Pages

Monday, September 23, 2019

பாட்டி சொல்லை தட்டாதே..

அந்த காலத்தில் கூட்டுக் குடும்பம்  என்பது ஒவ்வொரு வீட்டிலும் தப்பாமல்  இருந்தது. குடும்பமென்றால்  மூத்தவர்கள், அனுபவ அறிவு நிரம்பியவர்கள் என்று ஒரு நான்கு பேராவது அதில் இருந்தனர். அவர்கள் குடும்பத்தின் பொறுப்புகளைை சிரமேற் கொண்டு வீட்டிலிருக்கும் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக இருந்து, வீட்டின்  அனைத்து   சுப நிகழ்ச்சிகளையும், பிறர் மெச்சும்படிக்கு சாஸ்திர சம்பிரதாயங்களின்படி நடத்தி குடும்பத்தினர்களை பெருமையுடன் கூடிய மகிழ்வு கொள்ளும்படி செய்வதோடு மட்டுமின்றி, 🙏

 ஒரு அவசர ஆத்திரத்திற்கு அவர்கள்தான் அந்த குடும்பத்து உறுப்பினர்களுக்கு நாடி பார்த்து சுகப்படுத்தும் வைத்தியராக, 🙏

விஷக்கடிகளுக்கு மந்திரிந்து வீபூதியிட்டு, விஷக் கடிகளை இறக்கி  நல்லபடியாக அதை குணப்படுத்துபவர்களாக, 🙏

ஏதேனும் சொத்து சம்பந்தபட்டதோ, இல்லை குடும்பத்தில் ஏற்படும் பிணக்குகளோ அதை சாமர்த்தியமாக பேசி தீர்த்து வைக்கும் சட்ட ஆலோசகராக, 🙏

ஒரு கோவில் குளத்திற்கு செல்ல ,பரிந்துரைத்தோ, இல்லை தாங்களும் முன்னின்று அழைத்துச் சென்று தெய்வீகமான  சிந்தனைகளைை வலியுறுத்தி, வளர்ப்பவர்களாக,🙏

 நல்லது கெட்டதுக்கு ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லும் ஜோசியராக, இத்தனைக்கும் மேலாக அந்த வீட்டு குடும்பத்தினரால், மரியாதையாக நடத்தப்படும் அத்தனையும் தெரிந்த பெரியவர்களாக மதிக்கப்பட்டு வந்தார்கள். 🙏

நாளடைவில், நாகரீகமும், சுயநலங்களும், பெருக பெருக, தனித்தனி வாழ்க்கை, அதில் வரும் சின்னச்சின்ன இன்பங்களுக்கு  மனிதர்கள் அடிமையாகி, கூட்டுக் குடும்பங்கள் நெரிசல்களில் சிக்கிய வாகனங்களாக உருமாறி நசுங்கிப் போய் விட்டது. 

பெரிய  விருஷமாக ஆலமரங்களாய் கிளை விட்டபடி சேர்ந்து பரவி கிடந்த கூட்டுக் குடும்பங்கள்  மலிந்து நாளடைவில் அவை வளைந்து, நெளிந்து இயற்கையாகவே எந்தவொரு புயலுக்கும் சவால் விட்டபடி காலுன்றி இருக்கும் நாணல் புற்களாக சமாளித்து வந்த போதிலும், அந்த சமாளிப்புகளையும், புதுப்புனலாக வந்த  நாகரீக மோகங்களும், சுயநல தாகங்களும் கூடவே இணைந்து கைகோர்த்தபடி கொண்டாடி, சிதறடித்து விட்டன. 

இந்த இடைவெளியில் பெரியவர்களின் அறிவுரைகள் அவசியமில்லாததாக ஆகிப்போயின. ஏட்டுப் படிப்பறிவு மட்டும் பெற்று, சிறப்பாக வாழ்ந்த அவர்களின் வாழ்க்கைக் கல்விகள், அனுபவ பாடங்கள் நம் சுதந்திரத்தை பாதிப்பதாக நினைத்த தவறான முடிவுகளில், நாம் தனியாக ஒதுங்க, அவர்களின் ஆலோசனைகள் என்ற ஒரு "பாடப்பகுதியை" நாம்  எந்த கல்வி நிலையங்களிலும் பெறாமலே பட்டம் வாங்கி, பணம் நிறைத்தும் பயனற்று வாழ்கிறோம். ஆனால் அவர்களின் வாழ்க்கைப் பாடங்களை முறையாக பின் பற்றியிருந்தால், இன்று எத்தனையோ நன்மைகள் இனியதாக நம்மை தொடர்ந்திருக்கும். 

வாட்சப்பில் சுற்றுலாவாக வந்து என்னை கவர்ந்த இந்த வரிகள் "இனியேனும் இவற்றை பின்பற்றுங்கள்" என்பதாக வந்திருக்கும் வாசகங்கள் இவையனைத்தும், இனியேனும்  நம் சந்ததிகளுக்கு எப்போதும்  பிடித்திருந்தால் சரிதான்!!

இதோ அந்த வாசகங்கள்.
பாட்டி அடிக்கடி சொல்லுவாள்... 

நீரால் கோலம் போடாதே
நெற்றியைக் காலியாய் விடாதே
குச்சியைக் கொளுத்தி வீசாதே
இரவில் ஊசியை எடுக்காதே

கால் மேல் காலைப் போடாதே
காலையில் அதிகம் தூங்காதே
தொடையில் தாளம் போடாதே
தரையில் வெறுமனே கிடக்காதே

மலஜலம் அடக்கி வைக்காதே
நகத்தை நீட்டி வளர்க்காதே
ஆலயம் செல்லத் தவறாதே
அதிகமாகப் பேசாதே

எண்ணெய் தேய்க்க மறக்காதே
சந்தியில் நீயும் உண்ணாதே
விரிப்பைச் சுருட்ட மறக்காதே
பகலில் படுத்து உறங்காதே

குளிக்கும் முன்பு புசிக்காதே
ஈரம் சொட்ட நிற்காதே
நாமம் சொல்ல மறக்காதே
நல்ல குடியைக் கெடுக்காதே

தீய வார்த்தை பேசாதே
நின்று தண்ணீர் குடிக்காதே
எதையும் காலால் தட்டாதே
எச்சில் பத்தை மறக்காதே

எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே
எந்தன் குடியில் மூத்தோரே
எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே
என்றும் வளமாய்த் தீர்வோரே

என்ன அழகான வரிகள்! இதை முதலில் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே! 

சொல்லலாம். அதற்கு முன் இவைகளை அழகாய் சொல்லும் திறனை நமக்கும், ஆசையாய் கேட்கும் அவகாசத்தை அவர்களுக்கும், உருவாக்கித் தரும் கால நேரங்களை இறைவனிடம் நாம் கண்டிப்பாக கேட்டுப் பெற வேண்டும் .. 🙏...

22 comments:

  1. நன்றி கமலா. எனக்கும் இவை இரண்டு மூன்று உறவினர் சொல்லி வாட்சப்பில் வந்தது. எச்சில் பத்து பார்க்கச் சொல்லி இன்றைய தலைமுறையினரிடம் சொல்லவே முடியாது. சமையல் செய்து விட்டு அதைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துச் சாப்பிடுபவர்களே இப்போது அதிகம். தலையை விரிச்சுப் போட்டுக்காதேனும் சொல்ல முடியாது. ஐம்பது, அறுபது வயசுக்காரங்களே தலையை விரிச்சுப் போட்டுக் கொண்டு தான் இருக்காங்க. அதே போல் காலையில் அதிகம் தூங்காதேனும் சொல்ல முடியாது. ஒரு நாள் விடுமுறைனால் கூடக் காலைப் பத்து மணிக்குத் தான் பலரும் எழுந்திருக்கின்றனர். காலைக் காஃபி, காலை ஆகாரத்துக்கே பதினோரு மணி ஆகி விடும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களின் கருத்துக்கள் உண்மைதான். இப்போது காலங்கள் நிறையவே மாறி விட்டது. சாப்பிடும் போது மற்றவர் பறிமாறுவது கட்டாயமாக இருந்த நிலை போய், தானே பறிமாறிக் கொண்டாலும். இடது கையால் போட்டுக் கொள்ளும் போது அருகில் சிறிது நீரை விட்டு அதில் இடது கை விரல்களை தொட்டுக் கொள்வது என்ற நிலையும் போய், இப்போதெல்லாம் மடியில் தட்டை வைத்துக் கொண்டே சாப்பிடுகிறார்கள்.அந்தளவிற்கு எச்சில் பத்து. இறங்கி வந்து விட்டது. உணவை கு. ச. பெட்டியில் வைத்து சாப்பிடுவதும் அத்தியாவசமாகி விட்டது. இதில் எச்சில், பத்து காணமலே போய் விட்டது.

      தலை விரிப்பும் கேட்கவே வேண்டாம்.. "படுக்கையை சுருட்ட மறக்காதே" என்பது மாதிரி தலை முடியையும் கட்டி வைக்க மறந்து விட்டார்கள். ஜடை என்ற சொல்லே முக்கால்வாசி அனைவருக்கும் தெரியாமல் போய் விட்டது. காலங்கள் மிகவும் மாறித்தான் விட்டது இல்லை, காலத்துக்கு ஏற்ற மாதிரி நாமும் மாறித்தான் கொண்டிருக்கிறோம். எல்லாமே பாட்டி காலங்களோடு போய் விட்டது. அதன் நினைவுகளை மட்டுமே நாம் சுமக்கிறோம். எதைப்பற்றியும், ஒன்றும் சொல்ல இயலாது. தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. வணக்கம் அனைவருக்கும்.

      நேற்று முழுவதும் என்னால் வலைப்பக்கம் வர இயலவில்லை. அதனால் அனைவரும் உடனே வந்து தந்த கருத்துக்களுக்கு, சற்று தாமதமாக பதில்களை தந்து வருகிறேன். தயவு செய்து அனைவரும் மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. எச்சில் பத்து என்றால் என்ன மேடம்

      Delete
  2. அந்தக் காலத்து நடைமுறைகள் இந்தக் காலத்துக்கு பொருத்தமில்லாமல் போய்விட்டன.  வேலைவாய்ப்புகள் வெவ்வேறு இடங்களில் அமைந்து விடுவதால் கூட்டுக குடும்பம் என்பது நடக்க முடியாமல்  போய்விடுகிறது.  இதெல்லாம் பரவாயில்லை.  ஆனால் வீட்டில் மூத்தவர்களை ஒதுக்கும் குணம்தான் தவிர்க்க வேண்டிய குணம்.  இப்போதெல்லாம் இந்நிலை உணர்ந்து மூத்தவர்கள் தாங்களே ஒதுங்கி செல்வதும் நடக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் கருத்துகளும் உண்மைதான்...
      வேலை வாய்ப்புகள், ஒன்றாகவே கிடைப்பது பெருபான்மையாக சாத்தியமல்லவே ! இதுதான் மிகப் பழைய கூட்டுக்குடும்பத்தை பிரித்த ஆரம்பகால முதல்படியாக நின்றது.

      /ஆனால் வீட்டில் மூத்தவர்களை ஒதுக்கும் குணம்தான் தவிர்க்க வேண்டிய குணம். இப்போதெல்லாம் இந்நிலை உணர்ந்து மூத்தவர்கள் தாங்களே ஒதுங்கி செல்வதும் நடக்கிறது./

      அதுதான் மிகவும் கஸ்டமாக உள்ளது. அப்படி ஒதுங்கி செல்ல இயலாத பட்சத்தில், அவர்கள் (மூத்தவர்கள்) மிகவும் தங்களுடைய சுயகெளரவங்களை விட்டு தந்து விட்டு ஏதோ வாழ்ந்ததாக வேண்டுமே என்ற நிலையிலும், இருக்கிறார்கள். மொத்தத்தில் கால மாறுதலுக்கு ஏற்ப மனிதர்களும் தங்களை மாற்றிக் கொண்டு விட்டனர். இல்லை, அவர்களின் மன மாறுதலுக்கு ஏற்றபடி காலமும் பொறுத்தபடி சுழன்று வருகிறது. எப்படி வேண்டுமானாலும் கூறலாம். வேறு என்ன சொல்வது? தங்களுடைய அன்பான கருத்துக்களுக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. படிக்க ரசனையாய், விட்டுவிட்ட காலங்கள் நினைவுக்கு வரும் விதமா இருக்கு.

    இதுல ஏதேனும் இந்தக் காலத்துப் பசங்க கடைபிடிக்கறாங்களான்னு பார்த்தால், அப்படிப் பார்ப்பதே தவறு என்று சொல்லும் காலம் எனப் புரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உண்மைதான்.. படிக்க ரசனையாய், பழைய காலங்களை கண் முன்னே கொண்டு வருவதென்பது உண்மைதான். ஆனால் நடைமுறையில் இவை எதுவும் நடக்க சாத்தியமில்லாமல் நழுவிக் கொண்டிருப்பதும் உண்மைதான்..

      /இதுல ஏதேனும் இந்தக் காலத்துப் பசங்க கடைபிடிக்கறாங்களான்னு பார்த்தால், அப்படிப் பார்ப்பதே தவறு என்று சொல்லும் காலம் எனப் புரிகிறது./

      ஒன்றும் சொல்வதற்கில்லை. காலங்களுக்கு தகுந்த மாதிரி மனித குணங்களும் மாறித்தான் போய் விட்டன. தங்களின் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. ருக்மணி அம்மா என்று ஒருவர் ஆன்மீகம் பேசுவார்.
    அவர் என்றைக்கு படுக்கையை சுருட்டாமல் விட்டார்களோ அப்போதே படுத்து போச்சு வாழ்க்கை என்று சொன்னார்கள். பாயை சுருட்டி
    போர்வையை உதறி அழகாய் மடித்து வைத்து, மெத்தை என்றால் அழகாய் சுருட்டி கட்டில் வைத்தார்கள், மேலே தொங்கும் மர பரணில் மற்ற படுக்கைகள் அடைக்கலம் ஆச்சு. ஆனால் இப்போது சுருட்ட முடியாத மெத்தைகள், கட்டில் அடியில் போர்வை தலையணை அடைக்கலம்.

    காலம் மாறுது. கருத்து மாறுது, கோலம் மாறுது, கொள்கை மாறுது. என்ற பாடல் நினைவுக்கு வருது.

    நம்மை போன்றவர்கள் முடிந்தவரை கடை பிடிக்கலாம். அவ்வளவே!


    //சொல்லலாம். அதற்கு முன் இவைகளை அழகாய் சொல்லும் திறனை நமக்கும், ஆசையாய் கேட்கும் அவகாசத்தை அவர்களுக்கும், உருவாக்கித் தரும் கால நேரங்களை இறைவனிடம் நாம் கண்டிப்பாக கேட்டுப் பெற வேண்டும் .. 🙏...//

    பழைய முறைகளை கடைபிடிக்க காலம் வருது. நீங்கள் சொல்வது போல் இறைவன் அருள்வார்.


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களுடைய கருத்துக்கள் உண்மைதான்.படுக்கையை சுருட்டாத முடியாத மெத்தைதான் இப்போதெல்லாம் நிலைத்து நின்று விட்டது. நாமும் அந்த தேவைகளுக்கு ஏற்ப பழகி விட்டோம்.

      /காலம் மாறுது. கருத்து மாறுது, கோலம் மாறுது, கொள்கை மாறுது. என்ற பாடல் நினைவுக்கு வருது.

      நம்மை போன்றவர்கள் முடிந்தவரை கடை பிடிக்கலாம். அவ்வளவே!/

      உண்மைதான்.. ஏதோ இந்த வாட்சப் தொகுப்பு பார்த்ததும் பழையனவெல்லாம் நினைவிற்கு வந்தது. எங்கள் பாட்டி இதையெல்லாம் சொல்லி வளர்ந்தவர்கள் நாங்கள். பாட்டியின் நினைவாக இந்தப் பதிவு உருவானது. இப்போதும் நாமும் முடிந்தவரை இவற்றை கடைப்பிடிக்கிறோம். சில சமயங்களில் சிலவற்றை எதிராளிகளுக்காக கடைப்பிடிக்காமல் தவிர்த்தும் வருகிறோம்.

      /பழைய முறைகளை கடைபிடிக்க காலம் வருது. நீங்கள் சொல்வது போல் இறைவன் அருள்வார்./

      தங்கள் வாக்குப்படி இறைவன் அருள் வரட்டும். நடப்பது அனைத்தும் இறைவனின் செயல்தானே.. ! மாறுகிற காலமும் அவன் எண்ணங்களின் சுழற்சிதானே..!
      அனைத்தும் நல்லதாக நடக்க பிரார்த்திப்போம்.

      தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. அருமையான பொன்மொழிகள் சகோ இவைகளை எல்லாம் மறந்து விட்டோமே.

    இதன் பலனை (தண்டனையை) அனுபவித்தே தீரணும்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உண்மைதான் சகோ. அருமையான உபதேசங்கள். இவற்றை சற்றேறக்குறைய மறந்தும், மறக்க முடியாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.அனைத்தும் காலக்கொடுமை. "இதனாலெல்லாம் ஒன்றுமேயில்லை.. நடப்பது நடந்தேதான் தீரும்" என்று நம்பினாலும், இதன் பலன்கள் சில சமயங்களில், மனதை துன்புறுத்துகின்றன. தங்களது அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. ஆஆஅ கமலாக்கா நியூ போஸ்ட்.... ஈவினிங் வாறேன்ன்ன்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      வாங்க.. வாங்க.. மெதுவாகவே வாங்க. நானே தாமதமாகத்தான் பதில்கள் தர வந்து கொண்டேயிருக்கிறேன்.

      நீங்களும் சொன்னபடிக்கு வந்து கருத்துக்களை பதித்து விட்டீர்கள்.எனக்குதான் அதை விட தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். அனைத்திற்கும் பதில் தருகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. ம்ீ வந்துட்டேன்ன்ன்..

    //நாளடைவில், நாகரீகமும், சுயநலங்களும், பெருக பெருக, தனித்தனி வாழ்க்கை, அதில் வரும் சின்னச்சின்ன இன்பங்களுக்கு மனிதர்கள் அடிமையாகி, கூட்டுக் குடும்பங்கள் நெரிசல்களில் சிக்கிய வாகனங்களாக உருமாறி நசுங்கிப் போய் விட்டது. //

    இது கமலாக்கா பேசுவதாயின் நிறையப் பேசலாம்.. இக்கரைக்கு அக்கரைப் பச்சைதான் இதுவும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      வாங்க.. வாங்க..

      இதுமட்டுமல்ல.. வாழ்க்கையில் ஒரு விஷயத்தில் சலிப்பு வரும் போது, நாம் நினைப்பது எதுவும் நடவாத போது, எல்லாமே இக்கரைக்கு அக்கரைப் பச்சைதான். தங்களிடம் இருக்கும் பச்சையை திருப்தியாக இச்சையுடன் பார்க்காத மனித மனங்களுக்கு அக்கரை என்றும் பச்சைதான். தங்கள் கருத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். எந்த விஷயமும் பேசித்தீர்வதில்லை. எதுவுமே இரண்டு பக்கம் அடி வாங்கும் மத்தளம்தான். அதுதான் உண்மை. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. தனிக்குடும்பத்தில் எவ்வளவு கஸ்டம் இருக்கிறதோ, அதைவிட அதிக கஸ்டம் கூட்டுக் குடும்பத்திலும் இருந்திருக்குது.

    உதவி, ஒன்றாக இருந்து பொழுது போவது என ஒருபுறம் இருந்தாலும், கூட்டுக் குடும்ப வாழ்க்கையில்... எத்தனை வயசானாலும் மாமா, மாமிதான் குடும்பப் பொறுப்பை ஏற்றிருப்பார்கள், பின்னர், மூத்த மருமகளிடம் போகும்.. ஏனையோர் எல்லாம் கைகட்டிக்கொண்டு நிற்க வேண்டும்... இதெல்லாம் ஒருவித அடிமைப்படுத்தல்தானே, ஒரு வயசுக்குப் பின், பிள்ளைகள் தலைமை தாங்கட்டும் என ஆரும் எண்ணுவதில்லை... ஆனா தனிக்குடும்பத்தில் ஒவ்வொரு பெண்ணும் தலைமை தாங்கும் குயின்கள் எல்லோ..

    நிறையச் சொல்லலாம். ஆனா எதுக்கு.. நீங்க சொல்லியிருக்கும் கருத்துக்கள் உண்மைதான்.. ஆனா நியூட்டனின் 3 வது விதி இங்கு நினைவுக்கு வருதெனக்கு:)) ஹா ஹா ஹா.

    நான் கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் இருந்ததில்லை, ஆனா கூட்டுக் குடும்பத்தில் எத்தனையோ தமிழ் நாட்டுப் பெண்கள் பட்ட அவலம் அறிஞ்சிருக்கிறேன்.. இங்கும் சொல்லியிருக்கிறார்கள், மெயிலிலும் சிலர் முன்பு சொன்னார்கள்.. எவ்ளோ கொடுமைகளும் கூட்டுக் குடும்பத்தில் அதிகம் இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் கருத்தும் உண்மைதான். கூட்டு குடும்பங்களில் நிறைய சிக்கல்களும், பூசல்களும் முறையே விழுந்து எழுந்துள்ளது. ஆனால் எல்லாவற்றிலுமே குறை, நிறை என இரண்டும் உள்ளது. ஒற்றுமையும், எதையும் விட்டுத்தரும் எண்ணங்களும், ஒன்றில் உருவாகிறது என்றால், தனித்துவமும், தன் விருப்பபடி வாழ்ந்து அனுபவிக்கும் குணமும் மற்றொன்றில் திருப்தியடைய வைக்கிறது. "தூரத்துப் பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி" என்ற பழமொழி எப்போதும் உண்டு.

