Pages

Saturday, September 22, 2018

பிரம்மோற்சவம்


திருப்பதியில் பிரம்மோற்சவம் காணும் 
ஸ்ரீமன்நாராயணனின் மலர்கள், காய், கனிகளை கொண்ட அலங்கார தரிசனங்கள்

இடையே பட்சணங்களின் அலங்காரத்துக்கு   நடுவே
அழகான மாதவன்


படைப்புக் கடவுள் பிரம்மாவே இந்த பிரம்மோற்சவத்தை பூலோகத்தில் வந்து நடத்துவதாக ஐதீகம் என்பது நாமறிந்ததே.!


இன்றைய நாளில் மும்மூர்த்திகளும் சேர்ந்து வந்து பக்தர்களை காத்து ரட்சிக்கும் நாளாக அமைந்து விட்டது.














            இன்று மஹா பிரதோஷம். 

அரியும்,  சிவனும் ஒன்று...! என்ற பழமொழிப்படி ஹரியும், ஹரனும் சந்தோஸமாகவே இன்றைய நாளில் இணைந்து வருகை தந்திருக்கின்றனர். இரு பார்வையின் முன் பார்க்கும் பொருள் ஒன்றே,! பக்தியின் முன் அனைத்து கடவுளும் ஒன்றே,! 


கடன் நிவர்த்தி சிவன்..

ஓம் நமோ நாராயணாய நமஃ
ஓம் நமசிவாய.


படங்களை கண்டு ரசித்தமைக்கு மிக்க
ன்றியுடன் 
கமலா ஹரிஹரன். 

Sunday, September 16, 2018

கோவிலும், அதன் சிறப்பும்..

சென்ற மாதத்தில் ஒரு ஞாயறன்று  இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லலாமென முடிவெடுத்தோம் . காரணம் அதன் அருகிலேயே பூங்கா ஒன்று இருக்கிறது. குழந்தைகளுக்கு (என் குழந்தைகளின் குழந்தைகள்)  அதுதானே மிகவும் பிடித்தமானது.. ஆததால் சீக்கிரமாகவே, (சீக்கிரம் என்பது மாலை நான்கு மணி.)  அந்த டயத்துக்குள்  அவர்களை கிளப்பிக் கொண்டு  செல்வதற்குள்  போதும் போதுமென ஆகி விட்டது. அப்படியும் ஓலாவில்தான் அந்த இடத்துக்குச் சென்றோம்.

அந்த ராமாஞ்சநேயா  கோவில் சின்ன கோவில்தான் எனினும் அழகுடன் அம்சமாக இருந்தது.  கோவிலினுள் செல்ஃபோன் தடை... அதனால் கோவில் வாசலில் இருந்தபடியே போட்டோக்கள் எடுத்தேன். பூங்காவில் நேரம் போனது போக கோவிலுக்கு படியேறி செல்வதற்குள் கொஞ்சம் இருட்டு வர ஆரம்பித்து விட்டது. கோவிலில் மேல் ஸ்ரீ ராம பிரானும், ஆஞ்சநேயரும் ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்தபடி  சிலையாக இருக்கும் இத்தோற்றத்தை எவ்வளவு நேரம் வேண்டுமானலும் பார்த்துக் கொண்டேயிருக்கத் தோன்றும். அன்பும், பணிவும் ஒன்று கலந்த பாவத்துடன் அவர்கள் இருவரின் கண்களிலும் தோன்றும் ஆனந்த பாஷ்யம் நம்மை மெய்மறக்கச் செய்யும். ராமரின் அன்புக்குரிய  பணிவான  தோழரல்லவா ஆஞ்சநேயர்..... அந்த நட்பின் இறுக்கத்தை அங்கு கண்டு கொள்ளலாம். நாங்கள் முன்பெல்லாம் இந்த கோவிலுக்கு பலமுறை சென்றிருக்கிறோம்.


மூலஸ்தானத்தில் ஆஞ்சநேயர் இரு கைகள் கூப்பிய தோற்றத்துடன் தரிசனம் தருகிறார். கோவிலின் எதிரில், அரசும், வேம்பும், இணைந்த  பெரிய மரம்.. கீழே நிறைய வரிசையாக நாகர்கள். அந்த இடத்திலிருந்தும்  ராமரும் ஆஞ்சநேயரும் இணைந்திருந்த போட்டோ எடுத்தேன். சுற்றிலும் பூங்கா. அதன் நடுவில் மேலெழுந்தவாரிய இந்த அழகான ஆஞ்சநேயர் கோவில்.  இனி நான் எடுத்த புகைப்படங்களினால் இதன் சிறப்பை பார்ப்போமா.....


ராமரும், ஆஞ்சநேயரும் ஒருவரையொருவர் அன்பால் பிணைத்துக் கொண்ட காட்சி. 


சற்று இருள் வர ஆரம்பித்து விட்டது. அந்த பின்னணியிலும். அவர்களின் அன்பு மனதை நிறையச் செய்கிறது. 


கண்ணையும் மனதையும் கவர வெட்டி விடப்பட்ட செடிகள். பூக்கள், மரங்கள் என ரம்மியமான ஒரு பகுதி.....


பெரிய பாறைகளும். மரங்களுமாக மற்றொரு பகுதி...


"இருண்ட கிளைகளுக்கு ஊடே சிறிது ஒளியையும் புகைப்படம் எடுக்கும் உங்களுக்குகாகத்தான் தக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். " என விரைவு படுத்திய பூங்கா.


மாலை ஐந்தரை மணி வெளிச்சத்தில், கொஞ்சம் பளபளப்பு காட்டும் பூங்கா.


பூங்காவின் நெடியதாக  வளர்ந்த மரங்களில் கலராக இலைகள்.பூக்கள்.


மரங்கள் பாறைகள், புல்வெளிகளுக் கிடையே நானும் கொஞ்சம் இருக்கிறேன் என்று நினைவுபடுத்திய வானம்....


பூங்காவிலிருந்து  கோவிலுக்கு ஏறிச் செல்ல உதவும் படிகள்..

படிகளில் ஏறும் போது கோவிலின் பக்கவாட்டு தோற்றம்.! முழு முதற் கடவுளும், முப்பெரும் தேவிகளும் சுவரில் இருந்தபடி படி ஏறி வருபவர்களுக்கு ஆசி வழங்கும் காட்சி ...


கோவிலுக்குச் செல்ல படி ஏறும் முன் ஒரு இயற்கை காட்சி...


மரங்களும், புல்வெளிகள், பாறைகளுமாக அமைக்கப்பட்ட ஒரு பகுதி...


பல அடர்ந்த மரங்கள் பாறைகள் சீராக்கப்பட்ட புல்வெளிகளுடன் பூங்காவின் ஒரு தோற்றம்... 


சற்று இருளானது சூழலாமா.. வேண்டாமா? என யோசிக்கும் தறுவாயில் சட்டென எனது செல் முடிவெடுத்த ஒரு தருணத்தில் மீண்டும் ஒருமுறை கோவிலின் பக்கவாட்டு தோற்றம்...


கோவிலின் முன் பகுதியில் நின்றபடி நேராக எடுத்தப் புகைப்படம். முன் மண்டபம் ஏறிச் சென்றால் கோவிலினுள் பிரேவேசிக்கலாம். அங்கே கை கூப்பிய நிலையில் அடக்கத்தின் பிரதிபலிப்பாக ஆஜானுபாகுவாக,  கம்பீரமாக, உயரமான  கோலத்துடன் நின்றிருக்கும் ஆஞ்சநேய ஸ்வாமி....


அரசும் வேம்புமாக கை கோர்த்து இணைந்து  தன் காலடியில் அமர்ந்திருந்த நாகர்களின் துணை தந்த தைரியத்தில், பெரிதாக கிளை பரப்பி வளர்ந்திருக்கும் காட்சி....


இதுவும் நாங்கள்தான்.. எம்மை தினமும் பக்தியுடன் பிரதட்சணம் செய்தால், ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரோடி நீங்கள் வாழ்வீர்கள். என்கிறாரோ.. இந்த மரங்களுக்கு அரசன்.


கோவிலின் முகப்பு சேர்ந்து தெரிகிற மாதிரி எடுக்கப்பட்டது. இருள்தான்  வெற்றி யடையப் போகிறது என உணர்ந்த பின்னும் அதை தற்காலிகமாக வெல்ல நினைத்து ஒளி உமிழும் விளக்குகள்...


அடர்ந்த கிளைகளும் எங்கும் வியாபிக்கத் துடிக்கும் உள்ளம் கொண்ட இலைகளுமாக உன் சிறு செல்லின் இடம் முழுவதையும் ஆக்கிரமித்து விட்டேன் பார்த்தாயா? என்று பரிகாசமாய் என்னைப் பார்த்து வினவும் விருட்ச ராஜா....

=================================================================================
இந்த கோவில் பார்த்து தரிசனம் முடித்ததும் அருகில் மற்றொரு சிவன் கோவிலுக்குச் சென்றோம். அங்கும் கோவிலில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. இதேப் போல் வாசலிலிருந்து எடுத்தோம். அதை அடுத்தப் பதிவாக எழுதுகிறேன்.
இதைப் படிக்கும் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி. 🙏

Wednesday, September 12, 2018

எங்கள் "பிள்ளை"யார் கதை....

வணக்கம்..
அனைத்து வலைத்தள சகோதர. சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.



