Pages

Tuesday, December 9, 2014

பேசா உறவுகள்...


யாருடனும் பேசாது, தம்மைச்சுற்றி நடப்பது ஒன்றும் புரியாது சித்தம் போக்கு சிவம் போக்கு என்றிருக்கும் மனிதரை நாம் நடக்கறது ஒன்னும் தெரியாமே வெறும் ஜடமா மாதிரி இருக்கான் பாரு”, என்று நாக்௬சாது கேலியாகக்௬றி விடுவோம். அதனால்தான் மெளனமாக நம்முடன் புழங்கி நமக்காக பயன்பட்டு வரும், தினசரி நாம் உபயோகிக்கும் ( மிக்ஸி, கிரைண்டர், கேஸ்அடுப்பு, ஃப்ரிஜ், வாஷிங் மிஷின், குக்கர், அயர்ன் பாக்ஸ், டி.வி, கணிணி, பாத்திரங்கள், ஏன், நம்மை எல்லா இடங்களுக்கும் சுமந்து செல்லும் பலதரப்பட்ட வாகனங்கள்  ) அனைத்துப் பொருள்களையும், ஜடப்பொருளாக நினைத்து, அலட்சிய படுத்துகிறோம். அதனிடம் அன்பாக நடந்து கொண்டால் அதுவும் நமக்காக உயிரைக் கொடுத்து உழைக்கும். (“அதற்கு ஏது உயிர்?” என்று சிரிப்பவர்கள் சிரித்து விட்டு போகட்டும். நமக்கு உயிர், உணர்வு போன்றவை, இருப்பதால்தானே இயங்குகிறோம்? இல்லையெனில் நாமும் வெறும் ஜடங்கள்தான். அதைப்போல் அதததற்கு ஒருஉயிர் இருக்கிறது. உதாரணமாக மின்சார சாதனங்களுக்கு மின்சாரந்தான் உயிர். அப்படி அது உயிருடன் இருக்கும் போது, “ஜடப்பொருள்தானே இது”, என்று நம் கோபத்தை சிறிது தவறுதலாக அதனிடம் காட்டினாலும், நம் உயிரையும் எடுத்துக்கொண்டு நம்மையும் ஜடமாக்கி விடும்.) அதனால்தான் அதனிடம் அன்பை செலுத்தி அரவணைப்பாக நடந்து கொண்டால், அதுவும் நம்மிடம் மரியாதையாக நடந்து கொள்ளுவது திண்ணம்.

எங்களிடமெல்லாம் நீ வைத்திருக்கும் அன்பை விட நீ இந்த பொருட்களின் மேல் அன்பாக இருக்கிறாய்!” என்று நம்மிடம் நம் வீட்டில் இருப்பவர்கள், பொறாமையுடன் ௬றும் அளவுக்கு நாமும் இந்த பொருட்களிடம் அப்படித்தான் பிரியத்தை காட்டி அபிமானத்துடன், இருந்து வருகிறோம். அப்படியிருக்கும் பட்சத்தில், இப்படிஅது” ‘இதுஎன அதை சுட்டிக்காட்டி அஃறினையாக குறிப்பிடுவது மட்டும் நாகரீகமான செயலா? எனக்௬ட அனைவரும் கேலி செய்வார்கள். உண்மைதான்.! இந்த மாதிரி நாம் தெரியாமல் (அதற்கு காது கேட்காது என்ற தைரியத்தில்) பேசி விடுவதையும், அது எப்படியோ தன் மனதால் புரிந்து கொண்டு, “நம் வீட்டின் உறவுகள் நம் வீட்டு விஷேடங்களுக்கோ, அல்லது, விடுமுறையை நம்முடன் கழித்து விட்டு ஜாலியாக இருந்து விட்டு போகலாம் என்று வரும் சமயத்திலோ”, நாம் எவ்வளவுதான் அதனுடன் அன்பாயிருந்தாலும், நம்மை கழுத்தறுத்து பழிவாங்கி விடும். ஏன்? என்பது ஒரு புரியாத புதிராக இருக்கும்.

உறவுகளை திருப்திபடுத்த அவசரமாக நாம் பரபரக்கும் வேளையில், அதை கொஞ்சம் அதிகாரத்தனமான மனமுடன் பயன்படுத்தும் பொழுதில், கேஸ் அடுப்பு அப்போதுதான் மூச்சு அடைத்துக்கொண்ட நோயாளி போல் சன்னமாக எரியும்.! மிக்ஸி சரியாக அரைபடாமல் நம்முடன் மல்லுகட்டும்.! கிரைண்டரோ தனக்கு சுழலவே தெரியாதென அடம்பிடிக்கும்.! ஃப்ரிஜ் தன் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று உள்ளிருக்கும் வெளிச்சத்தை நிறுத்தி இருட்டடிப்பு செய்யும். குக்கர் விசில் அடிக்காமல் மெளனித்து மக்கர் செய்யும்.! வாஷிங் மிஷினோ, எனக்கு இதுவரை துணி துவைத்து பழக்கமேயில்லை! சத்தியத்துக்கு எந்த கோவிலுக்கு வர வேண்டும்? என வினா எழுப்பும்.! வந்தவர்கள்  கணிணியை உபயோகபடுத்த ஆசைப்பட, சரி! அவர்களுக்கு உதவலாமென்று, கணிணியின் கீபோர்டை தட்டினால் அது நம்மை பயித்தியமாக்கும்!. டி.வியும் தன் பங்குக்கு நான் ரிமோட்டின் சொல் பேச்செல்லாம்  கேட்க மாட்டேன்என்பது மாதிரி நம்மை வெறுப்படையச் செய்யும்.! வாகனங்கள் அப்போதுதான் காத்திருந்த மாதிரி பழுதடையும்.! இவை எல்லாவற்றையும் விட காப்பி பில்டர் ௬ட டிகாஷனை கீழே இறங்க விடாமல் சதி செய்யும்.! அந்த அளவுக்கு இவையெல்லாம், நாம் என்ன பாபம் செய்தோம்? என்று நம்மை புலம்ப வைத்து விடும்.!

வந்தவர்கள் இதனுடன் நாம் படும் பாட்டை பார்த்து விட்டு, (அவர்களுக்கும் இங்கு தங்கிய நாட்கள் போதும், போதும், என்றாகி விடுமல்லவா?) “இதையெல்லாம் இப்படி, இப்படியெல்லாம் நல்லா கவனிச்சு பாத்துக்கனும்!” என்று உபயோகபடுத்தும் விதத்தை கையில் புத்தகம் இல்லாமல் க்ளாஸ் நடத்திச் செல்வார்கள். ((நாமும் இப்படித்தானே, வேறு உறவினர் வீட்டிற்கு செல்லும் சமயம் உபதேசங்களை அள்ளி வழங்கி விட்டு வருவோம்.” என்று மனசாட்சி வேறு சமயம் பார்த்து கணைத் தொடுத்துச்செல்லும்.)  இல்லையென்றால், “இதெல்லாம் பழைய மாடல்! இப்போது புது மாடல் இந்த கம்பெனியே போட்டிருக்கு. இது எப்ப வாங்கியது?
  கி. முவா?...  கி . பியா?    நீ  இந்த மாதிரி பழசையெல்லாம் நீண்ட நாட்கள் வைத்துக் கொண்டிருக்கிறாய்! என்று கின்னஸ் ரிக்கார்டுக்கு எல்லாம் முயற்சி செய்யாமல், ஒவ்வொன்றையும் சமயம் பார்த்து புது மாடலா, வாங்கிடு!” என்று அவர்களுக்கு நம் மீது இருக்கும் ஏதாவது பகையுணர்ச்சியை நேரம் பார்த்து சிலேடைகளுடன் இறக்கி வைத்து விட்டுச் செல்வார்கள்.

     வரும் ஆத்திரத்தை அப்போதைக்கு அடக்கிக் கொண்டு, “இப்பத்தான் இவையெல்லாம் இப்படி பாடாய் படுத்துகிறது. நீங்களெல்லாம் வருவதற்கு முன்னால் நாங்கள் சொல்லும் பேச்சை தட்டாமல் எங்களுடன் ஒத்துழைக்கும். பிரச்சனை என்பதே இல்லை!” என்று சொல்ல வேண்டும் போல் இருக்கும். ஆனால் இதை வந்தவர்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டால், உறவின் சுமூகம் பாதிப்படைய நேருமே, என்ற பயத்தில் மென்று விழுங்கி, “ஆமாம்!  வேளை வரும் போது மாற்ற வேண்டும்!” நாங்களும் அதைத்தான் சொல்லிக் கொண்டேயிருக்கிறோம் என்று அசடு வழிந்தால், “வேளையெல்லாம் தானாக வராது. நாமதான் அதை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்”. என்று அதற்கும் ஒரு சிறுபிரசங்கம்அவர்களிடமிருந்து வர அதையும் பொறுமையுடன் செவி மடுக்க வேண்டும்.

