Pages

Friday, April 17, 2020

காலத்தின் மாற்றம் - 2

 சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவில் நம் கலாசாரமாகிய எச்சில் பத்து பற்றி உண்மை நிறைந்த விஷயங்களை  மிகவும் அழகாக எழுதியிருந்தார்கள். அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகளுடன் நன்றிகளும்.

நான் ரசித்துப் படித்தேன் என்பதை விட நாங்கள் வாழ்ந்த அந்த காலத்திற்கு சென்றும் வந்தேன். ஆனால், இந்த விஷயங்களில் இருந்த கட்டுப்பாடுகள் நம் முன்னோர்களான  பெற்றோர்களின் வயதான ஒரு கால கட்டத்திலேயே சற்று தளர்வடைந்து விட்டது எனவும் சொல்லலாம். ஏனெனில். கல்வி, கல்விக்கேற்ற பதவி, அதை வகிக்கும் இடங்கள், அந்தந்த இடங்களின் சூழ்நிலைகள், அந்த சூழ்நிலைக்கேற்ப நாகரீகமான வாழ்வுக்கு தேவையான  பணத்தேவைகள், புதுமையை விரும்பும் இளைய தலைமுறை மக்களின் மன மாற்றங்கள், அதனால் சடாரென்று அவர்களால் எடுக்கப்படும்  தீடிர் முடிவுகள், இத்தனையும் நம் சுவையான  பழைய கலாச்சார எழுத்துக்களை  கொண்ட  பல பக்கங்களை வேகமாக புரட்டி, வாழ்க்கைப் புத்தகத்தின் புது பக்கங்கங்களில் தன் நாகரீகம் என்ற மையினால் புதிது புதிதாக எழுத ஆரம்பித்து விட்டன என்பதும் நிதர்சனமான உண்மை.

நிறைய இடங்களில், இன்னமும் பழைய கட்டுப்பாடுகள் கட்டுக்குலையாமல் இருக்கலாம் / இருக்கட்டும். அவர்களின் கட்டுப்பாட்டு  செயல்களுக்கு என் பணிவான வந்தனங்கள். அவைகளை இப்போதைய காலகட்டங்களிலும் வாழ வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அன்பான நன்றிகள்.

நான் இந்த பதிவை எப்போதோ எழுதியது. "காலத்தின் மாற்றம்" என்ற தலைப்பில் பகுதி ஒன்றை மட்டும் வெளியிட்டேன். இரண்டாவதாக எழுதியது டிராப்டிலேயே  தான் வெளியாகும் "காலத்திற்கு" காத்திருந்தபடி தவமியற்றி கொண்டிருந்தது. சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவை பார்த்ததும் இதை வெளியிடும் ஆசை வந்தது. இதுதான் எதற்கும் ஒரு நல்லபடியான  " நேரம் காலம்" என்பது வர வேண்டும் என நம் பெரியோர்கள்  சொன்னதும்  உண்மையாக  இங்கு பலித்துள்ளது. .

காலத்தின் மாற்றம் 1

இது முதல் பகுதிக்கான சுட்டி. இதை கிளிக்கி  படிப்பவர்களுக்கு முதலில் என் அன்பான வந்தனங்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது காலத்தின் மாற்றம். 2.


நான் சென்ற பதிவில் குறிப்பிட்டபடி நாகரீகத்திற்கு ஏற்ற மாதிரி பெண்கள் எப்படி வாழ்வில் மாறுதல்களை சந்தித்து  வந்தார்கள்/வருகிறார்கள். என்பது குறித்து எழுத ஆரம்பித்தேன். 

        நான் கூறியபடி என் பாட்டி காலத்தில் கணவன் உட்பட வீட்டின் பெரிய மனிதர்கள் யார் வந்தாலும், முக்கியமாக ஆண்கள் வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழைந்தவுடன் வீட்டிலுள்ள பெண்கள், குறிப்பாக அந்த குடும்ப தலைவரின் மனைவி, (அல்லது அந்த வீட்டின் மருமகள்கள்) எழுந்து நிற்க வேண்டும். வந்தவர்கள் உடை மாற்றி, தாக சாந்தி செய்து, சிரம பரிகாரம் செய்து, வெளியில் சென்று வந்த விபரங்களை பற்றி (அவர்களுக்கு மனமிருந்தால்,,) அவர்கள் கூறுவதை செவிமடுத்து, அது சாப்பிடும் வேளையானால், அவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்கள் படுத்து உறங்க ஆரம்பித்த பின்தான், இந்த மனைவியானவள். (மருமகள்கள்) தன் வயிற்றில் எழும் பசியை போக்கி, கால் கடுக்க நின்ற கால்களுக்கும் சிறிது ஓய்வை தர வேண்டும். (அதற்குள் ,வேறு வேலைகள் (கட்டளைகள்) வீட்டின் பெரியவர்கள் மூலமாக, முளைத்து, பசியையும் ஓய்வையும் சிறிது நேரம் தள்ளி வைக்கும்.) இல்லையெனில் நன்கு படுத்து உறங்கி கொண்டிருக்கும் நபர் அந்த காலத்தில் மின் விசிறிகள் இல்லாததால், “ஐயோ! இந்த வேர்வையில் தூக்கம் கலைகிறதே! இந்தாடி பெண்ணே! கொஞ்சம் விசிறி கொண்டு வீசி வீடேன்!” என்று கத்த மறுபடியும் கால் கடுக்க நின்றபடி அவர் தலை, முதல் கால் வரை காற்றை பெறச் செய்யும் வைபவத்தை நிகழ்த்த வேண்டும். அவர் அந்த காற்றில் நித்திரை உலகில் மீண்டும் பயணித்த பின்பும் அவர் மறுபடியும் இந்த உலகத்துக்கு எரிச்சலுடன் வந்து விடக் கூடாதேயென்று, மிகுந்த பொறுமையுடன் சேவை செய்து கொண்டிருக்க, வந்த பசி வயிற்றில் இரைச்சலுடன் மோதி, தோல்வியுடன் ஓட, பின் வந்து போன பசிக்கு சிறிது உணவை அளித்து விட்டு பிற வேலைகளை முடித்துக் கொண்டு இந்த மனைவியானவள், (மருமகளானவள்) தன் உடலுக்கு கொடுக்கும் ஓய்வுக்கு நிகராக வேறு ஒரு பொருள் இந்த உலகில் கண்டிப்பாக இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். என்றெல்லாம், என் பாட்டி தான் வாழ்ந்த வாழ்வை சொன்னதை கேட்டு உங்களுடன் பகிர்ந்த எனக்கே மூச்சு முட்டுகிறதே! பாட்டிக்கு எப்படி இருந்திருக்கும்?           
      
