Pages

Sunday, August 19, 2018

மை (MY) மா

இதை பதிவில் போட வேண்டுமென்று எழுதி நாட்களாகி விட்டன. அதன் பின் ஏதேதோ இடுக்கைகள் தற்செயலாய் அமைந்து விட்டன. ஆனால் எந்த ஒரு செய்கைக்கும் ஒரு காரணம் வந்து, பிடிமானமாக நின்று தள்ளி விடும். இல்லை தள்ளிக்கொணடு போகும். இது இயற்கையின் நியதி. அதுபோல்,  சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் பதிவில் அடுத்தடுத்து, ஜீரா மைசூர்பாகு, மொறு மொறு மைசூர்பாகு என இரு பதிவுகள் வெளி வந்த காரணம், என் இந்த பதிவையும் பிடிவாதமாக தள்ளி வெளி கொணர்ந்தது.  நன்றி சகோதரி தங்களுடைய மைசூர் பதிவுகளுக்கு.. 
என் பேத்தியின்( மகளின் மகள்) மூன்றாவது பிறந்த நாளுக்கு ஒரு இனிப்பு செய்யலாமென்று இருந்தேன். வழக்கப்படி அதுவா, இதுவா என்று ஆயிரம் இனிப்பு பட்டியல்..  ஆயிரமா? அவ்வளவு செய்வீர்களா...என்று நீங்கள் அதிசயப்பது புரிகிறது... (அதில் ஒன்று கூட உருப்படியாக வரும் என்பதற்கு அப்போதைக்கு என்னிடம் எந்த ஒரு அத்தாட்சியும் இல்லை என்பது வேறு விஷயம்....) அப்புறம் கேக் வேறு இருக்கே, வேறு இனிப்பு எதற்கு? பேசாமல் பாயா (கூடவே "சம்" சேர்த்து கொள்ள வேண்டும்.)  வைத்து விடு என்ற ஆலோசனைகள் வேறு நடுநடுவில்..  நீலகிரி எக்ஸ்பிரஸ் படத்தில் நடிகர் "சோ" வின் காமெடியை பார்த்த பின் (டி. வியில் அந்தப் படம் நான்கைந்து முறை பார்த்தாகி விட்டது.)  நாங்கள் அப்படித்தான் அதை விளிப்பது வழக்கம். சரி.. என நானும் மனதுக்குள் "மை"யை (எழுதும் "மை" "இங்க்" அல்ல... மைசூரின்  நிஜமான "மைசூர்பாகை" ) நினைத்துக் கொண்டு மெளனமாயிருந்து விட்டேன்.  இதை சிம்பிளாக செய்கிறேன் என்றால், இது எதற்கு அம்மா? இதை விட லட்டு, பாதுஷா என்று "ஆயிரத்தில் ஒன்றாக" மறு சுழற்சி மறுபடியும் ஆரம்பித்து விடும்.

சிறிது  நேரத்தில் அவரவர் பணிகளில் அவரவர் மும்முரமாக , என் பணி துவங்கியது. வேறென்ன? "மை" சூரை சீரமைக்கும் பணிதான்...

ஒரு கிளாசில் கோபுரமாக கடலைமாவு சலித்து எடுத்துக்கொள்ளவும். அதை அளவில் 2, அல்லது  இரண்டரைஅளவு சர்க்கரையும் எடுத்துக்கொள்ளவும். மாவை வெறும் கடாயில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு, லேசான பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.


அதே அளவு கிளாஸ் நிறைய நெய்யை உருக வைத்து தயாராக வைத்துக் கொள்ளவும்


ஒரு பெரிய அகலமான தட்டில் உருக வைத்த நெய் கொண்டு அதன் விளிம்புகளிலும் நெய் படுமாறு நன்றாக தடவி வைத்துக் கொள்ளவும். அப்போதுதான் சூடான "மை" துண்டுகள் சிரமமின்றி ஒரே மாதிரி உருப்பெறும். 


கடலை மாவை வறுத்த பின் நெய் உருக வைத்து எடுத்து கொண்ட அதை கடாயில் தயாராக எடுத்து வைத்திருக்கும் இரண்டரை அளவு சர்க்கரையை அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.