இத்தனைக்கும் காரணம் இந்த பொருட்கள்தானே! “ஏன் இப்படி செய்தாய்?” எனக்கேட்டு அதனிடம் பதில் பெற இயலாது. ஏனெனில், அதுதான் பதில் பேசாத ஜடப்பொருள் ஆயிற்றே! என்ற கோபம் லேசாக வரும். ஒருவழியாக வந்த உறவுகள் திரும்பிச்சென்ற பின், (திருப்தியுடனோ, இல்லை! இனி திரும்பவும் வரவே ௬டாது என்ற முடிவுடனோ,) அசதி நீங்கி நாம் நம் பணியை துவக்கும் போது எல்லா சாதனங்களும், எதுவுமே நடக்காது மாதிரி, நம்முடன் அமைதியாக பணியாற்றும் போது அடப்பாவி! உன்னிடம் இவ்வளவு பாசத்துடன் இருந்தேனே.! இப்படி சமயம் பார்த்து உறவின் முன் பழி தீர்த்துக் கொண்டாயே! அது ஏன்? ஏன்? ஏன்?” என்று சினிமா பாடல் மாதிரி நாம் அரற்ற, அதற்கு அதனிடமிருந்து வரும் பதில் மௌனமே!

நாமும் சற்று மௌனித்து ஒன்றும் தோன்றாமல், ஜடமாக அதை பார்த்துக்கொண்டிருந்தால், “உங்கள் வேலைகளை எப்படியெல்லாம் நாங்கள் இலகுவாக்குகிறோம். நாங்கள் உங்களுக்காக உழைத்து எப்படி ஓடாக தேய்கிறோம். ஆனால், நீங்கள்  உங்களுக்கு எப்போதும் உங்கள் வீட்டினருடன் வரும் கோபத்தை அவர்களிடம் காட்டாது  எங்களிடம் காட்டுவது..! எங்களுக்கு சிறு உடல்நல குறைவு வரும் போது எங்களிடமே, “உன்னைத்தூக்கி போட்டு விட்டு வேறொன்றை மாத்த வேண்டியது தான்!” என்று முணுமுணுத்து எரிச்சலடைவது போன்ற செய்கைகள் எல்லாம், எங்களை எப்படியெல்லாம் காயப்படுத்தி இருக்கும்! உங்களுக்கு உடல்நல குறைவென்றால், சரி செய்து கொண்டு மறுபடி இயங்க மாட்டீர்களா? எங்களை மட்டும் இந்த மாதிரி அடிக்கடி புறக்கணிக்க எண்ணுகிறீர்களே! நாலு பேர்கள் மத்தியில் எப்போதோ நீங்கள் படும் அவமானம், நாலு சுவர்களுக்குள் நாங்கள் அடிக்கடி படுகிறோமே! “சொல்லி அழ சுவராவது வேண்டும் என்ற பழமொழி நீங்கள் உருவாக்கியதுதானே!” அதன்படி, நாங்கள் எத்தனை நாள்தான் சுவரிடம் மட்டும் புலம்புவோம். சரி! வந்தவர்களிடம் சொல்லி அழுதால்தான், உங்களுக்கும் எங்கள் அருமை புரியும்…! என்பதால்தான் இந்த திடீர் வேலை நிறுத்தம்!” என்று இந்த அத்தனை கருத்தையும் அதன் மௌனமே பதிலாய் நமக்கு உணர்த்திப் போகும்.! அதன் செய்கை, புரியாத வினாக்களுக்கு நம் மனசாட்சியை தூண்டி விட்டு விட்டு பதிலுரைக்க பரிந்துரைந்து விட்டு போகும்.

இப்போது சொல்லுங்கள்! இவர்களெல்லாம் ஜடப்பொருளா?  இவர்களை உயிருள்ளவர்களாக நாம் ஏன் மதிக்க ௬டாது? என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகிறதல்லவா?

பி.. கு.. நான் சொல்லும்படி அனைத்துப் பொருள்களும், ஒட்டு மொத்தமாக சேர்ந்து பழி வாங்காது.! என் அனுபவத்தில் ஒன்றிரண்டு பாடாய் படுத்தும். நான் கற்பனை நிமித்தம் சற்று மிகைப் படுத்தியிருந்தால், இவர்கள் என்னை மன்னிப்பார்களாக!

8 comments:

  1. நம்மை விட ஒரு ஜடப் பொருள் உண்டா என்ன...? - என்று நினைப்பதுண்டு...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!
      தங்கள் உடனடி வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.!

      \\நம்மை விட ஒரு ஜடப் பொருள் உண்டா என்ன...? - என்று நினைப்பதுண்டு...//

      தங்கள் ௬ற்று உண்மைதான் நானும், மனிதனை ஒரு ஜடப் பொருள்தான் என்கிற மாதிரி எழுதி முடிக்கலாம்., என்றுதான் நினைத்திருந்தேன். ஆனாலும் “நா”வென்ற ஆயுதத்தை பயன்படுத்தும் மனிதனை ஜடமாக்குவதற்கு மனமில்லாமல், (மனிதனை ஜடமாக்கினால் எதிர்ப்பு கருத்துக்கள் வருமோ என்ற ஐயப்பாடும் ஒரு காரணம்) உயிரற்ற ஜடப்பொருளை நேசித்தால், நன்று! அதுவும் பதிலுக்கு நமக்காக உழைக்கும் என்ற மாதிரி கட்டுரையை முடித்தேன்.

      மற்றபடி தங்கள் கருத்தை ஏற்கிறேன்.
      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. பிறகு வருகிறேன்

    ReplyDelete
  3. பல இடங்களில் மனிதனே ஜடப்பொருளாக இருக்கிறானே....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் வருகைக்கும், மறுபடி வருகை தந்து ௬றிய கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      மனிதனும், தினம் ஜடமாகினாலும், அதன் உள் வலி பொறுக்க மாட்டாமல், தினத்துக்கொன்றாய் புது வியாதிகளை வரவழைத்துக்கொண்டு, நேரத்துக்கொன்றாய் அதை தவிர்க்கும் மருந்துகளுடன், சாவின் இருப்பிடத்தை நோக்கிச் செல்ல படிகளை அமைத்துக் கொள்கிறானே.! அதை தவிர்த்து முழு ஜடமாகி. எதைப்பற்றியும் கவலையுறாமல் இருந்தால்,.அவனுக்கும், அவனை சார்ந்தவர்க்கும், நிம்மதி! மற்றதை காலம் கவனித்துக்கொள்ளும்.
      மற்றபடி மனிதனும் ஒரு ஜடப்பொருளாகிறான் என்ற கருத்தை ஏற்கிறேன்.
      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete


  4. இப்போது சொல்லுங்கள்! இவர்களெல்லாம் ஜடப்பொருளா? இவர்களை உயிருள்ளவர்களாக நாம் ஏன் மதிக்க ௬டாது? என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகிறதல்லவா?

    நிச்சயமாக இல்லை
    சொல்லிப்போனவிதம் வெகு வெகு அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!
      தங்கள் வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
      \\நிச்சயமாக இல்லை
      சொல்லிப்போனவிதம் வெகு வெகு அருமை
      பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்//

      பிறக்கும் ஒவ்வொரு ஆத்மாவும், பரமாத்மாவாகிய, பரம்பொருளையன்றி வேறு எதையும், நேசிக்க ௬டாது என்பது இந்த உலகில் பிறந்த அனைவரும் அறிந்த உண்மை! மற்றபடி வசதி வாய்ப்புக்காக, இந்த மாதிரி பொருள்களுடன் தினமும் இயங்கி வருகிறோம். இவ்வித பொருள்களையும், நன்றாகப் பார்த்துக் (பயன்பாட்டில்) கொண்டால் நம்முடன் நீண்ட நாள் உழைக்கும் என்ற அர்த்தத்தில் பதிவை முடித்தேன்.

      மற்றபடி தங்கள் கருத்தை ஏற்கிறேன்.

      மற்றபடி நான் சொன்ன விதத்தை ரசித்துப் பாராட்டியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் !

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete