Pages

Tuesday, November 12, 2024

விருப்பங்களில் விரும்புவது.

 குணுக்கு.

நேற்று எபியில் சகோதரர் துரைசெல்வராஜ் அவர்களின் தயாரிப்பான  தஞ்சாவூர் அடையை பார்த்தவுடன் எனக்கும் அடை சாப்பிடும் ஆவல் வந்து விட்டது.  அடையும் செய்து சாப்பிட்டு பல மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால், எங்கள் வீட்டு சிறு குழந்தைகள் (பேரன், பேத்திகள்) அடையென்றால், அலர்ஜியாகி வேண்டாமென சொல்லி விடுவார்கள். ஏனோ அவர்களுக்கு இந்த அடை தோசை  பிடிப்பதில்லை. அப்படி பிடிக்க வைக்கவும் (வறுப்புறுத்தி) கற்றுத் தரவில்லை. சாதா மாவினால் செய்யும்  தோசையைதான் விரும்பி பிடித்து  சாப்பிடுவார்கள். நேற்று வீட்டிலும் இட்லி மாவு இல்லை. பின் அவர்களுக்கு என கோதுமை மாவு, ரவை சேர்த்து  கரைத்து விட்ட தோசையாக  வேறு செய்ய வேண்டும். அது வேண்டாமென இந்த குணுக்கைத் தேர்ந்தெடுத்தோம்.

இதுவும் அடை மாவு மாதிரிதான் தயார் செய்து கொள்ள  வேண்டும்.இது அனைவரும் அறிந்ததே..! 


ஒரே அளவில் நான்கு பருப்புக்களையும் (து. ப, பா. ப, க. ப, உ. ப,) ஒவ்வொரு டம்ளர் அளவு எடுத்துக் கொண்டு நன்றாக அலம்பி பின் பருப்புக்கள் மூழ்கும் வரை ஊற வைத்தேன். புழுங்கல் அரிசி ஒரு டம்ளர், அத்துடன் முக்கால் டம்ளர் பச்சரிசி இரண்டையும் எடுத்து அதையும் அலம்பி பின் மூழ்கும் அளவுக்கு நீரில் ஊற வைத்தேன். 

இரண்டும் நான்கு மணி நேரத்திற்கு மேலாக ஊறியதும், முதலில் அரிசி கலவையுடன், சி வத்தல்10 , பச்சை மிளகாய் 3, தேவையான கல் உப்பு, கறிவேப்பிலை நான்கைந்து ஆர்க்கு, ஒரு டீஸ்பூன் பெருங்காயம் பொடி என சேர்த்து மிக்ஸியில் சற்று, கரகரப்பாக அரைத்துக் கொண்டேன். பின்னர் பருப்பு கலவையை நன்றாக அதுவும் தோசைக்குப் போல தண்ணீர் நிறைய விட்டு நைசாக அரைப்பது போல இல்லாமல் சற்று கொரகொரப்பாக கெட்டியாக அரைத்துக் கொண்டேன். 


இத்துடன் தேங்காய் பூ துருவி சேர்க்கலாம். இல்லை பெரியதோ, சின்னதோ, வெங்காயம் பொடிதாக நறுக்கி சேர்க்கலாம். தேங்காய், வெங்காயம் இரண்டுமே இரு வேறு மாதிரியான சுவைகளை கண்டிப்பாகத் தரும். ஆனால், நான் இதை சேர்க்கவில்லை. பதிலாக கொத்தமல்லி தழைகள் வீட்டில் நிறைய இருந்தன. அதில் இரண்டு கைப்பிடி அளவிற்கு எடுத்து பொடிதாக நறுக்கிச் சேர்த்தேன். 


கடாயில் சமையல் எண்ணெய் விட்டு அடுப்பில் ஏற்றிய பின், பருப்புக்களின் நிஜமான சுவையுடன்  கூடிய அந்த கலவையை கொஞ்ச கொஞ்சமாக கிள்ளி சிறு சிறு உருண்டையாக எண்ணெயில் போட்டு எடுத்தேன். மாலை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட்டனர். இரவு மோர் சாதத்திற்கும் அவர்கள் விருப்பமாக அதை தொட்டுக் கொண்டு சாப்பிட்டனர்.( இரவில் எப்போதும் அவர்களுக்கு மோர் சாதந்தான் பிடிக்கும்.) 


அவர்களுக்கு பிடிக்காத அடையை செய்து "உடம்புக்கு நல்லது..! அத்தனையும் புரதம்..!  சாப்பிடு, சாப்பிடு..! " என கண்டிப்பதை விட, அவர்களுக்கு பிடித்ததை செய்து தரும் போது அவர்களும் அதே புரதத்தை விரும்பி சாப்பிடுவதை பார்க்கும் போது சந்தோஷம் வருகிறது. ஆனால் என்ன ஒன்று..! எண்ணெய்யில் பொரித்து தருவதுதான் மனதிற்கு கஷ்டமாக இருந்தது. சரி.. என்றோ ஒரு நாள்தானே இப்படி என சமாதானமடைய வேண்டியதுதான்...! இப்படியாக இந்த குணுக்கு நேற்று எங்கள் வீட்டில் எதிர்பாராமல் தோன்றியது. 


இன்று மீதமிருக்கும் மாவு அதன் துணையாக பல பொருட்களை சேர்த்துக் கொண்டபடி, நான் வேண்டாமென ஒதுக்கிய வெங்காயத்தின் மனம் நொந்து விட்டதால், அதையும் பேசி  சமாதானப்படுத்தி உடன் அழைத்துக் கொண்டு அடையாக மாறும் என நினைக்கறேன். மாற்றங்கள் நம்மை போல், இல்லை நம்மை விட அதற்கும் பிடிக்குமல்லவா? 

வேறு படங்கள் எதுவும் ஆரம்பிக்கும் போது எடுக்கத் தோன்றவில்லையாததால், எடுத்துள்ள படங்களுடன் சூட்டோடு சூடாக எழுதிய பதிவிது. நீங்களும் இந்த மாதிரி அனேக முறைகள் உங்கள் வீட்டில் செய்து ருசித்திருப்பினும், இந்த சூடான குணுக்கை எடுத்துக் கொள்ளுங்கள். 

நன்றி என் நட்புலக சகோதர சகோதரிகளுக்கு.🙏. 

Saturday, November 9, 2024

எதிர்பார்க்காத நிமிடங்கள்.

நான் சின்ன வயதில் அம்மா வீட்டில் இருக்கும் போது நாங்கள்..(நாங்கள் என்றால், வீட்டிலுள்ள அங்கத்தினர்) திரைப்படங்களை அடிக்கடி  திரையரங்கத்திற்கு சென்று பார்ப்பது கொஞ்சம் அரிதானதுதான். ஆனாலும், நல்ல குடும்ப படங்கள், பக்தி படங்கள், என்றால், வீட்டில், அதுவும் பள்ளி பரீட்சை முடிந்த  விடுமுறை தினங்களில், அழைத்துச் செல்வார்கள். வேறு எவர்களோடும், (உறவு முறை, நட்பு) எங்களை அனுப்பியதில்லை. என் அண்ணாவுக்கு மட்டும் கல்லூரி காலங்களில் தன் நண்பர்களோடு செல்ல அனுமதி கிடைத்து விடும். அம்மா, பாட்டி இவர்களோடு நல்ல படமாக இருந்தால் நாங்கள் சேர்ந்து போவோம். ஆனால் எல்லாமே வந்து ஒரிரு ஆண்டுகள் ஆன பழைய படங்கள்தாம். அவர்களோடு சென்று அவர்கள் காலத்திலும் வந்த ஒரிரு படங்களையும் பார்த்துள்ளேன். 

அப்போதுள்ள  நாங்கள் வாழ்ந்த காலகட்டத்தில் வேறு பொழுது போக்குகள் என்றில்லை. அருகில் இருக்கும் கோவில்களில் ஏதேனும் விஷேடங்கள், என வந்தாலொழிய கோவில்களுக்கு தினமும் செல்லும் பழக்கமும் இல்லை. இப்போது போல் மூலைக்கு மூலை பார்க்,தெருவுக்கு தெரு  விதவிதமான பேன்சி கடைகள் என எதுவும் உற்பத்தியாகவில்லை. வாகனப் பெருக்கங்ககளும் அவ்வளவாக இல்லை. க. கெ. கு. சு என்ற பழமொழிக்கேற்ப அங்கே உள்ள  திரையரங்கம் ஒன்றுதான் வழி. 

அப்போது தி. லி யில்  சென்ட்ரல், பார்வதி,ரத்னா, பாப்புலர், , ராயல் தியேட்டர் என அனேக திரையரங்குகள். இருந்தன. அப்புறம் பூரணகலா, இன்னும் பல திரையரங்குகள் புதிதாக வேறு முளைத்து வந்தன. அங்கெல்லாம் சென்று கூட ஓரிரு படங்கள் பார்த்துள்ளோம். (இப்போது அந்த திரையரங்குகள் இருக்கிறதாவென தெரியவில்லை) பொதுவாக பெரிய நகரங்களில் தீபாவளிக்கு, பொங்கலுக்கென வெளியிடும் புதுப் படங்கள் இங்கு வருவதற்கே தாமதமாகி விடும். ஆனால், அப்போது வரும் அந்த படங்களை பார்க்க வேண்டுமென இருந்த ஆர்வங்கள் இப்போது என்னவோ சுத்தமாக இல்லை. அது வேறு விஷயம். 

ஒரு தீபாவளிக்கு ரீலீஸ் ஆகும் படங்களை அடுத்த தீபாவளிக்குள்...!! , இல்லை, அடுத்த தீபாவளியன்று வேறு ஏதாவது திரையரங்கில் அதே படங்களை போட்டால், செல்வோம். அதற்கு கூட அந்த தீபாவளி, பொங்கல் நாளன்று செல்ல மாட்டோம். ஒரு வாரத்திற்கு மேலாகவே, திரை அரங்குகளில் ஒரே கூட்டமாக இருக்கும் என வீட்டில் பல அபிப்பிராயங்கள் சொல்வார்கள். 

தீபாவளி முடிந்து ஒரு மாதங்களுக்கு மேலாகவே  தினசரி ஒவ்வொரு காட்சிகளுக்கும் வரும் கூட்டங்கள் ஆடி அடங்கிய மறுநாளோ, இல்லை, அதற்கடுத்த நாளோ,"இப்படம் இன்றே கடைசி" என்று திரையரங்கிலிருந்து அந்த படத்தை எடுத்து விடுவார்கள் என்ற ஒரு நிர்பந்த காலகட்டத்தில் அந்த படத்தை ஏற்கனவே ஒரு /பல முறை பார்த்தவர்கள் (வேறு யார்..? வீட்டின் அருகில் இருக்கும் சுற்றங்கள், நட்புகள்தான் )  "ஐயோ..! இன்னுமா நீங்கள் அந்த படத்தை பார்க்கவில்லை..? அதில் அந்த  கதாநாயகன், கதாநாயகி நடிப்பும் அந்த கதையும், முடிவும், பாடல்களும் அவ்வளவு  நன்றாக இருக்கிறது. இப்படி இதுநாள் வரை  எப்படி பார்க்காமல் இருக்கிறீர்களே?" என வீட்டில் அம்மா, பாட்டியிடம் மதிய வேளைகளில் அங்கலாய்த்த பின், "ஒரு வேளை அதை பார்க்கா விட்டால் ஏதேனும், உலகமகா குற்றமாகி விடுமோ" என்ற அவர்களின், (சமயங்களில் நானும் அவர்களுடன் இணைந்து ஏற்படுத்தும்) நினைப்பின் அலசலில், " இன்று போகலாமா.?" என ஒரு மட்டும் முடிவு செய்து புறப்படுவோம். 

அந்த அளவுக்கு திரைப்படங்கள் பார்க்க தயக்கங்கள், கட்டுப்பாடுகள். இத்தனைக்கும் தரை டிக்கெட் விலை நாலணாதான். பெஞ்ச் டிக்கெட் எட்டணா. அந்த பெஞ்சில் பின்னாடி சாய்ந்து கொள்ள இரண்டு கட்டைகள் வைத்த பெஞ்ச் கட்டணம் முக்கால் ரூபாய், தனித்தனியாக உட்கார வசதியாக இருக்கும் சேர் ஒரு ரூபாய் என படிப்படியான வசதிகளுக்கு ஏற்ப கட்டண விகிதங்கள் வேறு. அதில் அந்த முதலில் சொன்ன ஒருவருக்கு நாலணா என்றால், மூவர் சென்றால் கூட, முக்கால் ரூபாயாகி விடும். அது வீட்டின் அன்றாட இதர செலவுகளுக்கு பயன்படுமே என்ற நினைவுகள் வேறு வந்து படங்கள் பார்ப்பதை சில சமயம் தடை செய்யும். அப்போது வீட்டின்  பணத்தட்டுப்பாடுகள் சினிமா பார்க்கும் ஆசைகளுக்கு பெரும்பாலும் தடை போடும். 

நாட்கள் செல்லச் செல்ல திரைப்படம் பார்ப்பதற்கான கட்டணங்கள், அணாவிலிருந்து ஒன்று, இரண்டென்ற ரூபாய்க்கு வந்து, ஐம்பது நூறாக மாறி, இன்று ஐநூறு, ஆயிரம் எனவும் வந்து விட்டது. அதுவும் முதல் நாளாகிய  இன்றே பார்த்து விட வேண்டுமென்பவர்களுக்கு ஆயிரத்திலிருந்து மேலும் பல ஆயிரங்களை சேர்த்து தரும்படியாக (பிளாக் விற்பனையில்) சூழலைக் கூட தந்து விடும். 

எங்கள் திருமணத்திற்குப் பின் நான் சென்ற படங்களையும் எண்ணி கணக்கில் சொல்லி விடலாம். கூட்டு குடும்பம், குடும்பத்தில் பெரியவர்கள் என்ற மரியாதைகள், அவர்கள் விருப்பமின்றி வெளியில் செல்ல முடியாத சூழ்நிலைகள், என வாழ்ந்த போது சினிமாக்கள் எல்லாம் ஒரு  கனவுதான்.(ஆமாம்.. இதில் இரவு நேர கனவு பலிக்குமா? பகல் நேர கனவு பலிக்குமா? "பகல் கனவு பலிக்காது" என்பார்கள்.ஏன் அப்படி? பகலில் அவ்வளவாக ஆழ்ந்த உறக்கம் வராது எனபதினாலா ? பகலில் சட்டென  முழிப்பு வந்து விடும் போது கண்ட கனவுகள் சட்டென அது போலவே கரைந்து விட வாய்ப்புள்ளது என்பதாலா..? அதைப்பற்றி பிறகு ஒரு முறை விவாதிப்போம். :)))    ) பிறகு வந்த காலங்களில், சிறு குழந்தைகளை அழைத்து செல்வதென்பதும், இயலாத காரியங்களாக போய் விட்டது. 

முதன் முதலில் மக்களுக்காக தோன்றிய பொதிகை/ தூர்தர்ஷன் தொலைக்காட்சிகள்தான் ஏதோ ஒரு  தமிழ் படத்தை ஞாயிறன்று மாலை இடையிடையே ஏகப்பட்ட விளம்பரங்களுக்கு இடையே ஒளிபரப்பி, என்னைப் போல் திரையரங்கம் சென்று  திரைப்படம் பார்க்காதவர்களுக்காக புண்ணியம் தேடிக் கொண்டது. அப்போது எங்கள்  புகுந்த வீட்டிலும் டி. வி கிடையாது. எதற்கு இடத்தை அடைத்துக் கொண்டு என வாங்கவில்லை. தெரிந்தவர் வீட்டிற்கு (ஒரளவுக்கு எங்கள் புகுந்த வீட்டில் உள்ளவர்களுக்கு எப்படியோ உறவு முறை என்ற சொந்தமும் கூட..!) சென்று, நான், எங்கள் நாத்தனார், அவரின் மகள், மகன் சமயத்தில் என் மாமியார் என அனைவரும் சேர்ந்து சென்று சில படங்கள் பார்த்திருக்கிறோம. அவர்கள் வீட்டில் அப்போதுதான் டி. வி. வாங்கியிருப்பார்கள் போலும். முகம் சுளிக்காமல் வரவேற்று உபசரிப்பார்கள். 

பின்னர் நாளடைவில்  நாங்கள் சென்று வந்த அவர்கள் வீட்டிலும் இந்த மாதிரி நிறைய பேர் பார்க்க வரவே படம் பார்க்க தலைக்கு ஒரு ரூபாய், எட்டணா என வசூல் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். நல்லதொரு வரும்படிக்கான வழி.:)) (எங்களிடம் அவர்கள்  கேட்கவில்லை. ஆனாலும் எங்கள் மனசாட்சி உறுத்தவே அதன் பின் அங்கு போவதற்கும் எங்கள் புகுந்த வீட்டில் தடையாகி விட்டது.)

அன்று மாலை படம் ஆரம்பித்து விடும் நேரம் நாங்கள் இருந்த சித்ர குளம் தெருவெல்லாம் மக்கள் கூட்டத்தையே காண முடியாது மயிலை கபாலீஸ்வரர் கோவில், மாட வீதிகள் எங்குமே காற்றாட கால் வீசி கூட்டங்களின் இடர்கள் இன்றி அன்று நடக்கலாம். மெரீனா, சாந்தோம் கடற்கரையில் கூட்டங்களின் இரைச்சகள் இல்லாத அலைகளின் ஓசையை மட்டும் ஆனந்தமாக கேட்டு ரசிக்கலாம். அப்படியும் ரசித்திருக்கிறோம். அது ஒரு காலம். 

அதன் பின் சில வருடங்களில் எங்கள் வீட்டில் எப்படியோ டி. வி  (இத்தனைக்கும் அது சின்னதான பிளாக் அண்ட் ஒயிட் டி. வி தான்.) வாங்கியவுடன் அடுத்த  ஞாயறு மாலையை  ஞாயறு முடிந்த மறுநாளாகிய திங்களிலிருந்தே எண்ண ஆரம்பித்தோம்.  வரும் ஞாயறு நல்ல படமாக, இதுவரை பார்க்காத படமாக இருக்க வேண்டுமே என அனைவரின் எதிர்பார்ப்புகளும் இருக்கும். (ஆனால், பழைய படங்களின் அணிவகுப்பே தொடர்ந்து வரும்.) 

அதன் பின் அனேக சேனல்களின் உதயங்கள் வந்து தொலை காட்சி பெட்டியை கலகலக்க வைத்தன. வாரம் ஒரு முறை ஒவ்வொன்றிலும் மாறுப்பட்ட படங்கள். அதன் பின் கேபிள் கனெக்ஷன்களின் உலா வரும் ஒளிக்கதிர்கள். தினமும் ஒரு படம்.... ! (ஆனால் பார்க்கத்தான் நேரம் இருக்காது.குழந்தைகள் அவர்களின் பள்ளி, படிப்பு, வேலைகள், கடமைகள் என அப்போது  கீழே அமர கூட தயங்கும் கால்கள். ) வார விடுமுறைகளில் என்றாவது குடும்பத்துடன் அமர்ந்து நமக்கு பிடித்தமான படங்களை வாடகைக்கு எடுத்து டி. வியுடன் இணைத்துப் பார்க்கும் வசதிகள் என (அப்போதுதான்  வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமான டிபன்கள், விதவிதமான சாப்பாடுக்கள், அதை எடுத்து பரிமாறும் வேலைகள் என எனக்கு  அதே கடமைகள் காலோடு கையையும், கண்களையும் கட்டிப் போடும்.) காலம் தன் கால்களை வீசி முன்னேற ஆரம்பித்தது. ஆனால், எனக்கு திரைப்படங்களை பார்க்க மனதில் விருப்பங்கள் இல்லாமலும் போனது.  ( அது இப்படி படங்களை பார்க்கும் நேரத்தில் நம்மால் பார்க்க கூட  இயலாமல் போகிறதே என்ற விரக்தி தந்த வெறுப்பாக கூட இருக்கலாம்:))  இது அந்த வயதின் தாக்கம். ) 

இப்போது தொலைக்காட்சி பெட்டிகளே( டி. வி) விதவிதமான முன்னேற்றங்களை சந்தித்து வந்தும் கூட, அதில் இலவசமாக புது படங்களையே நம் சௌகரியபடி  எப்போதுமே பார்க்கும் சந்தர்ப்பங்கள் எத்தனையோ வந்தும் கூட, படங்கள் பார்க்கும் ஆர்வம் எனக்கு போயே போச்சு...! 

இத்தனை பீடிகை இப்போதெற்கு என்ற எண்ணங்கள் உங்களுக்கு வரலாம். நீங்களும் என்னுடைய அந்த கால பழைய பல்லவிகளை கேட்டு, அதை நினைத்து சற்றே சலிப்பாவதற்குள் இந்த தீபாவளிக்கு நான் சற்றும் எதிர்பாராது மகன்கள் அன்று வெளி வந்த நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த படமான "அமரனை" பார்க்க ஆன்லைனில் டிக்கெட் எடுத்து விட்டதால், குடும்பத்துடன் சென்று வந்தோம் என்பதை சொல்லி விடுகிறேன். 

"படம் நன்றாக உள்ளது நீங்களும் கண்டிப்பாக வாருங்கள்" என சொன்னதில் அனைவரும் தீபாவளியன்றே மதியம் இரண்டாவது காட்சிக்கு சென்று வந்தோம். 

அன்று காலை அந்த படம் இங்கு  ரீலீஸ் ஆகி, முதல் காட்சி வந்து பின் இரண்டாவது காட்சிக்கு நான் கடந்து வந்த என் இத்தனை வருட வாழ்நாளில், முதன்முறையாக சென்ற முதல் புது திரைப்படம்... ,! அதுவும் தீபாவளியன்றே சென்று வந்த திரைப்படம்..! என்றொரு  பெருமையை அமரன் பிடித்தது. (பெருமை எனக்கா, இல்லை, அந்த படத்திற்கா, என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். அதை உங்கள் கருத்தில் அவசியம்  சொல்லுங்கள்.அன்புடன் எதிர்பார்க்கிறேன். ஹா ஹா) 

இரண்டு நாள் கழித்து வந்த  சென்ற ஞாயிறன்று  மீண்டும் ஒரு திரைப்படம். நடிகர்  மம்முட்டியின் மகன் நடித்த "லக்கி பாஸ்கர்" என்ற  திரைப்படம். இது காலை 9 மணிக்கே ஆரம்பம் .! இதுவும் தீடிர் என்றுதான் நான் சற்றும் எதிர்பாராமல் கிடைத்தது. 

முதலாவது படம் நாட்டுக்காக தன்னையே அர்ப்பணிக்கும் உண்மை கதையை மையமாக கொண்டு எடுத்தது. இரண்டாவது படம் வீட்டுக்காக எதையும் செய்ய  துணிச்சலுடன் செயல்படும் வகையை சார்ந்த படம். இரண்டுமே வெவ்வேறான இரு கோணங்கள். அதில் நடித்தவர்களின்  உழைப்பையும், திரைப்படத்தின் மற்ற துறைகளில் சிறந்த அக்கறையுடன் செயல்பட்டவர்களையும் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். 

எனக்குத்தான் இரு நாட்களும், வீட்டின் வேலைகளோடு வெளியிலும் அலைந்து திரிந்ததில் மிக அசதியாக இருந்தது. அதனால் ஒரு வாரமாக காலையிலேயே பதிவுகளுக்கு வர இயலவில்லை. 

இதனால், இத்தனை நாட்கள் எந்த படங்களையும் பார்க்க அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்தது போய், இந்த இரு புது படங்களை அடுத்தடுத்து பார்த்த நிலையில், இப்போது  படங்களை பார்க்கும் பழைய ஆசைகளும் மீண்டும் மனதில் தலை தூக்கி ஏற்படாமல் இருக்க வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். என்ன இருந்தாலும், ஆசைகள்தான் நம் அழிவுக்கும் ஒரு மூல காரணமல்லவா.. ? 

Thursday, November 7, 2024

கந்த சஷ்டி.


உலகத்தை காத்து உலக மக்கள் அனைவருக்கும் அருள் பாலிக்கும் சிவபெருமானின் கோப கனலில் இருந்து தோன்றியவர் "முருகப் பெருமான்" என்பது நாமறிந்த விஷயம். 

அவரின் குழந்தை ஒருவரால்தான் தேவர்களை சித்ரவதைபடுத்தும் அசுரர்களை வதைக்க முடியும் என்ற காரணத்தால், அவரின் மோனதவத்தை  கலைத்து, அவர் மீது தன் மலர் அம்பை ஏவி,அவரின் கோபத்தை தூண்டிய மன்மதன் அக்கணமே எரிந்து சாம்பலானாலும், அந்த நெருப்பு ஜுவாலைகள் அணைய பெறாததால், அதனின் வெப்பம் தாங்க மாட்டாமல், தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி யோசித்து  வாயுபகவானின் உதவியோடு அந்த தீ ஜுவாலையை சிவனின் "சேயோனாக" பாவித்து சரணவ பொய்கையில் ஆறு தாமரை மலரில் கொண்டு சேர்த்தனர். 

பின்னர் மன்மதனின் மலர் அம்பில் தன் தவம் கலைத்த சிவனிடம் உண்மை நிலையை தேவர்கள் எடுத்தியம்பியதும் அவர் கருணை கொண்டு, மன்மதனையும் உயிர்பித்து தாமரை மலரில் சரணடைந்திருக்கும் தீ ஜுவாலைகளையும் ஆறு ஆண்மகவு குழந்தைகளாக உயிர்பித்தருளினார். கூடவே அவரின் அருளால் ஆறு சேடிமார்களும் உருவாகி அந்த குழந்தைகளை சீராட்டி பாராட்டி வளர்த்து வந்தனர்.

ஒரு சமயம் தன் சதி பார்வதியுடன் தேவியுடன் சரவண பொய்கைக்கு வந்த சிவபெருமான் தான் தேவர்களுக்கு அளித்த வாக்கின்படி, தன் தேவியிடம் "இவை நம் குழந்தைகள்.என்  கோபத்தீயின் வெப்பத்தில் உருவானவர்கள். எனவே இவர்கள் உன் பிள்ளைகளும் ஆவார்கள். உன்னருளால் இவர்களை ஒரே ஒரு குழந்தையாக்கி தேவர்களின் இன்னலை தீர்ப்பாயாக.." என்று கூறவும், இறைவி தன்னை நோக்கி ஓடி வந்த ஆறு குழந்தைகளை "ஆறுமுகா"என்று அன்போடு அழைத்து தன் கைகளால், வாரி ஒன்று போல் சேர்த்து  அணைக்கவும், அனைவரும் ஒன்று சேர்ந்த "முத்துக்குமரன்" அங்கு உருவானான்."அம்மா, அப்பா" என்று வாய் நிறைய அழைத்த அந்த " சிவசக்திபாலனை"  கண்டு தந்தையும், தாயும் அகமகிழ்ந்தனர். 

அதுவரை குழந்தைகளை வளர்த்து வந்த அந்த சேடிமார்களை அழைத்து எங்கள் மகன் "கார்த்திகேயனை" நீங்கள் இதுவரை கவனமாக நான் கூறியபடி பராமரித்து வளர்த்ததினால், நீங்கள் அனைவரும் கார்த்திகை நட்சத்திரமாக அவதரித்து வானுலகில் சிறப்புடன் வாழ்வீர்களாக..உங்களை கார்த்திகை பெண்கள் என அனைவரும் போற்றி வழிபடட்டும்" என்று சிவபெருமான் உரைத்ததும் அவர்கள் அன்று முதல் வானில் நட்சத்திரமாக இருக்கும் பாக்கியத்தைப் பெற்றார்கள். சிவனும், தன் மனைவி பார்வதி தேவியுடன், இது நாள்வரை சரவண பொய்கையில் வளர்ந்த தன்னருமை மகனான, "சரவணனை" அழைத்துக் கொண்டு தன்னிருப்பிடமான சிவலோகத்திற்கு சென்றார். 

காலங்களின் வேகங்களில் அங்கே தேவர்கள் அசுரர்களால் துன்படுவதை நாரதர் சிவனிடத்தில் வந்து சுட்டிக் காட்டி உரைத்தார். தக்க தருணத்தில் வீரமான வாலிப வயதை எட்டியிருந்த தம் மகனை அழைத்து, "உமைபாலா.! " நீ தேவர்களின் இன்னல்களை தீர்ப்பதற்காக பிறந்தவன். அந்த நேரம் இப்போது நெருங்கி விட்டது. என்னை நோக்கி பல்லாயிரம் காலம் தவம் செய்து, என்னிடம் அழியா வரம் வாங்கி என்னைப் போல உள்ளவரால் தான் தனக்கு மரணம் வர வேண்டுமென வரம் பெற்ற சூரபத்மனை, என் அம்சமாக பிறந்த நீதான் அழித்து வர வேண்டும். உன்னால் மட்டுமே அவனுக்கு அழிவு என்பது அவன் பெற்ற வரம். அதனால், நீ சென்று அவனை வென்று வா..! " என கட்டளையிட்டார். 

தாயின் ஆசிபெற சென்ற அழகெல்லாம் ஒன்று திரண்ட "முருகேசன்" அன்னையை தொழுது அவளருளை வேண்டி நின்றார். பார்வதி தேவியும் பாசத்துடன் தன் மைந்தனை ஆரத்தழுவி உச்சி முகர்ந்து, தன் சக்தியினால் உருப்பெற்ற சக்திவேலை அவனிடம் தந்து அந்த "வடிவேலவனை" வாழ்த்தி விடை தந்தாள்.

 "கந்தகுருநாதன்" களைப்பின்றி களிப்புடன் படை செலுத்தி சென்று சூரபத்மனை அழித்து தேவர்களை காத்து தன் வீரச் செயலுக்காக தேவர்கள் அனைவரும் நிச்சயித்த வண்ணம் தேவேந்திரன் மகளை மணமுடித்து திருச்செந்தூரில் அம்மையப்பனாக அனைவருக்கும் அருள் புரிந்தார். 

முருகா, முத்துக்குமரா, சிவகுருநாதா, ஆறுமுகா, சிவபாலா, கந்தா, கடம்பா, கார்த்திகேயா, சரவணா, உமை பாலா,  முருகேசா, வடிவேலா, கந்தகுருநாதா, சிவகுமரா, சண்முகா, வேல்முருகா என்ற நாமாவளிகளோடு இன்று என்னை பதிவு எழுத வைத்த எந்தையே..! என்கண் தந்தையே...! 

உன் அன்பின் கருணை எனக்கென்றும் வேண்டுமென உன் தாள் பணிந்து வேண்டிக் கொள்கிறேன். 🙏🙏🙏.🙏🙏🙏. 

கீழுள்ள இந்த தகவல்கள் மட்டும் மாலை மலரில் படித்ததினால், அதையும் என் பதிவோடு சேர்த்துள்ளேன்

சூரபத்மனை அழித்து வரும்படி முருகனுக்கு உத்தரவிட்டார். முருகனுக்கு துணையாக செல்ல பெரும் படையையும் ஈசன் உருவாக்கி கொடுத்தார். மனிதர்களின் ஆணவத்தை ஒழித்த முருகப்பெருமான் இதற்காக ஈசன் திருவிளையாடல் ஒன்றை அரங்கேற்றினார்....

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்படும்போது அதில் இருந்து வெளிப்பட்ட வெப்பத்தை தாங்கமுடியாது சிவனின் அருகில் இருந்த பார்வதிதேவி பயந்து ஓடினார். அப்போது பார்வதிதேவியின் பாதச் சிலம்புகளில் இருந்த நவரத்தினங்கள் சிதறி விழுந்தன.

அந்த நவமணிகள் மீது இறைவனின் பார்வை பட்டதும் அவைகள் நவசக்திகளாக தோன்றினர். அந்த நவசக்திகளின் வயிற்றில் (வீரவாகுவை மாணிக்கவல்லியும், வீரகேசரியை மௌத்திகவல்லியும், வீர மகேந்திரனை புஷ்பராகவல்லியும், வீர மகேசுவரரை கோமேதகவல்லியும், வீர புரந்தரை வைடூரியவல்லியும், வீர ராக்கதரை வைரவல்லியும், வீர மார்த்தாண்டரை மரகதவல்லியும், வீராந்தகரை பவளவல்லியும், வீரதீரரை இந்திரநீலவல்லியும் பெற்றெடுத்தனர்) வீரவாகுதேவர் முதலான ஒரு லட்சத்து ஒன்பது பேர் (100009) தோன்றினர். இவர்கள் அனைவரும் முருகனின் படைவீரர்கள் ஆனார்கள்.

இதையடுத்து பார்வதி தேவியும் தன்னைப்போன்ற ஒரு சக்தியை உருவாக்கி அதனை தனது சக்திகள் யாவும் கொண்ட ஓர் வீரவேலாக உருமாற்றினார். வெற்றிதரும் அந்த வீரவேலை முருகனிடம் வழங்கினார். ஈசனும் தன் அம்சமாகிய பதினொரு ருத்திரர்களைப் படைக்கலமாக்கி முருகனிடம் தந்தார்.

அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேரேறி தெற்கே இருந்த வீரமகேந்திரபுரியை நோக்கி சென்றான். 

நன்றி.. மாலை மலருக்கு. 🙏. 

உண்மையில் "சிவகுமாரன்"    மனிதர்களாகிய நம் மனங்களில் தோன்றும் காம, குரோத, லோப, மோக, மத, மாற்சரியங்கள் என்ற ஆறு வகை குணங்களை அழிக்கத்தான் சிவபெருமானின் அம்சமாக உலகில்  பிறப்பெடுத்திருக்கிறான்...! இந்த ஆறும்தான் அசுரனாக, ஒரு சூரபத்பனாக நம்முள் இருப்பவை. மாறாக அவனை தூய உள்ளன்போடு வணங்கி, அவன் தாளையன்றி வேறொன்றும் நினையாமல், வாழ்ந்து வந்தால், வீடுபேற்றை (மறு பிறப்பொன்று இல்லாத நிலை.) தருவான்.அதை அந்த "சண்முகநாதனை" தர விடாமல் தடுப்பதும் நம்முள் குடி கொண்டிருக்கும் இந்த ஆறு குணங்கள்தாம்.  அந்த ஆணவ நிலையை உணர்ந்து அந்த சூரபத்மனை போல "சிவசக்தியின்" புனிதமான வேலை ( அவன் நாமங்களை எப்போதும் இடையறாது நினைத்து ஜபிப்பது)  நம்  மார்பினில் வாங்கி சேவலாகவும், மயிலாகவும் நம் அகம்,புறத்தை இருகூறாக்கி, அந்த "வேல்முருகனின்" பாதங்களோடு ஐக்கியமாக்குவதே இந்த சஷ்டி விரதத்தின் நோக்கம். 

கந்த குரு கவசம்

நிழல் வெயில் நீர் நெருப்பு மண் காற்று வானதிலும்

பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்

உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்

யானெனதற்ற மெய்ஞ்ஞானமதருள்வாய் நீ

முக்திக்கு வித்தான முருகா கந்தா

சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா

ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா

ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்

தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்

சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்

பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ

ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ

அடியனைக் காத்திட அருவாய் வந்தருள்வாய்

உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா

தேவாதி தேவா சிவகுரோ வா வா வா

வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா.. 🙏🙏.

கந்தவேல் தன் கைவேல் கொண்டு நம்மை எப்போதும் காத்து ரட்சிக்க மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.🙏.

தீடிரென இந்தப்பதிவை எழுத என்னை நினைக்க வைத்ததும் "அவன்" அருள்தான். இரவு மணி 1ஐ நெருங்கியும் விடாது எழுதி முடிக்க வைத்ததும் "அவன்"அருள்தான்.🙏. 

அனைவருக்கும் கந்தசஷ்டி வாழ்த்துகள். கந்தன் அருள் அனைவருக்கும் கிடைத்திட பிரார்த்தித்துக்கொள்கிறேன். 🙏. 

முருகன் அருளால் எழுதிய இப்பதிவுக்கு வந்து படிக்கும் அனைவருக்கும் என் அன்பான பணிவான நன்றிகள். 🙏.