Pages

Friday, May 3, 2024

நேற்றைய வானிலை அறிவிப்பு.

வானிலை மன மாற்றங்கள்


பரபரப்பின்றி பட்டப்பகல்

முழுவதும், பாதை மாறாமல்

பயணித்து வந்த பகலவனுக்கு

பாத பூஜையுடன் இன்று வரவேற்பு.

உதயவன் உதித்ததிலிருந்தே 

உலா வரும் காலங்கள் தோறும் 

வழக்கமான முறையிலேயே நடந்து 

வந்திருந்தாலும், செல்லும் திசை

வழியனுப்புவது போலவே

வரவேற்பதை தன் முறையாக 

வைத்துக் கொண்டிருந்தன

மேல்திசை பொழுதுகள். 


வாயு பகவானையும், 

வருண பகவானையும்,

கிஞ்சித்தும் தன் உதவிக்கென

கிட்டதட்ட வருடக்கணக்காக கூடவே

வரவழைத்துக் கொள்ளாமல்,

தனியாளாக நின்று வெற்றிக் கொடி

நாட்டி  வந்த அருணனுக்கு

அன்று அலங்கார மலர் வளைய 

அன்பளிப்புகள்.


பாராட்டுதல்களுக்கு முகம் சிவந்த

பாஸ்கரன் தன் பங்குக்கு

வானத்தை செங்குழம்பு

வர்ணமாக்கி அலங்கரித்தான். 

பார்க்கும் இடமெல்லாம், மேலும் தன்

பாதம் பதித்த இடமெங்கும், 

சென்னிற பொன் வானம்

தங்கமென தான் நினைக்கும்

தகதகப்பை தந்து மனம்

தளர விடாதிருக்கச் செய்தான்


மனம் கொள்ளா மகிழ்ச்சிகள் 

மலர்ந்திருந்த தருணத்தில், 

நறு மணம் வீசும் மலர்களின்

மனம் மாறாத பொழுதினில்

வழக்கமான இருட்டுப் போர்வையை

வானம் தீடிரென உதறிப் போட்டது. 

தன்வசம் இதுகாறும் பயனற்று கிடந்த

வண்ண ஒளி விளக்குகளை

வாரித் தெளித்து மேலும் தன் 

வனப்பை வெளிப்படுத்த முயன்றது. 

வான் மேகங்கள் அதற்கு துணையாக

கரவொலிகள் இசைத்திட்டன. 


வாயுவும், வருணனும்  சற்று

வாடி முகம் சுளித்திருந்த போதினும், 

மேலிடத்தின் உத்தரவுகளுக்கேற்ப

மேல்திசை களிப்புடன் கலந்தனர்.

ஆதிக்கம் செலுத்தி ஆர்ப்பரிக்காது

அமைதியுடன் தன் பங்கு காற்றை

அவசரமாக தந்தார் வாயு பகவான். 

பூமியின் பொறுமை மனதிற்காக 

பூவைப் போல் வாசல் தெளித்து 

மழைக்கோலம் போட்டு, அதன்

மனதை மகிழ வைத்து, சற்றே

மமதையும்  கொண்டார் வருணன். 


இதுவெல்லாம் எனக்கு சாதாரணம்

இந்த இறுமாப்புக்கள்  

நாளை பொடி பொடியாகும் 

நான் பவனி வந்தால், ஒரு 

நாள் பொழுதில்

நகர்த்தி விடுவேன் என்றார்

நாளும் வலம் வரும் சூரியனார். 

பாராட்டு பத்திரத்திரத்தில் ஒரு 

பக்கம் கூட புரட்டி

படிக்க ஆரம்பிக்கவில்லை. அதற்குள்

இப்போராட்டங்களை கண்டதில், 

பெரும் போர் களமாகியது அவர்  

போரிடும் நெஞ்சம்.