அந்த பரந்த வெட்ட வெளியில் ஓரிடத்தில் நண்பர்கள் பேச்சு மாநாடு தொடங்கியது.
"போடா..! ஆவி, பேய் என்பதெல்லாம் வெறும் புரளி."நான் என்னை ஒரு தடவை விடாது பிடித்த ஒரு தோஷத்திற்கு கூட, எங்கள் அம்மா அப்போது எவ்வளவோ சொல்லியும், பரிகாரமாக சொன்ன அந்த ஒரு ஆவியை நான் கொஞ்சம் கூட கண்டுக்கவேயில்லை தெரியுமா?"1 இது விக்னேஷ்.
அது என்னடா அப்படி உன்னைப்பிடித்த விடாத தோஷம் ?
"அதாண்டா..! இந்த ஜலதோஷம்..! அதைச் சொல்றான்..!" லேசாக தலைகாட்டிய நகைச்சுவையில் நண்பர்களின் ஆவிப்பற்றிய பேச்சின் கவனம் லேசாகவும் கலைந்தது.
"இல்லைடா..!! நான் என் அனுபவத்தை சொல்கிறேன். இவ்வளவு சொல்லியும், அது என்னடாவென்று அதிலே ஒரு ஈர்ப்பு வர வேண்டாமாடா உனக்கு...!" என்றான் இவர்கள் பேச்சால் சற்று காட்டமாக அருண் குமார்.
"நீ இப்படித்தான் எதையாவது சொல்லி எங்களை பயமுறுத்துவே ..! அப்புறம் இதெல்லாம வெறும் என்னோட கற்பனை, தமாஷுக்குனு தப்பிச்சிடுவே..!" என்றான் இருவருக்கும் பொதுவான சமாதானமாய் குரு.
" இல்லைடா..! இது என் நிஜமான அனுபவம். எப்போதும் போல் இதிலே போய் விளையாடுவேனா.. !!!! நான் சொல்வது உண்மை. என்னை நம்பு..! டேய் பிரகாஷ் நீயாவது என்னை நம்பு... "அருண் சற்றே காட்டம் குறைந்து கருணை தேடும் பாவத்தில் பேசினான்.
" நீ என்ன சொன்னலும் சரி..!! நான் இந்த ஆவி. பேய்'னு எதையும் நம்ப மாட்டேன். இந்த உலகத்துல நாம்தான் உடலோடு நடமாடும் பேய்கள். நாம்தான் பிறருக்கு நம்மையறியாமல், ஒரு பேயின் குணத்தோடு தொந்தரவுகள் தந்தபடி இருக்கிறோம். " இது விக்னேஷின் வாதம்.
"சரி..! சரி!! இருட்டும் நேரத்தில் ஏன் இந்த வாதம்..? வேறு ஏதாவது நல்லதாக பேசலாமே..!! " இது வரை அவர்களது பேச்சை மட்டும் கவனித்துக் கொண்டிருந்த பிரகாஷ் இடைமறித்தான்.
" உள்ளதைச் சொன்னால் உனக்கும் பயமாக உள்ளதா பிரகாஷ்? அதுதான் நான் அன்று பெற்ற அந்த அனுபவத்தை விளக்க வந்தேன். " மீண்டும் சற்று காட்டமானான் அருண்.
" என்னடா உன் பொல்லாத அனுபவம்? அதைத்தான் சொல்லேன்..! கேட்டு விட்டு நம்பலாமா, வேண்டாமா எனச் சொல்கிறேன்." இந்த தடவை எரிச்சலுற்றது விக்னேஷ்.
"அதைச் சொன்னாலும் நீங்க நம்ப மாட்டீங்க..! வெறும் பிரமைன்னும், கப்ஸா விடுறேன்னும் சொல்வீங்க .. ஆனா இந்த தடவை என் கண்ணை நான் நம்பறேன். "என்றான் உறுதியான குரலில் அருண்.