ஸ்ரீ விநாயகர் கும்பாபிஷேக விழா

அந்த கற்கோவில் புது சுண்ணாம்பு அடித்து கடவுளார்களை பிரதிஷ்டை செய்ய பீடங்களை சிறந்த முறையில்அமைத்து, சுற்றிலும் பிரதட்சணம் செய்வதற்கு வசதியாக நடைபாதைகளை சீரமைத்து  வேலைகள் முழுவதும் பூர்த்தியாகி விட்டது. சின்ன கோவில்தான். ஆனாலும்  அந்த அக்ரஹார  பெரியவர்கள் பேசி ஒன்று கூடி ஒரு முடிவுடன் அம்சமாக அமைத்தது ஸ்ரீ விநாயக பெருமானின் திருவருளால்தான். அங்கிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் தாயாதி முறைகள்தாம். அதனால் மனப் பிரிவினையின்றி ஒன்றினைந்து ஆளுக்கொரு வேலையாக முனைப்புடன் செய்து கோவிலை  அழகான முறையில் கட்டியாகி விட்டது

ஒரு வாரத்தில் அதில்  விநாயகர்  சிலை பிரதிஷ்டை செய்து,  மஹா கும்பாபிஷேகத்திற்கு என நாட்கள் தேர்ந்தெடுத்து நல்ல பொழுதும் பார்த்து ஏற்பாடுகள் செய்தாகி விட்டது. மேள தாளம், நாதஸ்வர கலைஞர், தெரு முழுக்க பந்தல், பந்தலில் கட்ட வாழைமரங்கள், தோரணம், பூக்கள், கும்பாபிஷேகம் நடத்தி வைக்க தீட்சிதர்கள்  வேதங்கள் முழங்க  கணபாடிகள்,  அன்றிரவு முழுவதும்  இறைவனின் நாமாவளியை சொல்லும் பஜனைகளுக்காக பஜனை செய்பவர்கள் என அனைவருக்கும்  சொல்லியாகி விட்டது. ஒவ்வொரு வீட்டிலும் பக்கத்திலிருக்கும் உறவுகள், வெளியூரில் குடியிருக்கும் உறவுகள், உறவுகளுக்கு அறிந்தவர்கள், அறிந்தவர்களுக்கு தெரிந்தவர்கள், தெரிந்தவர்களுக்கு அறிமுகமானவர்கள் இப்படி நிறைய பேரை எதிர்பார்த்து, விழாக் கோலம் பூண்டு அந்த அக்ரஹாரத் தெரு தயாராகி கொண்டிருந்தது.

நல்ல சமையல்காரர்கள் நியமித்து, அவர்களுடன்  தெருப் பெரியவர்கள் அமர்ந்து, ஹோமத்திற்கு நிவேதனங்கள், காலை  மதியம், இரவு என அறுசுவை உணவுகள் யாவும், இப்படியாக இருக்க வேண்டுமென பேசியாகி விட்டது.

காலை நிவேதனம் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல். பஞ்சாமிர்தம் எனவும். மதிய உணவு (நிவேதனமாக)  சாதம்,  பருப்பு, சித்ரானங்கள் இரண்டு, (தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம்) இரண்டு கறி, (வாழைக்காய் பொடித்துவல்,  சேம்பு இல்லை சேனை காரக் கறி) ஒரு கூட்டு (புடலை இல்லை தடியங்காய் கூட்டு,)  அவியல், ( எல்லா காய்களும் சேர்ந்து அவியல்,) மோர்குழம்பு, சாம்பார், ரசம், இரண்டு பச்சடிகள், (தயிர், மாங்காய்) இரண்டு வடைகள், (உளுந்து வடை, பருப்பு வடை) இனிப்புகளாக இருவகை பாயாசம்,, (பிரதமன், தேங்காய் சேர்த்து பருப்பில்லாமல் ஒரு பாயாசம்) போளி, லட்டு, என இருவகை இனிப்புகள், வாழைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் பொரித்து வெல்லப்பாகு வைத்து அதில் மனோகரம் மாதிரி போட்டெடுத்த வெல்ல இனிப்பு, (சர்க்கரை வரட்டி, சர்க்கரை உப்பேரி)
இது போக அப்பளம், வடாம், வறுவல் அப்போதே போட்ட மாங்காய் ஊறுகாய், புளிப்பில்லாத தயிர். என சாப்பாட்டு ஐட்டங்கள்.

இரவு புளியோதரை, தேங்காய்,  பருப்பு  கலந்த இனிப்பு பூரண கொழுக்கட்டை , உளுந்து காரக்கொழுக்கட்டை, எள்ளு பூரண கொழுக்கட்டை, கடலைப் பருப்பு சுண்டல், தயிர் சாதமென நிவேத்தியங்கள் வெற்றிலைபாக்கு, நிறைய பழங்கள் என  தாம்பூல உபசாரங்கள். தடபுடலாக அனைத்தும் பேசி முடித்தாகி விட்டது.

மறு நாள் வழக்கம் போல் கோவிலினுள் சென்று பார்வையிடும் போது  பிரதிஷ்டை செய்யவிருக்கும் கணபதிக்கு தீடீரென ஒரு அங்கஹீனம். வலது கை தோள்பட்டை யிலிருந்து கொஞ்சம் கை வரை மாயமாகி போனது போல.. அதைக்கண்ட எல்லோருக்கும் அதிர்ச்சி.... வானமே இடிந்து தலையில் விழுந்தது போல ஒரு வேதனை.. என்ன செய்வதென்று ஒரே கவலை... ஒரு வேலையும் ஓடவில்லை. கடைசியில்  பேசிப்பேசி அன்று இரவுக்குள் ஒரு முடிவுக்கு வந்தனர்.

மூலஸ்தானத்திற்கு வலபக்கம் கன்னி விநாயகர் பிரதிஷ்டை செய்வதற்காக அழகாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளார். அவர் இயல்பாகவே மூலவரை விட மிகவும் அழகாக வேறு அமைந்து விட்டார். எனவே அவரை குறிப்பிட்ட நாளில் மூலவராக்கி விட்டு மற்றொரு விநாயகரை செதுக்கி வேறொரு நாள் பார்த்து கன்னி விநாயகராக பிரதிஷ்டை செய்யலாம் என கூடிப் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.

கோலகாலமான  விசேஷ வைபவங்களுக்கு நாள் நெருங்கி விட்டது. ஊர் உறவுகள் என கும்பாபிஷேகத்திற்கு,  பேசியபடி ஆவலுடன் வரும் நாட்கள் நெருங்கி விட்டது. இந்த நேரத்தில் இப்படி யாகி விட்டதே என்ற கவலை அனைவருக்கும்.... ஆனாலும் கவலைப்பட நேரமில்லை. ஏதேனும் ஒரு முடிவெடுத்து சட்டென நிலைமையை  சமாளித்தாக வேண்டும். அதனால்தான் அவசரமாக இந்த முடிவு.

அன்று இரவு ஒருவருக்கும் தூக்கமே வரவில்லை.. தாங்கள் எடுத்த முடிவு தவறானவையா? இல்லை இப்படித்தான் நடக்க வேண்டுமென்பது "அவன்" கட்டளை யா? விருப்பமா? தீடீரென நடந்த சம்பவத்தால் மனச் சலனங்கள்... அதிலும் இதை சொல்லியவருக்கு மனிதினில் ஒரே குழப்பம். தம்மைச் சொல்ல வைத்தவன் "அவன்" தானெனினும் இப்படி முடிவு எடுத்து விட்டோமே. !  தெருவில் இருப்பவர் களுக்குள் தாம் சற்று வயது  மூத்தவர் என்பதால் அனைவரும் கட்டுண்டு அமைதியாய் தம் முடிவை ஆமோதித்து விட்டார்களா? இல்லை தாம் முடிவு எடுக்கும் உரிமையில் அகங்காரம் இயல்பாய் வந்து விட்டதா? குழம்பிய மனதுடன் இரவு பொழுது  கழிய விடியும் தறுவாயில், அதற்கு சற்று  முன் நாலாவது ஜாமத்தில் கண்ணயர்ந்ததார். அரைமணி நேரம் கழித்ததும்,  அவர் வாயிலிருந்து விநாயகப் பெருமானே, என்னப்பனே..விக்னேஷ்வரா... என்னை மன்னித்து விடுப்பா ... மன்னித்து விடு... என்ற கூக்குரலுடன் சத்தம் வரவே வீட்டிலுள்ளவர்களின் அனைவரும் பதறியடித்து எழுந்து, கண்ணைத் திறக்காமல்  அலறும் அவரையும் எழுப்பி அமர வைத்தனர்.

விடிந்ததும், முதல் வேலையாக  அனைவரையும் கூட்டி எப்போதும் போல் தயாராக இருக்கும் பிள்ளையாரையே பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்றும், முதல்நாள் பிள்ளையார் தன் கனவில் வந்து  "உங்கள் பிள்ளைகளுக்கு  இது போல் தீடீரென ஒரு ஊனம் ஏற்பட்டால் அவனை தங்களது அனைத்து பிள்ளைகளுடன் வளர விடாமல் தனியாக பிரித்து எங்கேனும் அனுப்பி விடுவீர்களா? அப்படி செய்ய துணிவீர்களென்றால், என்னையும் ஒதுக்கி விடுங்கள்" எனக்கூறி விட்டு மறைந்தையும்  சொல்லி, என்ன ஆனாலும் சரி..! நாம் தேர்ந்தெடுத்த கணேஷரையே பிரதிஷ்டை செய்ய வேண்டுமென உறுதியுடன் கூறியதும், சிலநாட்களில் வந்த கும்பாபிஷேக விழா அனைவரின் வருகையோடும்  நினைத்ததை விடவும் சிறப்பாக நடந்தேறியது.

அதன் பின் வருடாவருடம் வருஷாபிஷேக விழாவும் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  இது எங்கள் வீட்டு வாசலில் கோவில் கொண்டமர்ந்து (என் பிறந்த வீடு) எங்களையெல்லாம்  நான்கு தலைமுறைகளுக்கும் மேலாக காத்து  இரட்சிக்கும் எங்கள் பிள்ளையாரின் உண்மைக் கதை. என் பெற்றோர்கள் நாங்கள் வளரும் பருவத்தில் பக்தியுடன் எனக்குச் சொல்லிய  விபரங்களை வைத்து எழுதியுள்ளேன்.


