Pages

Wednesday, May 11, 2011

பகல் கனவு (வேண்டுதல்)

ரவாரமிட்டபடி ஆடி ஓடிய,
அணில்கள் காணாமல் போயின!
காகங்களின் கரையல் சப்தம்,
கார் முகிலின் இடியோசையில்,
கரைந்தே  போயின!      மற்ற
பறவைகளின் விதவிதமான ஒலிகளும்,
பறந்தே போயின!   பிறநில வாழ்-
விலங்கினங்களும் விரக்தியுடன் இந்த
வில்லங்கத்தில் மாட்டாமல் ஒதுங்கி போயின!
காரணம் என்ன வெனில்,  இது,

கார்காலத்தின் ஆர்பாட்டந்தான்.
மழை!  மழை!  மழை!
எங்கும் மழை!
எத்திக்கும் மழை!
மழையரசி மகிழ்ச்சிப்பெருக்கில் தன்
மனந்துள்ள கொட்டித் தீர்த்தாள்.

மேள தாளத்துடன் ஆனந்தம் பொங்க
மேக வீதியில் வலம் வந்தபடியிருந்தாள்.
இதுகாறும் இவ்வுலக மாந்தர்க்கு
கடமையின் கருத்தை செவ்வனே விளக்கி வந்த
கதிரவனும் அரசியின் கட்டளைக்கு பணிந்து
மூன்று நாட்களாய் தன்,
முகம் காட்டாது
முடங்கிச் சென்ற வண்ணம் இருந்தான்.
மழை வேண்டி இந்த
மண்ணில் பல வேள்விகளும்,
வேண்டுதல்களும் செய்த
மக்களுக்கும், மழை தேவதையின் சீற்றம் கண்டு,
மனதில் பக்தியோடு பயமும் உதித்தது.

பூமித் தாய்க்கு வேதனையையும்,
புவிவாழ் உயிர்களுக்கு சோதனையையும்,
மேலும் தரவிரும்பாத அன்னை தன்,
மேக குழந்தைகளை அதட்டி, அடக்கி,
துள்ளித் திரிந்த மழை கற்றைகளை
தூறலாக போகும் படிச் செய்தாள்.
துளிகள் விழுந்த வேகத்தில்,
துள்ளி கண் திறந்தான் அந்த விவசாயி,
சுற்றிலும் பார்வையை ஓட்டினான்,
சுட்டெரித்து கொண்டிருந்தான் சூரியன்.
அக்குடிலின் வாயிலில்
குத்து காலிட்டபடி அமர்ந்த நிலையிலும்,
இத்தனை உறக்கமா?
நீட்டி படுத்து நிம்மதியாக உறங்கி
நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது,  இது,
பகல் பட்டினியால்,
பரிதவித்து வந்த உறக்கம்,
பஞ்சடைந்த கண்கள்
பாவப்பட்டு மூடிக் கொண்டதால் வந்த மயக்கம்.
அந்த நித்திரையிலும் ஒரு
அற்புத கனவு! இந்த மழை கனவு!

இந்த பகல் கனவை
பார்த்த மனக்கண்களின்
மகிழ்ச்சியில் வந்தது இந்த
நீர்த் துளிகள் ! ஆனந்த-
கண்ணீர் துளிகள் !
பார்வை பட்ட இடமெல்லாம்,
காய்ந்த வயல் நிலங்களும், பயனற்ற
கலப்பையும், ஒட்டிய வயிறுடன்
கண்களில் பசி சுமந்த மக்களும்,
கலக்க மூட்டின அவன் மனதில். இனி,
இந்நிலை தொடர்ந்தால், பசியினால்,
மாந்தர் மட்டுமில்லாது,
அணில்களும் ஆடி ஓடாது!
காகங்களும் கரையாது!
பறவைகளும் பாடாது ! ஏனைய
ஜீவராசிகளும் ஜீவனை இழந்து விடும் !
இறைவா! இவைகளுக்காகவாவது இந்த
பகல் கனவை
பலிக்க விடு.








1 comment:

  1. பகல் கனவு ....... இருப்பினும் அழகான நியாயமான வேண்டுதல். பலிக்கட்டும். அனைவர் வாழ்வும் சிறக்கட்டும்.

    ReplyDelete