Pages

Thursday, June 18, 2020

இதுவும் ஓர் நோய்தான்..

பசி என்பது உலகத்திலேயே ஒரு கொடுமையான நோய்... எத்தனையோ நோய்களுக்கு மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டு அந்தந்த நோய்களை  குணப்படுத்தி விடலாம்./விட்டிருக்கிறார்கள். ஆனால் இந்தப் பசி நோய்க்கு வயிறார இரு வேளையாவது உணவளித்தால்தான் அது குணமாகும். இல்லையென்றால், அறிவு மழுங்கும். அவ்வாறான அறிவின் சறுக்கல்களில், தீய குணங்கள் பலதும் உற்பத்தியாகும். அது  பசியாற சிறிதேனும் திருடத்தூண்டி, அந்த திருட்டை மறைக்க பொய் எனும் பாலம் அமைத்து அதில் நடக்க வைத்து, இடையில் பெருங் கொள்ளைகளை அநாயசமாக செய்ய வைத்து, சமயத்தில் கொலைக்கும் வழி வகுக்கும். இதில் இந்தப் பசியை போக்கும் மருந்தாகிய  செல்வம் வெவ்வேறு அராஜக முறையில் வந்த பின் கூட அப்போதைக்கு பசியெனும் நோய் தன்னை அகற்றிக் கொண்டு அம்மனிதருக்குள் பஞ்சமாபாதகங்கள் எனும் தீயகுணங்கள் அபரிமிதமாக பெருகி தாண்டவமாடுவதை பார்த்து ரசிக்கும். 

பசி வந்திட பத்தும் பறக்கும். . என்றார் ஔவை பிராட்டி. 


அதென்ன...? பத்தும் என்றால், கீழுள்ள இவைகள்தான்... ! 

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின் கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.

விளக்கம்:-
ஒரு மனிதருக்கு பசியெனும் நோய் தோன்றி அது தீர்க்கப்படாமல் போகும் போது, அவர் அந்த கடும் நோயினால், அவதிப்படும் போது அவரிடத்தில் உள்ள சிறந்த குணங்களாக கருதப்படும்  அனைத்தும் கண்காணாமல் போய்விடும். இதைத்தான் “பசி வந்தால் பத்தும் பறக்கும்” என்றார் ஔவை பிராட்டியார். 

அவை மானம், குலப்பெருமை, கல்வி, வலிமை, அறிவு, பிறருக்கு கொடுக்கும் குணம், தவம், பெருந்தன்மை, தளராத முயற்சி, தேன் போல் பேசும் மங்கையர் மேல் உள்ள ஆசை ஆகிய பத்தும் பசியின் மயக்கத்தில் பறந்து போகும்.

மேலே குறிப்பிட்டபடி பசி நோயினால், ஒரு மனிதருக்கு இவை அனைத்தும் காணாமல் போனபின் பசிக்கும் தருணங்கள் வந்தாலும், வந்த பசியை அலட்சியம் செய்து. அறிவு மழுங்களின் காரணமாக மனிதருடன் நட்பாகியிருக்கும் தீய எண்ணங்கள் முன்னே வந்து  நின்று, அதன் வழியே நடக்க வைக்கும். 

இத்துடன் இல்லாமை, இயலாமை போன்ற ஆமைகள் புகுந்த இடத்தில்  இந்த வறுமையும் சொல்லாமல் கொள்ளாமல் புகுந்து கொண்டு விடும்.  வறுமை எனும் நோய்க்கும், இந்த பசி நோயும் ஒர் இணைபிரியாத ஆத்மார்த்தமான நண்பன். ஆகவே இரண்டும் சேர்ந்து நட்புறவாகி இருக்கும் இடத்தில் மனிதர்கள் அது தீரும் மட்டும் சிரமபடுகிறார்கள். 

எப்போதுமே ஒரு பக்கத்திற்கு மறுபக்கம்  என்ற ஒன்று இருப்பதைப் போன்று, மேற்சொன்ன  மாதிரி தீய எண்ணங்கள் உருவாகும் வாய்ப்புக்கு எதிரிடையாக பிறப்பிலேயே நல்ல குணங்களோடு பிறந்திருப்பவர்கள் வறுமையையும்  ஏழ்மையையும் பொறுமையாக தாங்கி  கொண்டு போவதுடன்,  பிறரிடம்  அதை வெளிக்காட்டாமலும் இருப்பார்கள். அவர்களுக்கு இறைவனே நல்ல தீர்வு ஒன்றை நல்ல சமயத்தில் மறக்காமல் தருவான். 

 இதற்கேற்ற மாதிரி "தோழனோடும் ஏழமை பேசேல்.."என்றொரு பழமொழியும் உண்டு. நம்மோடு நெருங்கி பழகும் நட்பாக அயலார் இருந்தால் கூட, நம் ஏழ்மையைக்கூறி அவரை வருத்தவோ, தானும் வருந்தவோ கூடாது என்பார்கள். "செழிப்பை  அவசியமின்றி வெளிக் காட்டினால் அது பிறரை நோகடிக்கும் அகம்பாவம்.. ஏழ்மையை  அடிக்கடி வெளிப்படுத்தினால் அது பிறரால் நோகும் அவமானம்." என்பதும் எந்நாளும்  மாற்ற இயலாத வார்த்தைகள்தானே..! 

பொறுமை காத்து ஏழ்மையில் வாடும்  இவர்களுக்காக இறைவன்  மனித வடிவில் கண்டிப்பாக வந்து உதவி செய்வான். . ஒவ்வொரு மனிதருக்குள்ளும் கடவுள் " உள்கட" ந்து இருக்கத்தான் செய்கிறான். ஒவ்வொருவரும் அதை புரிந்து கொள்ளும் போது, "அவன்"அந்த மனிதர்களின் மனதிலிருந்து வெளிப்படுகிறான். அதைதான் நாம்" மனித நேயம் "என்றும், "மனிதாபிமானம்" எனவும் சொல்கிறோம்

கீழுள்ள இந்தக் கதையை (இல்லை, கதை மாதிரி)  உள்ளதை படித்தவுடன் எனக்கு இப்படித்தான் தோன்றியது. 
 
படித்ததில் பிடித்தது .... 

போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில், ஒரு சிறு துண்டுக் காகிதத்தில் எழுதித் தொங்க விடப் பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய்ப் படித்தேன். 

அதில் " என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். எனக்குக் கண் பார்வை அவ்வளவு சரியில்லை" என்று விலாசத்துடன் எழுதியிருந்தது. 


எனக்கும் பொழுது போகவில்லை, அந்தக் குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். "அந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனா ஓர் பழைய வீடு இருக்கும். அங்கதான் அந்தக் கண் தெரியாத அம்மா இருக்கு".


அங்கே ஓர் சிறிய கீத்துக் கொட்டகை. ஒரு நாள் மழைக்குக் கூடத் தாங்காது. வெளியில், கண்கள் குழி விழுந்து, எலும்பும், தோலுமாக வயதான ஓர் அம்மா . என் காலடிச் சத்தம் கேட்டதும்,


யாருப்பா நீ?


அம்மா, நான் இந்த வழியா வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. அதை உங்களிடம் தரலாம் என்று வந்தேன். கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார். 


தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர் வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சதுன்னு சொல்லிக் குடுத்துட்டுப் போறாங்க... 

அந்த கடிதம் நான் எழுதல தம்பி. எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. 

. பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க என்று சொல்லிக் கொடுத்துத் திரும்பினேன். 

"தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்தக் கடிதத்தை மறக்காமல் கிழித்துப் போட்டு விடு.." என்று அறிவுரைத்தாள் அந்தத் தாய்.

என் மனதில் வித விதமான எண்ணங்கள். யார் அந்தக் கடிதத்தை எழுதி இருப்பார். அந்த கடிதத்தைக் கிழித்து விடு என்று அந்த அம்மா ஒவ்வொருவரிடமும் கூறிக் கொண்டு தான் இருப்பார். ஆனாலும் யாரும் அப்படிச் செய்யவில்லை. யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனத்தால் நன்றி சொல்லிக் கொண்டேன். *நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்கு ஆயிரம் வழிகள்*


மனதில் யோசித்துக் கொண்டே வரும்போது வழியில் ஒருவர் என்னிடம்.


"அண்ணே இந்த விலாசம் எங்கேன்னு சொல்ல முடியுமா? கீழே 50 ரூபாய் கிடந்தது. அந்த அம்மாகிட்டக் குடுக்கணும். வழி சொல்றீங்களா?"


*மனித நேயம் செத்துப் போனது என்று யார் சொன்னது??? இன்னும் சாகவில்லை.


இதுதான் பணத்தாலும் விலைக்கு வாங்க முடியாத நம் மனித நேயம்!!

உண்மைதானே..! செல்வங்கள் என்றொரு தலைப்பில் நான் அன்றோர் பதிவு எழுதும் போது, அதற்கு நல்லதொரு கருத்துக்கள் தந்த  சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்கள்"பசி வந்திட பத்தும் பறக்கும் " என்பது பற்றி எழுதுங்கள் என தன்  ஊக்க கருத்தையும்  சொன்னார். நேரம் வாய்த்தால் எழுதுகிறேன் என நானும் அவர்களின் கருத்துக்கு  பதில் சொல்லியிருந்தேன். 

அது போல் அந்த நேரம் வாய்த்ததோ  என்னவோ, இந்த" படித்ததில் பிடித்தது" எனக்கு வாட்சப்பில் வந்ததும், ஒரு மனிதரின் பசி எவ்வளவு கொடுமையானது, அதுவும் இப்போதுள்ள "இந்த கால கட்டத்தில்" எனத் தோன்றவே இந்தப்பதிவை எழுதினேன். இந்த வாட்சப் கதையை  அனேகமாக அனைவரும் படித்திருக்கலாம்.  இருப்பினும் என் பதிவிலும் படித்து அந்த வயதான பெண்மணிக்குள் அத்தனை ஏழ்மையிலும் இருக்கும்  நல்ல உள்ளத்தையும், அவருக்கு உதவும் நல்ல உள்ளங்களையும் மனதாற போற்றுவோம். சரிதானே..! 

அன்புடன் இந்தப் பதிவை படித்தவர்களுக்கு என் பணிவான நன்றிகள். 🙏 .