        
          அந்த காலத்தில் இளவயதின் தன் அனுபவங்களை சொல்லி வளர்த்ததாலோ, இல்லை, பார்த்து வளர்ந்ததாலோ, என்னவோ! என் அம்மா காலத்திலும். அதே மரியாதையை பெரியவர்களுக்கு தந்து வாழ்ந்து வந்தார்கள். என் தந்தைக்கும் தந்தை வீட்டின் பெரிய உறவுகளுக்கும், என் அம்மாவும் அதே மரியாதையை தந்தார்கள். ஆனால், பாட்டியின் காலத்தை விட சற்று பரவாயில்லை! என்று சொல்ல கேட்கும் எனக்குத்தோன்றும். ஆனாலும், எனக்கு தெரிந்து என் அம்மா என் அப்பாவிடம் மிகுந்த மரியாதையுடன்தான் நடந்து கொண்டார்கள். எனக்கு விபரம் தெரிந்து என் தந்தை வெளியே சென்று விட்டு வீட்டினுள் நுழைந்ததும், என் அம்மாவுடன் சேர்ந்து என் பாட்டியும் (அம்மாவின் அம்மா) மருமகனுக்காக மரியாதை நிமித்தம் சிரமத்துடன் எழுந்து நிற்பார்கள். (பழக்கதோஷம்! விடுவதற்கு மனம் இடம் தரவில்லை!)  
      
            “அதெல்லாம் ஒன்றும் எழுந்து நிற்க வேண்டாம். மரியாதை மனதிலிருந்தால் போதும்! செய்கையில் தேவையில்லை! என்று என் தந்தை எவ்வளவோ தடுத்தும் கேட்க மாட்டார்கள். இதற்காகவே என் தந்தை வெளியிலிருந்து வரும் போதெல்லாம் சிறிது நேரம் வாசல் திண்ணையில் அமரந்து விட்டுதான் வருவார். (அதற்குள் வீட்டினுள் படுத்துக்கொண்டோ, இல்லை கீழே அமர்ந்து ஏதாவது வேலையிலோ ஈடுபட்டிருக்கும் என் பாட்டி, வாசலில் அமர்ந்திருக்கும் மருமகனை கண்டதும் வருகையை உணர்ந்தவளாய், அவசரப்பட்டு எழுந்து நிற்காமல் நிதானமாக எழுந்திருக்க முயற்சிப்பார்கள் இல்லையா?) இந்த இடத்தில் மாமியாரை தன் அம்மாவாக நினைத்து மதித்த என் தந்தையை நினைக்கும் போது இப்போதும் என் மனம் நெகிழ்கிறது.
            
             இதையெல்லாம் பார்த்து பார்த்து வளர்ந்தலோ, என்னவோ! என்னிடமும் அந்த குணம் திருமணமாகி புகுந்த வீடு சென்ற பின்பு நிறைய வருடங்கள் வரை ஒட்டிக்கொண்டிருந்தது. பெரியவர்களை கண்டதும், எழுந்து நிற்பது, அவர்கள் அருகில் சரிசமமாக அமராதிருப்பது, அவர்கள் உணவு அருந்தும் வரை, நின்று கொண்டே பறிமாறுவது, போன்ற செயல்களை சிரத்தையுடன் செய்து வந்தேன். (“அட! ரொம்பத்தான் தற்பெருமை!” யாரோ சொல்வது காதில் லேசாக விழுவதால், இத்துடன் நிறுத்துகிறேன்.)  காலப்போக்கில் வருடங்கள் உருண்டோட, இயலாமை காரணமாக “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்று மனதை தேற்றி மாறக் கற்று கொண்டேன்.    

              அதன் பிறகு வந்த காலங்களில் தங்கள் புகுந்த வீட்டின் பிற உறவுகளுக்கு, எதிரிலேயே தங்கள் கணவனுக்கு இணையாக அமர்ந்து நாலு பேர் முன்பாக தோள் தட்டி பேசி மகிழ்ந்த என் புகுந்த வீட்டின் மற்ற பிற உறவுகளை கண்டு வியந்துதான் போனேன். காலந்தான் எப்படியெல்லாம் மாறி விட்டது? என்று ஆச்சரியப்பட்டு போனேன். (உண்மையைச் சொல்கிறேன்! நாமும் திருமணம் ஆன புதிதில், இப்படியெல்லாம் இல்லாமல் போய் விட்டோமே! என்ற சின்ன தாக்கம் அக்கணம் எனக்குள் வந்து போனதை தடுக்க இயலவில்லை/) என்  கணவரிடமும் சொல்லிக் கொள்ள முடியவில்லை. என் கணவரும் கொஞ்சம் மரியாதையை எதிர்பார்பவர்தான். “நீ செய்வது சரிதான்!” என்பது போல் பதில் வரும். எதற்கு வம்பு! என்று அமைதியுடனே காலத்தோடு விரைய கற்று கொண்டேன்.
    
             என் காலத்திலேயே கணவரை பேர் சொல்லி அழைக்கும் நாகரீகம் வந்து விட்டது. மரியாதைகள் மங்க ஆரம்பித்து விட்டது. “தலை தட்டுவது மாதிரி எப்படித்தான் கணவன் பெயர் சொல்லி அழைக்கிறார்களோ? நம் காலத்திலெல்லாம் இப்படியா?” என்று என் அம்மாவும், மாமியாரும் சொல்லிச் சொல்லி அங்கலாய்பார்கள். அவர்களின்  நியாயமான வருத்தம் என்னையும் தொற்றிக்கொள்ளும். (உண்மையாகவே சொல்கிறேன்!!!. நம்புவது உங்கள் விருப்பம்.)  

            இப்படியாக என் காலம் கழிந்து கொண்டிருக்க, நம் அடுத்த தலைமுறையின் காலங்கள் உதயமாகி விட்டன/ இவர்களின் கலாசாரத்தை மட்டுந்தான் என்னால் கண்டுணர முடியும் என நினைக்கிறேன். அதன் பிறகு மாறும் பழக்க வழக்கங்கள் எவ்வளவோ! யாருக்குத்தெரியும்? பொதுவாக இப்போதுள்ள ஆண்களும், பெண்களும் காலத்திற்கு தகுந்த மாதிரி, அன்றிலிருந்தே, நிறைய மாறுதலுக்கு தயாராகி விட்டார்கள். 

           காலங்கள் மாற மாற மாறும் கலாசாரத்தையும் ஜீரணித்து கொண்டு நாமும் மாறித்தான் ஆக வேண்டும். வேறு வழி? இல்லையென்றால் பிரச்சனைகள் பெரிதாகி ஒருநாள் வெடிக்கும். வெடித்த குப்பைகளின் அசுத்தத்தின் இடையே வாழ்வதை விட, விட்டு கொடுக்கும் சுபாவங்களை, (இதில் யார் விட்டுக் கொடுப்பது? சந்தேகமற நாம்தான்.. ஹா ஹா ஹா. மேலும் நமக்குத்தான் இது தெரியும்...) வளர்த்துக்கொண்டு, அதனிடேயே வாழ்வது பெருமையல்லவா? அந்த காலந்தான் அனைவருக்கும் (என்னையும் சேர்த்துதான்) யோசிக்கும் தன்மையையும் தந்தருள வேண்டும்.

முந்தைய பதிவினையும், இப்போதைய பதிவினையும் படித்தவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள். 🙏. 

39 comments:

  1. அம்மாடி... அந்த வீட்டின் ஆண்மகன் தூங்கும்வரை, அல்லது அதற்குப் பின்னும் கூட ஓய்வு கிடைக்காது என்பதெல்லாம் கொஞ்சம் அராஜகமாய்த் தெரிகிறது! இந்தக் காலத்தில் நல்லவேளை, அப்படி எல்லாம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. காலை வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      முதல் வருகை தந்து பொறுமையாய் பிடித்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி.

      இந்த அராஜகங்கள் இப்போது மறு பிறவியெடுத்து மாறி வந்து தாக்குகின்றன. ஹா.ஹா. முற்பகல் செய்யின் மாதிரி.. நம்முடன் காலமும், காலத்துடன் நாமுமாக மாறி மாறித்தான் பயணிக்கிறோம். தங்கள் கருத்துக்கும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. சில வீடுகளில் மாமியார்கள் மருமகனிடம் பேசத் தயங்குவது, கதவிடுக்கிலிருந்து பேசுவது கண்டிருக்குறேன். என் பாட்டி என் அப்பாவிடம் நேரடியாகப் பேசியதே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உண்மைதான்.. நானும் அதை அப்போதெல்லாம் கண்டிருக்கிறேன். எனக்கு விபரம் தெரிந்து எங்கள் பாட்டியும் முதலில் நேராக அப்பா முகம் பார்த்து பேச மாட்டார்கள். தன் பெண்ணிடம் (எங்கள் அம்மா) மெதுவாக சொல்லி அவர் மூலமாக அப்பாவுக்கு மறு ஒலிபரப்பு செய்யப்படும். நாங்கள்தான் இதை கொஞ்சம் மாற்றினோம் என சொல்ல வேண்டும். அது ஒரு மரியாதை என்பதை கண்டு வியந்திருக்கிறோம். அந்த காலங்கள் போச்சு.! இப்போது மருமகனையே டா தான்.. ஹா.ஹா. தங்கள் கருத்துக்கும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. எங்பள் வீட்டின் இளைய தலைமுறை மனைவிகள் சிலர் கணவனை டா போட்டு பேசுவதை கவனித்திருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /சிலர் கணவனை டா போட்டு பேசுவதை கவனித்திருக்கிறேன்.

      ஹா.ஹா.ஹா. அனேகமாக எல்லா கணவன்மார்களுக்கும் இப்போது அந்த நிலைதான்.!
      டி போரடித்துப் போய் டா வந்து விட்டது. உங்களின் அனைத்து கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. என்னதான் இந்தக்காலம் என்றாலும் கடமை இரு முறை அழைத்துவிட்டதால் பின்னர் வருகிறேன். படித்தேன். முதல் பகுதியையும் படிக்கணும். வரேன் அப்புறமா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      வாங்க.. வாங்க.. கடமைகளை முடித்து விட்டு நிதானமாக வாங்க.. நானும் இப்போது இந்த கடமையில்தான் பிணைந்து கொண்டுள்ளேன். இது முடிய தாமதமாகும். இடையில் எட்டிப் பார்த்தேன். இப்படி ஒவ்வொருவரும் எப்போதும் கடமை கடமை என்று கவனமான பொருப்புடன் இருந்திருந்தால், காலம் நம் மாறுதலுக்கு வழி விட்டிருக்காது..! என்ன செய்ய? என்றைக்குமே நடப்பது நடந்துதானே தீரும்.
      நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. ம்ம் எல்லாமும் சரி என்று சொல்ல முடியாது. நல்லவற்றை எடுத்துக் கொள்வோம். மற்றவற்றை தள்ளுவோம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் முதலில் என்னுடைய தளத்திற்கு வருகை தந்திருப்பதற்கும், அருமையான கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம். நல்லவனவற்றை எடுத்துக் கொள்வோம். தேவையில்லாதவற்றை புறந்தள்ளுவோம். அப்படித்தான் இருக்க பழக வேண்டும். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. தாயைப் போல பிள்ளை...
    நூலைப் போல சேலை...

    "அம்மாவைப் போல பெண் பிள்ளை" என்பார்கள்... ஆனால் பெண் பிள்ளை அப்பாவின் குணங்களை தான் அதிகம் கொண்டிருப்பார்கள்...

    அப்பா வாழ்வது, என்றும் தன் மகள்களின் மனதிலே...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நல்ல பழமொழி. உண்மைதான்.. தந்தைக்கு மகளையும். தாய்க்கு மகனையும் பிடிக்கும். அந்த பிள்ளை என்பது மகனை குறிக்குமோ என நானும் நிறைய தடவைகள் யோசித்திருக்கிறேன்.

      /அப்பா வாழ்வது, என்றும் தன் மகள்களின் மனதிலே.../

      தந்தையின் அன்பான பாசமான கண்டிப்பு நம் வாழ்க்கைக்கு நல்லதுதான் என்ற எண்ணத்தில், மகள்கள் மனதில் தந்தைக்கு என்றுமே முதலிடம் தருவது இயல்புதானே..! நல்லதொரு கருத்தை தந்தமைக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. ஸ்ரீராம்ஜி அவர்கள் சொல்வதுபோல் அன்று மாமியார் கதவுக்கு மறைவில் நின்றுதான் பேசினார்கள்.

    எனது மாமியார்கூட அப்படித்தான். சமீபத்தில் ஒரு வீட்டில் பார்த்தேன் மருமகன் தரையில் அமர்ந்து சாப்பிடும்போது மாமியார் சோபாவில் அமர்ந்து இருந்ததை காலமாற்றம் நாம் இன்னும் நிறைய சந்திக்க வேண்டியது இருக்கிறது.

    அந்த மன தைரியம் இருந்தால்தான் உயிர் வாழமுடியும். நல்லதொரு பதிவுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அந்த காலத்தில் மருமகனுக்கு என்றில்லை ஆண்களுக்கே பெண்கள் மிகுந்த மரியாதை தந்தனர்.

      வீட்டின் பெரியவர்களுக்கு (பொதுவாக ஆண், பெண் இருபாலருக்கும்) இளைய தலைமுறைகள் ஒரு மதிப்பு தந்தே வாழ்ந்தனர். இப்போது ஒருமையில் பேசி வயதுக்கு மரியாதை குறைவை தருவதுதான் கொஞ்சம் வேதனையாக இருக்கிறது. மற்றபடி தங்கள் கருத்துக்களையும் வரவேற்கிறேன். நல்லதொரு கருத்துகளை தந்தமைக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. காலமாற்றத்தை மிக அழகாய் சொன்னீர்கள். பதிவு அருமை.
    என் பாட்டியும் என் அப்பா எதிரே அமரவோ பேசவோ மாட்டார்கள்.
    பாட்டி வீட்டுக்கு அப்பா போனால் கதவுக்கு அந்த பக்கம் இருந்து தான் வாங்க என்று அழைப்பார்கள்.

    என் மாமியாரின் அம்மா என் மாமானரைப் பார்க்காமல்தான் பேசுவார்கள். சமையல் அறையில் என் மாமியாருடன் பேச வரும் போது பாட்டிக்கும் மாமானாருக்கும் இடையில் திரை கட்டி விடுவார்களாம்.

    சாரின் அத்தை அவர் கணவ்ரிடம் பட்ட கஷ்டம் மிகவும் கொடுமை. யாராவது வந்தால் பேச வெளியே வரக்கூடாது. அவர்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்க வேண்டும் என்றால் கணவர் பக்கத்தில் இருக்கும் போது வைக்க வேண்டும். தெரியாமல் அவருக்கு முதலில் வைத்து விட்டார்கள் என்று இரண்டு மூன்று நாள் சாப்பிடவே இல்லையாம் கோப பட்டுக் கொண்டு.(முதலில் கணவருக்கு உணவு பரிமாறிய பின் தான் அடுத்தவர்களுக்கு வைக்க வேண்டும்) இரவு அழைக்க வேண்டும் என்றால் கூடத்தில் பலகையை போட்டு அழைப்பார்களா, அதை வைத்து அவர் அறைக்கு போக வேண்டும். கொடுமை, கொடுமை.

    கணவன் பெயரை மட்டும் இல்லை, தன் கணவரின் அப்பா, அண்ணன் மற்றும் மாமியார் பெயரை சொல்லக்கூடாது பெண்.(மரியாதை நிமித்தம்)யாரும் இல்லை சொல்லி ஆக வேண்டும் என்றால் அதற்கு நிறைய வழி வைத்து இருப்பார்கள் கடவுள் பெயராக இருந்தால் கோவித்து கொண்டு போனாரே மலை மேல் அந்த சாமி பேரு ,அப்பனுக்கு பாடம் சொன்னவர் பேரு இப்படி சொல்வார்கள்.

    என் மாமனார் வந்தால் எழுந்து கொண்டே இருப்போம் , மாமா என்ன வாத்தியாரை பார்த்து மாண்வர்கள் தோப்புகரணம் போடுவது போல் இருக்கு மருமகள்கள் எழுவதும் அமர்வதும் என்று என் அத்தையிடம் சொல்லி விட்டு எங்களை தொந்திரவு செய்யாமல் இருக்க வீட்டை சுற்றி அந்த பக்கம் போவார்கள் . நாங்கள் நடு அறையில் இருந்தால்.

    அப்புறம் அதும் கஷ்டமாக இருக்கிறது உங்கள் அப்பா சொன்னது போல் 'மரியாதை மனதில் இருந்தால் போதும் சகஜமாய் இருங்கள் எல்லோரும் உங்கள் அப்பாவிடம் இருப்பது போல்' என்று சொல்லி விட்டார்கள்.

    நீங்கள் சொல்வது போல் நாம் தான் விட்டுக் கொடுத்து போகும் காலமாக இருக்கிறது. நாம் மாறவில்லை என்றால் நம்மை ஒதுக்கி வைத்து விடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. என்னோட இரு தாத்தாக்களும் கோமதியின் மாமனார் போலத் தான். நீங்க பாட்டுக்குப் பேசுங்க என்று சொல்லிவிட்டுச் சுற்றிக்கொண்டு போவார்கள். அம்மாவின் அப்பா அப்படிச் செய்வதை நானுமே நேரில் பார்த்திருக்கேன். என் பெரியப்பாவும் என் அம்மாவைப் பெண் போலவே கனிவுடன் நடத்துவார். அம்மா இருந்தால் அனாவசியமாகக் கஷ்டப்பட்டுக்கப் போகிறார் என சமையலறைக்கே வராமல் யாரையானும் கொண்டு கொடுக்கச் சொல்லிவிடுவார்.

      Delete
    2. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      அருமையான விளக்கங்கள் தந்துள்ளீர்கள். ஏதேதோ வேலைகள், நெட் இணைப்பு குறைவாக வருதல் காரணமாக உடன் பதில் தர இயலவில்லை. விரிவாக மறுபடியும் இன்று பதில் தருகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் கோமதி அரசு சகோதரி.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீங்கள் கூறியவற்றில் நிறையவே அந்த காலத்தில் இருந்து வந்தது. கதவு மறைவிலிருந்துதான் மாமியார் மாப்பிள்ளையிடம் பேசும் பழக்கம் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தது.

      அதுவும் நீங்கள் கூறியபடி எதோவொன்றிக்காக பெண்களுக்கு செய்யப்படும் கொடுமைகள். பாவம் உங்கள் கணவரின் அத்தை. எங்கள் பாட்டியும் (அம்மாவின் அம்மா) அத்தகைய கொடுமைகளை கணவர் மூலமாக அனுபவித்து இருக்கிறார்கள். அடிகள் உதைகள் வேறு. இத்தனைக்கும் கணவர் (தாத்தா) சொந்த அத்தை பிள்ளை. விபரம் அறிந்தபின் அதையெல்லாம் பாட்டி சொல்லி அறியும் போது எனக்கு கோபமாக வரும். அவரின் மறைவுக்குப்பின் பாட்டி எங்களுடன்தான் இருந்தார்.

      கணவரையும், புகுந்த வீட்டு உறவுகள் பெயர்களை சொல்லாமல் இருப்பதும், அதற்கு பதிலாக கடவுள்களின் பெயர்களை சொல்வதும் பார்த்திருக்கிறேன். இல்லையென்றால் அருகில் அண்டை அசல் எவராவது இருந்தால், அவர்களை விட்டுச் சொல்லச் சொல்வார்கள். கணவரையே பேர் சொல்லி அழைக்கும் காலங்களாக இப்போது அனைத்துமே மாறி விட்டது.

      /மரியாதை மனதில் இருந்தால் போதும் சகஜமாய் இருங்கள் எல்லோரும் உங்கள் அப்பாவிடம் இருப்பது போல்' என்று சொல்லி விட்டார்கள்./

      உங்கள் மாமனார் போற்றத்தகுந்தவர். நல்லபடியாக மனம் நோகாமல் சொல்லியிருக்கிறார். அவருக்கும் என் நன்றிகள்.

      அந்த காலத்திலேயே அதற்கு முந்தைய காலத்திற்கு பின் இப்படி எவ்வளவோ மன மாற்றங்கள், மனிதாபிமான செய்கைகள் என நிறைய வந்து விட்டது. இப்போதும் விட்டு தரும் இயல்புகள் நம் மனதில் ஆழமாக பதிந்திருப்பதற்கு காரணம் அவர்களைப் பார்த்து கற்றுக் கொண்டதுதான்.

      என் பதிவை படித்து நன்றாக அலசி, அருமையான உங்கள் கருத்துக்களை அளித்திருப்பதற்கு மனமார்ந்த நன்றிகள். தாமதமாக பதில் தருவதற்கு வருந்துகிறேன். மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. பழசையும் படிச்சேன். எங்க வீட்டிலும் இந்த மரியாதை காட்டுவது உண்டு என்றாலும் அதுக்காகக் கடுமையாகவெல்லாம் இல்லை. அதே மாமனார் வீட்டில் அவங்க உட்காருனு சொல்லும்வரை (சில சமயங்களில் நாம் நிற்பதே அவங்க கண்களில் படாது. :( உட்கார முடியாது. சரினு நான் இரண்டாம் கட்டுத் தாழ்வாரத்துக்குப் போய் அங்கே உட்கார்ந்தால் அதுக்கும் ஏதானும் சொல்லுவாங்க! ராத்திரியும் அவங்க படுக்கப் போனு சொல்லும்வரை நின்றுகொண்டே இருக்கணும். சில சமயங்களில் ஒன்பது மணியில் இருந்து பத்து மணி வரை நின்று கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இருப்பேன்.:) திடீர்னு கவனம் வந்தாப்போல் நீ நிற்கிறாயா? அடப் பாவமே! படுத்துக்கோ! என்பார்கள். இதெல்லாம் 81 ஆம் ஆண்டில் என் ஓர்ப்படி வரும் வரை! அவங்க வந்ததும் எல்லாம் தலைகீழ்! நானும் எட்டரைக்கு வேலை முடிந்தால் போய்ப் படுத்துக்க ஆரம்பிச்சேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      எல்லாவற்றையும் படித்து கருத்துக்கள் அளித்திருப்பதற்கு மிக்க நன்றி சகோதரி.

      எங்கள் பாட்டி காலத்தில் நடந்திருப்பதை காணும் போது அவைகள் கொஞ்சம் கடுமையானவையாகத்தான் எனக்குப் பட்டது.பாட்டி அவ்வளவு கஸ்டங்களை பட்டிருக்கிறார். (மேலே சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு சொல்லியிருக்கும் பதிலைப் பாருங்கள்.) எங்கள் அம்மா திருமணமாகி வரும் போது அவர்கள் மாமனார், மட்டுமே. பாட்டி, (அப்பாவின் அம்மா) எங்கள் அப்பாவின் பத்து வயதிலேயே தவறி விட்டார். ஆனால் அப்பாவின் பாட்டி அங்குதான் இருந்தார். மேலும் நிறைய உறவினர்கள்.

      /மாமனார் வீட்டில் அவங்க உட்காருனு சொல்லும்வரை (சில சமயங்களில் நாம் நிற்பதே அவங்க கண்களில் படாது. :(/

      ஹா.ஹா.ஹா. அதே கதைதான் எனக்கும். என் புகுந்த வீட்டிலும் நான் அவ்வளவு எளிதில் உட்கார இயலாது. இரவு படுக்கும் வரை நின்று நின்று கால் கடுத்து விடும். அப்போது இளவயது தெரியவில்லை. இப்போது சேர்த்து வைத்து இரு கால்கள் வலி பின்னி பெடலெடுகின்றன.

      தங்கள் கருத்துக்களுக்கு தாமதமாக பதில் தருவதற்கு வருந்துகிறேன். மன்னிக்கவும். பதிவைப் பற்றி நல்லதொரு அசலுக்கு மிக்க நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. நான் மாமனார் இருக்கும்வரையிலும் எது செய்தாலும் நின்று கொண்டே தான் செய்ய வேண்டும், காய் நறுக்குவது, தேங்காய் துருவுவது எனில் மறைவாகப் போய் உட்கார்ந்து செய்யணும். இரண்டாம்கட்டுத் தாழ்வாரத்தில் உள்ள கல்லுரல், அம்மியில் அரைக்கும்போது மாமனார் வந்துவிட்டால் எழுந்து நின்ற வண்ணம் குனிந்து அரைக்க வேண்டும். அவர் போகும் வரை உட்காரக் கூடாது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      எங்கள் அம்மாவும், அவர்கள் மாமனார், அப்பாவின் பாட்டி போன்றவர்கள் சமையலறை பக்கம் வரும் போது தோசைக்கு அரைப்பதோ, தோசை வார்ப்பதோ எழுந்து நின்று கொண்டேதான் செய்ய வேண்டுமாம். அவர்கள் வந்து சமையலறையிலேயே (பெரிதாக இருக்கும்.) ஒரு ஓரமாக அமர்ந்து சாப்பிடும் வரைக்கும் குனிந்தபடி தான் தோசை வார்த்து போட வேண்டுமாம். அப்போது விறகடுப்பு வேறு. சமையல் மேடையும் கிடையாது. எப்படிம்மா இப்படி தோசைகளை வார்த்துப் போட்டாய்? என நான் ஆச்சரியபட்டுள்ளேன். அதன் பின் அப்பாவின் காலம் வரும் போது சில சலுகைகள் கிடைத்திருக்கிறது.

      என் புகுந்த வீட்டிலும், கீழே அமர்ந்து தோசைகள் வார்க்க தடை வந்ததில்லை. நான் அப்போது சமைக்க உபயோகப்படுத்தியது பம்பிங் ஸ்டவ். புகுந்த வீட்டில் திருமணமானவுடனே நான்தான் சமைக்க வேண்டுமென கூறி விட்டார்கள். அன்று பிடித்த கரண்டி இன்று வரை என் கையை விட்டு கீழிறங்காமல் இருக்கிறது. சென்னையில் இருந்ததே ஒரு ரூம், ஒரு கிச்சன். என்னவோ வாழ்க்கையில் எப்படியோ திருப்பு முனைகளை கண்டு விட்டு வந்தாகி விட்டது.
      காலத்தின் மாற்றத்தில் இப்படிபட்ட அலசல்கள் கொஞ்சம் பொழுதை போக்கி ஆயாசத்தை அப்புறபடுத்துகிறது. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. என் அப்பா என் அம்மாவின் அப்பா, அம்மாவுக்குச் சிறு வயதில் இருந்தே தெரிந்தவர் என்பதால் பாட்டி அப்பாவுடன் நன்றாகவே பேசுவார்கள். அதே பெரியப்பா, மற்ற மாப்பிள்ளைகளிடம் பேச மாட்டார்கள். என் அம்மா என் கணவரிடம் நேரிடையாகப் பேச மாட்டார்கள். என் மூலமோ அல்லது குழந்தைகள் மூலமோ பேசுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம் . அந்த காலத்தில் இப்படிப்பட்ட மரியாதைகள் நிறையவே இருந்தது. கணவரும், மனைவியுமே அதிகம் பேசிக் கொள்வதில்லை. வீட்டில் பெரியவர்கள் இருப்பதால், அவர்களின் பார்வைபடும் படியாக, இல்லை அவர்களோடு கணவர் இருந்து பேசிக் கொண்டிருக்கும் போதினில், மரியாதை நிமித்தம் கணவரோடு அதிகம் அமர்ந்து பேசுவதில்லை. நானே கொஞ்ச காலங்கள் வரை அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இருந்தேன்.

      என் கணவரும், எங்கள் அம்மாவும் பேசிக் கொள்வார்கள். ஆனால் எங்கள் அம்மாவும் சமயத்தில், அவரிடம் கூற வேண்டியதை என் மூலமாகத்தான் சொல்வார்கள். அப்போதைக்கு இப்போது எவ்வளவோ மாறி விட்டது.
      தங்களின் அனைத்து கருத்துகளுக்கும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. நீங்கள் தொடர்ந்து எழுதுகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை இன்று கீதா சாம்பசிவம் அவர்களின் பதில் நீங்கள் கூரிய கருத்தில் இருந்து உங்கள் தளம் வந்து பார்த்தேன்... ஆமாம் நீங்கள் ஏன் ஃபாலோவர் ரை இணைக்க கூடாது அப்படி இணைத்தால் உங்களை தொடர ஏதுவாக இருக்கும் அதுமட்டுமல்ல நேரம் கிடைக்கும் போது வந்து படிக்க முடியுமே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      நான் அவ்வப்போது இப்படி ஏதாவது கிறுக்கிக் கொண்டுதான் உள்ளேன். மன மாற்றங்களுக்கு கால மாறுதல்கள் குறித்து எப்போவோ எழுதியதை இன்று பகிர்ந்துள்ளேன்.

      ஏற்கனவே என் பக்கம் ஃபாலோவர்ரை இணைத்துத்தான் இருந்தேன். அது நடுவில் எங்கே போச்சென்று தெரியவில்லை. கைப்பேசியிலேயே பதிவுகளை உருவாக்கி பதிந்து முடிகிற வரை அனைவருக்கும் கருத்துரைகளும் தந்து வருகிறேன். இப்போது தாங்கள் கூறியவுடன் குழந்தைகளின் உதவியுடன் மறுபடியும் இணைத்துள்ளேன். தாங்கள் வந்து என் பதிவுகளை படிக்கிறேன் என்றதற்கு என்மனம் நிறைந்த நன்றிகள். உங்கள் கருத்துகளும்.என் எழுத்தை ஊக்கப்படுத்த உதவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. காலத்தின் மாற்றம்..
    கலாச்சாரத்தின் மாற்றம்...

    நாம் தான் தவறு செய்து விட்டோமோ.. என்று தோன்றுகிறது...

    நிறைய நினைவுகள் நெஞ்சில் அலை மோதுகின்றன...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /காலத்தின் மாற்றம்..
      கலாச்சாரத்தின் மாற்றம்.../

      ஒன்றுக்கொன்று துணையாக எல்லாமே மாறித்தான் போயிற்று. நல்லதா, கெட்டதா, எதுவென்று தெரியவில்லை. அனைத்தும் ஆண்டவன் செயலென்று, காலத்தோடு நாமும் விரைய மட்டும் கற்றுக் கொண்டோம். இனி நடப்பவை அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டுமென்பதே நம்முடைய தினசரி பிராத்தனையாகும். அது ஒன்றை மட்டும் காலமும், நேரமும் நமக்கு தந்தால் போதும். இல்லையா?

      தங்களுடைய அருமையான ஊக்கமிகும் கருத்துக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. கமலாக்கா இரு பகுதிகளையும் வாசித்துவிட்டேன்.

    காலத்தின் மாற்றத்தில் சிலவற்றைத் தவிர மற்றவற்றில் தவறு ஏதுமில்லை என்பது என் தனிப்பட்டக் கருத்து. இந்தக் காலத்து மாற்றங்களில் நன்மையும் உள்ளது. மாற்றம் ஒன்றே மாறாதது. அந்தக் காலத்தின் நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

    மரியாதை என்பது நம் மனதில். நாம் மாமியார் மாமனார் வருகிறார் அல்லது மாப்பிள்ளையின் முன் மரியாதை என்று சொல்லிவிட்டு பின்னால் அவர்களைக் குற்றம் சொல்லிப் பேசுபவர்களும் இருக்கிறார்களே. அப்பவே அந்த மரியாதை போயிற்றே.

    இரண்டாவது மரியாதை என்பது ஒருவரைப் பார்த்தால் நமக்கு அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று தோன்ற வேண்டும். பயத்தினால் வரும் மரியாதை வேறு. அன்பினால் வரும் மரியாதை வேறு.

    என் பாட்டியின் அம்மா காலம், னீங்கள் சொல்லியிருப்பது போலத்தான். என் பாட்டியின் காலம் கொஞ்சம் பரவாயில்லை இருந்தாலும் மாப்பிள்ளைகள் முன் வரமாட்டார் உள்ளே போவார் அல்லது தள்ளி நின்று பேசுவார்.

    அது அக்காலம். ஆனால் இந்தக் காலத்தில் மாப்பிள்ளையும் மகன் போலத்தான். அதே போல மருமகளும் மகள் போலத்தானே அதனால் சேர்ந்து கலகலப்பாக இருப்பதில் தவறே இல்லை என்பது என் தனிப்பட்டக் கருத்து.

    அந்தவிதத்தில் பெண்கள் அந்தக் காலத்தில் நின்றுகொண்டே விசிறிக் கொண்டு மருமகள் எப்போதும் வேலை செய்துகொண்டே இருப்பது என்பது இப்போது மாறி இருப்பதை வரவேற்கலாம்.

    அதே சமயம் அதே மருமகள் கணவனின் பெற்றோரை ஏசுவது சண்டை போடுவது என்பது ஏற்க முடியாதது அது நம் மகளுக்கும் பொருந்தும். பெரியவர்களும் கொஞ்சம் சிறியவர்களுக்காக ஒரு சில விஷயங்களில் இறங்கி வருவதில் தவறு இல்லை. அ

    அப்போதுதான் இனிவரும் காலங்களில் அட்லீஸ்ட் குடும்பம் என்பது கொஞ்சமேனும் இருக்கும். இல்லையே எல்லோரும் தனி தனித்தீவுகளாகத்தான் வாழ வேண்டி வரும்.

    உங்கள் அப்பா க்ரேட்!!!! இப்போது கூட இக்குணம் சிலரிடம் இல்லை எனலாம்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் இரு பகுதிகளையும் ஒரு சேர வாசித்ததில் மிக்க நன்றி சகோதரி.நான் தங்களுக்கு தாமதமாக பதில் தருவதற்கு முதலில் என்னை மன்னித்து விடுங்கள். எல்லோரும் வீட்டிலிருப்பதால் ஏதோ வேலை தொட்டுத் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதாலும், அவ்வப்போது நெட் படுத்து விடுவதாலும், இவ்வளவு தாமதமாகி விட்டது.

      தாங்கள் பதிவை நன்றாக படித்து அலசி கருத்துக்கள் தந்திருப்பதற்கு நான் மனமார்ந்த மகிழ்ச்சியடைகிறேன்.

      /மரியாதை என்பது நம் மனதில். நாம் மாமியார் மாமனார் வருகிறார் அல்லது மாப்பிள்ளையின் முன் மரியாதை என்று சொல்லிவிட்டு பின்னால் அவர்களைக் குற்றம் சொல்லிப் பேசுபவர்களும் இருக்கிறார்களே. அப்பவே அந்த மரியாதை போயிற்றே. /

      மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். தாங்கள் கூறியிருக்கும் எல்லா பாயிண்டுமே கரெட்டாகத்தான் உள்ளது. ஆனால், இந்தக் கால இளைய தலைமுறைகள் எதையும் ஈசியாக எடுத்துக் கொள்வதினால், அந்தக்கால பெரியவர்களுக்கு மரியாதை தரும் சம்பவங்களும் அவர்களுக்கு வினோதமாக உள்ளது. "நீங்களெல்லாம் ஏன் அப்படி வாய் மூடி இருந்தீர்கள்?" என கேள்வி கேட்டு விட்டு போய் விடுகிறார்கள்.

      எங்கள் அப்பாவை பாராட்டியமைக்கு நன்றிகள்.எந்தக் காலத்திலும் விட்டுக் கொடுக்கும் சுபாவம் இருந்தால் நன்மையைத்தான் தரும். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. எங்கள் புகுந்த வீட்டில் என் மாமனாருடன் கேரம் சீட்டு எல்லாம் விளையாடியிருக்கிறேன். மாமியார், மாமியாரின் அம்மா நான் மாமனார் எல்லோரும் உட்கார்ந்து தாயக்கட்டம், பரமபதம், பல்லாங்குழி எல்லாம் விளையாடியிருக்கிறோம். மாமனாருடன் கச்சேரிக்குச் சென்று வருவேன். பல விஷயங்களைப் பேசியதுண்டு. ஆட்க்யூமென்டே வந்ததுண்டு. ஆனால் நல்ல விதமாக. கல்யானம் ஆன புதிதில் பெண்கள் நாங்கள் தனியாகத்தான் சாப்பிடுவோம். ஆண்களுக்கு செர்வ் செய்துவிட்டு. ஆனால் என் மைத்துனர்கள் காலப்போக்கில் எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று சொல்லி அம்மா அப்பாவிற்கு மட்டும் அவர்களுக்கு வயதானதால் செர்வ் செய்துவிட்டு நாங்கள் எல்லோரும் ஒரேபோல அமர்ந்து சாப்பிடுவதும் உண்டு. அதே சமயம் பெரியவவர்களுக்கு மரியாதையும் கொடுத்துக் கொண்டே. மாமனார் எங்களுக்கு செர்வ் செய்வார்.

    மாமனார் தான் வாசிப்பதை நன்றாக இருந்தால் எனக்கு அதைக் காட்டி வாசிக்கச் சொல்லுவார். அதே போல மாமியாரும். நானும் அவர்களிடம் அப்படித்தான். ஒரு சகஜ நிலையாகத்தான் இருக்கும்.

    அதே போன்று மைத்துனர்களும்.

    என் பிறந்த வீட்டிலும் அதாவது அப்பாவின் அம்மா வீட்டில் இதெல்லாம் உண்டு. ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் பிறந்த வீட்டில் எப்போதும் ஜே ஜே என்று சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும். புகுந்த வீட்டில் அமைதியாக இருக்கும்.

    எங்குமே நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும் நல்லதை மட்டுமே, உங்களைப் போல, பார்த்துக் கொண்டு போனால் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். நாமும் சந்தோஷமாக இருக்க முடியும்தானே கமலாக்கா..

    நல்ல பதிவு கமலாக்கா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /எங்கள் புகுந்த வீட்டில் என் மாமனாருடன் கேரம் சீட்டு எல்லாம் விளையாடியிருக்கிறேன். மாமியார், மாமியாரின் அம்மா நான் மாமனார் எல்லோரும் உட்கார்ந்து தாயக்கட்டம், பரமபதம், பல்லாங்குழி எல்லாம் விளையாடியிருக்கிறோம். மாமனாருடன் கச்சேரிக்குச் சென்று வருவேன். பல விஷயங்களைப் பேசியதுண்டு. ஆட்க்யூமென்டே வந்ததுண்டு./

      ரொம்ப மகிழ்வாக இருக்கிறது. இப்படி ஒரு அன்னோனியமாக குடும்பம் வாய்த்தால் நன்றாக இருக்கும். பாசமுள்ள மைத்துனர், நாத்தனார் என இருக்கையில் குடும்பம் என்றும், மகிழ்ச்சியில் திளைக்கும். தங்கள் மாமனார் கச்சேரி பண்ணியிருக்கிறாரா? ரொம்ப சந்தோஷமாக உள்ளது. தங்களும் சங்கீத புலமை பெற்றவரா? அதனால்தான் எ. பி வெள்ளி பாடலுக்கு என்ன ராகங்கள் என தடையின்றி உங்களால் சொல்ல முடிகின்றது. வாழ்த்துக்கள்.

      என் புகுந்த வீட்டில், என் கணவர்தான் கடைசி பிள்ளை. எனவே மூத்தவர்களான மச்சினர்கள், நாத்தனார் என அவர்களுடன் முதலில் வருவது மரியாதைதான். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. /எங்குமே நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும் நல்லதை மட்டுமே, உங்களைப் போல, பார்த்துக் கொண்டு போனால் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். நாமும் சந்தோஷமாக இருக்க முடியும்தானே கமலாக்கா../

      உண்மைதான்.. சரி. சரியென போய் விட்டால் பிரச்சனை வராது. நான் மகளாய் இருந்த போதும், மருமகளாய் இருந்த போதும், இப்போது மாமியாராய் இருக்கும் போதும், இதே நிலையில் நிலை பிறழாது இருந்து வருகிறேன். இனியும் இப்படியே வாழ்நாளை முடித்து வைக்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. எங்கள் பாட்டி, அக்காக்களின் மாமியார்கள் போன்றவர்கள் மகன்களைக் கூட ஒரு வயதிற்குப் பிறகு டா போட்டு பேச மாட்டார்கள். ஏன் பெயர் சொல்லி அழைப்பது கூட குறைவுதான். வீட்டில் இருக்கும் குழந்தைகளிடம் 'உங்க அப்பாவாக கூப்பிடு" ,"அண்ணாவைக் கூப்பிடு" "மாமாவைக் கூப்பிடு" என்பார்களே தவிர பெயர் சொல்லி கூப்பிட மாட்டார்கள்.  நீங்கள் சொல்லியிருப்பது போல் எனக்குத் திருமணமான காலத்திலேயே கணவரை பெயர் சொல்லி அழைக்கும் கலாச்சாரம் வந்து விட்டது. இப்போது ஏக வசனம்தான். காலத்தின் வித்தியாசத்தை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். 


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      முதலில் நான் தாமதமாக பதில் தருவதற்கு மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன்.

      /மகன்களைக் கூட ஒரு வயதிற்குப் பிறகு டா போட்டு பேச மாட்டார்கள். ஏன் பெயர் சொல்லி அழைப்பது கூட குறைவுதான். வீட்டில் இருக்கும் குழந்தைகளிடம் 'உங்க அப்பாவாக கூப்பிடு" ,"அண்ணாவைக் கூப்பிடு" "மாமாவைக் கூப்பிடு" என்பார்களே தவிர பெயர் சொல்லி கூப்பிட மாட்டார்கள். /

      உண்மைதான் சகோதரி. இங்கு வயதான பிள்ளைகள் என்ற பயம் என்றில்லை. ஒரு மரியாதை. அந்த காலத்தில் சிலோன் ரேடியோவிலும் சரி, அதன் பின் வந்த தொலைக்காட்சி குழந்தைகள் நிகழ்ச்சிகளிலும் சரி.. சின்ன குழந்தைகளைக் கூட"நீங்க, வாங்க" என்று அழைத்துப் பேசுவார்கள். மரியாதையை கற்றுத் தரும் பாடம். அழைக்கும் விதத்தில் மரியாதை வரும் போது அங்கு பண்புள்ள பேச்சுக்கள் மட்டுமே வந்த அமர்ந்து கொள்ளும். தங்கள் கருத்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. ஆஹா பல விசயங்கள் சொல்லியிருக்கிறீங்க, அந்தக் காலத்தில், சிலதைப் பெண்கள் விரும்பிச் செய்தார்கள், சிலதைக் கட்டாயத்தின் பேரில் செய்தார்கள் என நினைகிறேன்.. ஆனா காலத்தில் ஒன்றுமில்லை, பெரியவர்கள், வீட்டிலுள்ள சிறியவர்களை, மரியாதையாகவும், அன்பாகவும் நடத்தினால், அவர்களுக்கு ஓட்டமட்டிக்காக மரியாதை கிடைக்கும் எனத்தான் நான் நினைப்பேன்.

    அக்காலம் என்றில்லை, நீங்கள் சொல்லியிருப்பவற்றில் பாதிப் பழக்கம் இப்பவும் நடை முறையில் இருக்கிறது, அது பெண்கள் என்றில்லை, ஆண்களும்கூட, வீட்டுக்குப் பெரியவர்கள் வரும்போது எழும்பி நின்பது, வழியனுப்பும்போதும் எழுந்து நின்று வழியனுப்புவது, இப்படி சில சில எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறோம்...

    மற்றும் பெரியவர்களின் முன்னாக் கால் நீட்டக் கூடாது, காலைத்தூக்கி மேலே போடக்கூடாது.. மேசையில், கைப்பிடிகளில்..

    ஆனாலும் பழைய முறைகள் பலதும் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன, தனிக்குடித்தனங்களில் இருப்பதால், சொல்லிக்கொடுக்க பெரியவர்களும் இல்லை..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      முதலில் என்னுடைய தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன் மன்னிக்கவும்.

      தங்களுடைய அனைத்து கருத்துக்களையும் வரவேற்கிறேன்.

      /பெரியவர்கள், வீட்டிலுள்ள சிறியவர்களை, மரியாதையாகவும், அன்பாகவும் நடத்தினால், அவர்களுக்கு ஓட்டமட்டிக்காக மரியாதை கிடைக்கும் எனத்தான் நான் நினைப்பேன்./

      உண்மைதான். அதற்கு பெரியவர்களிடம் இவர்களும் அன்பாகவும் பண்பாகவும் பேசக் கற்று கொள்வது அவசியம். கடைசி பாராவில் தாங்கள் கூறியுள்ளது போல் தனிக்குடித்தங்கள் என வந்து விட்டதில், பெரியவர்கள் எதற்காக இப்படியெல்லாம் சொல்கிறார்கள் எனப் புரியாமலேயே போய் விடும் அல்லவா.?

      ஆமாம் அக்காலத்தில் பெரியவர் என்றில்லை, சாதாரணமாகவே ஒருவர் மேல் கால்கள் படும் மாதிரியோ, இல்லை அவருக்கு எதிராக கால் நீட்டி அமர்வதோ தப்பான செய்கையென கற்று வந்திருக்கிறதாம். அதை தாங்களும் இன்றளவும் குழந்தைகளுக்கு அதைச் சொல்லி வளர்த்து வருவது சந்தோஷமாக உள்ளது. ஒருவர் பிறருக்கு மரியாதை தருவதில் தப்பேயில்லை. அன்பு நெறிகள் அங்குதான் தழைத்தோங்கும். தங்கள் அருமையான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  18. காலத்தின் மாற்றங்கள் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /காலத்தின் மாற்றங்கள் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு./

      ஆம் உண்மைதான்..மாற்றங்களில் பலதும் நாம் எடுத்துக் கொள்வதை பொறுத்தது. தாமதமாக பதிலளித்தமைக்கு மன்னிக்கவும். இப்போதுதான் தங்கள் கருத்தை பார்த்தேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete