நாடு விட்டு வெகுதூரம்
நான் விரைந்து வந்துமிங்கே,
நங்கை உந்தன் பூ முகத்தில்
நன்முறுவல் இல்லையடி….!
காலத்தில் வராதது இந்த
காரிகைக்கு கோபமன்றோ….!
காலத்தில் வராததால்,
கார்முகிலும், காரிருளும்
கடிதாக உனை சூழுமென,
கன்னி நீ அஞ்சி நின்றனையோ….!
காலத்தே நான் வந்திருந்தால்,
கருவண்டுகள் உனை சுற்றாதடி….!
பூவிருக்கும் இடமெல்லாம்,
புது தேனைதான் பருக
வண்டினங்கள் வட்டமிட்டு,
வலம் வருவது இயல்பன்றோ….!
உனை சுற்றும் ஒரு வண்டாக,
உன் காதலன் நானிருக்க, உன்
தலைசுற்றும் வண்டுகளால்
தவித்து நீ தளர்ந்தனையோ….!
படை நடத்தி எதிர் வீரர்களை
பந்தாடிய என் வீரம், இச்சிறு
படைவண்டுகளை சிறுபொழுதில்
பதம் பார்த்து விலக்குமடி….!
பதம் பார்ப்பேன் என்றவுடன்
பைங்கிளி உன் மதிமுகத்தில்
பரவுகின்ற இந்த வெட்கமதை,
பரிசாக நான் பெற்றேனடி….!
காதல் பரிசாக நான் பெற்றேனடி….!
இயன்ற வரை வெகு விரைவில்
இம்முறை நான் வந்திருந்தால்,
இன்பமுறும் இப்பரிசைபெறும்
இன்பமதை இழந்திருப்பேன்….
என் எழுத்துக்கும்,
2014 ம் ஆண்டு ஓர் திருப்பு முனையை ஏற்படுத்தி கொடுத்தது கண்டு நான் சந்தோசமடைந்திருக்கிறேன். முருகனருளால் எழுதிய
முருகனுக்கோர் முகில் முதன் முதலில் என்னை வலைச்சரத்தில் ஏற்றி விட, பதிவுலகின்
முன்ணனி பதிவர் சகோதரர் திரு வெங்கட் நாகராஜ்
அவர்கள் பதிவின் மூலமாக வந்த “ஓவியக் கவிதை எழுத வாருங்கள்”
என்ற அழைப்பிற்கு நான் எழுதி அனுப்பிய கவிதையை ஏற்றுக் கொண்டு அதை பதிவாக்கி பார்வையாக்கியதில்,
பாராட்டுகளும் ,வாழ்த்துக்களும் பெறச் செய்ததில் எனது மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகியிருக்கிறது.
அதை கண்டு ரசித்து வாழ்த்திய உள்ளங்களுக்கும் வாழ்த்தை பெறச் செய்த சகோதரர் வெங்கட் நாகராஜூக்கும் என் மனமார்ந்த நன்றிகளை
தெரிவிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தக் கவிதைக்கு முன்பாக நான் அதே ஓவியக் கவிதைக்கு சற்று நெடியதாக எழுதியிருந்த
“தோழியின் சாதுரியம்” என்ற கவிதையை அனுப்ப வேண்டாமென்று(
நெடியதாக இருந்ததினால் ) தோன்றியதால் இதை எழுதி
அனுப்பினேன். அதை மீண்டும் என் பதிவில் இட்டு மகிழ்வடைகிறேன்.
நன்றிகள் பலவுடன்… கமலா ஹரிஹரன்.
No comments:
Post a Comment