" போங்கப்பா..! இன்னைக்கு சப்ஜெக்ட் இதை சுத்தியே.....! வெறும் போர். நான் கிளம்பறேன். இவ்வளவு நேரம் எங்கேடா போய் ஊரைச்சுத்திட்டு வர்றேனு.... வீட்டிலே திட்டுதான் விழும். எங்கண்ணா மேல இருக்குற கோபத்தை அப்பா என் பேர்லே சேர்த்து வச்சு காட்டுவார். நான் வர்றேப்பா..!" என்றபடி எழுந்தான் பிரகாஷ்.
டேய் இருடா..! நான் அதைப்பத்தி.. முக்கியமா.. நீயும் சேர்ந்து எங்களோடு இருக்கும் போது சொல்லலாமுன்னு வரும் போது, இப்படி கிளம்பிறியே...!! அருணின் குரல் அவனை தடுத்தது.
" டேய்..! அவன் போகட்டுண்டா.. அவன் அப்பா நிஜமாகவே அவனை திட்டுவார். நீ சொல்றதை நாங்க நம்புற மாதிரி இருந்தா நாளைக்கு அவன்கிட்டே மறுபடியும் சொல்லிக்கிலாம்.!! நக்கலான குரலில் விக்னேஷ் இடைமறிக்கவும் அருண் அவனை கோபமாக பார்த்தான். .
அதற்குள் எழுந்து நாலடி முன் வைத்த பிரகாஷுடன் குருவும் கிளம்பவே, தான் சொல்ல வந்ததை கேட்காமல், கிளம்பும் அவர்களையும் அருண் முறைத்தான் .
வானம் இருள ஆரம்பித்தது. இவர்கள் அமர்ந்திருந்த பகுதியை சுற்றிலும் இருட்டு தன் வசமாக்கிக் கொள்ள, அருகாமையில் உள்ள நீண்ட சாலையில் ஓடிய வாகனங்களின் வெளிச்சப் புள்ளிகள் கீற்றாய் இவர்களைத் தொட்டு மறைந்தபடி இருந்தன.
பிரகாஷும், குருவும் கண்களுக்கு தெரியாத தூரத்தில் மறைந்து சாலையை அடைந்து விட்டார்கள். அருண், விக்னேஷ் இடையே தொடங்கிய ஒரு மெளனத்திரையை ஒரு பறவையின் ஒலி கிழித்தெறிந்தது.
"சரி.. வாப்பா.. !! நாமும் கிளம்பலாம். நாளைக்கும் அடுத்த வாரமும் ஒரு இண்டர்வியூ இருக்கிறது கொஞ்சம் படித்து பிரிப்பேர் பண்ணனும்." என்றபடி தானும் மெளனம் கலைந்தான் விக்னேஷ்.
மெளனமாக முகத்தை தன் பக்கம் திருப்பாமல் வேறு புறம் திரும்பியபடி எழுந்து நடந்த அருணின் மனநிலையை புரிந்தபடியாய் அவன் தோளில் கை போட்டு அணைத்தபடி நடக்க ஆரம்பித்தான் விக்னேஷ்.
" அருண் உன் மனநிலை எனக்குப் புரிகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை. உன்னுடன் என் மனது ஒத்துப் போகாததால், உனக்கு எதிராக பேசி விட்டேன். இப்போது சொல். உன் அனுபவத்தை கேட்கிறேன்." என்றதும், அருண் அவசரமாக மறுத்தான்.
"வேண்டாம்.. எனக்கு ஏதோ அன்று தவறாகப்பட்டதை உங்களிடம் சொன்னால், பிரகாஷுக்கும் நன்மை செய்த மாதிரி இருக்குமேன்னு ஆரம்பித்தேன். அவனும் போயிட்டான். இப்போ அதை நினைச்சுப் பார்த்தாலும், ஒரு திகில் என் மனசுக்குள் வருது. ஆனால் இப்ப அதைச் சொன்னாலும், நீங்க யாரும் நம்பப் போறதில்லை." அவன் முகத்தில் தெரிந்த சலிப்பு விக்னேஷுக்கு வியப்பை தந்தது.
" அப்படி என்னடா அவனுக்கு நன்மை தரும்படியாக விஷயம்.? " அவன் குரலின் ஆர்வம் அருணை பேச வைத்தது.
" போன வாரம் பிரகாஷ் என்னிடம் பேசிய போது, அவன் அண்ணன் பாலாவைப் பற்றி கவலைப்பட்டு என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தான். ஒரு வேலையில் நிரந்தரமாக இல்லாமல் ஊர் சுற்றி கொண்டிருக்கும் அவனுக்கு உண்டாகியிருக்கும் பல கெட்ட சகவாசங்கள்... அதனாலே வீட்டிலே தினமும் அப்பாவுக்கும், அவனுக்குமிடையே எழும் யுத்தங்கள் எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அவன் அண்ணன் தீடிரென நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் இடத்திற்கு வந்தார்.கொஞ்ச நேரத்தில் அண்ணனுடன் பிரகாஷும் வீட்டுக்கு கிளம்பி சென்று விட்டான்."
" எங்களிடையே நடந்த அந்த கொஞ்சநேர பேச்சுக்களின் நடுவே அவர் பின்னால் நெருக்கமாக அவர் தோளை தொட வர்ற மாதிரி நிழலாக நிழலாடிய ஒரு பெண்ணுருவத்தை சட்டென பார்த்தேன். பார்த்த விநாடியில் நான் விழி இமைக்கும் நேரத்தில்,அது மறைந்து விட்டதென்றாலும், மாயையாய் புகை மாதிரி அவருக்குப் பின்னால் நெருக்கமாக தோன்றிய அவள் தோற்றம், எனக்குள் ஒரு பய உணர்வை ஏற்படுத்தியது. உடனே பிரகாஷிடம் கூட சொல்ல முடியாதபடி எனக்குள் இன்று வரை ஒரு படபடப்பு. அதுதான் இன்று நாம் எல்லோரும் இருக்கும் போது சொல்லலாமென ஆரம்பித்தேன். "அபரிமிதமான ஒரு பய உணர்வுடன் அவன் சொல்லுவதை கேட்டு கொஞ்ச நேரம் சற்று திகைத்த விக்னேஷ் கலகலவென சிரித்தான்.
" போடா..!! பைத்தியக்காரா..! நல்லவேளை அவனிடம் சொல்லி அவனையும் பயமுறுத்தாமலும், எங்களிடமிருந்தும் செமையாக அடியும் வாங்காமலும் தப்பித்தாய்..!! இனியும் அவனிடம் இப்படி ஏதாவது சொல்லி அவனை பயமுறுத்தி விடாதே...!" என்றபடி அவன் கையை பிடித்தபடி நடந்தான்.
விக்னேஷ் அம்மாவின் சொல்படி சமையலறையை சுத்தப்படுத்தி கொண்டிருந்தான். அம்மா அவள் சமையல் வேலை செய்யும், பள்ளிக்கு அன்று பள்ளி விடுமுறை எனினும் ஏதோ அங்கிருந்து வரச் சொல்லி அழைப்பு வரவே அந்த வேலைக்காக அவசரமாக சென்றிருந்தாள்.
அப்பா இல்லை. அம்மா வளர்த்த பிள்ளையாய் அவளின் சிரமங்களை நன்கு உணர்ந்து வளர்ந்தவன் விக்னேஷ் . ஒரே தங்கை திருமணமாகி அருகிலேயே ஒரு வெளியூரில்....!
தன் திருமணத்தையும் அம்மா செயலாக்க விருப்பம் தெரிவிக்கும் போதெல்லாம் "நல்ல வேலை கிடைத்ததும் உன்னை அமர வைத்து நாங்கள் இருவரும் பார்த்துக் கொள்ளும் வசதி வந்த பின்தான் என் திருமணம்"...! என தள்ளிப் போட்டபடி இருந்தான்.
அம்மா அவசரமாக அரிந்து சமையல் செய்த பூசணி காய்கறி குப்பைகளை அகற்றி சமையலறை மேடையை சிறிது சுத்தம் செய்து விடச் சொல்லி சென்றுள்ளாள். தான் அவசரமாக பள்ளிக்குச் செல்வதால், அதை மட்டும் செய்து விட்டு அவள் வருவதற்கு காத்திராமல் குளித்து, தான் சமைத்து விட்டு சென்றதை சாப்பிடும்படியும் அவனிடம் சொல்லி விட்டு சென்றுள்ளாள்.
அம்மா திரும்பி வருவதற்குள், அதை செயலாற்ற வேண்டுமென, படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு சமையலறை மேடையை சுத்தப்படுத்தும் வேலையில் இறங்கினான் விக்னேஷ்.
அப்படி சுத்தப்படுத்தும் போது கையில் அகப்பட்ட அந்தப் பொருளை வியப்புடன் பார்த்தான் அவன். பூசணிக் காய்களின் விதை தோல் பகுதிகளோடு ஒரு சிம்பிளான ஒரு பொருள் பளபளத்து கொண்டிருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தான். இதை எப்படி அம்மா கவனியாமல் விட்டாள். ஒரு வேளை இது அம்மாவுடையதோ.. ? வீட்டில் எங்கோ இருந்தது இன்று இங்கு வந்து தற்செயலாக காய்களுடன் நழுவி கலந்து விழுந்ததை அவள் கவனிக்கவில்லையோ.. ? இல்லை அவசரமாக சமையலில் ஈடுபட்டதால், இது எப்படி இங்கே வந்திருக்க முடியும் என்ற கவனக்குறைவால் கவனிக்கவில்லையா..? ஆனால், இதை மாதிரி ஒரு பொருளை அம்மா என்றுமே பயன்படுத்தியதாகவும் அவளிடம் இதைப் பார்த்ததாகவும் நினைவில் இல்லையே..! பல வித குழப்பங்கள் அலை மோத சற்று வாய் விட்டே கேள்விகளை எழுப்பினான். அம்மா வந்ததும் இந்த விஷயத்தை சொல்லி சந்தேகம் கேட்டறிய மனம் அவ்வேளையில் பரபரத்தது.
இது என்னுடையதுதான்.. குரல் எங்கிருந்து எந்த திக்கில் வந்தது என புரியவில்லை. காதோரங்களில் கிசுகிசுப்பாக மீண்டும் அதே பதில். ஒரு நொடி தந்த அந்த பிரமையில் உடல் ஜில்லிட "யாரது?" என்றவனுக்கு தன் குரலே ஒரு வித்தியாசமாக ஒலித்தது.
சுத்தம் செய்யும் பணி சில நிமிடம் நின்று போனது. காற்றில் அசையும் திரைச்சீலையை விலக்கிப் பார்த்தது முதல் வாசல் வரை ஒரு முறை சென்று விட்டு வந்தவனுக்கு ஒரு இனம் புரியாத படபடப்பு தோன்றியது.
அம்மா சமையலறை மேடையில் ஒரு ஓரமாக வைத்து கேட்டுக் கொண்டிருந்த வானொலியில் எழுந்த குரலாக கூட அது இருக்குமென தோன்றியதால் அதை ஒரு தடவை குமிழ்களை திருப்பி சரி பார்த்து வந்தான். குரல் தெளிவாக கேட்டதை மீண்டும் ஒரு முறை நினைத்துப பார்த்தவன் ஒரு வேளை தன் மன பிரமையாக இருக்கலாம் என அதை தூரத் தள்ளி வைக்க நினைத்தான்.
மீண்டும் அந்தப் பொருளின் நினைவு வரவே, இது எப்படி இந்த காய்கறி குப்பையுடன் வந்தது என மனதினுள் யோசிக்கவும், காதருகே "இது நிஜமாகவே என்னுடையதுதான்" என்ற அந்த அமானுஷ்யமான குரலும் ஒலிக்க, அடுத்த நொடி தாமதிக்காமல் வாசல் கதவை திறந்து வாசல் படிகளை வந்தடைந்தான் விக்னேஷ்.
அவன் அம்மா வந்ததும் இன்னமும் குளிக்காமல், கொள்ளாமல், சாப்பிடவும் செய்யாது ஒரு விதமான பிரமிப்புடன் இருக்கும் மகனை பாசத்துடன் கண்டித்தாள் .
"உனக்கு நேரமில்லையென்றால், நான் வந்து கூட இதையெல்லாம் செய்வேனே..!!உன்னால் முடிந்தால் செய்து விடு என்றுதான் சொன்னேன். படித்துக் கொண்டேயிருந்தாயா.. ? இப்படி எதுவும் சாப்பிடாமே எப்பவும் ஏதோ படித்தபடி வயிற்றை பட்டினி போடுகிறாயே..! சரி.. சரி..! நீ குளித்து விட்டு சாப்பிட வா..!! நான் எல்லாத்தயும் எடுத்து வைக்கிறேன்....!" என்று அன்புடன் கடிந்து கொண்டு ஆசுவாசமாக ஹாலில் சற்றே அமர்ந்த அம்மாவை கண்டதும், சற்றே பிரஞ்கை வரப் பெற்றவனாய் அவளுக்கு பதிலேதும் சொல்லாமல், விரைவாகச் சென்று சமையலறை மேடையில் அந்த விதைகளோடு கலந்திருந்த அந்தப் பொருளை மட்டும் எடுத்து அலம்பி தன் ரூமில் படிக்கும் மேஜையறையில் பத்திரப்படுத்தி விட்டு குளிக்கச் சென்றான் அவன். மனம் பயங்கர குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது. காரணமில்லாமல், அருண் நினைவு வந்தது. அவனின் பிரமைகள் இப்போது தனக்குமா என யோசித்ததில், "சே..!! இது என்ன நமக்கும் அதே பையித்தகாரதனமாக அர்த்தமற்ற எண்ணங்கள்." என்ற சிந்தனை எழுந்தது ஆனாலும் அந்த பளபளத்த பொருள் சற்று குழப்பியது. அம்மாவிடம் சொல்லி வீணாய் அவளையும் பயமுறுத்தும் எண்ணத்தை அப்போதைக்கு கை விட்டான்.
"அருண்...! நம்ப பிரகாஷ் அண்ணனைப்பற்றி வேறு ஏதாவது விபரம் தெரியுமா உனக்கு..!" தீடிரென விக்னேஷ் ஆரம்பிக்கவும் அருண் திகைத்தான். மற்ற நண்பர்கள் இல்லாத நேரமாக அவன் குறிப்பாக பிரகாஷின் அண்ணனைப் பற்றி கேட்டது அவனை மேலும் வியப்புக்குள்ளாக்கியது.
"ஆமாண்டா... அவன் எந்த வேலையிலும் நிலையாக இல்லாததோடு, அடிக்கடி குடிப்பழக்கம் வேறு.. தினமும் வீட்டில் இவரால் ஏதோ ஒரு பிரச்சனை.. அவன் அப்பாவும்" இவன் எப்படியாவது மனம் மாறி நல்லவனாக திருந்தி விட்டால், எப்படியாவது ஒரு நல்ல பெண் பார்த்து கல்யாணத்தையும் நடத்தி வைத்து விட்டால், முழுதாக மாறி விடுவான்" என்று நப்பாசையுடன் வீட்டில் பேசுவாராம். ஆனா அதுக்கும் இடம் தராமல், யாரையோ தான் விரும்புவதாகவும், அந்த பெண் வீட்டில் "இவனுக்கு கட்டி வைப்பதை விட உன்னை பாழும் கிணற்றில் தள்ளலாம்." என அந்தப் பெண்ணின் அப்பா மறுத்து கூறுவதாகவும், பிரகாஷிடம் தனியே அவன் அண்ணன் கூறியதாகவும் பிரகாஷ் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறான். தீடிரென ஒரு நாள் அவன் விரும்புவதாக சொன்ன அந்தப் பெண் இறந்து விட்டதாக அவன் அண்ணன் கூறியதை நம்பாமல், பிரகாஷ் அவர்கள் உறவின் வழி சென்று விசாரித்த போது, அவள் தானாக இறக்கவில்லை. மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் கிடைக்கவே, அண்ணனை அவன் குடிபோதையில் இருக்கும் போது விசாரித்ததில், "அவளிடம் தான் நடந்து கொண்ட தன் தவறான பல செய்கையால் கூட அவள் மனமுடைந்து இறந்து போய் இருக்கலாம்....!! இல்லை அவள் அப்பா எங்கள் திருமணத்திற்கு மறுத்து வேறு ஒருவனுக்கு மணம் முடிக்கச் செய்த கண்டிப்புக்கு பயந்தும் இந்த முடிவை எடுத்திருக்கலாம்....!! "என்ற உண்மையையும் அண்ணன் உளறியதாக கூறியிருக்கிறான்." அருண் தனக்கு தெரிந்த விபரங்களை நண்பன் கேட்கவும் மடமடவென ஒன்று விடாமல் ஒப்பித்தான்.
" இவ்வளவு நடந்திருக்கிறது.நீங்கள் எங்களிடம் இதுவரை நண்பர்கள் என்ற முறையில் இந்த தகவல்களையெல்லாம் சொல்லவேயில்லையே.. "விக்னேஷ் உண்மையிலேயே வருத்தமாக கேட்டான்.
" இல்லை.. சில சமயங்களில் நாங்கள் தனியே சந்தித்து பேசும் போது அவன் எனனிடம் சில சமயம் அவன் இப்படி வருத்தத்தை ஷேர் செய்வான், நான் அவனுக்கு ஆறுதல் சொல்லுவேன் அப்போது மனம் உடைந்து மேலும் சொல்லுவான். "இது என்ன நல்ல விஷயங்களா? எல்லோரிடம் சொல்லி சந்தோஷபடுவதற்கு..?" என என்னிடமே கேட்டு விட்டு, "நம் நண்பர்களிடம் இதுபற்றி சொல்லாதே..! அவர்களும் இது கேட்டு சேர்ந்து வருத்தப்படுவார்கள். அப்பாவுக்கு தெரிந்தால் எல்லாவற்றையும் எல்லோரிடமும் ஏன் சொல்கிறாய் எனவும் சத்தம் போடுவார்" என கேட்டுக் கொள்வான். அதனால் நானும் இதுவரை யாரிடமும் எதுவும் சொன்னதில்லை. நீயே இன்று கேட்டதால் சொன்னேன். அவன் அண்ணன் நல்லபடியாக மனம் மாறி திருந்தி நல்ல வேலைக்குப் போய் அவங்க அப்பாவுக்கும் குடும்பத்திற்கும் சந்தோஷத்தை தர வேண்டும் என நானும் நினைத்துக் கொள்வேன்.
"நம்ப பிரகாஷுக்கும் அவன் படிப்புக்கேற்ற மாதிரி நல்ல வேலை இல்லையே..! அவங்க வீட்டில அவனோட இரண்டு அக்கா கல்யாணத்துக்கு வாங்கின கடனே இன்னமும் அடைக்க முடியல்லேனு பிரகாஷ் அடிக்கடிச் சொல்வானே..!! அவங்க அப்பா கூட கிராமத்தில் ஏதோ விவசாயம் செய்தும் குடும்பத்திற்கு போதிய வருமானம் இல்லைன்னும் வருத்தப்பட்டிருக்கிறான்... இல்லையா.. ? "விக்னேஷ் தனக்கும் அவனைப்பற்றி சிறிது தெரியுமென்பதை வெளிப்படுத்தினான் .
"ஆமாம். கிராமத்திலே அவங்களுக்கு சொந்தமாக சிறிதளவு நிலத்திலே ஏதோ உதவிக்கு ஆள் வைத்துக் கொண்டு விவசாயம் செய்கிறார். அங்கு நடவு செய்யப்பட்டிருக்கும் பூசணிக்காய்கள் விளைச்சலைப் பார்த்து வரச்சொல்லி அவர் தன் பெரிய மகனை அடிக்கடி அனுப்பி வைப்பார். அப்போது அங்கிருந்து விளைச்சலை கவனித்துக் கொண்டிருந்த வேலையாள் பெண்ணைத்தான் இவன் அண்ணன் பாலா விரும்பியிருப்பதாக பிரகாஷ் கூறியிருக்கிறான். ...! இதையெல்லாம் கூட அவனாக சொல்லவில்லையாம்... கொஞ்ச நாட்களாக அவன் அண்ணன் அங்கு போகும் போது அவளுக்கு பிடித்தமான வளையல்கள்... தலை முடிக்கு வைத்துக்கொள்ளும் கிளிப்புகள் என இவனுடன் கடைகளுக்கு சேர்ந்து சென்று வாங்கிப் போவானாம். கிராமத்துப் பெண் என்பதால் இதையெல்லாம் அவள் விரும்புகிறாள் எனவும் அடிக்கடி கிண்டல் செய்வானாம்.. ." என்று அருண் சொன்னதும், கேட்டுக் கொண்டிருந்த விக்னேஷ் மனதில் தன்னையறியாமல் ஒரு நொடி இனம் புரியாத அதிர்ச்சி எழுந்தது. மனதுக்குள் ஏதேதோ நினைவு வந்து உடலை லேசாக ஜில்லிட வைத்தது.
அதற்குள் பிரகாஷும்,அங்கு வரவே அவர்கள் மேற்கொண்டு ஏதும் பேசாது மூவரும் பொதுவாக வேறு ஏதேதோ பேசி விடை பெற்றனர்.
வேலைக்கான நேர்முகத்தேர்வு ஒன்றுக்கு சென்று விட்டு விக்னேஷ் அப்போதுதான் வீடு திரும்பியிருந்தான். அவனின் ஒரே தங்கை அவன் கிளம்பி போனதும் தன் நான்கு வயது மகனுடன் வீட்டிற்கு வந்திருக்கவே வீடு கலகலவென்றிருந்தது. "மாமா" என்றபடி ஓடி வந்து அவன் காலை கட்டிக்கொண்ட தங்கை மகனை வாரி அணைத்தபடி கொஞ்சம் போது உள்ளிருந்து அவன் தங்கையும் வந்து "அண்ணா.. எப்படி இருக்கிறாய்? போன விஷயம் வெற்றிதானா? அம்மா சொன்னாள்.." என்றாள்..
"ம்..அதெல்லாம் உடனே தெரியுமா? பார்ப்போம்.." என்று பதிலளித்தவன் "நீ எப்போது வந்தாய்? எப்படி இருக்கிறாய்? உன் அவர் வந்திருக்கிறாரா.. எப்படி இருக்கிறார் மாப்பிள்ளை? என சற்று நேரம் அவளுடன் ஆர்வமாக பேச ஆரம்பித்தான்.
"இல்லை அண்ணா..! அவருக்கு ஏதோ வேலையாம்... எனக்கு அம்மாவை பார்க்கனும் போல இருந்ததால் நான் மட்டுந்தான் வந்தேன்.. பக்கந்தானே...! நாளை அவரே வந்து அழைத்துப் போவேன் என்றார். சரி.. நீ சாப்பிட வா..!அம்மா உனக்காகத்தான் இன்னமும் சாப்பிடாமல் இருக்கிறாள்..! சீக்கிரமா உடை மாற்றி விட்டு வா..! என்றபடி குழந்தையை அவனிடமிருந்து கூட்டிச் கொண்டு உள்ளே சென்றாள்.
உடை மாற்றி வர தன்னறைக்கு சென்றவனுக்கு அறையின் சுத்தம் சற்று வித்தியாசமாக உறைக்கவே, தங்கையை அழைத்து, "நீ ஏன் வந்ததும், வராததுமாய் என் அறையெல்லாம் சுத்தப்படுத்தி வேலையை இழுத்துப் போட்டுக் கொள்கிறாய்.!!! என அன்போடு கடிந்தான்.
" அட... போ.. அண்ணா.. நான் ஏன் அப்படி செய்யப் போறேன்.. உன் மருமகன் அப்படி செய்ய வைத்து விட்டான். உன் மேஜையறையை வந்ததும் முதலில் சுத்தம் செய்ததே அவன்தான்..! நீ வந்து கத்தப்போறியேன்னு, அவன் கிழித்து போட்டிருந்த குப்பைகளோடு நானும் அறையை கூட்டிப் பெருக்கி கொஞ்சம் சுத்தப்படுத்தினேன்... அவ்வளவுதான்.." என தங்கை முடித்ததும் அவனுக்கு மனத்துள் ஒரு பதற்றம் வந்தது.
தங்கை அறையை விட்டு நகர்ந்ததும், அன்று தான் வைத்த அந்தப் பொருளை அவசரமாக தேடிப் பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த பளபளப்பான பெண்கள் தலை முடியில் வைத்துக் கொள்ளும் அந்த கிளிப் காணாமல் குப்பைகளோடு போயிருந்தது. அதை எங்கு தேடியும் கிடைக்காததால் மனத்துள் லேசாக ஒரு பீதியும் வந்தது.
மாலை அருணை சந்தித்து தன் மனக்கலக்கத்தை சொன்னால்தான் கொஞ்சம் நிம்மதியாக இருக்குமென அவன் வீட்டுக்குப் போன போது அவன் அங்கு இல்லையென தெரிந்தது. "எங்கு போனான் இவன்..! என யோசித்து கொண்டே வழக்கப்படி நண்பர்கள் சந்திக்கும் இடம் நோக்கி நடந்து வந்த போது, பின்னால் அருணின் அழைக்கும் குரல் கேட்டது.
" விக்னேஷ்...!! உன்னைத்தேடி நான் உன் வீட்டுக்குத்தான் போய் வருகிறேன். உனக்கு விஷயம் தெரியுமா.. ? அதிர்ச்சியோடு படபடத்தான் அருண்..
என்னடா சொல்லு...!! அவன் அதிர்ச்சிக்கு காரணம் தெரியாது விக்னேஷ் கேட்கவும, " நம் பிரகாஷ் அண்ணன் இப்போ ஆஸ்பத்திரியிலே உயிருக்கு போராடிகிட்டிருக்கார்." என அருண் கூறிய வார்த்தைகள் விக்னேஷை அதிர வைத்தன.
என்னடா சொல்கிறாய். .?
"ஆமாம்.. இன்னைக்கு வழக்கப்படி அவர் அப்பா சொல்படி கவனிப்பதற்காக அந்த கிராமத்து வயல் வெளிக்கு போன பிரகாஷ் அண்ணன் எதிரபாராத விதமாக பூசணிக் கொடிகள் காலில் மாட்டிக் கொண்டு தடுக்கி கீழே விழுந்ததில், அங்கிருக்கும பெரிய கல்லில் விழுந்து தலையில் ரத்த காயத்துடன் அடிபட்டு விட்டதாம் உடனே விபரமறிந்து இங்கே ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து விட்டனர். .கொஞ்சம் சீரியஸாகவே உள்ளதாம். டாக்டர்கள் மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவன் அப்பா, பிரகாஷ் அனைவரும் ஆஸ்பத்திரியில் கலங்கிப் போய்... எனக்கு பார்க்கவே மிகவும் கஸ்டமாக இருக்கிறதடா.... !! " கண்கள் கலங்க அருண் சொன்னதும், விக்னேஷும் கண்கள் கலங்கினான்.
"டேய் அருண்..! அந்த பூசணி கொடியை கவனிக்காமல் அவன் கால் தடுக்கி விழுந்திருக்க மாட்டான் என நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய்...? அவன் எப்போதும் அங்கு வழக்கமாக செல்பவன்தானே...! ஒரு வேளை அந்த பூசணிக் கொடி பிரகாஷ் அண்ணன் காலில் தானாக வந்து சுற்றியிருக்குமோ ?" விக்னேஷின் குரலில் இருந்து பயத்துடன் ஒலித்த ஒரு சந்தேக அழுத்தத்தை ஒரு வித வியப்போடும், கலக்கத்துடனும் கவனித்தான் அருண்.
அந்த புரியாத கேள்விகளுக்கு இருவரின் மனதிலும் விடைகள் தாமாக எழுந்து நின்று ஆக்ரோஷமாக ஆடிக் கொண்டிருந்த சந்தேகத்தை ஆசை தீர தின்று தீர்க்க இயலாமல் ஒன்றுக்கு பத்தாக பன்மடங்காக்கி பெருக்கிக் கொண்டிருந்தன. இப்போதெல்லாம் ஆவி, பேய் என யார் சொன்னாலும், விக்னேஷ் மறுத்து ஏதும் சொல்வதில்லை.
முற்றும்.