நாம் அறிந்து கொள்ள வேண்டிய தினங்களில் இதுவும் ஒன்று.
நாம் இந்த பூவுலகில் பிறந்த பத்து மாதங்களுக்குப் பிறகு, முதல் எளிய உணவாக நம் அன்னை ஊட்டி விட்ட இந்த இட்லியை நாம் மறக்க இயலுமா.? அந்த சின்னஞ்சிறு குழந்தைக்கு எந்த வித பிரச்சனைகளுமின்றி உணவு நன்றாக செரித்து விடும் என்ற நம்பிக்கைதானே அந்த அன்னைக்கும், அந்த இட்லிக்கும் இருந்திருக்கும்.
இப்போதும் குழந்தைகளுக்கு சிறந்த உணவு இதுதான். ஆனால் மாறி வரும் சுவைகளில் ஈர்க்கப்பட்டு பெற்றோர்கள் இட்லியை தவிர்த்து வேறு உணவை தங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள் என்பது வேதனை தரும் ஒரு விஷயம். ஆனாலும், இந்த சிறப்பான, சத்து மிகுந்த இட்லிக்கென ஒரு தினத்தை உருவாக்கி வைத்த அந்த நபரை பாராட்ட வார்த்தைகளே இல்லை எனலாம்.
இட்லி எனக்கு மிக பிடித்தமான உணவு. நான் குழந்தையாயிருந்த அன்றிலிருந்து இன்று வரை ஒரு இட்லி ப்ரியை. இங்கேயே அதிசயமாக, இல்லை, வெளியூர் பிரயாணங்கள் என மேற்கொண்டால் கூட, எல்லோரும் உணவகத்திற்கு சென்றால், நான் மட்டும் இந்த உணவை மிக விரும்பி சாப்பிடுவேன். "அடாடா..! இங்கு வந்துமா.?" என கேட்கும் உறவுகளுக்கு என் ரசனை ஒரு புரியாத புதிர்.
இந்த முறையும் இட்லிகளைப் பற்றி நிறைய எழுத எனக்கு ஆசை. ஆனால், என் நேரப் பற்றாக்குறை காரணமாக, முன்பு எழுதிய பதிவையே இன்றைய தினத்திற்காக மீள் பதிவாக என் பிரியமான இட்லிக்கு சமர்ப்பிக்கிறேன்.
(30.3. 25.)
நம் அன்றாட பாரம்பரிய உணவில் இந்த இட்லி எப்போதும் சிறப்பு மிக்கவைதான்..! ஒரு காலத்தில் அதற்கென்று ஒரு பிரத்தியோகமான தனி மரியாதை இருந்தது. ஒருவருக்கு உடம்புக்கு முடியவில்லையென்றால்,அவரை குணப்படுத்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, "டாக்டர் மருந்துடன் நோயாளி ஆகாரமாக என்ன சாப்பிடலாம்?" என்ற கேள்விக்கு அக்காலத்திய மருத்துவர்கள் முதலில் இட்லியைத்தான் நல்ல உணவாக பரிந்துரைப்பார்கள். (பிறகு காஃபி, கஞ்சி.) (ஆனால், இட்லியை கண்டாலே முகம் சுளித்து எரிச்சல் அடைபவர்கள் இப்போது நிறைய பேர்.) அதுபோல் இப்போது மருத்துவர்களும், "என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம்.." எனக் கூறத் தொடங்கி விட்டனர். ஏனெனில் இட்லியை புறந்தள்ளி நிறைய வெரைட்டி உணவுகள் வீட்டிலேயே இப்போது முதலிடத்தை பெறத் துடித்து வெற்றி கண்டு விட்டதால், இட்லி அவர்களுக்காக கொஞ்சம் பெருந்தன்மையுடன் நகர்ந்து வழி விட ஆரம்பித்து விட்டது. ஆயினும் இன்னமும், பல பெரியவர்களிலிருந்து சில குழந்தைகள் வரை இட்லியை விரும்பி சாப்பிடுவதையும், சில உணவகங்களில் பார்த்திருக்கிறேன்.