சர்க்கரை பாகு பதமெல்லாம் அவசியமில்லை.  நன்கு கரைந்து, போட்ட சர்க்கரை (ஜீனி) உருகி வந்த நிலையில், வறுத்து வைத்திருக்கும் கடலைமாவு சிறிது சிறிதாக சேர்த்து கட்டி தட்டாதபடிக்கு, கை விடாமல் கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். நல்ல கெட்டியாகும் வரை உருக வைத்திருக்கும் நெய்யையும், அடிக்கடி விட்டு கிளற வேண்டும். ஒன்று சேர்ந்து பூவாக சற்று நுரைத்து வரும் தருணத்தில், நெய் தடவி வைத்திருக்கும் தட்டில் கொட்டி, நன்றாக ஒரே மாதிரி சற்று அழுத்தி நிரப்பி விடவும்.


வறுத்த பின்பும் மறுபடியும் சலித்து வைத்திருக்கும் கடலை மாவையும் சேர்த்து, கை விடாது கிளறும் போது அந்தப் படம் எடுக்க முடியவில்லை. (எங்கே..? கிளறுகிற பதந்தான் கைகளை விடாது பிடித்திருக்கிறதே ... . இரண்டாவதாக உதவிக் கரங்களை நாடலாமென்றால், அவரவர்கள் அவர்கள் பணியில் மும்மரமாக நான் கிச்சனில் "மை" யை கிளறியது கூட அறியாமல் ஈடுபட்டிருந்தார்களே...  அதனால் "போனஸாக" அதே படம் மறுபடியும் இடம் பெற்று மகிழ்கிறது.


ஒரு பத்து நிமிடம் தட்டில் கொட்டியவை ஆசுவாசப்படுத்திக் கொண்டதும், நமக்குப் பிடித்த கோணத்தில், சிறு சிறு துண்டுகளாக ஒரே மாதிரி வெட்டிக் கொள்ளவும். சதுரமாகவோ, முக்கோணமாகவோ, நீளவாக்கிலோ, எப்படியோ வட்டத்திலிருந்து வேறுபட்ட வடிவமாக பிரித்து அவரவர் விருப்பபடி அதை மாற்றிக் கொள்ளவும்.



மேலும் ஒரு ஐந்து நிமிடத்தில் அந்த தட்டுடன் எடுத்து வேறு ஒரு தட்டில் கவிழ்த்தால், "மை" துண்டுகள் பொல பொலவென அழகாக நாம் விரும்பி வெட்டிய உருவத்தில் உதிர்ந்து விடும். அதற்குதான் அந்த தட்டில் ஆரம்பத்தில் சிறிது தாராளமாகவே நெய்யை தடவச் சொன்னேன்.

நான் அந்த கிளறிய கடாயிலேயே கவிழ்த்து ஆரம்பித்த முதல் இடத்திலேயே "மை"யை சரணாகதி ஆகும்படி பணித்து விட்டேன். அதுவும் இன்றைய தினம் நான் சொன்ன பேச்சுக்கு மறுபேச்சின்றி கட்டுப்பட்டது. (புகைப்படங்களுக்கு போஸ் தரும் ஆவலினால் வேறு,  அதன் வால்தனத்தை எல்லாம் சுருட்டிக் கொண்டு அமைதியாக என்னுடன் ஒத்துழைத்தது.) அதற்கு ஒரு நன்றி.. தேங்கஸ் "மை" ம்மா...(நான் அதற்கு வைத்திருக்கும் செல்லப் பெயர்.)


அப்புறமென்ன... அழகாக தட்டில் வரிசைப் படுத்திய "மை" கள் பேத்தியின் பிறந்த நாளுக்கு "நாங்க ரெடி..... நீங்க........ யா? என்றது.


இதெல்லாமே, இத்தனை நேரம்  "மை"க்காகவும்," My" காகவும், பொறுமையுடன் உடனிருந்து பார்த்து கேட்டு ரசித்த உங்களுக்காகத்தான்... யோசிக்கவே வேண்டாம்.. எடுத்துக் கொள்ளுங்கள்... சுவையில் எப்படி இருக்கிறது? பதிலாகவே சொல்கிறேன் என்கிறீர்களா?  மிக மிக எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளேன்  நான் மட்டுமல்ல... "மை" ம்மாவுந்தான்.

                                     🎆🙏🎆
                                     நன்றி ..
===================🌼===================
நன்றி படம் மட்டும்=======கூகுளுக்கு நன்றி................