இது இந்த வருட (ஜனவரியில்தான் எப்போதும் வரும்.) ஜனவரியில் வருஷாபிஷேக விழாவில் எடுத்த அவரது அருள் தரும் திருவுருவப் புகைப்படம். 

இன்றளவும் கோவில் வருஷாபிஷேக விழா நடந்து கொண்டுள்ளது. நானும் வருடா வருடம் செல்ல முடியவில்லையென்றாலும், சில பல நேரங்களில் என்னையும் அதில் கலந்து கொள்ள என்னப்பன் விநாயக மூர்த்தி வரவழைத்துள்ளார். அவர் நிழலில் எங்களையெல்லாம் அரவணைத்தபடியாக  அவர் உருவாக்கியிருக்கிறார். அவரின் அன்பான கவனிப்பு எங்கள் தலைமுறைகளை 200 வருடங்களாக காத்து ரட்சித்து வருகிறது. இத்தனை நாட்களாக இதைக் குறித்து எழுத வேண்டுமென்று நான் நினைத்துக் கொண்டிருந்த போதும், இந்த விநாயக சதுர்த்திக்கு இதை எழுத வைத்தது அவர் செயல்தான்.


இது  இப்போதும் மாத சதுர்த்தியில் செய்யப்படும் அலங்காரத்தில் ஒன்று.

ஸ்ரீ விக்னேஷ்வராய நமஃ... 

அண்ணனும் தம்பியுமாக இணைந்து அனைவருக்கும் வற்றாத அருள் புரியட்டும்.

Thursday, September 6, 2018

இழந்த கண்கள்


இதுவும்  ஆயிரத்து, தொழாயிரத்து  எழுபத்து ஆறாம் ஆண்டில், எனக்காக படைத்ததுதான். (எனக்காக என்றால் என்னுடைய தீவிரமான  எழுத்தார்வத்திற்காக .. இது இப்போது என் பதிவில் வெளி வந்திருப்பது இப்போது என் எழுத்தையும் விரும்பி ரசிக்கும் உங்களுக்காக.....)

இந்தக் கதைகள் ( எழுதியது இன்னமும் நிறைய உள்ளது.) படைக்கும் போது  எனக்கு எழுத்தாற்றல் சுத்தமாக இல்லையெனத்தான் கூறுவேன். (ஏனெனில் அப்போது என் பிறப்பு படிக்கல்லில் எண் பதினேழில் கால் பதித்திருந்தேன். அந்த பொழுதில் என் கற்பனைச் சிறகுகள் சிறிதளவுதான் முளைத்திருந்தன... (அதுவும் நான் அனுமானித்ததுதான்.) அனுபவங்கள் என்ற வாழ்க்கை பாடங்களில் ஒரு சின்ன பரிசோ, இல்லை பட்டமோ கூட வாங்கத் தெரியாத காலங்களது.)  ஆனாலும் கதைகள்  எழுதும் ஆர்வம் மிகுதியாக இருந்தது. 

அதனால் அந்த  ஆர்வ கோளாறுகள் ஒரு உருவாகி வடிவமடைந்து "கதைகள்" என்ற பெயரையும் பெற்று நிலைத்து எழுந்து விட்டன அதன் பின் அமைந்த குடும்பச் சூழல் கற்பனை சிறகுகளை மேலும் வளர்க்கத் தெரியாமல் நிறுத்தி விட்ட.து. போகட்டும் !.. இப்பவும் சிறகுகள் முழுமையடையாத கற்பனை பறவையாகத்தான் இருக்கிறேன். 

எனினும்,
  
இதை இப்போது இந்தக் கதைகளை படிக்கும், படித்து கருத்திடும் உங்களனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்

இழந்த கண்கள். 
======  ========

என்ன இது விநோதா? தங்கை தன் முன் வைத்தப் பணத்தைப்பார்த்து திகைப்புடன் கேட்டான் ரகுநாதன்...

  ''நம் தங்கை மாலினியின் திருமண  செலவிற்கு என்னால் இயன்ற உதவி அண்ணா..'' விநோதா நிதானமாக கூறினாள்.

   ''நீ செய்றது கொஞ்சம் கூட நன்னாயில்லை விநோதா'' நான் ஒருத்தன் மரமாட்டம் இருக்கிற போது நீ உதவி செய்யத்தான் வேண்டுமா?'' கோபத்துடன் கேட்டான் அவன்.

    '' இருந்தாலும் அந்தமரத்தோட நிழலிலேயே வாழ்நாள் முழுவதையும் கழிச்சிடலாம்'ன்னு, நாங்க நினைக்கிறது முட்டாள்தனம் அண்ணா ''

 '' அது அந்த மரத்தோட கடமை, விநோதா.."

எது அண்ணா ?'' தன்னாட நிழல்லே இருக்கறவங்கதானே, என்ன வேணுமானாலும் பேசலாங்கற அலட்சியத்திலே, தூக்கி எறிஞ்சிடறதா ?''

                  '' விநோதா.... ''

 '' ஸாரிஅண்ணா, '' உணர்ச்சிவசபட்டு ஏதேதோ பேசிட்டேன். மனசுலே வச்சுக்காதே... நீ, உன் தங்கைக்கு என்னவெல்லாம்  செய்யனும்'ன்னு, ஆசைபடறியோ, அதேமாதிரி ஆசைப்பட எனக்கும் உரிமையுன்டு. ஏன்னா, அவ எனக்கும் தங்கை. நீ அவ கல்யாணத்துக்கு'ன்னு, வச்சிருக்கிற  பணத்திலே, இது கால்வாசிகூட பெறாது.. ஆனா என்ன செய்றது, என்னோட மூணுவருஷ உழைப்பின் ஊதியம் இவ்வளவுதான். இதையாவது செய்ய முடிஞ்சதேங்கிற திருப்தி என் உள்ளத்தை நிறைய செய்யறது அண்ணா!!. இதை தயவு செய்து வேணாம்'ன்னு, ஒதுக்காமே ஏத்துக்கோ... இது அந்த ராமருக்கு அணில் செஞ்ச உதவி மாதிரி.. நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சுடு... எனக்கு ஆபீஸீக்கு லேட்டாயித்து... நான் வர்றேன் '' படபடவென பொரிந்து விட்டு வெளியேறினாள் அவள்.

  தானும் காரியாலயத்திற்கு போக வேண்டுமென்பதை மறந்து விட்டவனாய், ஸ்தம்பித்து போய் அமர்ந்திருந்தான் ரகுநாதன்...

இரண்டு நாட்களுக்கு முன்பு மனைவி மைதலிக்கு பரிந்து தங்கை மீது சுள்ளென்று விழுந்ததை, அவள் எவ்வளவு நாசூக்காய் சுட்டி காண்பித்துவிட்டு போய் விட்டாள், திகைப்பிலிருந்து விடுபட நீண்ட நேரமாயிற்று, அவனுக்கு.... 

          '' மாலினி ...''

   '' என்ன அக்கா ?'' கண்களை துடைத்தவாறு நிமிர்ந்தாள் மாலினி..

          '' ஏன்  அழறே ?''

       ''  சாம்பாரில் சொஞ்சம்  காரம் துாக்கலாய் இருக்கு'ன்னு.. மன்னி.." மேற்கொண்டு முடிக்க முடியாது விம்மினாள் அவள்.

  '' பைத்தியம்!! இதுக்கு போய் அழறியா?  மன்னிதானே சொல்றாள்'ன்னு பேசாமே இருக்கனும், இல்லாட்டா முகத்திலே அறைஞ்சாப்லே.. ஏதாவது பேசிட்டு வரனும் .. உனக்கு சமைக்க தெரியலைன்னா, பக்குவமா எடுத்து சொல்லனும்..  இல்லாட்டா அவளே தன் கைபாகத்தை காட்ட வேண்டியதுதானே... சற்று உஷ்ணத்துடன  கேட்டாள் விநோதா.

  '' உஷ்  அக்கா '' மன்னி வந்துட போறா.. '' என்னமோ அடுக்கிண்டே போறியே.. எனக்கு உன் மாதிரி பொறுமையா, நிதானமா, பேச வராது. பயத்துலே சட்டுன்னு அழுகைதான் வருது.''

 ''  முதல்லே பயத்தை விடு மாலினி மனுஷாளுக்கு மனுஷா ஏன்பயப்படனும்,,, நீ என்ன அவளுக்கு கொறைஞ்சி போயிட்டியா???

 ''  இன்னும் உன்னை போல வேலைக்கு போய் சம்பாதிச்சாளோ, என்னைக்கும் நிறைஞ்சே இருப்பா...  நா, இப்ப என்ன சொல்லிட்டேன்  நாளைக்கு ஒர் ஆத்துக்கு போப்போற பொண்ணு சமைக்க நல்லா கத்துக்கோன்னேன் அது தப்பா 'அங்கு வந்த அவர்களின் மன்னி மைதிலி பரபரவென்று பொரிந்தாள்.

   ''மன்னி..'' என்று தடுமாறியபடி எழுந்தாள் மாலினி.

  '' எதுக்கு நிறுத்திட்டே, உன் தங்கைக்கு இன்னும் நல்லா புத்தி சொல்லி கொடு.. உன்னை மாதிரி ஒருத்தனை மனசிலே நினைச்சிண்டு அழவும், வேலை பாக்கிறேன், வேலைபாக்கிறேன்னுட்டு, ஆபீஸிலே எல்லாரோடையும்.... ''

மன்னி,, போதும் நிறுத்து... இதை விட ஆயிரம் ஊசிகொண்டு நீ என்னை குத்தியிருக்கலாம். ஆனா அதைவிட கூர்மையா இருக்கு உன் பேச்சு " என்றாள் விநோதா.

  '' ஆஹா!!! யார்கிட்டே உன் பசப்பெல்லாம்??? எனக்கு தெரியாதாக்கும் உன் கதையெல்லாம்.....'''

    ''  மன்னி.... ''மனசின் வலி ஏற்படுத்திய  கோபத்தில் குரல்  உசத்தினாள் விநோதா.

      '' என்ன அங்கே கலாட்டா? ''

அப்போதுதான் வெளியிலிருந்து வந்த ரகுநாதன் அவர்கள் இருந்த அறைக்குள் நுழைந்தான்...

   ஒரு நிமிடத்தில்  தன் முகபாவத்தை மாற்றிக்கொண்ட விநோதா '' நத்திங் ''என்றபடி சிரித்தாள்.

   " எங்களுக்குள் ஆயிரம் இருக்கும். அதப்பத்தி உனக்கென்ன அண்ணா ? நீ உன் வேலையை பாத்துண்டு போ..." என்ற விநோதா அவன் தோளில் கைவைத்து விளையாட்டாய் அறைக்கு வெளியே தள்ளிக்கொண்டு போனாள்.

                       அத்தை....''

 அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய விநோதா வாசலில் விளையாடி கொண்டிருந்த தன் அண்ணனின் ஒரே மகன் ரவி ஆவலுடன் ஓடி வந்து அவள் காலை கட்டிகொள்ளவும் அவனை பாசத்துடன் தூக்கி மார்போடு அணைத்துக்கொண்டாள்.

    "அத்தை.. எனக்கு என்ன வாங்கி வந்திருக்கே?" ரவி ஆவலுடன் கேட்கவும், ''ம்.. ரவிகுட்டிக்கு இன்னைக்கு என்ன தெரியுமா நீ ரொம்ப நாளா கேட்டுகிட்டிருந்த இந்த பொம்மையை அத்தை இன்னிக்கு கஷ்டபட்டு தேடி வாங்கி வந்திருக்கேனாக்கும்..." என்று விநோதா நீட்டி முழக்கி சொல்லவும் ரவி அவசரமாய் அவள் பிடியிலிருந்து இறங்கியபடி "கொடு அத்தை.. சீக்கிரம்" என்று அவசரப் படுத்தினான்.

    விநோதா சிரித்து கொண்டே அவள் பையிலிருந்து எடுத்துகொடுக்கவும் ரவி அதை பார்த்த மகிழ்ச்சியில் "ரொம்ப நல்ல அத்தை" என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

 விநோதா அவனை தூக்கி அணைத்தவாறு  "போக்கிரி பயலே.. வாங்கி வந்தால் நல்ல அத்தையாக்கும், இல்லாட்டி.." என்றவாறு சிரித்துக் கொண்டு கேட்டு விட்டு, அவனை இறக்கி விட்டவள். ''சரி, நீ சமர்த்தா விளையாடிண்டிரு அத்தை உள்ளே போய் டிரஸ் மாத்திண்டு உன் கூட விளையாட வா்றேன் சரியா?'' என்று கொஞ்சிவிட்டு வீட்டினுள் நுழைந்தாள்.

    ''ஏன்னா... உங்க சின்ன தங்கைக்கு ஒருவழியா கல்யாணத்தை முடிச்சாச்சு, அடுத்து  பெரியவளுக்கும் ஏதாச்சும் ஓரு இடத்துலே பாத்து ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க வேணாமா? ''

 தன் அறைக்குள் நுழைய போன விநோதா தன்னை பற்றி அண்ணாவும் மன்னியும் பேசுவதை கேட்டு சட்டென்று நின்றாள். ஹாலில் அமர்ந்து அவர்கள் பேசுவதால், அதை கடந்து செல்லும் தன் அறைக்கு எப்படிச் செல்வது என்ற எண்ணமும் அவள் கால்களை சற்றே கட்டிப் போட்டது.

   "ஏன்னா.. உங்களைத்தான் கேட்கிறேன்,"  மன்னி விடாமல் திரும்பவும் ஆரம்பித்தாள்.

 "என்னை என்னதான் செய்ய சொல்றே மைதிலி?" அண்ணா நொந்த குரலில் அலுத்துக்கொள்வது விநோதாவிற்கு புரிந்தது.

 "உங்க தங்கைக்கு ஒரு கல்யாணத்தை பண்ணச்சொல்றேன்.. ஏதோ நடந்தது நடந்து போச்சு.. எத்தனை நாளைக்குத்தான் இப்படியே  இருக்க முடியும்..."

            '' அவ சம்மதிச்சாதானே...''

 "அவளை சம்மதிக்க வைக்கனும்... ஏதோ எனக்கு பட்டதை சொன்னேன்.. அப்புறம் உங்கபாடு.. உங்க தங்கைபாடு.. எனக்கென்ன வந்தது.. ஊரே சிரிக்கிறது நம்ப மானம் போகமே இருக்னும்னா காலாகாலத்திலே பண்றதை பண்ணுங்கோ அவ்வளவுதான் சொல்வேன்.  கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் பண்ணி பிரோயஜனமில்லை."

     ''என்ன சொன்னே? என் தங்கையை பத்தி எனக்கு நல்லா தெரியும். அவளை மாதிரி எல்லோரும் இருந்தா போறும்,'' என்றான் ரகுநாதன் உஷ்ணம் ஏறிய குரலில்...

  "உங்களுக்கு தெரிஞ்சா போதுமா? ஊர்லே எல்லோரும் என்ன பேசிக்கிறான்''னு கொஞ்சம் கவனிக்கனும்.. கண்டவனோடையும் பழகிட்டு...

    "போதும் நிறுத்து.. உன் தங்கையை நினைச்சிண்டு பேசறியா? வீட்டைவிட்டு மனம்போனபடி ஒடினவதானே அவ.. உங்காத்திலேயே  இப்படி நடந்திருக்கும் போது நீ இந்த ஆத்தைபத்தி பேச உனக்கு தகுதியில்லை, அதுவும் என் தங்கையை பத்தி தப்பா பேசினேன்னா.. உன்னை என்ன பண்ணுவேன்''னு'' எனக்கே தெரியாது..." என்று கோபத்தின் மிகுதியில் கத்தினான் ரகுநாதன்.

   "நீங்களும் கொஞ்சம் நாக்கை அடக்கி பேசுங்கோ... உங்க குடும்பத்தை பத்தி தெரியாதாக்கும்.. உங்கப்பா போன பிறகு நாலாத்துலே  சமையல் வேலை மட்டும் செஞ்சு உங்களையெல்லாம் இப்படி படிக்க வசசி காப்பாத்தியிருக்க முடியுமா உங்கம்மாவாலே?  எங்கம்மா ஏற்கனவே உங்க குடும்பத்தை பத்தி எங்கி்ட்டே சொல்லியிருக்கா.. ஏதோ நீங்கள்லாம் நல்லவா''னு''தான் எங்காத்துலே என்னை உங்களுக்கு கட்டிவச்சா.. தாயை போல பிள்ளைம்பா, அதுக்கு ஏத்தாற்போல் உங்க தங்கையும்.... கொஞ்சமாவா ஆடினா.. என்னமோ என்கிட்டே பாயறேளே?"

 "என்னடி சொன்னே? நானும் போகுதுன்''னு'' இவ்வளவுநேரம் பொறுமையாயிருந்தேன்.. " என்ற ரகுநாதன் '' பளார்'' என்று அவள் கன்னத்தில் அறைந்தான்.

   "என்னை அடியுங்கோ.. கொல்லுங்கோ.. என்னை சொல்லனும் உங்களை போய் கட்டிண்டேன் பாருங்கோ.." என்று கத்திவிட்டு மைதிலி அழுவது விநோதாவிற்கு கேட்டது.

   "சே, என்னதான் இருந்தாலும் ஒரு பெண்பிள்ளையை இப்படி அறைந்திருக்க௬டாது. பொறுமைக்கு மறுபெயராக விளங்கும் அண்ணாவா இப்படி செய்தான்" என்று விநோதா திகைத்து போயிருந்தபோது.. முகம் சிவக்க கோபத்துடன் வெளிவந்த ரகுநாதனும் அவளைகண்டு திடுக்கிட்டு நின்றான்.

 ''எல்லாவற்றையும் கேட்டிருப்பாளோ...''

     "ஸாரி விநோத், உன் மன்னி தெரியாமே உன்னைபத்தி என்னவெல்லாமோ பேசிட்டா.. அவளுக்கு நான் ரொம்ப இடம் கொடுத்திட்டேன்னு எனக்கு இப்பத்தான் புரியறது."

  "நான் அதைபத்தி கவலைபடலேண்ணா.. என் மனசு சுத்தமா, திடமா, இருக்கற வரைக்கும் யார் என்ன சொன்னாலும் பொறுத்துப்பேன். அவ என்னதான் சொன்னாலும் நீ மன்னியை அடிச்சது தப்பு. நான் உன்கிட்டே இதை எதிர்பார்க்கலே.. " நிதானமாக ௯றினாள் விநோதா.

     "அது உன்னாலேதான்..." என்றபடி சிவந்து போயிருந்த கன்னத்தை கைகளால் தடவியபடி அழுதுகொண்டே அறையை விட்டு வெளியே வந்தாள் மைதிலி.

   '' எது மன்னி?''சற்றும் பதட்டமில்லாது விநோதா வினவினாள.

  "எதுவா? பழசையெல்லாம் கனவா மறந்துட்டு ஒரு கல்யாணத்தை பண்ணிக்காமே என் குடும்பத்திலே குட்டையை குழப்புறே பாரு, அதுதான். உன்னைப்போய் உன்அண்ணாவும் தலையிலே தூக்கி வச்சிண்டு கொண்டாடுறார்."

                     '' மைதிலி...''

 "அண்ணா, போதும். உங்க சண்டை சச்சரவெல்லாம்..." என்ற விநோதா மைதிலியின் அருகில் வந்தாள்.

  "மன்னி நீ என்னாலே அண்ணாகிட்டே அடிவாங்கினதுக்கு என்னை மன்னிச்சிடு.. அப்புறம், உனக்கே தெரியும், காலேஜ் லைப்பிலிருந்து நானும் ராஜசேகரும் பழக ஆரம்பிச்சோம்.. அந்த நட்பு நாளடைவில் வலுப்பட்டு திருமணத்தில் வந்து நின்னப்போ.. நான் உன்கிட்டேயும் அண்ணாகிட்டேயும் சம்மதத்திற்காக எவ்வளவு கெஞ்சினேன். அது வரைக்கும் என் விருப்பத்திக்கெல்லாம் வளைந்து கொடுத்த அண்ணாவும் இந்த ஒரு விசயத்துக்கு மட்டும் கொஞ்சம் பிகு செய்தான். அதன் விளைவு முடிவு கொஞ்சநாள் கழித்துதான் தெரிந்தது. அந்த முடிவு  எனக்கு சாதகமாக இருக்கவே, அதை ஆவலோடும், சந்தோஷத்தோடும் அவரிடம் சொல்ல விரைந்த போது என்னை அதே மகிழ்ச்சியுடன் சந்திக்க வந்து கொண்டிருந்த அவருக்கு, அந்த விபத்து ஏற்பட்டது. "இந்த பாவியை மணப்பதை விட சாவை சந்திப்பது மேல்" என்று கடவுள்  நினைத்தானோ என்னவோ? அவரை தன்னிடமே அழைத்துக்கொண்டுவிட்டான்.  நான் ஒரு முடிவாடு வந்திருப்பதை அறியாமல் அவர்  முடிவின் எல்லைக்கே சென்று என் வாழ்க்கையையும் முடித்து விட்டார். ஒவ்வொருத்தரை போல இதயத்தில் ஒருவரை சுமந்து கொண்டு  வெளி உலகத்திற்காக ஒருவரின் ''மனைவி" என்ற பட்டத்தில் வாழ எனக்கு தெரியாது, என்னால் முடியவும் முடியாது. இந்த ஜென்மத்தில்  அவர்தான் எனக்கு கணவர். அவரை நினைத்துக்கொண்டே அவருடன் மனதால் வாழ்ந்து கொண்டே, நான் இருக்கிற வரை என் காலத்தை  கழித்து விடுவேன். இந்த ஊர் உலகத்துக்கு முன்னாடி நான் திருமணமாகமல் கெட்டு போய் கொண்டிருக்கிற ஒரு கன்னிப்பெண், ஆனால்  என்னை பொறுத்தமட்டில் நான் பூவோடும் பொட்டோடும் என் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு "நித்திய சுமங்கலி". என்னைப்பார்த்து, என் செய்கையை பார்த்து இந்த ஊர் சிரிக்கட்டும், உலகம் சிரிக்கட்டும், நான் அதை பத்தி கவலைப் படலே... ஆனா நீயும் என்னை புரிஞ்சுக்காமே, என்னென்னவோ பேசறே பாரு, அதை நினைச்சுதான் நான் ரொம்ப வருத்தப் படறேன் மன்னி..." மிகவும் உணர்ச்சிவசப்பட்டு  பேசிய விநோதா சற்று நிறுத்தினாள்.

 "கண் கலங்க அவளை பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் ரகுநாதன்.

"பழசையெல்லாம் இப்ப ஏன் கிளறுறே? முடிவா இப்ப சொல்லு?  எங்க திருப்திக்காக, கெளரவத்திற்காக, கல்யாணம் பண்ணிப்பியா,  இல்லை,  இன்னும் ஊர் வாய்க்கு அவலாகத்தான் இருக்க போறியா?"  என்று மைதிலி கேட்ட விதம் அவள் இன்னும் இளகவில்லை  என்பதை விநோதாவிற்கு எடுத்துக் காட்டியது.

   '' மன்னி.. நீ, இன்னமும் என்னை புரிஞ்சுக்கலே.. அதை பத்தி நா கவலைபடலே, இன்னொருத்தர் திருப்திகாகவெல்லாம், எம்மனசை மாத்திக்க நான் தயாராயில்லை.. அப்படி உங்க திருப்திதான்  பெருசுன்னா, என் உயிரை தர்றேன். என்னை இன்னொருத்தனுக்கு தரமாட்டேன்,  இதுதான் என்பதில்.''  உறுதியான குரலில் ௬றிவிட்டு தன் அறைக்கு திரும்பிய விநோதா  சட்டென்று நின்றாள்.

   "மன்னி, நான் கேக்கறது தப்புன்னா என்னை மன்னிச்சிடு.  என் நிலைமை உனக்கு வந்திச்சுன்னா..  ஐ...மீன், அண்ணாவுக்கே ஏதாச்சும்  ஒண்ணு ஆயிடிச்சின்னா, நீ இன்னொரு கல்யாணம்  பண்ணிப்பியா? அந்த நிலமையிலே என்னை வச்சி யோசிச்சு பாரு.. நான் இப்படி  ஒரு கேள்வி கேட்டதுக்கு நீதான் காரணம். இருந்தாலும் ஐ.யாம்.. ஸாரி..."

விநோதா அறைக்குள் போய் விட்டாள்.

  திகைப்பிலிருந்து நீங்கிய மைதிலி பதறிய குரலில் பகைமையை மறந்தவளாய், ''கேட்டேளா, உங்க தங்கை பேச்சை, தேகத்திலே, எவ்வளவு கொழுப்பு இருந்திச்சின்னா, சொந்த மன்னின்னு பாக்காமே, இப்படி பேசிட்டு போவா.." என்றாள் படபடப்புடன்.

   "அவ கேட்டது ரொம்ப கரெக்ட்" என்றபடி சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டே அங்கிருந்து அகன்றான் ரகுநாதன்.


            "என்ன விஷயம் அண்ணா? என்னமோ தனியா பேசனும்ன்னு ௬ட்டிண்டு வந்துட்டு இப்போ எதுவுமே பேசாமே எங்கேயோ வெறிச்சிண்டு உட்காரந்திருக்கியே?" விநோதாதான் பேச்சை ஆரம்பித்தாள்.

  "ஸாரி விநோத், அந்த காலத்துக்கே போயிட்டேன். நம்ப அம்மா எவ்வளவு நல்லவ..  நம்ப அப்பா போன பிறகு அம்மா நம்பளையெல்லாம் எவ்வளவு கஷ்டபட்டு  காப்பாத்தினா? கல்மிஷ மில்லாத அந்த உத்தமியை போய் இந்த பாவி என்னவெல்லாம் பேசிட்டா.." குமுறிய குரலில் வருத்தம் தொண்டையடைக்க பேசினான் ரகுநாதன்.

  "நீ இன்னும் அதையெல்லாம் நினைச்சிண்டிருக்கியா அண்ணா? நான் அப்பவே மறந்திட்டேன். மன்னி பேசினதை மட்டுமில்லை,  யார் என்ன பேசினாலும் சரி "டேக் இட் ஈசி" ன்னு எடுத்துக்கனும் அப்பத்தான் இந்த உலகத்திலே நிம்மதியாய் வாழ முடியும்."

 "எல்லாத்தையும் அப்படி எடுத்துக்கலாம் விநோதா, ஆனா நம்மை பெத்த அம்மாவை நம்மகிட்டயே தூஷனையா பேசறபோது என்ன செய்ரோம்ங்கிற நினைவு இல்லாமே போயிடறது.."

  மன்னியை கை நீட்டி அடித்ததற்காகவும் அண்ணா வருத்தப் படுகிறான். என்பதை உணர்ந்து கொண்ட விநோதா அவனை சமாதானபடுத்தும்  குரலில் "விடு அண்ணா... மன்னி ஏதோ தெரியாமல் பேசி விட்டாள்.அவ சமயத்திலே இப்படித்தான்  பேச தெரியாமே பேசிடுவா... நீ அதை நினைச்சி கவலை பட்டுண்டே இருக்காதே" என்றாள் .

  "இல்லை விநோதா, எனக்கு இன்னமும் மனசு தாங்கலே.. உனக்கு ஒன்னு தெரியுமா? நம்ப அம்மா இந்த உலகை விட்டு போறதுக்கு  முன்னாடி ஒருநாள் என்னை தனியா கூப்பிட்டு பேச தடுமாறிய அந்த முடியாத நிலையில், '' ரகுநாதா, உன்னை எப்பிடியோ கஷ்டபட்டு படிக்க வச்சுட்டேன். இனிமே ஒரு நல்ல  வேலையை சம்பாதிச்சிண்டு நீ நல்ல நிலைக்கு வர்னும்முனு நா அந்த பகவானை வேண்டிக்கிறேன். உனக்கு நா  அந்த சிரமத்தை மட்டும்  கொடுத்துட்டு போகமே, இன்னும் இரண்டு பிரச்சனை வேறேயும் வச்சிட்டு போறேன். உன் இரண்டு தங்கைகளைதான் சொல்றேன். இனிமே அதுகளை உன் இரண்டு கண்களா நினைச்சிக்கோ, அந்த இரண்டு கண்களையும் என்னைக்கும் இழந்துடாமே வச்சு காப்பாத்துறது  உன்னோட பொறுப்பு எனக்காக நீ இதை செய்வேன்'னு'' நம்பறேன்.'' அப்படின்னு சொல்லிட்டு போனா, அதை எப்ப நினைச்சிண்டாலும்  அம்மாவுக்கு  கொடுத்த வாக்கை நா சரியா நிறைவேத்தலையோன்னு எனக்கு தோணறது விநோத்'' கண்களில் நீர் மல்க ௬றினான் ரகு.

    "நீ சுத்தி வளைச்சு எங்கே வர்னேன்னு எனக்கு புரியறதண்ணா... அம்மா சொன்னபடி பாத்தாலும், நீ ஒரு கண்ணை தானமா கொடுத்துட்டு  நிக்கிறே, அம்மா என்னைக்கும் இழந்துடாமே வச்சுக்க சொன்னதை மறந்துட்டே.." விநோதா புன்னகையுடன் உண்மையை எடுத்து ௬றினாள்.

 "நீ சொல்றது தப்பு விநோதா... அந்த கண்ணோட நன்மைக்காகத்தான் அந்த கண்ணை தானமா கொடுத்தேன். தெய்வமா வாழ்ந்திண்டிருக்கும் நம்ப அம்மாவுக்கு அது நன்னா புரியும்.." சற்று அழுத்தமாக ௬றினான் ரகுநாதன்.

  "அண்ணா, இனிமே இந்த மாதிரி யெல்லாம் பேசாதே, கூடப் பிறந்து இத்தனை வருஷமா என்னோட பழகிட்டும். என்னை நீயும் சரியா, புரிஞ்சிகில்லையே , இந்த கண்ணுக்கு இனிமே எந்த நன்மையும் வேண்டாம் அண்ணா, இந்த கண் எப்பவும் உன்னோட இருக்கதான்  பிரியபடறது. அதை புரிஞ்சுக்காமே பேசாதே, இப்போ நம்ப அம்மா உயிரோட இருந்தாகூட என்னோட முடிவு சரிதான்னு, சொல்லுவா.. அப்படி பிடிவாதமா அந்த கண்ணை நீ இழக்கத்தான் போறேன்னா, அதை ஒரேடியா அழிச்சிடு அண்ணா, தானமா மட்டும் கொடுத்துடாதே,  உணர்ச்சிகளின் பாதிப்பில் பேச முடியாது" திணறினாள் விநோதா.

     "விநோத் ஸாரிம்மா, உன்னை இனிமே எப்பவும் நிர்பந்திக்க மாட்டேன். என்னை மன்னிச்சுடும்மா.."

            சிறிது நேரம் இருவருக்குமிடையே ஒரு வருத்தமான மெளனம் நிலவியது. நாம் பேசியது தவறோவென்ற சிந்தனை இருவரையும் வாய் மூடிய மெளனியாக்கியது.

  "விநோத், நம்ப இரண்டு பேர்களோட வாழ்க்கையிலும் இப்போ கொஞ்ச நாளா ஒரு முள் நெருடிண்டே இருக்கு அந்த முள்ளை ஒரேடியா எடுத்தெறிய போறேன் அதை சொல்லத்தான் நா உன்னை இங்கே அழைச்சிண்டு வந்தேன் அதை மறந்திட்டு  ஏதேதோ பேசி உன்னை புண்படுத்திட் டேன்."

       "நீ எண்ணன்னா சொல்றே? புரியாமல் கேட்டாள் விநோதா.

 "மாலினியை கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு... .அவளைப்  பத்தி இனி எனக்கு எந்த கவலையும் இல்லை ஏன்னா, அவாத்திலே அவளை நன்னா  பாத்துக்கிறா... மாப்பிள்ளையும் தங்கம்! இப்போ என்னோட கவலையெல்லாம் உன்னை பத்தி மட்டுந்தான் விநோத்மா, நான் இருக்கிற வரை  உனக்கு ஒரு வருத்தம் வராமல் நீ சந்தோஷமா இருக்கனும் அது மட்டுந்தான் என் வாழ்க்கையின் லட்சியம். உனக்காக என் வாழ்க்கையில் நான் எதை வேணும்னாலும் இழக்க தயாரா இருக்கேன்.  உன் மன்னி வேறே எப்பவும் உன்னை ஏதாவது சொல்லி புண்படுத்திண்டே இருக்கா, உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி என்னையும் நச்சரிச்சிண்டே இருக்கா, இவளாளே நம்ம நிம்மதி தினமும் பறி போறது அதனாலே யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். அவளை அவ பிறந்தாத்ததுக்கு அனுப்பிட்டு நாம ரெண்டு பேரும் நம்ப படிப்புக்கு ஏத்த உத்யோகத்தை தேடிண்டு எங்கேயாவது கண்காணாத ஊருக்கு போய் விடலாம் சாகற வரைக்கும் உனக்கு நான் துணை எனக்கு நீ துணை, முடிஞ்சா உன் மன்னிக்கு விவாக ரத்து கூட தந்துடறேன். அவ வழியிலே அவ வாழ்க்கையை அமைச்சிப்பா, எனக்கு  நீ தான் முக்கியம் விநோத்" கண்களில் கண்ணீர் ததும்ப லேசாக விசும்பினான் ரகு.

   ''அண்ணா...'' எதிலும் நிதானமாக இருப்பவள் பொது இடம் என்று கூட பாராமல் சற்று வாய் விட்டு கத்தி விட்டாள் விநோதா.

  கண்கள் சற்று நேரம் இமைக்க மறந்து அதிர்ச்சியில் சமைந்தன.

  "உனக்கென்ன பைத்தியமா அண்ணா? இன்னைக்கென்னவோ எல்லாமே விசித்திரமா பேசறே?" திகைப்பிலிருந்து விடுபட்டு அவள் இந்த  கேள்வியை கேட்க சில வினாடிகள் ஆயின.

 "நோ விநோத்.. நான் தெளிவாதான் இருக்கேன். அவ அனாவசியமா உன் விருப்பபடி நீ வாழறதுக்கு தடையாவும், என் வாழ்க்கையிலேயும் என்  நிம்மதிக்கு குறுக்கீடாகவும், என்னோட பொறுமைக்கே சோதனையா இருக்கா, அதனாலேதான் இந்த முடிவு" பதட்டமில்லாமல் சொன்னான் ரகுநாதன்.

 "அண்ணா... இதுலே என்னோட பிரச்சனையும் கொஞ்சம் கலந்திருக்கு, ஐ மீன்.. நீ மன்னியை அப்படி விடறதுக்கு நானும் ஒரு காரணமா  இருக்கேன். அதனாலே என்னோட யோசனையையும், நான் சொல்வேன் நீ அதை தட்டாமே ஏத்துக்கனும்."

   "தாராளமாய் விநோத், உன் கருத்தை நான் என்னிக்குமே மறுப்பேனா?அதற்குதானே உன்னைஇங்கே தனியா கூட்டிண்டு வந்து ஆலோசனை கேட்கிறேன்."

  "தேங்க் யூ அண்ணா... நான் இன்னும் ஒரு வாரத்திலே யோசிச்சு ஒரு முடிவை சொல்றேன். அது வரைக்கும் இது விஷயமாய் நீ மன்னி கிட்டே கண்டிப்பா நடக்காமே எப்போதும் போலவே பழகணும் சரியா.... நாம இப்போ பேசினதையெல்லாம் தப்பி தவறி ஒரு வார்த்தை கூட மன்னி கிட்டே சொல்லிடாதே.. மேற்கொண்டு இந்த விஷயத்துலே ஆழமா காலை விடக்௬டாது தெரிஞ்சுதா.. குறிப்பா நான் என்னோட முடிவை  சொல்றவரைக்கும் இதைப் பத்தி மறந்துடனும் சரியா?" கண்டிப்பான குரலில் ௬றினாள் விநோதா.

        "சரி விநோத்.. புறப்படலாமா?" உன் யோசனைப்படியே ஆகட்டும். ." என்றபடி எழுந்தான் ரகுநாதன்.

   "எனக்காக..... என் மனம் வருத்தப்படக்   கூடாது என்பதற்காக...... தனிமரமாக நிற்கும்  என் ஒருத்திக்காக. ...ஒரு குடும்பத்தையே......ஒருகூட்டையே...... கலைக்க தயாராயிருக்கியே அண்ணா, என் மீது உனக்கு அவ்வளவு பாசமா? அதுக்கு ஒரு எல்லையே இல்லையா.. எனக்காக உன் வாழ்வையே தியாகம் செய்ய துணிஞ்சிட்டியே அண்ணா. .. நீ ரொம்ப... ரொம்ப..... இமயமலை மாதிரி உயர்ந்திட்டே என் சிறிய மனசாலே  உன்னை அண்ணாந்து பாக்க முடியலேண்ணா , உன்னை புரிஞ்சிககாமே எத்தனையோ நாள் தாழ்வா நினைச்சதுக்கு விஷ்வரூபம் எடுத்தது மாதிரி  உயரே.... உயரே .... போயிட்டேயேண்ணா, சில சமயம் உன்னை பத்தி தவறா நினைச்சி மனசுகுள்ளே சில நிமிஷங்கள் வெறுத்தற்கு எனக்கு பெரிய  தண்டனையா கொடுத்துட்டேயேண்ணா, என்னை மன்னிச்சுடு அண்ணா.. .மன்னிச்சுடு.! இந்த பிறவியில் உன் தங்கையாய் பிறந்த பாக்கியத்தை அடைந்த  நான், இனி  எத்தனை பிறவி எடுத்தாலும் உனக்கு தங்கையாகவே பிறக்கணும்னு அந்த ஆண்டவனை வேண்டிக்கிறேண்ணா.." அவனை மனதுக்குள்  நினைத்து  ஜபித்துக் கொண்டே புலம்பியபடி கண்களில் நீர்மலக அவனைத் தொடர்ந்து சென்று கொண்டிருந்தாள் விநோதா.

தன் கையிலிருந்த சூட்கேசை கீழே வைத்து விட்டு தன்னையும் தன்மனைவியையும் ஒருங்கே நிற்க வைத்து  காலில் விழுந்து நமஸ்கரித்த விநோதாவை பார்த்து திகைத்தான் ரகுநாதன்.

   "என்ன விநோதா இதெல்லாம்??"

  "என்னை ஆசிர்வதித்து விடை கொடு அண்ணா..."

  "விநோதா..." என்று அலறியபடி காலில் விழுந்தவளை தூக்கி நிறுத்தியவன், அவளை உற்று பார்த்தவாறு "விநோத்ம்மா உனக்கு என்ன ஆச்சு?" என்றான் பதறிய குரலில்.

  "எனக்கு ஒன்றுமில்லையண்ணா, நீ என் மேலே வச்சிருக்கிற பாசத்தை தியாகமா மாத்துறத்துக்கு முன்னாடி நான் உன் கிட்டேயிருந்து விலகிட தீர்மானிச்சிட்டேன் அண்ணா அதுக்காக என்னை மன்னிச்சுடு,  என் ஆபீஸீலே என்னை டெல்லிக்கு மாத்தியிருக்காங்க அண்ணா.. . இன்னும் ஒருவாரத்திலே வேலையிலே ஐாயின் பண்ணனும். அதுக்கு நான் இன்னைக்கு கிளம்பினாதான் சரியாயிருக்கும்.."

  "விநோதா என்கிட்டே நீ இதுவரைக்கும் சொல்லவேயில்லையே...? சற்று கோபத்துடன் கேட்டான் ரகுநாதன்.

  "அன்னைக்கு உங்கிட்டே அதை சொல்லனுந்தான் நினைச்சிட்டிருந்தேன்  ஆனா நீ வேற ''விஷயத்துக்கு'' போயிட்டதாலே சொல்ல வாய்ப்பு இல்லாமே போயிடுத்து... நானும் அதை மனசுலே வச்சுகிட்டுத்தான்  இன்னும் ஒரு வாரத்திலே  என் முடிவை சொல்றதா  சொன்னேன் அண்ணா,  நான் இந்தாத்திலே இருந்து போயிடறதுனாலே, நீ கற்பனை பண்ணின  அந்த ''விஷயத்துக்கு'' ஒரு காரணமும் போயிடுத்துன்னு வச்சிக்கோ.... இனிமே நீ அந்த ''விஷயத்தை'' கனவிலே கூட நினைக்க மாட்டேன்னு எனக்கு பிராமிஸ் பண்ணி கெடுக்கும்... அதுதான் எனக்கு நீ பண்ற உதவியாகவும் இருக்கும்... நம்ப அம்மாவின் ஆத்மாவும் நல்லபடியா சாந்தி அடையும்..." நிதானமாக  கூறி நிறுத்தினாள் விநோதா.

  '' விநோதா...''  வார்த்தைகள் வராமல் நின்றான் ரகுநாதன்.

     புரியாத புதிர் ஒன்றை கண்டு விட்டவள் போல் இருவரையும் மாறி, மாறி வெறித்து கொண்டு நின்றாள் மைதிலி.

       "மன்னி , ஒரு தாய்க்கும் மேலா என்னை இது வரைக்கும் கவனிச்சிண்டே,... அதுக்கு நான் உனக்கு ரொம்ப கடமைபட்டிருக்கேன். நான் டெல்லியிலிருந்தாலும் சரி, வேறே எங்கேயிருந்தாலும் சரி,  உன்னை மறக்கவே மாட்டேன் மறக்கவும் முடியாது. அண்ணா,  ஒரு அசட்டு காரியம் பண்ண இருந்தான் அதுக்கு மூலகாரணம் நான்தான்.... நல்லவேளை.. !
நான் அதிலிருந்து தப்பிச்சிட்டேன். ஆனா நான் அதுக்காகத்தான் பயந்துண்டு ஓடறதா நினைச்சிக்காதே. ! அண்ணா நினைச்ச காரியம் தெய்வத்துக்கு கூட பொறுக்கலே, அதான் " சந்தர்பங்கிற" பெயரிலே வந்து மூலக் காரணமாயிருந்த என்னை தள்ளிண்டு போறது..... அதுக்காக நான் அந்த தெய்வத்துக்கு நன்றி சொலறேன்.   அங்கேயிருக்கிற என்மேலே நீ சந்தேகப்படாதே!. நான் என் அண்ணாவுக்கு தங்கை. .. அவன் மேலே உனக்கு நம்பிக்கையிருந்தா என்னையும் நம்பு. அவ்வளவுதான் சொல்வேன்..  நீ எத்தனையோ தடவை என்னை என்னென்வோ சொல்லியிருந்தாலும், எனக்கு உன் மேலேயிருக்கிற அன்பும் மதிப்பும் குறையவே குறையாது. நான் போயிட்டு வர்றேன்  அங்கே போன பிறகு நான் தங்கியிருக்கும் விலாசம் தெரியபடுத்துறேன் அடிக்கடி கடிதம் எழுது, உன் உடம்பை பாத்துக்கோ..." என்ற விநோதா மீண்டும் ஒருமுறை அவள் காலில் விழுந்து  நமஸ்கரித்தாள்..

         "அண்ணா,  நான் உன்னோடேயே எப்பவும் இருக்கனும்னு ஆசைபட்டேன். நான் உன்னை விட்டு போறதுக்கு நீதான் காரணம்.  ஆமாம், அண்ணா  நீ மட்டும் அன்னைக்கு அந்த ''விஷயத்தை'' ஆரம்பிக்கலேன்னா, என்னை எங்காபீஸிலே டெல்லிக்கு மாத்தியிருக்கிறதை  உன்கிட்டே சொல்லிட்டு, மறு நாளே என்அண்ணாவை விட்டு என்னாலே பிரிந்திருக்கமுடியாது, அதனாலே, இந்த வேலையை விடறேன்னு சொல்லிடவான்னு உங்கிட்டே கேக்கலாம்னு நினைச்சேன். ஆனா உன்கிட்டே பேசின பிறகு.....என் எண்ணத்தை மாத்திண்டேன்."

   "விநோதா, என்னை மன்னிச்சிடும்மா தயவு செய்து உன் பிரயாணத்தை நிறுத்து. நான் இனிமே எந்த வித பிரச்சனையும் உனக்கு கொடுக்க  மாட்டேன்மா, பிராமிஸா.. , என்னுடைய அந்த எண்ணத்தை குழி தோண்டி புதைச்சிடுறேன். என்னை நம்பும்மா, நீ என்னை விட்டுட்டு  எங்கேயும் போயிடாதே,..." குரல் உடைய உருக்கமாக கூறினான் ரகுநாதன்.

  "நோ அண்ணா.. அது இனிமே முடியாத காரியம்  நான் வேலையை ஒத்துண்டாச்சு, இரண்டாவது நான் இங்கேயிருந்தா உன் மனசுலே அந்த மாதிரி எண்ணங்கள் தலைதூக்கிண்டேதான் இருக்கும்  இந்த தனிப்பறவைக்காக, நீ ஒருகூட்டிலிருந்து பிரிஞ்சு வர முயற்சிக்காதே  அண்ணா, இது ஒரு சிறகொடிஞ்ச  கட்டுபாட்டுக்குள்ளே அடங்கிய, ஓருசுதந்திர பறவை. ஆனா நீ.......... நீ.......... அப்படியில்லை..." மேற்கொண்டு  பேசமுடியாமல் தடுமாறிய விநோதா,  சற்று நிறுத்தி  சுதாரித்துக் கொணடு ரகுநாதனின் அருகில் சென்று அவன் கைகளை  பற்றியபடி  "அண்ணா, எனக்கு ரயிலுக்கு நேரமாயிடுத்து. நான் போயிட்டு வர்றேன். நான்அடுத்த தடவை சந்திக்கும்போது உன் மனசுலே உதயமான  அந்த விஷ மரம் வேரோடு சாய்ஞ்சு நீ பழைய அண்ணாவா, அந்த ராமர் மாதிரி... பழைய ரகுநாதனா, காட்சி தரணும்.." என்ற விநோதா பெட்டியை கையில் எடுத்துக் கொண்டு பறப்பட்டாள்.

      ''விநோதா..''  அவளை பிரிய மனமில்லாமல் தவித்தான் ரகுநாதன்.

  "அண்ணா, மன்னி... ரவி எழுந்தா என்னை தேடுவான். அதான் அவன் தூங்கறச்சேயே கிளம்புறேன். அவனை பத்திரமா பாத்துக்கோங்க. 'கூடிய சீக்கிரம் அத்தை வந்துடுவாள்னு சொல்லுங்கோ'" என்று ரவியின் பிரிவை நினைத்து சற்று கண் கலங்கியவள்... கண்களை துடைத்தபடி அண்ணா, மன்னி, "நான் இதுவரை ஏதாவது தப்பா நடந்திண்டிருந்தாலும், உங்கள் மனம் புண்படும்படி தப்பா பேசியிருந்தாலும் ரவிக்கு மூத்த குழந்தையா  நினைச்சி என்னை மன்னிச்சிடுங்கோ, நான் போயிட்டு வர்றேன்.."

விநோதா கண்களிலிருந்து மறைந்து விட்டாள்.

      பாதி புரிந்தும், பாதி புரியாத பாவத்திலும், பேச சக்தியற்று மலைத்துப் போய் நின்றிருந்தாள் மைதிலி.

   "அம்மா, உன்னோட  சொல்லை நான் காப்பாத்தலேம்மா, நான் உனக்கு கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றலேம்மா, நீ எனக்கு கொடுத்த, என்னை பத்திரமா பாத்துக்கச்சொல்லி கொடுத்த.. இரண்டு கண்களிலே ஒண்ணை தானமா கொடுத்துட்டேன் இன்னொன்னு தானவே போயிடுச்சுமா, ஆகக்கூடி  நான் இப்போ இரண்டு கண்களையும இழந்த குருடனாய் தவிக்கிறேனம்மா.." தனக்குள் முணுமுணுத்தபடி  கண்களில் நீர் வடிய நாற்காலியில் சாய்ந்தான் ரகுநாதன். 

Sunday, September 2, 2018

ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த நாள்.

இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா.

கணங்களுக்கு முதன்மையானவனே...
விக்கினங்களை களைபவனே...
விநாயகப் பெருமானே.. எனை என்றும்
காக்கும் கணேசா..! நல்லெழுத்துக்களை அறியவும், பதியவும் உன் துணை
வேண்டினேன். தப்பாமல் தந்தருள்வாய்
வேலனுக்கு சோதரனே....


ஓம் கார வடிவே கணேசா.!
எங்கள் உள்ளத்தில் ஓம் என ஓதினோம் நேசா.!
யேசுதாஸின் இனிமையான குரலில் என் இஷ்ட தெய்வத்தின் மீது எனக்குப் பிடித்த இனிமையான பாடலொன்றை கேட்கலாமா?


பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம் பரவசமிகவாகுதே கண்ணா...


அந்த பரவசங்களுக்கு நடுவே உன்  கோகுலத்தில், உன்னருகில் விளையாடும் ஒரு சிறிய பிறப்பாக நானும் பிறந்திருக்க கூடாதாவென என் பாழும் மனம் நினைக்கிறது கிருஷ்ணா..  அப்போதேனும் உன்னை தொட்டு தொடர்ந்து பால்யகால விளையாட்டில் பங்கேற்று சந்தோஷமடைந்திருப்பேனே தாமோதரா...


பிஞ்சு விரல்களால், நீ வெண்ணை உண்பதே அழகு. உன் அழகுக்கு அழகு செய்யும் ஆபரணங்கள்  இடையே ஒரு சிறு கல்லாக நான் இருக்க கூடாதாவென என் மனம் ஏங்குகிறது கண்ணா? .அப்போதேனும் உன் அழகை அருகிலிருந்து கண்டு களித்திருப்பேனே  கேசவா...


ஒரு விரலால்  வெண்ணை உண்ணும்  போது ,பிற விரல்களில் வடியும் வெண்ணையுடன் உன் அழகை காணும் போது, உருகும் வெண்ணையின் நிலையில் என் மனமும் தவிக்கிறது  அந்த வெண்ணெய் ஒரு துளியில் எங்கேனும் ஒரிடத்தில் நானும் சங்கமித்து இருக்க கூடாதா நாராயணா ...

தானே வந்து தவழ்ந்த நிலையில், நிரம்பி வழியும் பாலமுதை கை நிறைய சிந்திச் சிதறி எடுத்துண்ணும் கோலம் காண தேவாதி தேவர்களும் வந்து பார்க்கும் காட்சியை கண்டு உண்ண மறந்து கை ஊன்றிய நிலையில் திரும்பி நோக்கி அதிசயக்கிறாயோ? அந்த பாலமுதம் கடையும் மத்தாக நான் இருந்திருக்க கூடாதா கிருஷ்ணா ? அந்த சமயத்தில் கடையும் பொழுதில் கடைக் கண்ணால் உன் அழகை தரிசித்திருப்பேனே த்ரிவிக்கரமா.... 


சின்னஞ்சிறு விரல்களால் நீ உண்டது போறாது என அன்பின் மிகுதியில், உன் தாய்  ஊட்டி விடுவதை ஆனந்தமாக உண்ணும் கிருஷ்ணா... அதற்கு உன் தாயாகிய யசோதைக்கு கள்ளம் கபடமற்ற உன் உள்ளத்தையே பரிசாக்கி கொடுக்க  நினைக்கிறாயோ? அந்த  பொழுதில் உன் தாய்  விரலில் அணிந்திருக்கும் கணையாளியின் ஒரு உலோகமாக நான் பிறந்திருந்திருக்க கூடாதா யசோதை கிருஷ்ணா? அப்போது உன்னை ஸ்பரிசித்து மன மகிழ்ந்திருப்பேனே நரசிம்மா....


என்ன தவம் செய்தாய் யசோதா....பரம் பொருளை உன் மகனாக அடைவதற்கு.. உன் மடியமர்ந்து உண்ட களைப்போ உன் மகனுக்கு.. அதனால்தான் உன் அணைப்பில் ஆசுவாசபடுத்திக் கொள்கிறனோ ? உன் தழுவலில் அவனும், நீயும் மெய்மறந்த அழகை, நீ அமர்ந்திருக்கும் மர சிம்மாசனத்தில் ஒரு பலகையாக இருந்திருந்தாலும், உங்கள் அன்புள்ளங்களை தரிசித்திருப்பேனே பத்மநாபா.....


அன்பு தாயின் கைகளால் வெண்ணையை உண்டு மகிழ்ந்த நீ பதிலாக அவ்வெண்ணை ஈந்த பசுவினத்தை மகிழ்விக்க  உன் இதழ்கள்  தந்த இசையமுதை அவை செவி குளிர மனம் நிறைய பருகச் சொல்லி அளிக்கின்றனையோ? அதன் மேல் சாய்ந்து நீ கானம் இசைத்த போது உனை சுற்றி மலர்ந்திருக்கும் மலரிடையே ஒரு மலராக நானும் மலர்ந்திருக்க கூடாதோ மணிவண்ணா? அப்போதாவது உன் மலர் முகம் கண்டு மகிழ்ந்திருப்பேனே புருஷோத்தமா....


உன் அருகாமையில் "ஆ" வினங்களை கட்டுண்டு நிற்க வைத்த மாதவா... அவைகள் முந்தைய பிறவியில் செய்த மாபெரும் புண்ணியந்தான் உன்னை அங்கு கொண்டு சேர்த்ததுவோ மதுசூதனா... அந்த "ஆ"வினங்களின் கொம்புகளில் கட்டிய சிறு மணியாகவாவது என்னை நீ உருவாக் கியிருக்க கூடாதா? அப்போதாவது உன்னை கண்டு அகமகிழ்ந்திருப்பேனே கோவிந்தா.......


உனது கான மழைதான் ராதையின் சுவாசம். அதனால்தான் அவள் உன்னுடனே பிரிக்க முடியாதபடி ராதா கிருஷ்ணனாக வாசமாகி சங்கமித்து விட்டாள். வண்ணமய ஆடைகள் அணிந்து அவளுடன் பாடிக் களித்திருந்த போது, அந்த பட்டாடையின் ஒரு நூலாகவேனும் நான் பிறப்பெய்திருக்க கூடாதா ராதே கிருஷ்ணா? அந்த சமயத்தில்  உங்களிருவரையும் கண்டு ஆனந்தித்து பரவசமாகியிருப்பேனே வாமனா.....


உன்னையே நினைக்கும் அனைத்து உள்ளங்களிலும் நீ ஒருவனே குடியிருப்பாய்.  உன் புல்லாங்குழல் இசையில் மயங்கியதால் தன்னிலை மறந்த நிலையில் கோபிகா ஸ்திரிகளின்  மெய் மறந்த கோலம்... உன் அருகிலிருக்கும் மரத்தின் ஒரு இலையாகவேனும் நான் பிறவி எடுத்திருக்கலாகாதா அநிருத்தா?அப்போதாவது உன்னை தரிசித்திருப்பேனே உபேந்திரா.....


பொன்னும், பொருளும் எனக்கு இணையாகுமோ? அன்புக்கு மட்டுமே என்றும் நான் ஐக்கியமானவன். ஒரு சின்னஞ்சிறு துளசி இதழுக்கு முன் அந்த பொருள்கள் எல்லாம் வீண். ஆடம்பரம் நிலைக்காதது என அந்த நிமிடம் உணர்த்திய அச்சுதா... அந்த துளசியின் அடி மண்ணில் ஒருசிறு துகள்களாக நான் ஜனித்திருக்க கூடாதா?  அந்த சமயத்திலாவது  உன்னை கண்டுகந்திருப்பேனே  ஜனார்த்தனா..


நீதான் பரம் பொருள். உன்னை புரிந்தவர்களுக்கு மட்டும்.... உன்னையே உளமாற சரனென அண்டியவர்களை நீ என்றும் உன் கைகளில் தரித்திருக்கும் சங்கு சக்கரம் போல் கை விட்டதில்லை. உன் மணிமுடியில்  ஆடும் முத்துச்சரத்தின் ஒரு முத்தாக நான் அலங்கரிக்கப்பட்டு இருக்க கூடாதா பரந்தாமா? அந்த நிலையில் உனைக் கண்டு அகமகிழ்ந்திருப்பேனே சங்கர்ஷணா....


ஒரு மனிதனாக செய்ய வேண்டிய செயல்களில், பலன்களை எதிர்பாராது கடமையை மட்டும் செய்து முடிக்க உன் பார்த்திபனுக்கு  அன்பாக கட்டளையிட்ட பரந்தாமா ! அன்றேனும் ரத  கஜ, துரக பாதாதிகளில், ஓருயிராக படைத்திருக்க கூடாதா? இத்தனை சமயங்களிலும்  எந்த விதத்திலும் உன்னை தரிசிக்க இயலாமல் செய்து விட்ட என் ஊழ் வினையகற்றி  என்னை உன் பார்த்திபன் நிலையில் நீ பிறந்த பொன்னாளான இன்றேனும் இப்போதாவது  அனுகிரஹித்து விடு தீன தயாளா.!


      கோவிந்தா   🎆   கோபாலா
      ஹரே ஸ்ரீ கிருஷ்ணாய நமஃ

சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் மனமுவந்த கிருஷ்ண ஜயந்தி நல் வாழ்த்துகள்.