இந்த இட்லிக்கு ருசியாக அரைப்பதில் அந்த காலத்தில் கல்லுரலுக்கு பெரும் பங்கு இருந்ததது. அப்போதெல்லாம் சிலர் வீட்டில் தினமும் இட்லிக்கு அரைப்பதை ஒரு வழக்கமாக வைத்திருந்தனர். ஒரு குறிப்பிட்ட மாலை நேரத்தில் கல்லுரலின் "கடமுடா சத்தம்" ஒவ்வொரு வீட்டிலும் முழங்கும். (எங்கள் பிறந்த வீட்டில் எங்கள் அம்மா காலையிலேயே இட்லிக்கென அரிசி அளந்து ஊற வைத்து விடுவார்.) வீட்டில் தினமும் காலை அக்கப்போர்கள் ஏதுமில்லாத, ஆனால், போரடிக்காத இட்லிதான். வாரத்தில் ஒருநாள் அது தோசையாகவோ, பருப்புகள் சேர்த்தரைத்து அடையாகவோ மாறினால், அது அதிசயம். ஏனெனில் இட்லி எளிதில் ஜீரணமாகும் ஒரு உணவு (வஸ்து.) என்பதால், அதுதான் அப்போதைய குழந்தைகள், பெரியவர்களென வீட்டிலிருக்கும் அனைவருக்கும் உகந்ததாக இருந்தது. .
நாளடைவில், தினமும் இட்லிக்கு அரைத்து செய்வது அனைவருக்கும் பெரும் சோம்பலாக தோன்றியதால், வேறு ஏதாவதை காலை சிற்றுண்டியாக மாறுவதற்கு வாய்ப்புகளை தந்தனர். அதற்கு பிற தானியங்கள் சந்தோஷமாக சம்மதிக்க, அவற்றின் உதவியுடன் உப்புமாக்கள், தோசைகள், சப்பாத்தி, பூரியென அவைகள் பூரிப்புடன் வலம் வந்தன. எனினும் காலை நேரத்தில் இட்லியின் சௌகரியம் பிடித்து போன பிறகு மற்ற உணவுகளை தயாரிக்கும் போது ஏற்படும் சிரமங்கள் கண்டுணர்ந்ததில் வீட்டில் பெண்கள் அனைவருக்கும் சிறிது முகம் கோண செய்தது.
பிறகு மாவரைக்கும் பெரிய, கனமான கிரைண்டர்( யந்திரம்) வந்தது. அது வீட்டுக்கு வீடு அவ்வளவாக பரவாத காலத்தில், ஒரு சிறு கைத் தொழிலாக பலருக்கும் வேலை வாய்ப்பைத் தந்தது. வீட்டின் ஒரு இடத்தில் நாலைந்து மெஷின்கள் வாங்கி போட்டுக் கொண்டு மாவரைத்து கொடுப்பதில் மக்கள் வீட்டிலிருந்தபடியே கொஞ்சம் வருமானமும் பார்த்தனர்.
காலை நம் வீட்டில் இட்லிக்கு தேவையான அரிசி, பருப்பு போன்றவற்றை ஊற வைத்து, மதியம் அங்கு கொண்டு தந்தால், அன்று மாலை/ இரவுக்குள் இட்லி மாவு வீட்டில் வந்து சேர்ந்து தயாராகி, மறுநாள் காலை உணவுக்கு அது இட்லியாக வரும் இந்த விந்தை அனைவருக்கும் பிடித்துப் போனதில் மறுபடியும் வெற்றிக் கரத்துடன் இட்லிகள் கொடி பிடிக்க ஆரம்பித்தன.
பின்பு வீட்டுக்கான அளவுடன் சின்னதாக, நவீனமான பல மாவரைக்கும் யந்திரங்கள் வந்த பின் அதில் வீட்டிலேயே கொஞ்சமாகவோ, இல்லை இரண்டு, மூன்று நாட்களுக்கெனவோ இட்லி மாவு தயார் செய்து குளிர் சாதன பெட்டியில் பாதுகாத்து, மக்கள் பயனுற ஆரம்பித்தனர்.
அதன் பின் வந்த காலகட்டத்தில், அவ்விதம் அதைச் செய்யவும் நேரமில்லாமல், நேரங்களுடன் போராடுகிறவர்கள், உடல் நிலைகள் முடியாதவர்கள் என பலரும் பாக்கெட்டுகளில், தயாராகி வரும் மாவு வாங்கி அதில் இட்லி, தோசை என்ற பயன்களை கண்டனர். எப்படியும் இட்லிகளின் ராஜ்ஜியம் தரையிறங்கவில்லை.
"பட்டனை தட்டினா இரண்டு இட்லியுடன், கெட்டி சட்னி வர வேண்டும்" என்ற அந்தகாலத்தில் கலைவாணர் என். எஸ் கிருஷ்ணன் , அவர் மனைவி டி. ஏ மதுரம் அவர்கள் பாடிய நகைச்சுவை பாடல் இன்று பொய்த்துப் போகாமல், மெய்யாகி வருகிறது. இட்லி அரிசிக்கோ ,அதை அளவுடன் ஊற வைத்து பக்குவமாக அரைக்கும் மாவுக்கோ, என எதற்கும் கவலைபடாமல், பட்டனை தட்டினால் பறந்து வரும் இட்லிகள் வந்து விட்டன. (அது எப்படியிருக்குமோ என நான் இன்னமும் பரிசோதிக்கவில்லை.) சாப்பிட்டவர்களுக்குத்தான் அதன் சுவையும், தரமும் புரிந்திருக்கும். இது மனித சோம்பலின் கடைசி படிக்கட்டை எட்டிய விஞ்ஞான யுக்தியின் முயற்சி என நினைக்கிறேன். விஞ்ஞான வளர்ச்சியை இப்படியெல்லாம் வருமென கற்பனையில் பாடி, பேசி நடித்த அவர்களின் (கலைவாணர், அவர் மனைவி) பேச்சுக்கள் உண்மையாகி விட்டது.
அனைத்து உணவகங்களிலும், மற்ற உணவுகளோடு, இட்லி, சட்னி, சாம்பார், இட்லிமிளகாய்பொடி தடவிய நெய் இட்லி, நம் விருப்பப்படி சிறு துண்டுகள் செய்த லேசாக வறுத்த ப்ரைடு இட்லி, வெங்காயம், காய்கறிகளுடன் இணக்கமான காய்கறி மசாலா இட்லி, சாம்பாரில் தோய்ந்த மினி நடனமாடும் மினி இட்லிகள் என்ற பல விதங்களோடு இட்லிகள் இன்னமும் பவனி வந்து கொண்டுதான் உள்ளது.
இட்லி ரவையுடன் உளுந்து மாவை அரைத்து சேர்த்து செய்யும் இட்லிகள் சிலசமயம் ருசியாக அமைவதில்லை. எப்போதும் போல் இட்லி அரிசியை ஊற விட்டு அரைத்துச் செய்யும், இட்லிகள்என்றுமே சோடை போனதுமில்லை. இன்றும் இட்லியின் சிறப்புக்காகவே பிரபலமான உணவகங்கள் உள்ளன.இன்னமும் இந்த இட்லிகளின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.ஆனால், இட்லி தினம் என்ற ஒன்று முடிந்து விடும் என்பதால் நிறுத்திக் கொள்கிறேன்.
என் இந்த பழைய மீள் பதிவோடு இந்தப் பதிவுக்கும் வந்து படிக்கும் என் அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப்பதிவுக்கு என்னால் பதில் தரஇயலாதெனதான் நினைக்கிறேன்.(பிரயாணத்தின் பிஸியில் உள்ளேன்) நேரம் அமைந்து முடிந்தால் தந்து விடுவேன். இல்லையெனில், ஊருக்குச் சென்று விட்டு வந்த பின் பதில் தருகிறேன். என் நிறைய வேலைகளுக்கு நடுவே, ஏதோ இன்றைய நாளில் ஒரு பதிவிட வேண்டுமென்ற ஆசை வந்து விட்டது. அதனால் என் மீது அன்பு கொண்டு கருத்துக்கள் சொல்ல வரும் அன்புள்ளங்களுக்கு மீண்டும் என்பணிவான நன்றிகள். 🙏
இட்லிக்கென ஒரு நாள் இருப்பது ஒரு ஆச்சர்யம். இட்லிக்கு ஒரு பிரியை இருப்பது அதனினும் ஆச்சர்யம்!
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteஅட..! இட்லிதானே என நினையாமல் உடனே வந்த தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.
இந்த அவசர பதிவுக்கும் ஒரு காரணம் உங்களது பதிவில் இடம் பெற்ற இட்லி தட்டுக்கள். "என்னை கவனிக்கவில்லையா பிரியசகி" என அவைகள் கேட்டது என் மனசாட்சியை உறுத்தவே உடனே நாலு வரியாவது எழுத வேண்டுமென ஆசை துளிர் விட்டு விட்டது. இந்த ஆசைக்கு அழி(ள)வேது சொல்லுங்கள். உங்கள் பதிவில் வந்த அரைமானிப்படி, மானிப்படி அரைக்காப்படி, முக்கப்படி பக்கா மாதிரி இதற்கு ஒரு அளவு உண்டா? எனவே இட்லி தினத்திற்கான பதிவு என் வலைத்தளத்திலும் எப்படியோ ஒரு நிறைவை எய்தும் சந்தோஷத்தை அடைந்து விட்டது. கூடவே நானும். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இட்லியின் மேல் உள்ள தீராக் காதலால் இன்றே பதிவிட வேண்டுமென்று உடனடியாக மீள்பதிவாயினும் சரி என்று ஒரு பதிவிட்டு விட்டீர்கள்! வளர்க்க உங்கள் அன்பு.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
/இட்லியின் மேல் உள்ள...
மீள்பதிவாயினும் சரி என்று ஒரு பதிவிட்டு விட்டீர்கள்! வளர்க்க உங்கள் அன்பு./
ஹா ஹா ஹா. தீராத காதல்..
"வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும். ஆனாலும் அன்பு மாறாதது." பாடல் நினைவுக்கு வருகிறது.
இன்று வீட்டில் இட்லி இல்லை. இப்போது நேரடியான லஞ்சுக்குப் பிறகு வெளியில் செல்ல வேண்டும். முடிந்தால், நேற்று மாதிரி இங்கு மழை இல்லாமல் இருந்தால், இரவுக்காவது இரண்டு இட்லிகளை வெளியே உணவகத்தில் சாப்பிட வேண்டும். (இங்கு ஒரு உணவகத்தில் இட்லி பேமஸ்) இல்லையென்றால் இட்லி என்னுடன் கோபித்துக் கொள்ளும்.:)) தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
என்னதான் இட்லி பிடிக்குமென்றாலும் வெறும் இட்லியை சாப்பிட முடியாது. தோசையைக் கூட வெறுமனே சாப்பிடமுடியும். இட்லி துணைப்பொருள்கள் இல்லாமல் சாப்பிட முடியாது!
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
வெறும் இட்லியை சாப்பிட முடியாது. சின்ன வயதில், உடம்புக்கு முடியாமல் இருக்கும் போது அம்மா சர்க்கரை தொட்டு சாப்பிடச் சொல்வார்கள். சட்னி, இட்லி மி. பொடி இல்லாமல் எப்படி சாப்பிடுவது? கொஞ்சம் சிரமமாக இருக்கும். ஆனாலும் அந்த இட்லியாவது கிடைக்கிறதே என்று இருக்கும். ஏனெனில் எங்கள் பிறந்த வீட்டில் உடம்பு காய்ச்சலில் இருந்து பூரண குணமாகும் வரை, புழுங்கல் அரிசி கஞ்சி, தொட்டுக்க நார்த்தங்காய் உப்பு ஊறுகாய்தான். வேறு எதுவும் கண்ணில் காட்ட மாட்டார்கள். அப்போது அந்த ஜீனி இட்லியே சொர்க்கம்.
இப்போதும் இட்லி என்றால் எங்கள் வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும். அதில் முக்கியமானது. இட்லி மி. பொடிதான். அதற்கு ஏன் இ. மி பொடி என பெயர் வந்தது என்ற காரணம் புரியவில்லை. - (புதன் கேள்வி போல் கேட்கிறேன் விடை தெரிந்தால் சொல்லலாம்.) தோசைக்கும் அதைத்தானே பயன்படுத்துகிறோம். தோசை மி. பொடி என்பது கூட ஒப்புக்கு சொல்வது போல தோன்றும். தோசையை யும் வெறுமனே சாப்பிட பிடிக்காது. தங்களின் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பழைய படங்களையே திருப்பிப் போட்டு புதுசாக எடுக்கும் அட்லீ போல நீங்களும் மீள்பதிவாக்கி விட்டீர்கள் இட்லி பதிவை!
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
மீள் பதிவுக்கு கூட இப்படி ஒரு விமர்சனமா? இட்லி என்பதினால் இதுவோ..?எப்படியும் பதிவும் மீள் பதிவாச்சே என தோல்வி காணாது, வெற்றி பெற்றால் சரிதான்.. :)) நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
திரவ உணவுக்குப் பின் நாம் அனைவரும் முதலில் அதிகம் உண்டு திட உணவு இட்லி தான் இல்லையா..
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
ஆம்.. தங்கள் கருத்து சரிதான்..! குழந்தைகளுக்கு முதலில் தொடங்குவது இந்த திட உணவுதான். இது பக்க விளைவுகளை ஏற்படுத்தாது சட்டென செரிமானம் ஆகி விடும். குழந்தைகளுக்கும் பிடித்தமான உணவு. தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அருமையான இட்லி பதிவு.
ReplyDeleteபிராயணம் செய்யும் போது எடுத்து செல்ல சிறந்த உணவு.
இட்லி மிளகாய் பொடி . இட்லி தேங்காய் வறுத்து அரைத் கட்டி துவையல் என்று கட்டி எடுத்து செல்வோம். தக்காளி வதக்கி அரைத்த சட்னி எல்லாம் கொண்டு போனால் இன்னும் இன்னும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்
வாழை இலையை வாட்டி அதில் இட்லிகளை வைத்து செய்தி தாளில் பொட்டலம் போட்டு எல்லோருக்கும் கொடுத்தால் மகிழ்ச்சியாக சாப்பிட்ட காலங்கள் இனி வராது.
உங்கள் பயணம் சிறப்பாக இருக்கட்டும்.
இட்லிக்கு தொட்டுக்கொள்ள
Deleteநீங்கள் சொல்வது போல குழந்தைகளுக்கு ஆறு மாதம் முதல் இட்லி கொடுக்கலாம் என்று மருத்துவரக்ள் பரிந்துரை செய்வது உண்மை. உடம்புக்கு முடியாமல் இருக்கும் போதும் இட்லி நல்லது. இப்போது இடியாப்பம் கொடுக்க சொல்கிறார்கள்.
ReplyDeleteஉலக இட்லி தினத்திற்கு வாழ்த்துகள். இட்லி பிரியை கமலா ஹரிஹரனுக்கு வாழ்த்துகள், வாழ்க வளமுடன். இட்லியின் பெருமைகளை சொல்லி கொண்டே போகலாம் தான்.
ReplyDelete