      இது அவரவர் எண்ணங்களை, ஆசைகளை பொறுத்தது. பொதுவாக கருத்துக்கள் எப்போதுமே அபிப்பிராய பேதத்தை உருவாக்கும் வல்லமை பெற்றவை. ஏனென்றால், அனைவருக்குமே இரண்டு மனத்தை கேட்காமலேயே தந்து விட்டான் இறைவன். ஹா.ஹா.ஹா.

      செய்யும் வேலைகள், அதற்கு வரும் வருமானங்கள், பணத்தேவைகள், வசதிகளை பெறும் ஆசைகள் அனைத்தும் மனிதரின் மூளையை சலவை செய்பவை. அதன் விளைவே சுதந்தர தாகம். தனித்தனி வாழ்க்கை சுகமாக இருக்குமென்ற நம்பிக்கை அனைவருக்கும் வந்து விடுகிறது. ஆயினும் சில பல இடங்களில் கூ. குடும்பங்கள் உயிரோட்டமாக இருந்து வருகிறது என நினைக்கிறேன்.

      தங்கள் அருமையான கருத்துக்களுக்கு மிக்க மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. மிக அழகிய பாட்டியின் பாடல்.. இவறில் முக்கால்வாசியை நாமும் கடைப்பிடிப்போம்..

    செவ்வாய் வெள்ளியில் மற்றும் விளக்கேற்றியபின் நகம் வெட்டக் கூடாது.

    மாலையில் நித்திரை கொள்ளக்கூடாது.
    வாசலில் நின்று எதையும் கொடுக்கவோ வாங்கவோ கூடாது.. இப்படி இன்னும் கொஞ்சம் இருக்கு.

    வெள்ளி செவ்வாயில் தலைமயிர் வெட்டக்கூடாது.. இவற்றை பிள்ளைகளுக்கும் சொல்லிக் குடுத்திருக்கிறோம்.. அவர்களும் இப்போ கடைப்பிடிக்கின்றனர்...

    என்னைவிட என் கணவர்தான், இது அப்பம்மா சொன்னா.. அப்பம்மா சொன்னா என, அதிக சாத்திரங்கள் சொல்லுவார்:))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்களுடைய அனைத்து கருத்துக்களும் அசைக்க முடியாத உண்மைதான்.

      இந்த பாட்டிச் சொற்களில், பலவற்றை பின்பற்ற இயலாத முறைகளுக்கு நாம் மாறி விட்டாலும், சிலவற்றை கடைப் பிடிக்கிறோம். நம் குழந்தைகளுக்கும் சொல்கிறோம். அவர்களும் முடிந்தவரை நினைவில் கொண்டு செயல்படுத்துவது பார்த்து சந்தோஷமும் அடைகிறோம்.

      /என்னைவிட என் கணவர்தான், இது அப்பம்மா சொன்னா.. அப்பம்மா சொன்னா என, அதிக சாத்திரங்கள் சொல்லுவார்:))/

      அப்படியா..! தங்கள் கணவர் அவர் பாட்டியை மதித்து அவர்கள் கூறியதை கடைப்பிடிப்பது மகிழ்ச்சியை தருகிறது. நல்ல பழக்க வழக்கங்கள் எளிதில் ஒருவரை விட்டுச் செல்லாது என்பதற்கு இதுவே சாட்சி. தங்களது அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. அருமையான வரிகள் ...

    முடிந்த அளவு கடைபிடித்து ...

    பசங்களுக்கும் சொல்லுகிறோம் ...

    உண்மை என்வென்றால் எங்களுக்கும் நிறைய தெரியாது காலத்தில் பல மறைந்துவிட்டன ...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      எங்கள் பாட்டியும் இதையெல்லாம் கூறியிருக்கிறார்கள். அவர்கள் சொல்லி வளர்ந்ததில் ஒரளவுக்கு கடைப்பிடித்தும் வந்தோம். நாளடைவில் கால, தேச வர்த்தமானங்களில், பலதும் காணாமல் போயின. தற்சமயம் எனக்கு வாட்சப்பில் வந்ததை பார்த்ததும் பாட்டியின் நினைவாக ஒரு பதிவாக கொஞ்சம் எனக்குத் தோன்றியவற்றை எழுதி, கோர்வையாக வந்த வரிகளையும் பகிர்ந்திருக்கிறேன். படித்து ரசித்தமைக்கும், தந்துள்ள கருத்துகளுக்கும் மனமார்ந்த மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete