படைத்து விட்டான்", இறைவன்
பாரினில் வாழ்ந்து பார்! என்று..
விடை புரியா இப்புவியில் உன்
வினாக்களை நீ தொடுத்து,
தகுந்த விடைகளை நீயே
தக்க வைத்து கொள்! எனச் சுலபமாக
"படைத்து விட்டான்", இறைவன்
பாரினில் வாழ்ந்து பார்! என்று...
இருண்ட உலகத்தில் கருவோடு
இருந்தந்த சுகங்களும்,
இறுமாப்பு பெற்ற கனாக்களும்,
இருளை விட்டு வெளிவந்த பின்
இயன்றளவு இருப்பதும், இல்லை,
இல்லாமல் போவதும் அந்த
இறைவனின் செயலால் தான்!
அன்னையின் அரவணைப்பில்,
அழுகையையும், அச்சத்தையும்
அமிழ்த்திவிட்டு ஆனந்தித்திருப்பதும்
அந்த ஆண்டவன் ஆணையால்தான்.
பின் வரும் காலங்களில்
பிறிதொரு பிசகில்லாமல்
அவன் இட்ட விதிப்படி
அவன் நட்ட மரங்கள் (மனிதர்கள்)
வாழ்வில் பயனுறுவதும்,
வாழ்வோடு பயணிப்பதும்,
வாழ்வை துவக்கியவனின் அருளால்தான்.
இருப்பினும் இறைவன் அமைந்திட்ட
இன்பம், துன்பம்,
ஏழ்மை, செழுமை,
ஏற்றம், இறக்கம்,
உயர்வு, தாழ்வு
ஜனனம், மரணம்,
இது போன்ற படிகளில்,
வழுக்கி விழுந்து எழுந்து புரண்டதில்
விழுப்புண்கள் ஏராளம்! ஏராளம்!
மனக் காயங்களும் தாராளம்! தாராளம்!
மனமிரங்கி மருந்திடும் மாற்றானுக்கும்
மனப்புண்ணுக்கு குறைவில்லை!
வேதனையை திரியாக்கி
வெறுப்பென்ற எண்ணெய் ஊற்றி
பற்றிலா தீப ஒளியில்,
பாழும் இவ்வுலகில் பயணித்து,
பரமனை முடிவில் சந்தித்து,
சோம்பலில்லாமல் தன் கதையை
சொல்லி வருந்திய போது,
சிந்திக்காமல் வாய்விட்டு
சிரிக்கலானான் அந்த சிற்பி.
"உன்னதமான இந்த உலகத்தில்
உயர்ந்த பிறவியாய் உன்னை
அனுப்பிய போதினிலே,
அவசரமாய் சொன்னதை,
அரை குறையாய் புரிந்து கொண்டு,
அனுதினமும் நீயும் நொந்து,
அருகிலிருந்தவரையும் நோகடித்த மனிதா!கேள்...
உன்னிடம் இல்லாத அந்த ஒன்று
அடுத்தவரிடம் இருப்பதும் உண்டு.
இல்லாத அதை தேடுவதை விடுத்து,
உன்னிடமிருக்கும் அந்த ஒன்றை விரும்பு!
வினாக்களை தொடுத்து உன்னை
விடைதேடச் சொன்னால், நீ அந்த
விடைகளையே வினாவாக்கி அதற்கு
விடை தேடி காலத்தை விடாது
வீணடித்திருக்கிறாய்!
மழையால் மரங்களுக்கும்,
மாந்தர்க்கும், மண்ணுக்கும் பயன்!
மழையால், மழைக்கென்ன பயன்?
ஒளியால் இருளுக்கும், இருளில்
இருக்கும் மனிதருக்கும் பயன்!
ஒளியால் ஒளிக்கென்ன பயன் ?
மனிதனுக்குள் மனிதனை தேடு!
மண்ணுக்கும், மற்ற மனிதனுக்கும்
மழையாகவும் ஒளியாகவும் இரு!
மனித நேயத்தில் நானிருக்கிறேன்!
மனிதாபிமானியாக நீ இரு!
அழிந்து விடும் பல செல்வங்களில்,
அழியாச் செல்வமாக இதை தருகிறேன் என
அருளிய இறைவன் அந்த
அழிந்து போன உடலற்ற உயிரை,
"படைத்து விட்டான்" மீண்டும்
பாரினில் வாழ்ந்து கொள்! என்று....
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
இது எப்போதோ, எழுத்தை என் இன்னுயிராக கருதி, என் ஸ்வாசமே இதுதான் என்றுணர்ந்து வாழ்ந்த போது, எழுத்துக்கு கொஞ்சமும் நான் பழக்கமாகாமல், இல்லை, என்னிடம் எழுத்துக்கள் வசமாகாமல் தடுமாறிய போது
பித( இய) ற்றியதுதான்....
இருப்பினும் உள்ளச் சுழற்றலில் சுற்றிய வண்ணம் சுழன்று கொண்டிருந்த இப்போதைய எண்ணங்கள் மறுபடியும் அதை வெளி வர வைத்து விட்டது.
க(அ) சட்டுக்கவி என்று இதை புறந்தள்ளாமல், பொறுமையாக படித்துப்பார்க்கும் நட்புறவுகள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏.