Pages

Thursday, May 1, 2014

நாம் வாங்கி வந்த வரம்...


உட்கதை

கடவுள் எல்லா பிறவியையும் படைத்து அதற்குரிய திறமைகளையும் வகைபடுத்தி வைத்தான். அதன்படி அனைத்தும் தத்தம் திறன்படி வாழ்ந்து கொண்டிருக்கையில் நம்மினம் மட்டும் உருவத்தில் மாறுபட்டவையாக இருப்பதினால் எவ்வளவு திறமையுடன் ஓடி ஆடி திரிந்தாலும் மற்ற பிறவிகளின் காலுக்கடியில் மிதிபட்டும் அடிபட்டும் சீக்கரமாக முடிவை சந்தித்து கொண்டிருக்கின்றன..ஏன் இப்படி? என்ற அந்த கவலையில் உண்ண பிடிக்காமல், உறக்கம் வராமல் தவித்தார் அவ்வினத்தின் தலைவர்.

ஒரு நாள் இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வர உலகில் உள்ள தன் மொத்த இனத்தையும் கூட்டமாக கூட்டி வைத்துக்கொண்டு அந்த தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

நண்பர்களே! இன்று நம் கஷ்டங்கள் என்னவென்று உங்களுக்குக்கெல்லாம் புரியும் என நினைக்கிறன். நம்மையெல்லாம் படைத்தவர் நமக்கு வேண்டும் போது அவரிடம் நமக்கு வரம் வாங்கிக்கொள்ளலாமென கூறியிருந்தார். அதன்படி அரக்கர்களும், மிருகங்களும், தேவர்களும், மனிதர்களும் அவரவர்களுக்கு வேண்டிய வரங்களை பெற்று வருகின்றனர். அதனால் நாமும் நமக்கு சாதகமாக சாகா வரத்தை பெற்று விட்டால் எக்காலத்திலும் நாம் சந்தோஷமாய் இருக்கலாம். உங்களுடைய கருத்து என்ன?

இவ்வாறு தலைவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, கூட்டத்தில் இருந்து துணிச்சலான குரல் வந்தது. “நீங்கள் சொல்வது உண்மைதான் தலைவரே! அந்த மாதிரி ஒரு வரத்தை பெற்று விட்டால், நம்மை யாரும் அசைக்க முடியாது என்ற தைரியமான குரலை பார்த்த தலைவர், அப்படியானால், நம்மில் யார் சென்று வரம் பெற்று வருவது என்று தீர்மானியுங்கள்! என்றவுடன், அந்த துணிச்சல் குரல் தவிர்த்து மற்ற குரல்கள் தனக்கு தங்களுக்கு வேறு வேலைகள் இருப்பதாக பட்டியலிட்டு ௯றி விலக ஆரம்பித்தன,

தலைவர் யோசித்தார்! முதலில் வந்த குரலையே பக்குவமாக பேசி கடவுளிடம் வரம் கேட்க அனுப்பி வைத்தாலொழிய இந்த பிரச்சனை தீராது என்பதை புரிந்து கொண்டவராய்....

இதோ பார்! நீதான் மிகவும் தைரியமாயிருக்கிறாய்! இந்த வேலைக்கு உன்னை விட்டால் வேறு யாரும் சரி வர மாட்டார்கள்! நீ இதை முடித்து வந்தால் நம் இனம் உன்னை என்றும் நன்றியுடன் போற்றிக் கொண்டிருக்கும்! என்றதும், வெறும் நன்றிதானா? என்று அந்தகுரல் எகத்தாளமாக கேட்க, சரி நீ என்ன கேட்டாலும் தருகிறேன் என்று பதிலுக்கு தலைவர் சொன்னதும், நான் திரும்பி வந்ததும் உங்கள் இடத்தை தருவீர்களா? என கேட்டதும் ஒருநிமிடம் மெளனமானார் தலைவர்.

தன் இனங்களின் நன்மைக்காக தன் பதவியை தியாகம் செய்வது ஒரு சாதாரணசெயல்! இதனால் ஒன்றும் குடி முழுகி போய்விடாது! தன் பேரும் புகழும் பன்மடங்கு பெருகும் என்பதை புரிந்து கொண்டவராய், “சரி! நீ போய் சாதித்து வா! வந்தவுடன் மேடையின்றி, ௯ட்டமின்றி, தேர்வின்றி நீதான் நம்மினத்திற்கு தலைவன்! போதுமா?” என்று உறுதியளித்தார் தலைவர்.

சரி! என்று சந்தோசமாக கடவுளின் இருப்பிடத்திற்கு கிளம்பிய அந்த குரலுடன் அதன் உற்ற நண்பனும் நானும் வருவேன் என ஒட்டிக் கொண்டு புறப்பட்டது. போனால் போகிறதென்று அதையும் அழைத்துச் சென்ற குரல் தன் முறை வந்ததும் கடவுளை சந்தித்தது.

என்ன வேண்டும்? என்ற கடவளிடம், தங்கள் குறைகளை தைரியமாக எடுத்துரைத்தப்பின் வேண்டிய வரத்தை கேட்கும் முன் குரலின் நண்பன் முந்தி கொண்டபடி, “அண்ணே! அண்ணே! இதை மட்டும் நான் கேட்கிறேன் அண்ணே! என்று கெஞ்சி ௯த்தாட, சரி! நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கிறதா? அதே மாதிரி கேட்பாயா? என்று அகங்காரத்துடன் கேட்க, சரி! வரத்தை பெற்றுக்கொண்டு வா! நான் வெளியில் காத்திருக்கிறேன். என்றபடி வெளியில் வந்து அமர்ந்து கொண்டது.

சற்று நேரம் கழித்து வெளியில் வந்த நண்பனிடம் முடிந்ததா? வரம் தந்து விட்டாரா? நான் சொன்னபடி கேட்டாயா? எப்படிகேட்டாய்? ஒருமுறை சொல்! பார்க்கலாம்! என்ற குரலுக்கு அதன் நண்பன் சொன்னதை கேட்டதும் குரலே எழும்பவில்லை!

அடபாவி! “நாங்கள் கடித்து அனைவரும் சாக வேண்டும்! முக்கியமாக மனிதர்கள்!” என்றல்லவா கேட்கச்சொன்னேன். “நீ நாங்கள் கடித்தவுடன் சாக வேண்டுமென” மொட்டையாக கேட்டு வரத்தையும் பெற்று வந்திருக்கிறாயே! பாவி! பாவி! என்று துரத்தி துரத்தி நண்பனை அடிக்க, “அங்கே என்ன சத்தம்?” என்றபடி கடவுள் எட்டி பார்க்க, “கடவுளே! என் நண்பனுக்கு மறதி அதிகம் அதனால் மாற்றிக் கேட்டு விட்டது. தயவு செய்து மன்னித்து வரத்தை நான் கேட்பது போல் தாருங்கள்!” என்று குரல் பல முறை வேண்டியும் அதை ஏற்காத கடவுள், “அவ்வளவுதான்! கொடுத்த வரத்தை மாற்ற முடியாது! இனி உங்கள் விதிப்படிதான் நடக்கும் அந்த மனித இனத்துடன்தான் நீங்கள் காலங்காலமாய் வாழ்ந்து, சாவையும்,சந்திப்பீர்கள்!” என்று கடுமையாக ௯றி விட்டு மறைந்து விட்டார்.

வரம் கேட்டு வந்த தன் வாழ்க்கை இப்படி இருண்டு விட்டதே,!!! என்று நொந்தபடி நண்பனுடன் வந்த அந்த குரல் தலைவரின் காலில் விழுந்து கதறியபடி “நாம் இப்போதாவது சுதந்திரமாக அலைந்து கொண்டிருந்தோம், சாகா வரம் கேட்கப்போய் அதிலும் மனிதர்களை கடித்து சாகடிக்கும் வரத்தை கேட்கப்போய் அவர்களை கடித்தவுடன் நாம் இறக்கும் வரத்தை பெற்று வந்திருக்கிறோம்! அது மட்டுமின்றி அவர்களுடனே காலங்காலமாய் வாழ்ந்து இறக்கும் வரமும் கிடைத்துள்ளது, என் நிலை உணராமல் பேராசையுடன் செயலாற்றிய என்னால் நம்மினமே சாபம் அடையும்படி ஆகி விட்டது, என்னை மன்னித்து விடுங்கள்” என்றபடி துக்கம் தாங்காமல் உயிரை விட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை அந்த எறும்பினம் தன் விதிப்படியே மனிதர்களுடன் வாழ்ந்தும் மறைந்தும் வருகிறது.

நன்றி கூகிள்.

3 comments:

  1. //அன்றிலிருந்து இன்றுவரை அந்த எறும்பினம் தன் விதிப்படியே மனிதர்களுடன் வாழ்ந்தும் மறைந்தும் வருகிறது.//

    வேறொரு மனிதன் கேட்ட வரம் இதோ:

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_1783.html

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரரே,

    தங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    மனிதன் கேட்ட வரத்தையும் பார்க்க வருகிறேன்...

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
    நல்வணக்கம்!

    திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
    "உள்ளம் சொல்லுமே அம்மா…. அம்மா…அம்மா…!!!"

    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

    வாழ்த்துகளுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    (எனது இன்றைய பதிவு "அவன் ஒரு குடையைத் தேடி" (சிறு கதை)
    படித்திட வேண்டுகிறேன்.)

    ReplyDelete