                                     

36 comments:

  1. நல்லா இருக்கு மைசூர்ப்பாகு. சிவந்த நிறம் வரணும்னா நெய்யை நன்கு பொங்கப் பொங்கக் காய்ச்சி மைசூர்ப்பாகு கிளறும்போது விட வேண்டும். வாசனை தூக்கும். கிளறும்போதே வாசனை காட்டிக் கொடுத்து விடும். :) நல்ல பெரிய துண்டங்களாக இருக்கு. எனக்கு மட்டும் போதும்! :))))

    ReplyDelete
    Replies
    1. //எனக்கு மட்டும் போதும்! :))))//

      அம்புட்டுமா? கீதாக்கா... இது அடுக்குமா? நியாயமா?

      ஹா... ஹா... ஹா... 'ஒன்று' விட்டுப்போய் விட்டது என்று நினைக்கிறேன்!

      Delete
    2. வணக்கம் சகோதரி

      தங்கள் முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உண்மை. ஆறிய நெய்யை விட சூடான நெய் சேர்த்தால் மிருதுவாக வருகிறது. நானும் பல விதங்களில் செய்தாகி விட்டது. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாதிரி.. நானும் விடாமல் செய்து கொண்டேயிருப்பேன். (ஏன்னா இது மிகவும் ஈசியான ஒன்றாயிற்றே...) இன்னுமும் கொஞ்சம் தாராளமாகவே எடுத்துக் கொள்ளுங்கள். இதிலென்ன இருக்கிறது.. தாராளமாக எடுத்து கொண்டதற்கு மிகுந்த நன்றிகள். உடனே வந்து உங்கள் அனைவருக்கும் பதிலளிக்க இயலவில்லை. அதற்காக வருந்துகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. /அம்புட்டுமா? கீதாக்கா... இது அடுக்குமா? நியாயமா?

      ஹா... ஹா... ஹா... 'ஒன்று' விட்டுப்போய் விட்டது என்று நினைக்கிறேன்!/

      பாவம்! அவர்கள் எடுத்துகிட்டுமே... அதுதான் வரும் அனைவருக்குமென இரு தட்டுகளில் வைத்துள்ளேன்.
      தாங்களும் தங்களுக்கு வேண்டியதை எடுத்து உண்ணலாம் சகோ...

      Delete
    4. நான் எடுத்துண்டப்புறம் மிச்சம் ஏது? தூள் தான் ஶ்ரீராமுக்கு! முதல்லேயே வந்து எல்லாத்தையும் எடுத்துண்டாச்சு. :)

      Delete
    5. வணக்கம் சகோதரி

      தூள்தான் அவருக்கு என கூலாக சொல்லி விட்டீர்கள். அந்த தூள்களை நாங்கள் டேஸ்ட் பண்ணிய பிறகுதானே துண்டுகளாக கட் பண்ணியதையெல்லாம் தட்டில் அடுக்கி வைத்தேன். ஹா ஹா ஹா
      சரி! மறுபடியும் ஒரு தடவை வேறு மாதிரி செய்து முழுவதையும் எ. பி க்கே அனுப்பி விடலாம்..

      Delete
    6. பாருங்க கமலாக்கா கீதாக்கா எல்லாத்தையும் எடுத்துட்டு ஸ்ரீராமுக்கே தூள்தான் என்றால் நான் இப்பத்தான் வந்துருக்கென் ஹூம்....இதுதான் பந்திக்கு முந்திக்கணும்றது...சரி சரி அந்த ரெண்டாவது தட்டு எனக்குத்தானே....(யாரோ அங்க குரல் கொடுக்கறாங்க நீயே ஸ்வீட்டு உனக்கு இத்தனையுமானு....ஹான் கீதாக்காவும் ஸ்வூட்டுத்தான் அவங்க எல்லாமே எனக்குனு சொல்லும் போது நான் மட்டும் ஏன் சொல்லக் கூடாதுன்றேன் இஃகும் இஃகும்...ஹிஹிஹிஹி).

      கீதா

      Delete
    7. எனக்கு இப்போ ச்வீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே இல்லையாக்கும்! அதனால் கொஞ்சம் கொஞ்சம் ச்வீட்டு சாப்பிடணும்! :)

      Delete
    8. கமலாக்கா செமையா இருக்கு....ரொம்பவே ஸாஃப்டா இருக்கு!! அழகா பீஸ் போட்டு சூப்பரா இருக்கு.... நானும் கடினமாகவும் அந்தக்காலத்து ஸ்டைலில் செய்வதுண்டு...இப்போதையது போல் ஸாஃப்டாகவும் செய்வதுண்டு. எங்கள் வீட்டில் ஸாஃப்டுதான் டிமான்ட்...

      ஆமா கீதாக்கா நானும் நெய்யை பொங்க பொங்கக் காய்ச்சி மைசூர் பாகு கிளறிக் கொண்டிருக்கும் போது அது குடிக்கக் குடிக்க விட்டுக் கொண்டே இருப்பேன்....நல்ல சிவப்பா வாசனையா புஸ் புஸுனு வரும்...

      கீதா

      Delete
    9. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      நான் இப்போதுதான் இந்த கருத்துருரையை பார்த்தேன். தாமதமாக பதிலிடுவதற்கு மன்னிக்கவும்.

      காய்ச்சி நெய் சூடாக சேர்த்தால், அதுவும் இந்த மையை முறுகாமல் எடுத்து விட்டால், கொஞ்சம் இளகிய பதமாகவும் சற்று கூட கிண்டி எடுக்கும் போது மொறுமொறுவென்ற பதத்திற்கும் வரும். ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாதிரி வரும். இந்த தடவை கொஞ்சம் நன்றாக வந்துள்ளது. என் தளத்திற்கு வந்து கருத்துகள் தந்து பாராட்டியமைக்கு என்மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. 'மை' நான் ஒன்று எடுத்துக் கொண்டேன். ஒன்றுதான் எடுத்துக் கொண்டேன் என்று சொன்னால் நீங்கள் நம்பணும்.. நானென்ன மூன்று எடுத்துக் கொண்டு ஒன்று என்று பொய்யா சொல்கிறேன்!!!!!

    படங்கள் அழகாய் வந்திருக்கிறது. படங்கள் ஏன் அழகாய் வந்திருக்கிறது? ஏனென்றால் 'மை' யும் அழகாய் வந்திருக்கிறது... அதனால்தான்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /ஒன்றுதான் எடுத்துக் கொண்டேன்/

      ஏன் அப்படி!. தாராளமாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே!

      மை அழகாய் வந்திருப்பதால்தான், படங்களுமா ? சரி.. சரி அதுவாவது ஒன்றுக்கொன்று சப்போர்ட்டாக இருந்து விட்டு போகட்டும். பாராட்டுதலுக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. உங்கள் பேத்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொல்லி விடுங்கள் - எங்கள் சார்பில்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      என் பேத்திக்கு ஜூன் 19 பிறந்த நாள் முடிந்து விட்டது. நான்தான் அப்போது செய்த இனிப்பை பதிவாக இப்போது வெளியிடுகிறேன். தாங்கள் என் பேத்திக்கு சொன்ன பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. அடுப்பை அணைச்சுட்டு அந்தச் சூட்டில் கிளறினால் தான் எனக்கு இப்படி மிருதுவா வருகிறது. என் மாமியார், அம்மா எல்லோரும் அப்படித் தான் சொல்வாங்க. இது நல்லா மிருதுவா வந்திருக்கு! நீங்க எந்த ஊரில் இருக்கீங்க? சென்னை?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் பாணியும் சிறப்புத்தான். நம் பெரியவர்கள் சுவையுடன் சமையல் மற்றும் பட்ஷணங்கள் செய்வதில் நிறைய அனுபவ சாலிகள். அவர்கள் கூற்றும் எப்போதும் சரியாகவே இருக்கும். என் அம்மா செய்யும் மைசூர்பா எப்போதுமே வாயில் போட்டால் கரையும். இதை அவர்களிடமிருந்துதான் நான் கற்றுக் கொண்டேன். வருடந்தோறும் தீபாவளிக்கு இது கண்டிப்பாக உண்டு. பாராட்டிற்கு மிக்க நன்றி.

      நான் தற்சமயம் பெங்களூரில்தான் உள்ளேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. உங்கள் பேத்திக்குப் பிறந்த நாள்வாழ்த்துகள், ஆசிகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      என் பேத்தியின் பிறந்த நாளுக்கு தாங்கள் அளித்த நல்வாழ்த்துகளுக்கும், ஆசிகளுக்கும் என மனமார்ந்த நன்றிகள்
      தங்கள் ஆசிகள் அவளின் நல் வாழ்வுக்கு என்றும் துணையாகட்டும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. பேத்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் என் பேத்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தந்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. படங்கள் அருமையாக வந்து இருக்கிறது. தேவகோட்டை பாகு'ம் இப்படித்தான் வரும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      படங்கள் அருமையென்ற பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

      /தேவகோட்டை பாகு'ம் இப்படித்தான் வரும்./
      ஹா ஹா ஹா ஹா. அது இன்றிலிருந்து அதன் பெயரை மாற்றி விட்டால் போகிறது. எனக்கு"யாதும் ஊரே"தான். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. பேத்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

    சொன்னவிதம் மிகவும் இனிப்பு...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      என் பேத்திக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அளித்த தங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

      சொன்ன விதத்தை ரசித்துப் பாராட்டியமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. பேத்திக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்.மைசூர் பாக் மிகவும் நன்றாக இருக்கிறது.
    படங்கள் அழகு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      என் பேத்திக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அளித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      படங்கள் அழகு எனக்கூறி இனிப்பை ரசித்தமைக்கும், வாழ்த்தியமைக்கும் மிக்க மகிழ்ச்சி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. அம்மா அடுக்கடிச் செய்யும் இனிப்பு மைசூர்பாக்.

    ஒண்ணு மட்டுமே கிடைத்தது. :)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      தங்கள் அம்மா அடிக்கடி உங்கள் வீட்டில் செய்வார்களா? மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
      என் அம்மாவும் தீபாவளிதோறும், கண்டிப்பாக இந்த மைசூர்பாகு செய்வார்கள். அவர்களிடமிருந்துதான் நானும் கற்றுக் கொண்டேன்.

      தங்களுக்கு ஒன்றுதான் கிடைத்ததா? அடாடா! அடுத்த முறை செய்யும போது, முதலிலேயே தங்களுக்கு பார்சல் அனுப்பி விடுகிறேன். சரியா..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. பேத்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....மைசூர் பாக் எடுத்து சுவைத்து விட்டேன். கருத்து போடுவதற்குள் வாயிலிருந்து கரைந்து உள்ளே போய் விட்டது....இன்னொன்று எடுக்கலாம் என்றால் வரும் நம் சகோக்களுக்கு வேண்டுமே....என்று நீண்ட கையை இழுத்துக் கொண்டேன்.....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      ஏன் சகோதரி, ஏன் ஒன்று மட்டும் எடுத்துக் கொண்டீர்கள? நிறைய இருக்கிறதே.. தாராளமாக எடுத்துக் கொள்ளலாமே...இனிப்பு எடுத்துக் கொண்டு மனம் நிறைய என் பேத்திக்கு வாழ்த்துக்கள் சொன்ன தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. மை(சூர்பாக்) நல்ல மிருதுவாக வந்திருக்கிறது. நாக்கில் நீர் ஊற வைத்து விட்டீர்கள். பேத்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
    நான் மொற மொரமொரப்பாகவும் செய்வேன், மிருதுவாகவும் செய்வேன். பெரும்பாலோருக்கு மிருதுவாக இருப்பதுதான் பிடிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      அன்புடன் என் பேத்திக்கு வாழ்த்துக்கள் சொன்னமைக்கும், பாராட்டியமைக்கும் மிக்க நன்றி.

      ஆமாம்.. இரண்டுமே சுவைதான். கொஞ்சம் கூடுதலாக நெய் விட்டு, இன்னும் கொஞ்சம் நேரம் கிளறி எடுத்தால், மொறு மொறு "மை" வந்து விடும். தங்கள் அனுபவங்களை பகிர்ந்த மைக்கும் நன்றிகள். உண்மைதான் சகோதரி.. சிலருக்கு மிருதுவாக இருந்தால் மிகவும் பிடிக்கும். கூடவே ஒன்றிரண்டு எடுத்துக் கொள்வார்கள். மிக்க நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. Replies
    1. வணக்கம்

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      விபரமறிந்தேன். மகிழ்ச்சி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. இதுக்கு எப்படி நான் பின்னூட்டம் எழுதாமல் போனேன். படித்தேனே.

    ரொம்ப அருமையா வந்திருக்கு. நான் பொதுவா டைமண்ட் ஷேப் விரும்புவேன். நல்லா எழுதியிருக்கீங்க. அடிக்கடி உணவு சம்பந்தமான செய்முறைகளை, அதிலும் உங்கள் வீட்டுப் பழக்கத்தை எழுதுங்க.

    இருந்தாலும் கடை மைசூர்பாக் போல் பொர பொரவென வரவில்லை என்பதையும் சொல்லிக்கறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இன்று ஏதோ பழையனவற்றை பார்த்த போது தங்கள் கருத்துக்களை கண்டேன். நானும் அப்போது ள்ள மனக்கவலைகளில் இதற்கு பதில் எழுதாமல் போய் விட்டது போலும். தயவு செய்து மன்னிக்கவும். தங்கள் அருமையான கருத்துகளுக்கு மிக மிக நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete