Pages

Thursday, June 18, 2020

இதுவும் ஓர் நோய்தான்..

பசி என்பது உலகத்திலேயே ஒரு கொடுமையான நோய்... எத்தனையோ நோய்களுக்கு மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டு அந்தந்த நோய்களை  குணப்படுத்தி விடலாம்./விட்டிருக்கிறார்கள். ஆனால் இந்தப் பசி நோய்க்கு வயிறார இரு வேளையாவது உணவளித்தால்தான் அது குணமாகும். இல்லையென்றால், அறிவு மழுங்கும். அவ்வாறான அறிவின் சறுக்கல்களில், தீய குணங்கள் பலதும் உற்பத்தியாகும். அது  பசியாற சிறிதேனும் திருடத்தூண்டி, அந்த திருட்டை மறைக்க பொய் எனும் பாலம் அமைத்து அதில் நடக்க வைத்து, இடையில் பெருங் கொள்ளைகளை அநாயசமாக செய்ய வைத்து, சமயத்தில் கொலைக்கும் வழி வகுக்கும். இதில் இந்தப் பசியை போக்கும் மருந்தாகிய  செல்வம் வெவ்வேறு அராஜக முறையில் வந்த பின் கூட அப்போதைக்கு பசியெனும் நோய் தன்னை அகற்றிக் கொண்டு அம்மனிதருக்குள் பஞ்சமாபாதகங்கள் எனும் தீயகுணங்கள் அபரிமிதமாக பெருகி தாண்டவமாடுவதை பார்த்து ரசிக்கும். 

பசி வந்திட பத்தும் பறக்கும். . என்றார் ஔவை பிராட்டி. 


அதென்ன...? பத்தும் என்றால், கீழுள்ள இவைகள்தான்... ! 

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின் கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.

விளக்கம்:-
ஒரு மனிதருக்கு பசியெனும் நோய் தோன்றி அது தீர்க்கப்படாமல் போகும் போது, அவர் அந்த கடும் நோயினால், அவதிப்படும் போது அவரிடத்தில் உள்ள சிறந்த குணங்களாக கருதப்படும்  அனைத்தும் கண்காணாமல் போய்விடும். இதைத்தான் “பசி வந்தால் பத்தும் பறக்கும்” என்றார் ஔவை பிராட்டியார். 

அவை மானம், குலப்பெருமை, கல்வி, வலிமை, அறிவு, பிறருக்கு கொடுக்கும் குணம், தவம், பெருந்தன்மை, தளராத முயற்சி, தேன் போல் பேசும் மங்கையர் மேல் உள்ள ஆசை ஆகிய பத்தும் பசியின் மயக்கத்தில் பறந்து போகும்.

மேலே குறிப்பிட்டபடி பசி நோயினால், ஒரு மனிதருக்கு இவை அனைத்தும் காணாமல் போனபின் பசிக்கும் தருணங்கள் வந்தாலும், வந்த பசியை அலட்சியம் செய்து. அறிவு மழுங்களின் காரணமாக மனிதருடன் நட்பாகியிருக்கும் தீய எண்ணங்கள் முன்னே வந்து  நின்று, அதன் வழியே நடக்க வைக்கும். 

இத்துடன் இல்லாமை, இயலாமை போன்ற ஆமைகள் புகுந்த இடத்தில்  இந்த வறுமையும் சொல்லாமல் கொள்ளாமல் புகுந்து கொண்டு விடும்.  வறுமை எனும் நோய்க்கும், இந்த பசி நோயும் ஒர் இணைபிரியாத ஆத்மார்த்தமான நண்பன். ஆகவே இரண்டும் சேர்ந்து நட்புறவாகி இருக்கும் இடத்தில் மனிதர்கள் அது தீரும் மட்டும் சிரமபடுகிறார்கள். 

எப்போதுமே ஒரு பக்கத்திற்கு மறுபக்கம்  என்ற ஒன்று இருப்பதைப் போன்று, மேற்சொன்ன  மாதிரி தீய எண்ணங்கள் உருவாகும் வாய்ப்புக்கு எதிரிடையாக பிறப்பிலேயே நல்ல குணங்களோடு பிறந்திருப்பவர்கள் வறுமையையும்  ஏழ்மையையும் பொறுமையாக தாங்கி  கொண்டு போவதுடன்,  பிறரிடம்  அதை வெளிக்காட்டாமலும் இருப்பார்கள். அவர்களுக்கு இறைவனே நல்ல தீர்வு ஒன்றை நல்ல சமயத்தில் மறக்காமல் தருவான். 

 இதற்கேற்ற மாதிரி "தோழனோடும் ஏழமை பேசேல்.."என்றொரு பழமொழியும் உண்டு. நம்மோடு நெருங்கி பழகும் நட்பாக அயலார் இருந்தால் கூட, நம் ஏழ்மையைக்கூறி அவரை வருத்தவோ, தானும் வருந்தவோ கூடாது என்பார்கள். "செழிப்பை  அவசியமின்றி வெளிக் காட்டினால் அது பிறரை நோகடிக்கும் அகம்பாவம்.. ஏழ்மையை  அடிக்கடி வெளிப்படுத்தினால் அது பிறரால் நோகும் அவமானம்." என்பதும் எந்நாளும்  மாற்ற இயலாத வார்த்தைகள்தானே..! 

பொறுமை காத்து ஏழ்மையில் வாடும்  இவர்களுக்காக இறைவன்  மனித வடிவில் கண்டிப்பாக வந்து உதவி செய்வான். . ஒவ்வொரு மனிதருக்குள்ளும் கடவுள் " உள்கட" ந்து இருக்கத்தான் செய்கிறான். ஒவ்வொருவரும் அதை புரிந்து கொள்ளும் போது, "அவன்"அந்த மனிதர்களின் மனதிலிருந்து வெளிப்படுகிறான். அதைதான் நாம்" மனித நேயம் "என்றும், "மனிதாபிமானம்" எனவும் சொல்கிறோம்

கீழுள்ள இந்தக் கதையை (இல்லை, கதை மாதிரி)  உள்ளதை படித்தவுடன் எனக்கு இப்படித்தான் தோன்றியது. 
 
படித்ததில் பிடித்தது .... 

போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில், ஒரு சிறு துண்டுக் காகிதத்தில் எழுதித் தொங்க விடப் பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய்ப் படித்தேன். 

அதில் " என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். எனக்குக் கண் பார்வை அவ்வளவு சரியில்லை" என்று விலாசத்துடன் எழுதியிருந்தது. 


எனக்கும் பொழுது போகவில்லை, அந்தக் குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். "அந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனா ஓர் பழைய வீடு இருக்கும். அங்கதான் அந்தக் கண் தெரியாத அம்மா இருக்கு".


அங்கே ஓர் சிறிய கீத்துக் கொட்டகை. ஒரு நாள் மழைக்குக் கூடத் தாங்காது. வெளியில், கண்கள் குழி விழுந்து, எலும்பும், தோலுமாக வயதான ஓர் அம்மா . என் காலடிச் சத்தம் கேட்டதும்,


யாருப்பா நீ?


அம்மா, நான் இந்த வழியா வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. அதை உங்களிடம் தரலாம் என்று வந்தேன். கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார். 


தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர் வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சதுன்னு சொல்லிக் குடுத்துட்டுப் போறாங்க... 

அந்த கடிதம் நான் எழுதல தம்பி. எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. 

. பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க என்று சொல்லிக் கொடுத்துத் திரும்பினேன். 

"தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்தக் கடிதத்தை மறக்காமல் கிழித்துப் போட்டு விடு.." என்று அறிவுரைத்தாள் அந்தத் தாய்.

என் மனதில் வித விதமான எண்ணங்கள். யார் அந்தக் கடிதத்தை எழுதி இருப்பார். அந்த கடிதத்தைக் கிழித்து விடு என்று அந்த அம்மா ஒவ்வொருவரிடமும் கூறிக் கொண்டு தான் இருப்பார். ஆனாலும் யாரும் அப்படிச் செய்யவில்லை. யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனத்தால் நன்றி சொல்லிக் கொண்டேன். *நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்கு ஆயிரம் வழிகள்*


மனதில் யோசித்துக் கொண்டே வரும்போது வழியில் ஒருவர் என்னிடம்.


"அண்ணே இந்த விலாசம் எங்கேன்னு சொல்ல முடியுமா? கீழே 50 ரூபாய் கிடந்தது. அந்த அம்மாகிட்டக் குடுக்கணும். வழி சொல்றீங்களா?"


*மனித நேயம் செத்துப் போனது என்று யார் சொன்னது??? இன்னும் சாகவில்லை.


இதுதான் பணத்தாலும் விலைக்கு வாங்க முடியாத நம் மனித நேயம்!!

உண்மைதானே..! செல்வங்கள் என்றொரு தலைப்பில் நான் அன்றோர் பதிவு எழுதும் போது, அதற்கு நல்லதொரு கருத்துக்கள் தந்த  சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்கள்"பசி வந்திட பத்தும் பறக்கும் " என்பது பற்றி எழுதுங்கள் என தன்  ஊக்க கருத்தையும்  சொன்னார். நேரம் வாய்த்தால் எழுதுகிறேன் என நானும் அவர்களின் கருத்துக்கு  பதில் சொல்லியிருந்தேன். 

அது போல் அந்த நேரம் வாய்த்ததோ  என்னவோ, இந்த" படித்ததில் பிடித்தது" எனக்கு வாட்சப்பில் வந்ததும், ஒரு மனிதரின் பசி எவ்வளவு கொடுமையானது, அதுவும் இப்போதுள்ள "இந்த கால கட்டத்தில்" எனத் தோன்றவே இந்தப்பதிவை எழுதினேன். இந்த வாட்சப் கதையை  அனேகமாக அனைவரும் படித்திருக்கலாம்.  இருப்பினும் என் பதிவிலும் படித்து அந்த வயதான பெண்மணிக்குள் அத்தனை ஏழ்மையிலும் இருக்கும்  நல்ல உள்ளத்தையும், அவருக்கு உதவும் நல்ல உள்ளங்களையும் மனதாற போற்றுவோம். சரிதானே..! 

அன்புடன் இந்தப் பதிவை படித்தவர்களுக்கு என் பணிவான நன்றிகள். 🙏 . 

33 comments:

  1. பசி வந்திட பத்தும் பறந்துபோம்

    மூத்தோர் வாக்கு உண்மைதான். நல்லா விளக்கமா எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்.

    வாட்சப் கதை இந்த, சிறிது வேறு வடிவிலும் சுற்றிக்கொண்டே இருக்கிறது.

    தேன்போலப் பேசும் - இதுதான் புரியலை. குயில் போல ஒரு பெண் பாடினாலே சகிக்காது. தேன்போல பேசினால்?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் முதலில் வருகை தந்து கூறிய கருத்துப் பகிர்வினுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்துப்படித்து பாராட்டியமைக்கு மனமுவந்த நன்றிகள்.

      இந்தக் கதை வேறு வடிவிலும் வருகிறதா? ஆனால் படிக்கும் போது மனதிற்கு நன்றாக இருக்கவே பகிர்ந்தேன்.

      /தேன்போலப் பேசும் - இதுதான் புரியலை. குயில் போல ஒரு பெண் பாடினாலே சகிக்காது. தேன்போல பேசினால்?/

      ஹா ஹா. இது வெறும் உவமானந்தானே..! இனிமை (இனிப்பான) நிறைந்த சொற்கள்- என்ற அர்த்தமும் கொள்ளலாம். அன்ன நடை, கிளி போல அழகு என்றெல்லாம் சொல்வதில்லையா? ஒருவரை அழகான உவமானங்களுடன் பொருத்தும் போது எவருக்கும் ஒரு மகிழ்வு கிடைக்கும் என்பதை ஔவை பிராட்டியும் அறியச் செய்துள்ளார். இப்படி பிறரை சிலாகித்து கூறுவது ஒரு வார்த்தை வியூகம் எனவும் நினைக்கிறேன்.

      உங்களது ஊக்கமிகு அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. பசி வந்திட பத்தும் பறக்கும் விவரங்கள் அறிந்து கொண்டேன். சுவாரஸ்யம .

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்துப் படித்து தந்த நல்லதொரு கருத்துக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. படித்ததின் பகிர்வு ஏற்கெனவே படித்து நெகிழ்ந்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஏற்கனவே படித்ததின் பகிர்வை படித்து நெகிழ்ந்திருக்கிறீர்களா? மகிழ்ச்சி. எனக்கும் இதைப்படித்தவுடன் தனியே இருக்கும் வயது முதிர்ந்த அந்தப் பெண்மணியை நினைத்து வருத்தமேற்ப்பட்டது. அந்த நிலையிலும் அவர் கூறுவதாக சொன்ன வரிகள் மிக நெகிழ்ச்சியை தந்தது.

      தாங்கள் உடன் வந்து தந்த கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. படித்த கதை. இன்னமும் வாட்சப்பில்,முகநூலில் சுற்றிக்கொண்டே இருக்கிறது. பசி வந்திடப்பத்தும் பறந்து போம் என்பதற்கான விளக்கமும் அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். தெரிந்த விஷயங்கள் என்றாலும் திரும்ப நினைவு செய்து கொள்ளலாமே!

    தேன் போலப் பேசும் என்பது குரலில் இனிமையைக் குழைத்துக் கொண்டு மனதில் வஞ்சகத்தை வைத்திருக்கும் நபர்களைக் குறிக்கும். அதுவும் சில பெண்கள் இப்படி இருப்பார்கள். அதைத் தான் கமலா இங்கே குறிப்பிட்டிருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஓ. நீங்களும் ஏற்கனவே படித்த கதை தானா? இது எனக்கு வந்து ரொம்ப நாட்களாகி விட்டது. இந்தப் பதிவுக்கு இது துணைப் போவதால் இதையும் இங்கே பகிர்ந்தேன்.

      நான் எழுதிய பகுதியையும் படித்து அதற்கு நல்லதொரு கருத்து தந்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.
      ஆமாம்.. நினைவு கூர்வதில் தவறில்லையே..!

      /தேன் போலப் பேசும் என்பது குரலில் இனிமையைக் குழைத்துக் கொண்டு மனதில் வஞ்சகத்தை வைத்திருக்கும் நபர்களைக் குறிக்கும். அதுவும் சில பெண்கள் இப்படி இருப்பார்கள். அதைத் தான் கமலா இங்கே குறிப்பிட்டிருக்கிறார்./

      ஹா ஹா. ஔவை பிராட்டி குறிப்பிட்டிருப்பது நான் வழிமொழிந்தேன். அவ்வளவே.. நீங்கள் சொல்வது போல் உதட்டில் தேன் போன்ற பேச்சும் உள்ளத்தில் விஷமுமாக பெண்கள் உள்ளனர்.ஆனால் கண்டிப்பாக ஔவையார் இங்கு இவர்களை சொல்லியிருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். அன்பில்லா பெண்டிர் கையால் உணவருந்த வேண்டாமெனவும் அவர் ஒரு இடத்தில் தனியாக குறிப்பிட்டுள்ளார்.

      உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. பசியின் விளக்கமும் கதையும் அருமை...

    இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
    கெடுக உலகியற்றி யான். 1062

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /பசியின் விளக்கமும் கதையும் அருமை./

      பதிவை ரசித்து ஊக்கமிகு கருத்துக்கள் தந்தமைக்கு மிகுந்த நன்றிகள்.

      /இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
      கெடுக உலகியற்றி யான். 1062/

      அருமையான குறளுக்கு நன்றி. பொருத்தமான குறளை பகிர்ந்தமைக்கு பெருமையடைகிறேன்.மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. 'பசி வந்திட பத்தும் பறந்திடும் ' நல்ல விளக்கம்.
    கொடிதினும் கொடிது உணவு கிடைக்காத வறுமை. இந் நிலை ஒருவருக்கும் வராமல் இருக்க அன்னபூரணியை வேண்டுவோம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்துப் படித்து நல்லதொரு கருத்துக்கள் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      ஆமாம்.. கொடியது எனப்படுவைகளில் இந்த வறுமையும், பசியுந்தான் முதலிடம், ஒருவருக்கும் இந்த நிலை வராமலிருக்க அன்னபூரணேஷ்வரி காத்து ரடசிக்க உங்களுடன் நானும் வேண்டிக் கொள்கிறேன்.

      அருமையான கருத்துக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. இதுவும் ஒரு நோய்தான் உண்மை "பசிப்பிணி" என்று தானே சொல்கிறோம்.
    பசிப்பிணியை போக்குவது மிகவும் உன்னதமானது. காயசண்டிகையின் பசிப்பிணியை மணிமேகலை போக்கினாள் என்று சிலப்பதிகாரம் சொல்கிறதே!

    பசியின் விளக்கம் அதை எழுததூண்டிய கதை இரண்டும் அருமை.

    நம் வீடுகளில் விளக்கு ஏற்றும் போது "உனக்கெரிக்க எண்ணெயும் எங்களுக்கு சாப்பிட அரிசியும் படியள அம்மா" என்று வேண்டுவார்கள்.
    விளக்கு நாச்சியரிடம், வேண்டிக் கொள்ள சொல்வார்கள் பெரியவர்கள்.

    இந்த கொரோனா காலத்தில் வயிற்றுக்கு உணவு இல்லாமல் தவிக்கும் மக்களை நினைத்துப் பார்க்க சொல்கிறது இந்த பதிவு .

    நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

    மனிதநேய மக்களால் மக்களின் பசிப்பிணி நீங்கி வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      ஆமாம்.. உண்மைதான்..! இதையும் பசிப்பிணி என்றுதான் கூறுவர். தாங்கள் கூறும் சிலப்பதிகார கூற்று உண்மைதான். மிகவும் அழகான உவமானமாக தந்துள்ளீர்கள்.

      /நம் வீடுகளில் விளக்கு ஏற்றும் போது "உனக்கெரிக்க எண்ணெயும் எங்களுக்கு சாப்பிட அரிசியும் படியள அம்மா" என்று வேண்டுவார்கள்.
      விளக்கு நாச்சியரிடம், வேண்டிக் கொள்ள சொல்வார்கள் பெரியவர்கள்./

      உண்மை.. வீட்டில் விளக்கெரிந்தால்தான் அன்னை மஹாலக்ஷ்மியின் அருள் என்றும் நிரந்தரமாக இருக்கும். வீட்டின் செழிப்பிற்கும், பசிப்பிணி வராமல் இருப்பதற்கும் அந்த அருள் ஒன்று போதுமே..! நம் பெரியவர்கள் சொன்னதனைத்தும் உண்மைதான்..! நாமும் பின்பற்றி நம் வாரிசுகளுக்கும் அதன் உண்மை நிலைப்பற்றி விளக்குவோம்.

      இந்த கொரோனா காலத்தில் மக்கள் பசியால் கஸடப்படுவதை நினைத்தால்தான் பரிதாபமாக உள்ளது. நிலைமை சீரடைய நாமனைவரும் வேண்டுவோம்.மனித நேயங்களினால் பலருக்கு பல விதத்திலும் உதவிகள் கிடைத்து வருகின்றன.

      பதிவு நன்றாக உள்ளதென கூறி, ஊக்கமிகு கருத்துக்கள் தந்தமைக்கு மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. உண்மைதானே பசி என்பதும் ஒரு நோய் போலத்தான்... பசி வந்திட்டால் என்னமோ எல்லாம் நடகும்.. தப்புத் தண்டாக்கூட..

    இன்னும் முழுப்போஸ்ட் படிக்கவில்லை, சற்று தாமதமாக வருகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /பசி வந்திட்டால் என்னமோ எல்லாம் நடகும்.. தப்புத் தண்டாக்கூட/

      அதைத்தான் சொல்லியிருக்கிறேன். பதிவை படித்து ரசித்து நல்ல கருத்துக்கள் தந்ததற்கு மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      தாமதமாக வருவேன் என்று சொன்ன நீங்களும் உடனே வந்து முழு போஸ்டும் படித்து அழகாக கருத்துக்கள் தந்து விட்டீர்கள். எனக்குத்தான் பதிலளிக்க இப்படி தாமதங்கள் ஆகி விடுகிறது. மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. 50 ரூபாய்க் கதை அழகு, இதுவரை அறிந்ததிலை அப்படிக் கதை.. அக்கதையில் எல்லோருமே நல்லவர்களாக இருப்பதுதான் ஆச்சரியம், அந்த ஆச்சி உட்பட ஹா ஹா ஹா...

    ஆனால் தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் .

      கதை நன்றாக உள்ளதென்று கூறியமைக்கு மகிழ்ச்சி. அதில் எல்லோரும் நல்லவர்களாக இருக்கக் கொண்டுதான் அதைப் படித்தவுடன் பகிர்ந்தேன்.

      /ஆனால் தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்:))/

      ஏன் இல்லை? வறுமையினால் ஏற்படும் பசிநோயினால் அந்த பாட்டியும் அவதிபட்டிருப்பார்..அதைக் கண்டு அந்த வறுமையை போக்க எவரோ ஒருவர் அந்த தந்திரம் செய்து பணத்தை தானமாக கிடைக்கச் செய்திருக்கிறார். அந்த ஒருவர்தான் மனித ரூபத்தில் வந்து உதவி புரிந்திருக்கும் கடவுள்.

      உங்களின் நல்ல கருத்துகளுக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. பசி விளக்கங்கள் அருமை கமலாக்கா. ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க. கண்டிப்பாக ஒரு வேளைச் சோறுக்காக என்னவெல்லாமோ செய்யத் தோன்றிடும்தான்.

    பிறப்பிலேயே நல்ல குணங்களோடு பிறந்திருப்பவர்கள் //

    இது சரிதான் என்றாலும் கூட பிறப்பிலேயே நல்ல குடியில் பிறந்திருந்தாலும் கூட ஒருவருடைய சுற்றச் சூழல் ஒருவரை நல்லவிதத்தில் பக்குவமடையச் செய்ய சுற்றுச் சூழல் மற்றும் சுய சிந்தனை மிக மிக முக்கியம் இல்லையா கமலாக்கா.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்தமைக்கும், அழகான கருத்துகள் தந்தததற்கும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

      /இது சரிதான் என்றாலும் கூட பிறப்பிலேயே நல்ல குடியில் பிறந்திருந்தாலும் கூட ஒருவருடைய சுற்றச் சூழல் ஒருவரை நல்லவிதத்தில் பக்குவமடையச் செய்ய சுற்றுச் சூழல் மற்றும் சுய சிந்தனை மிக மிக முக்கியம் இல்லையா/

      நீங்கள் கூறும் இதுவும் சரிதான் என நினைக்கத் தோன்றுகிறது

      ஒரு வீட்டின் பெற்றோர்களும், அவர்கள் வீட்டு பெரியவர்களும் என அனைவரும் நல்ல பண்புகளை பெற்றிருந்தாலும், அவர்களின் சந்ததிகள் அவர்களை விட்டு தனியே சென்று படிக்கும் போதோ, வேலை நிமித்தமோ,இல்லை வேறு பல காரணங்களாலோ, வேறு இடத்தில் தங்கும் போது அங்கு பழகும் நட்புகளின் பழக்கத்தில். இல்லை தனிமை தரும் தைரியத்தில், தமது இயல்பான நற்பண்புகளை, தம் பெற்றோர் ஊட்டி வளர்த்த நற்குணங்களை சில சமயம் புறந்தள்ளுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.ஆனால் இவர்களும் கூட தன் தவறுகளை உணரும் ஏதாவதொரு கால கட்டத்தில் மறுபடி திருந்தி விட வாய்ப்புமுண்டு. இல்லை திருந்தாமல் உறவுகளின் மனக் கசப்பை சம்பாதித்து கொண்டு, தங்கள் விருப்பதோடு வாழ்ந்து முடிப்பவர்களும் உண்டு. இதற்கு காரணம் சுற்றுச்சூழலின் மாறுபட்ட கருத்துக்களும், இவர்களது சுய சிந்தனை இல்லாத போக்குந்தான் காரணம்.

      அது போல பிறவியிலேயே தீய பண்புகளில் ஊறித் திளைத்தவர்களும் மனம் மாறி அவர் இறக்கும் வரை நல்லவராக இருந்து விடுவதையும் பார்த்துள்ளோம் .அதுவும் அத்தகையதே..! இது எல்லாவற்றிற்கும், அவரவர் விதிப் பயனும், இறைவனின் அருள் பார்வை நோக்கும் ஒரு காரணமாக அமைகிறது.

      எப்படியும் எல்லாவற்றையும் பல கோணங்களில் அலசும் தங்களின் எண்ணங்களையும், நான் ஆமோதிக்கிறேன்.நானும் ஒரு விதத்தில் அப்படி பட்டவள்தானோ என்ற எண்ணமும் எனக்கு வரும். தங்கள் அழகான கருத்துகளுக்கு மிக்க நன்றி மற்றவற்றிக்கு பின் பதில் தருகிறேன். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. கதை அருமையான கதை கமலாக்கா. இன்னும் மனித நேயம் இருக்கிறது. அதை இப்போதும் இந்தச் சூழலிலும் பார்க்கத்தான் செய்கிறோம்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதை நன்றாக உள்ளதென்று கூறியமை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். உலகைப்படைத்த இறைவன் இருக்கும் வரை மனித நேயமும் இருக்கும்.ஆனால் சிலருக்கு காலதாமதங்கள் எடுத்துக் கொண்டாலும் சூழலுக்கு ஏற்ப "அவன்" மனிதனாக வந்து உதவி செய்வான்.

      உங்களின் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. அக்கா உங்கள் பதிவு எனக்கு என் தமிழ் வகுப்பை நினைவுக்குக் கொண்டு வந்தது...பிறப்பிலேயே நற்குணம் உடையோர்// சில எழுதி வைத்திருந்த நினைவு. அதை எடுத்து பதிவில் குறிப்பிடுகிறேன்.

    கீதா

    ReplyDelete
  13. அக்கா உங்கள் பதிவு எனக்கு என் தமிழ் வகுப்பை நினைவுக்குக் கொண்டு வந்தது...பிறப்பிலேயே நற்குணம் உடையோர்// சில எழுதி வைத்திருந்த நினைவு. அதை எடுத்து பதிவில் குறிப்பிடுகிறேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /உங்கள் பதிவு எனக்கு என் தமிழ் வகுப்பை நினைவுக்குக் கொண்டு வந்தது/

      நன்றி சகோதரி..நீங்கள் எழுதி வைத்திருக்கும் உங்கள் அருமையான பதில்களையும் எதிர்பார்க்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. பசியைக் குறித்த விளக்கம் அருமை சகோ
    அந்த தாய்க்கு பலரும் 50 ரூபாய் கொடுக்க சென்றது மனிதநேயத்தை வாழவைத்துக் கொண்டு இருக்கிறது.

    இப்பதிவு எனது டேஷ்போர்டுக்கு வரவில்லை.
    புதிய மாற்றம் பலவிதமான குழப்பத்தை தருகிறது.

    பதிவு போடவில்லையே... என்று தளம் பக்கம் யதார்த்தமாக வந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      பதிவை ரசித்துப் பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      அத்துடன் கதையையும் ரசித்தமைக்கு நன்றிகள். ஆமாம்.. உண்மைதான்.. மனித நேயந்தான் இன்னமும் உலகில் ஏதோ ஒரு வகையில் நல்லதை நடத்திக் கொண்டு உள்ளது.

      /இப்பதிவு எனது டேஷ்போர்டுக்கு வரவில்லை.
      புதிய மாற்றம் பலவிதமான குழப்பத்தை தருகிறது/

      அப்படியா? நான் ஏதோ வேலை நிமித்தம் தங்களால் இதுவரை வர இயலவில்லை, இல்லை கவனிக்கவில்லை போலும் என நினைத்தேன். ஆனால் மறக்காமல் எனத்தளம் வந்து கருத்துக்கள் தந்ததற்கு மனம் மகிழ்வடைகிறேன்.

      தங்களின் ஊக்கம் மிகுந்த கருத்துக்கள் என்றும் என் எழுத்துக்கு பலம். மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. ஸ்வாரஸ்யமான பதிவு. மிகவும் ரசித்தேன்.

    அப்பாடா.... Followers Gadget இணைத்து விட்டீர்கள் போல! இது நல்லது. நானும் தொடர ஆரம்பித்து விட்டேன். இனிமேல் பதிவு வந்ததும், Dashboard-ல் Update வந்து விடும் என்பதால் அன்றைக்கே வர முடியும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து நல்லதொரு கருத்து தந்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

      /அப்பாடா.... Followers Gadget இணைத்து விட்டீர்கள் போல! இது நல்லது. நானும் தொடர ஆரம்பித்து விட்டேன். இனிமேல் பதிவு வந்ததும், Dashboard-ல் Update வந்து விடும் என்பதால் அன்றைக்கே வர முடியும்./

      ஹா ஹா. முன்பும் இதேப் போல் இணைத்திருந்தேன். ஆனால், அது எங்கு போய் விட்டதென்று தெரியவில்லை. தற்சமயம் தாங்களும் தொடர்ந்து வருகிறேன் என்று சொன்னதற்கு மனமார்ந்த நன்றிகள். உங்கள் கருத்துக்கள்தான் என் எழுத்துக்கு நல்லதொரு உரம். நெட் தொடர்பின்மை காரணமாக என் பதில் சற்று தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. பசி வந்திட பத்தும் பறந்துபோம்....

    அருமையான விளக்கங்களை அறிந்துக் கொண்டேன் கமலா அக்கா ..நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து தந்த பாராட்டுகளை கண்டு மனம் மகிழ்ந்தேன். தொடர்ந்து எனது வலைத்தளத்திற்கு வந்து பதிவுகளை படித்து, ஆதரவு தரும் உங்களுக்கு என மனப்பூர்வமான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. உண்மைதான் பசி வந்திடப் பத்தும் பறந்துதான் போகிறது.. !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களின் வரவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. உங்களைப் போன்ற பதிவர்களின் ஊக்கமிகும் கருத்துரைகள் என் பதிவுகளுக்கு நல்லதோர் பலம். பதிவுக்கு வந்து கருத்து தந்தமைக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete