Pages

Tuesday, March 6, 2018

பிராயச்சித்தம்.....( பகுதி 4)

சற்று ஆசுவாசபடுத்திக் கொண்டவள் விழி நீரை  துடைத்துக் கொண்டவள் அவன் கைகளை பிடித்து தன் நெஞ்சொடு அணைத்த வண்ணம், "தியாகு! என் செல்லமே! உன்னை என் கண்ணுலே காமிச்சு கொடுத்த அந்த ஆண்டவனுக்கு நா ரொம்ப கடமை பட்டிருக்கேன். எத்தனையோ கெடுதல்களிலும் அவன் சிலது நல்லது பண்ணியிருக்கான். அதுலே இதுவும் ஒண்ணு.  உன்னோட அப்பா என் பிள்ளையாய் பிறக்காமே,  நான் எடுத்து வளர்த்ததுக்கே அவன் இந்த துன்பத்துக்கு ஆளாகியிருக்கான். ஏன்னா என் நேரம் அப்படி ! நான் பிறந்து வந்த வேளை அப்படி! மத்தபடி உன்னை பார்த்ததிலே நான் ரொம்பவே சந்தோஸபடறேன். ஆனா அவ்வளவு சட்டுனு உதறிட்டு உன் கூட என்னாலே வர முடியாது! ஏன்னா இந்த குழந்தைகளோடு என் காலம் முடிஞ்சு போகனுமுன்னு நான் பிரார்த்தனை செய்துகிட்டே இங்கே வேலையிலே சேர்ந்து ரொம்ப வருடங்கள் ஆச்சு. எல்லாத்தையும் ஒரளவு மறந்து ஒரு தவ வாழ்க்கை மாதிரி வாழ்ந்துண்டு வர்றேன்.அவ்வளவு சுலபமா இதை உதறி எறிஞ்சிட்டு என்னாலே வெளியேற முடியாது. ராஜுவை நினைச்சா எனக்கு ரொம்பவே வருத்தமா இருக்கு! ஆனா என்னை விட பத்து மடங்கா கவனிக்க அவன் பிள்ளை இருக்கான். அந்த நிம்மதி இந்தப்பிறவியிலே எனக்கு போதும். அந்த நினைப்போடு  எஞ்சிய காலத்தை கழிச்சிடுவேன். நீ என் பிள்ளை மாதிரி இல்லாமே ரொம்ப தைரியமா இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி இருக்கே...! நீ நல்லா இருக்கனுப்பா!  பத்திரமா போயிட்டு வா! அப்பாவை நல்லபடியா கவனிச்சுக்கோ!" என்றவள் மேலும் அங்கிருந்தால், தன் உறுதி தளர்ந்துவிடுமோ என்ற ஐயத்தில் வரவேற்பு அறையை விட்டு அகன்று உள்ளே சென்று மறைந்தாள்.

அவள் பேச்சில் கட்டுண்டவன் மாதிரி் அமைதியாயிருந்த தியாகு மேற்கொண்டு செய்வதறியாமல் சற்று நேரம்  சிலையாய் நின்றிருந்தான்.

சில வார காலம்  நிமிடமாய் ஓடியது தெரியவில்லை. பார்வதிக்கு..... ! ஆனால் ஒவ்வொரு  நாளும்  சில மணி நேரமாவது தியாகுவின் முகமும் பேச்சுக்களும் அவள் முன் வந்து நின்று போயின. ராஜு தன்னுடன் இருக்கும் போது அவனுக்கு மணமுடித்து,  அவன் குழந்தையை எடுத்து வளர்த்து என்று எல்லோரையும் மாதிரி அவளும் கனவு கண்டாள். அதெல்லாம் பொய்த்துப் போய் விட்டது என மனசை தேற்றிக்கொண்டு வாழக்கற்றுக் கொள்ளும் போது எதிரில் வந்து நின்று" பாட்டி" என உரிமை கொண்டாடி, மனதை சலனப்படுத்துகிறான்.  அமைதியாக பேசி மனதை அலைக்கழிக்கிறான். இன்னமும் இவனை மறந்து பழையபடியாக எவ்வளவு நாட்களாகுமோ? என்ற எண்ணத்தில் பெருமூச்செறிந்தாள். இந்த கவலையில் கோகிலாவும் இத்தனை நாட்களாக தன்னை பார்க்க வராதது நினைவுக்கு வரவே "அவளுக்கு என்ன பிரச்சனையோ? " என்று எண்ணியபடி இல்லத்துக்கு கிளம்ப எத்தனித்தாள்.

அப்போது "அத்தை"! என்ற குரலோடு கோகிலா வீட்டினுள் நுழையவும்,  " வா கோகி! இப்பத்தான் உன்னை நினைச்சேன். உனக்கு நூறு வயது!" என்றபடி அன்போடு அவளை வரவேற்றாள் பார்வதி.

" வேண்டாம் அத்தை! உன் வாய் பேச்சு பலிச்சிட போறது.அப்புறம் கஸ்டப்படறது நானில்லையா? " என்று சிரிப்போடு சொன்னவள்" நீ அதுக்குள்ளே கிளம்பிட்டியா!  ரொம்ப. நாளாச்சா? அதான் இன்னைக்கு உன்னை பாத்துட்டு போகலாம்னு வந்தேன்." என்றவளிடம் ," சரி உக்காந்துக்கோ! நானும் உன்னை பாக்கனும்னு நினைச்சேன் .இல்லத்துலே ஆண்டு விழாவுக்கு ஏற்பாடு பண்ணிடிருக்காங்க! அதான் சீக்கரமா கிளம்பறேன். சரி! ஒரு அரை மணி தாமதமா  போனா தப்பில்லை!  நா சொல்லிக்கிறேன். என்று அவளருகில் அமர்ந்தவள்," கொஞ்சம் இரு என்று அடுக்களைக்குள் சென்று ஒரு கிண்ணத்தில் பாயாசத்தை கொண்டு வந்து தந்தாள். "என்னஅத்தை! இன்று இனிப்பெல்லாம் பலமாக இருக்கிறது." என்று அதை வாங்கிக்கொண்டாள் கோகிலா.

"இன்று அவன் பிறந்த நாள்! அவன் இங்கு இருக்கும் போது அவனுடைய பிறந்த நாளன்னைக்கு அவனுக்கு வேண்டியதை பார்த்துப் பாரத்து செஞ்சேன் .அன்று கட்டாயம் இந்த இனிப்பிருக்கும். அவன் என்னை விட்டு போனதிலிருந்து, கோவிலுக்கு செல்லும் போது அவனுக்காக வேண்டுவதோடு சரி!  இன்னைக்கு கோவிலுக்கு சென்ற போது அவன் பெயரில் அர்ச்சனை பண்ணினேன். வீட்டிலும் பாயசம் செஞ்சு விளக்கேற்றி சுவாமிக்கு படைத்து ..... என்னவோ போ! எனக்கு மனசே சரியில்லை! பத்து நாளைக்கு மேலா  உன்கிட்டே சொல்லனும்னு மனசுக்குள்ளே நினைச்சிகிட்டேயிருக்கேன்... .அவன் விபத்துலே கால்களை இழந்து என்னை, எனக்கிழைத்த தப்பை நினைச்சபடி,  தவிச்சிண்டு இருக்கானாம். அவன் பிள்ளை எப்படியோ நான் இங்கிருக்கிற விபரத்தை சேகரிச்சிண்டு வந்து "அப்பா இந்த மாதிரி உன்னை நினைச்சி வருத்தப்படுறார். என்னோடவந்துடுன்னு" வறுப்புறுத்தினான். நான் தான் எனக்கு அங்கெல்லாம் சரி வராதுன்னு திருப்பி அனுப்பிட்டேன். என்னை பார்க்க ரொம்ப ஆவலா இருக்கான்னு சொல்றான். நான் இங்கே இருபது வருஷமா ஆண்டவன்கிட்டே மனசுக்குளளே கதறிண்டிருக்கேன்.என் உயிர் பிரியருதுக்குள்ளே ஒரு தடவை அவனை கண்ணுலே காட்டுன்னு!  அது சரி! அதெல்லாம் எப்படி அனுமன் மாதிரி நெஞ்சை பிளந்து காட்ட எனக்கு சக்தி இருக்கா?  உறவெல்லாம் ஒவ்வொருத்தரா போன நிலையிலே இவன்தான் ரத்தமும் சதையுமான என் உடம்புலே உயிரா , சுவாசமா இருக்கான்னு எப்படி அவனுக்கு விளக்குவேன் அது புரிஞ்சிருந்தா அவன் என்னை விட்டு போவானா? எந்த ஒரு பிரச்சனையே வரட்டுமே! அப்படியே வந்தாலும், இந்த உறவை வெட்டிண்டு "அப்புறமா பாத்துக்கலாம்னு மனசை இறுக்கிண்டு, நாளை தள்ளிப் போட்டுகிட்டு இருந்திருப்பானா?  நான் இங்கே ஒருநாள் பட்ட வேதனையை அவன் நாளொன்றுக்கு ஒரு நிமிடமாவது பட்டிருப்பானா? ." மேற்கொண்டு பேச முடியாமல் கண்களில் இத்தனை நாளாக மனதை இரும்பாக்கி கண்களை வற்ற வைத்ததின் விளைவாய்  வெளியேற வழியின்றி தவித்துக் கொண்டிருந்த கண்ணீர் சுனை காத்திருந்த மாதிரி கொட்ட ஆரம்பித்தது.

இத்தனை நாட்களாக மனதில் இறுக்கிய சோகங்கள் கரைந்து போகும் வரை அவள் அழட்டும் என கோகிலா வாளாதிருந்தாள்.

(தொடரும்...)

இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்.
பகுதிகள்:123


6 comments:

 1. பல ஆண்டு கால இறுக்கங்கள் மனதிலிருந்து வெளிப்பட்டு கண்ணீராக வரும்போது கிடைக்கின்ற சுகம் அலாதியானது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அந்த சூழல் கிடைப்பதில்லை. தொடர்ந்து வாசிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் விளக்கமான கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அந்த சூழல் கிடைப்பதில்லை/ உண்மை! அளவுக்கு மீறிய மன அழுத்தங்களுக்கு கண்ணீரும் ஒரு மருந்தாகும்.

   கதையை தொடர்ந்து படிக்கிறேன் என்றமைக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. எந்தக் குழந்தைகளைத்தான் விட மனசு வரும் ?

  எல்லாம் நலமாகும் என்று தொடர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

   /எந்த குழந்தைகளைத்தான் விட மனசு வரும்/ பெற்று வளர்த்தாலும், எடுத்து வளர்த்தாலும் தாய் மனம் ஒன்றுதானே!

   எல்லாம் நலமாகும் என தொடரும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. இத்தனை நாட்களாக மனதில் இறுக்கிய சோகங்கள் கரைந்து போகும் வரை அவள் அழட்டும் என கோகிலா வாளாதிருந்தாள்.//

  சோகங்களை கண்ணீரில் கரைத்து விட்டால்தான் மனது பாரம் குறையும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

   இத்தனை நாட்களாக மனதில் இறுக்கிய சோகங்கள் கரைந்து போகும் வரை அவள் அழட்டும் என கோகிலா வாளாதிருந்தாள்.//

   /சோகங்களை கண்ணீரில் கரைத்து விட்டால்தான் மனது பாரம் குறையும்./

   உண்மையான வார்த்தைகள்! அருமையாய் கூறியுள்ளீர்கள். கருத்துக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete