முருகா சரணம்
முத்துக்குமரா சரணம்.
முக்கண் புதல்வா சரணம்.
கந்தா சரணம்.
கடம்பா சரணம்.
கார்த்திகேயா சரணம்.
கார்த்திகை பெண்களின்
கண்ணானவனே சரணம்.
அறுமுகவா சரணம்.
ஆறு புஷ்பங்களில்
ஆதியில் தோன்றியவனே சரணம்.
பரமனின் குருவே சரணம்.
பார்வதி மைந்தா சரணம்.
மாலவன் மருகா சரணம்
வேலுக்குரியவா சரணம்.
தேவேந்திரன் மருமகனே சரணம்.
தெய்வநாயகி உடனுறையே சரணம்.
நம்பிராஜனின் மருமகனே சரணம்.
வள்ளியம்மை மணாளா சரணம்.
இத்தனை சரணங்களை உன்னிடம்
சமர்பித்தேன். நீ என்னுடன்
சமர் செய்யும் விதியின் யுத்தத்தை
சமப்படுத்தி, சமனப்படுத்தவும்
என்"நேரத்தை"பார்த்து சரி செய்யவும்
"நேரம்" காட்டும் கருவியேதும்
உன்னிடத்தில் இல்லையா?
நேரம் காலமென்ற ஒன்றை
நோக்காது உன் பக்தர்களுக்காக
ஷண்முகா என்ற பெயர் உனக்கு
பொருந்தி போகுமளவிற்கு
ஷணநேரத்தில் என்றும், நீ
சடுதியில் வருபனாயிற்றே..!
என் மனதின் அருகா(ம)யிலும்
என் நினைவின் அண்மை(ம)யிலும்
நீ எப்போதும் இருப்பதால், உன்
பிரியத்திற்குகந்தந்த
மயில் வாகனமேறி, நீ
பிரியத்துடன் வருவதில் வேறேதும்
பிணக்குகள் உள்ளனவோ.?
இல்லையெனில், இயைந்து நீயும்
விரைவினில் வந்திடப்பா.. என்
வினைகளை போக்கிடப்பா.. உன்
வேலுடன் வந்திங்கே என்னை
வினைகளின் போரினிலின்று
வெற்றிக் கொள்ளச் செய்திடப்பா.
"யாமிருக்க பயமேன்"என்றவன்
யாதுமறியாதவனாய் நிற்பதேனோ?
சூதும், வாதும் தெரியாமல், விதியின்
சூழலில் பிணைந்திருக்கிறேன்.
வேலும், மயிலும் துணையென
நாளும், மனதில் துதித்திருக்கிறேன்.
ஆகையால் தவறாது வருவாய்.
நாட்கடத்தாது வந்தருள்வாய். இந்த
ஆயுளுக்குள் உனைக் காணும்
ஆனந்தத்தையும் தருவாய்.
முருகா.. முருகா.. முருகா.. முருகா..
முருகா.. முருகா.. போற்றி. போற்றி. 🙏.
இது என் பேத்தி (மகள் வயிற்றுப் பேத்தி) வரைந்த ஓவியம்.அவள் வரைந்த இந்த ஓவியமும் என் பதிவுக்கு (கவிதைக்கு) ஒரு மூலதனம்.இந்தப்பதிவு இறைவனின் அயராத முயற்சிகளின், துணையால் உருவான முன்னூறாவது (300) பதிவு. பதிவுலகிற்கு வந்தவுடன் என் முதல் பதிவும் முருகனின் துணையால்தான் அரங்கேறியது. ஆதலால், முன்னூறுக்கும் அவனையே துணையாக அழைத்தேன். சரியென சம்மதித்து துணை வந்த அவனின் கருணைக்கும், அன்பிற்கும் கைமாறாக இன்னமும் அவனைப்பற்றி நிறைய பதிவுகள் எழுத அவன் துணை எப்போதும் வேண்டுமென பிரார்த்தனைகளும் செய்து கொள்கிறேன். 🙏.
இந்தப் பதிவினையும் எப்போதும் போல் படித்துச் சிறப்பிக்கும் என் பாசமான சகோதர, சகோதரிகளுக்கு என் அன்பான நன்றிகளும்.🙏.