி அக்கா.  தாய்களுக்கே தோன்றும் கேள்வி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீங்கள் கவிதையின் வரிகளை ரசித்து பாராட்டியது மிகவும் சந்தோஷம் தருவதாக உள்ளது. ஏதோ எனக்கு தோன்றியதை எழுதி விட்டோமே வெளியிடலாமே.. என முதலில் தயக்கமாகத்தான் யோசித்தேன். உங்கள் பாராட்டுக்கள் என் தன்னம்பிக்கையை வளர்க்கின்றன.தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயது வரைதான் பெற்றோர்களுடன் வாழ விதித்திருக்கிறது, அலலது கொடுத்து வைத்திருக்கிறது.  அதனாலேயே அவர்களுக்கு பெற்றோரிடத்தில் அதிக பாசம் உண்டாகிறது.   பெண்களுக்கு இருந்தும் இல்லாத சொந்தம்.  (பெரும்பாலான) ஆண்களுக்கு இருந்தும் இலலாத பாசம்!

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம்... சட்னு யோசிக்க வச்சுட்டீங்க. ஆண் எப்போதுமே கடு கடு தான். பெற்றோர் அன்பைப் புரிந்துகொள்ளாத ஜடம். பெண்கள்தான் அன்பு உடையவங்க. ஆண் ரிலேஷன்ஷிப் வெறும் பிசினெஸ் ரிலேஷன்ஷிப் (பெரும்பாலானவர்களுக்கு). பெண்கள் இல்லையேல் வாழ்வு சுடுகாடுதான் என்பது என் அபிப்ராயம்

      Delete
    2. கூடவே இருக்கும் ஒன்றின் அருமையை நாம் உனர்வதில்லை - இழக்கும் வரை.   விலகப்போகிறோம் என்பது தெரிந்ததாலேயே அவர்களுக்கு இன்னும் பாசம், நெருக்கம் அதிகமாகிறது.

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயது வரைதான் பெற்றோர்களுடன் வாழ விதித்திருக்கிறது, அலலது கொடுத்து வைத்திருக்கிறது. அதனாலேயே அவர்களுக்கு பெற்றோரிடத்தில் அதிக பாசம் உண்டாகிறது./

      சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.இது அந்த காலத்திற்கு கொஞ்சம் நிறையவே பொருந்தி வந்தது. இப்போது பெண்கள் நன்கு கற்று வேலைக்கு சென்று ஆண்களுக்கு நிகரான ஒரு சூழ்நிலையில் அவர்கள் வாழ்க்கை வந்ததும், உங்கள் பெற்றோரைப் போல் என் பெற்றோரையும் அருகில் வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன் என பெருபான்மையோர் கூற ஆரம்பித்து விட்டதால்,இந்த மகள்கள் பெற்றோரை விட்டு அதிகமாக பிரிந்திருத்தல் கொஞசம் குறைந்துள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட மகன்கள் இருந்தால், சமயத்தில் பெற்றோர்களே மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று தங்குவதை ஆட்சேபித்து விடுகின்றனர . இப்படியும் நடக்கிறது.

      பாசம் என்பதை இருபாலரும் ஆரம்ப முதற் கொண்டே பெற்றோர்கள் மீது வைக்கின்றனர். ஒரு வயதிற்கு பின் அதை வெளிப்படுத்தும் வகையில் தவிர்க்க இயலாத சூழ்நிலைகள், தடுமாற்றம் மிகுந்த தாழ்வு மனப்பான்மைகள் இருவருக்கும் நிறைய வித்தியாசங்களை தந்து விடுகிறது.

      கணவருக்கு முன் தன் பெற்றோரிடம் அன்பு காட்ட மகள் தயங்குவதையும், மனைவியின் சொல்லுக்கு பின் மகன் தாய் தந்தையரை உதாசீனம் செய்வதையும் நாம் கண்டிருக்கிறோம். எல்லா உறவுகளும் எந்நாளும் அன்புடன் இருக்கவும் ஒருவருக்கொருவர் பிரியாது அனுசரித்து இருக்கவும் நிறைய கொடுப்பினைகள் செய்திருக்க வேண்டும். ஆண்டவன் அனுஹிரகம் பரிபூரணமாக கிடைத்திருக்க வேண்டும்.
      அன்பான தங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. வணக்கம் சகோ

      சகோதரர் நெல்லைதமிழரும், சகோதரர் ஸ்ரீராம் அவர்களும் மீண்டும் வந்து பெண்களுக்கு இயல்பாகவே பெற்றவர்களின் மீது பாசம் அதிகம் இருக்குமென்பதை வலியுறுத்தி கூறியிருப்பதற்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. அம்மா என்றாலே அன்பு தானே! உங்கள் பதிவு மட்டுமல்ல, பொதுவாகவே அம்மாவின் நினைவுகள் இப்போதெல்லாம் அடிக்கடி வருகின்றன. உங்கள் தமிழாற்றல் பிரமிக்க வைக்கிறது. மிக அழகாய்ச் சொல்லி இருக்கிறீர்கள். கோமதியின் பதிவையும் போய்ப் பார்க்கிறேன். இந்தக் கடிதங்களும் தபால்காரரும் என்னுள்ளும் பல நினைவுகளைத் தூண்டி விட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      /பொதுவாகவே அம்மாவின் நினைவுகள் இப்போதெல்லாம் அடிக்கடி வருகின்றன./

      ஆமாம்.. என்றுதான் அம்மாவின் நினைவு வராமல் இருந்திருக்கிறது... ஆனாலும் நீங்கள் சொல்வது போல் இப்போது அன்பை பிரதிபலிக்கும் பதிவுகளை படித்தால் உடனே அம்மா நினைவுதான் வருகிறது.

      சகோதரி கோமதி அரசு அவர்களும் இது சம்பந்தமான நினைவுகளையே அவர் பதிவிலும் பிரதிபலித்திருக்கிறார்.

      /இந்தக் கடிதங்களும் தபால்காரரும் என்னுள்ளும் பல நினைவுகளைத் தூண்டி விட்டார்கள்/

      அப்படியா .! விரைவில் தங்கள் பதிவிலும் தங்கள் அம்மாவின் அன்பு நினைவுகளை எதிர்பார்க்கிறேன்.

      கவிதை நன்றாக உள்ளதென்ற பாராட்டிற்கு மிக்க நன்றி. உங்கள் திறமைகளுக்கு முன் நானெல்லாம் வெகு சாதாரணம். தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. கவிதை வரிகள் அருமை சகோ.

    கடிதத்தொடர்பை விஞ்ஞான வளர்ச்சி துண்டித்து விட்டது உண்மையே...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /கடிதத்தொடர்பை விஞ்ஞான வளர்ச்சி துண்டித்து விட்டது உண்மையே../

      ஆம்.. உண்மையே.. ஆனால் இந்த விஞ்ஞான வளர்ச்சியும் நமக்கு ஆதாயமாகத்தான் உள்ளது. பழைய நினைவுகளை அசை போடுவதிலும் ஒரு ஸ்வாரஸ்யம் உள்ளதால், அதுவும் அடிக்கடி நினைவுக்குள் வந்து போகிறது.

      கவிதை வரிகள் அருமையென்ற பாராட்டுக்கள் கண்டு மனம் மகிழ்ந்தேன். தங்களின் நல்லதொரு கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. கடிதங்கள் எழுதும் பழக்கம் அருகி விட்டது! நானும் தில்லி வந்த புதிதில் நிறைய கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் கடிதம் எழுதுவது இல்லை. கடிதங்கள் குறித்த உங்களது நினைவுகள் நன்று. கவிதையும் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /நானும் தில்லி வந்த புதிதில் நிறைய கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் கடிதம் எழுதுவது இல்லை/

      அப்படியா? மிகவும் சந்தோஷமாக உள்ளது. அதன் பின் கைப்பேசியில் பேசிக் கொள்ளும் காலங்கள் வந்து விட்டதே..அது கடிதங்கள் எழுதிப்போடும் காலங்களை விட சௌகரியந்தான்... ஆனாலும், அப்போது கடிதங்கள் எழுதுவதும், பதிலுக்கு அதன் வரவை எதிர் பார்ப்பதும், கொஞ்சம் சுவாரஸ்யமான நாட்கள்தான்.. இப்போது என்றேனும் ஒருநாள் அந்த நாட்களை மனதளவில் ரசித்துப் பார்க்க முடிகிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

      பதிவையும் கவிதையையும் பாராட்டி இருப்பது கண்டு மன மகிழ்ச்சியடைந்தேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. இந்தப் பதிவு கண்டு கலங்குகின்றன கண்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அடாடா.. பதிவின் வரிகள் தங்கள் மனம் வருத்தப்படும்படி அமைந்து விட்டதா? என் மன கலக்கங்களை சற்று அதிகமாக வெளிக்காட்டி விட்டேன் என எண்ணுகிறேன்.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. தாய்க்கு ஒரு கடிதம் என்று
    கலங்க வைத்த தமிழே...
    கண்ணீரைத் துடைத்து விட
    கசிவதுவும் தமிழே...

    கருத்துக்குள் கருத்தாக
    கனன்று வரும் தமிழே..
    களிப்புக்குப் பொருளென்ன
    புகன்று விடு தமிழே...

    புரிவதுவும் புரிவதுவும்
    அறமென்று சொல்லி தமிழே..
    அது என்றும் துணை வராமல்
    அலைவது ஏன் தமிழே!..

    அறத்தார்க்கு அறமென்று
    துணையாக்கி வைத்த தமிழே..
    அஃது இல்லார்க்கு ஆலவட்டம்
    ஏன் என்று இயம்பு தமிழே..

    நல்லார் தம் நடு நாவில்
    நின்றாடி விளையாடும் தமிழே..
    குலம் கொண்டார் தம் குறை தீர்த்து
    நலம் சேர்க்க ஆகுவாய் தமிழே..

    மனம் கொண்ட துயர் தீர
    மனம் கொண்ட குறை தீர
    மணம் கொண்டு வீசுவாய் தமிழே..
    குணம் கொண்டு பேசுவாய் தமிழே..

    உயிர் தந்த அன்னைக்கு ஒரு மடல்
    என்றின்று ஒருமனம் கலங்குவதும் தமிழே..
    தமிழ் கண்ட தமிழே நீ தடம் கண்டு
    வந்திங்கு தளராமல் காத்திடுக தமிழே..
    தாயாகித் தண்ணருள் ஊட்டிடுக தமிழே!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆஹா.. தூய தமிழில் கனிவான பாட்டெழுதி இப்போது தாங்களும் என்னை கண்கலங்க வைத்து விட்டீர்கள். அருமையான வரிகள். வாசித்து. வாசித்து மனம் மகிழ்ந்தேன்.

      தங்கு தடையின்றி தங்கள் மனதில் புரண்டு வரும் நதியாக தமிழும் தவழ்ந்து என் பதிவில் வந்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தங்கள் கவித்திறமை பன்மடங்கு பெருகி சோர்வின்றி இவ்விதம் பதிவுகள்தோறும் உலாவி வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தங்கள் அன்பான கவிக்கு சிரம் தாழ்த்தி பணிவுடன் வணங்குகிறேன். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. கவிதை வரிகள் அருமை...

    ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கவிதையின் வரிகள் அருமை என்ற பாராட்டிற்கும், அதை தாங்கள் ரசித்ததற்கும் மிக்க மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. மூன்றாவது கண்ணி இப்படி வரவேண்டும்..

    புரிவதுவும் புரிவதுவும்
    அறமென்று சொல்லி வைத்த தமிழே..
    அந்த அறம் என்றும் துணை வராமல்
    அலைவதுவும் எதற்கென்று சொல்லிடுவாய் தமிழே!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /புரிவதுவும் புரிவதுவும்
      அறமென்று சொல்லி வைத்த தமிழே..
      அந்த அறம் என்றும் துணை வராமல்
      அலைவதுவும் எதற்கென்று சொல்லிடுவாய் தமிழே!../

      ஆஹா.. இதுவும் பொருத்தமாக உள்ளது. மீண்டு வந்து திருத்திய "பா"கண்டு மன மகிழ்ந்தேன். மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. *மீண்டும்* என படிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். தட்டச்சு பிழைக்கு மன்னிக்கவும்.

      Delete
  18. அன்பு கமலாமா,
    தாமதமாகப் படிக்கிறேன்.
    தடுப்பூசி வெள்ளிக் கிழமை போட்டுக் கொண்டேன்.
    வலி கொஞ்சம் அதிகம். வயதான எலும்புகளின்
    மீது ஆதிக்கம் செலுத்துகிறது:)

    ஏதோ ஒரு தீப்பொறி போல அம்மாவின்
    நினைவு பெண்களைக் கலக்குகிறது.
    என் பதிவை நீங்களும் அன்பு கோமதியும்
    மனதில் பதிந்து பதிவிலும் எழுதி விட்டீர்கள்.
    எல்லோரும் அருகில் இருக்கும் வரை
    அந்த உன்னதத்தை மறந்து விட்டேன்.
    இப்போது அம்மா என்றால் வருவாளா?

    பெற்றோர் நமக்காகச் செய்யும் அத்துணை
    நன்மைகளையும் இப்போது நினைத்து மருகுகிறேன்.

    உங்கள் கவிதை வரிகள் அற்புதம்.
    எல்லா அன்னையருக்கும் ,பாட்டிகளுக்கும் போய்ச் சேரட்டும்.

    என்றும் நலமுடன் இருங்கள்.அம்மா நம்மை மறக்க மாட்டாள்.
    காப்பாள். அன்பு சகோதரியாக கோமதியும் நீங்களும்
    கீதா சாம்பசிவம் இன்னும் எல்லோரும்
    மனதை அணைக்கிறீர்கள்.
    தங்கள் தமிழ் வாழ்க.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      தாமதமெல்லாம் இல்லை. நேற்றுத்தான் பதிவை இட்டேன். இன்று. நீங்கள் வந்து அருமையான கருத்துக்களை தந்துள்ளீர்கள். நேற்று நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதை தங்கள் பதிவை பார்த்து நானும் தெரிந்து கொண்டேன். நானும் வந்து கருத்துரை தெரிவித்திருந்தேன். தற்சமயம் கை வலி எப்படி உள்ளது? நன்கு ஓய்வு எடுத்து விட்டு வலி குறைந்ததும் வலைத்தளம் வந்திருக்கலாமே... உடம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

      /ஏதோ ஒரு தீப்பொறி போல அம்மாவின்
      நினைவு பெண்களைக் கலக்குகிறது./

      ஆமாம் தங்கள் பதிவை படித்து பின் மனசுக்குள் ஒரு கலக்கம். உடனே அம்மாவை காண வேண்டுமென்ற தவிப்பு. பழைய நாட்களில் அவரை சரிவர கவனிக்கவில்லை என்ற குற்ற உணர்ச்சி அனைத்தும் ஒருசேர வந்து விட்டது. இதோ...! நீங்கள் கமலாமா என்று பாசமாக அழைக்கும் போது என் தாயின் குரலை அதில் கேட்கிறேன் மனம் நெகிழ்கிறது. இந்த அன்பான உறவுகள் நமக்குள் என்றும் இனிதாக இருந்து தொடர வேண்டும். அதைத்தான் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      நீங்கள் சொல்வது போல் நம் பெற்றோர்கள் என்றும் உடனிருந்து நம்மை காப்பார்கள்.. அதுதான் நமக்கும் வேண்டும்.. தங்கள் அன்பான பாராட்டிற்கு மகிழ்வுடன் கூடிய மிக்க நன்றிகள்.தங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்ளவும். நன்கு ஓய்வு எடுங்கள். இத்தனை கைவலியிலும் தாங்கள் வந்து தந்த அருமையான கருத்துரைகளுக்கு மிக்க நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  19. கடிதங்களோடு அம்மாவையும் நினைவு கூர்ந்தது சிறப்பு. அழகான கவிதை. சின்னச் சின்ன தவறுகளோடு அம்மா எழுதியிருந்த கடிதங்கள் இன்னும் இருக்கின்றன. 

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை பாராட்டி நீங்கள் அளித்த கருத்துரைகள் என் எழுத்துக்களுக்கு உரம் சேர்க்கும் விதமாய் இருக்கிறது. உங்களின் பணிகள், பயணங்கள் நடுவிலேயும் என் வேண்டுகோளுக்கிணங்கி வந்து அருமையான கருத்துக்கள் தந்திருப்பது கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். உங்கள் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

      நானும் என் அம்மா எழுதிய கடிதங்கள் சிலவற்றை பத்திரமாக பாதுகாத்து வருகிறேன்.நம் பதிவுலகில் சகோதரிகள் அனைவருமே இவ்விதம் இருப்பதை கண்டு மகிழ்ச்சியும் அடைகிறேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete