Pages

Saturday, October 3, 2020

விதியும், கவியும்..

பொதுவாக பிறப்பு எப்படி ஒருவருக்கு மகிழ்வை தருகிறதோ அதற்கு நேரெதிர் இறப்பு. ஒருவர் வருடக் கணக்காக உடல்நிலை சரியில்லாமல், படுத்த படுக்கையாக பிறருக்கு பாரமாக இருந்தால் கூட, அவர் டிக்கெட் எடுத்த இடம் வந்து இறங்க நேர்ந்தாலும், "இன்னும் கொஞ்ச நாள் இருக்கக் கூடாதா? அதற்குள் என்ன அவசரம்.. இப்படி எங்களை விட்டு போகுமளவிற்கு.." என்று ஆற்றாமையோடு, காலம் முழுக்க அவரை, அவர் பிரிவை நினைக்க வைத்து, கண்ணீர் வடிக்க செய்து விடும் அந்த மறைந்த ஒருவரின் பாசம் அனைத்தையும்  முழுமையாக பெற்று வாழ்ந்த  அவரது நெருங்கிய உறவுகளுக்கு....! (ஆனால்  நன்றாக நலமுடன் இருந்தவர் படுத்து நான்கைந்து நாட்களுக்குள் அவரின் இறப்பை அவசரமாக எதிர்பார்க்கும் உறவுகளும் இந்த உலகில் இருக்கிறார்கள். அது வேறு விஷயம்..:) )  

அனைவருக்குமே காதறுந்த ஊசியின் முனை கூட நம்முடன் வாராது என்பது தெரியும். ஆனாலும்  "நான்.. எனது.. என் பொருள்" என்ற எண்ணத்தை, ஒரு ஆழ்ந்த பற்றை இறுதி வரை எவராலும்  விட இயலவில்லை. ஒரு வேளை அது அனைவருக்கான விதியின் சாபமோ? ஒருவருக்கு அவர் வாழ்ந்த காலத்தில் எடுத்த நற்பெயரெனும் புகழ் ஒன்றுதான் அவர்  உடல் மறைந்த பின்னும் சில காலமாவது அவரைச் சுற்றி படர்ந்திருக்கும் ஒரு மாயை. அதுவும் காலப்போக்கில் கரைந்து வேறு பல வடிவங்களுக்கு இடம் கொடுத்து மாறுபட்டு விடும்  இயல்புடையது.  சம்பந்தமில்லாமல் என்ன உளறல் இது? என உங்களை  சிந்திக்க வைப்பதற்கு கொஞ்சம் மன்னிக்கவும். 

இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்பு காலை ஒரு கனவு. ஒரு உறவுக்கு பரிந்து மற்றொரு உறவிடம் பேசுகிறேன். என்ன பேசினேன்.. யார் அந்த உறவுகள்... என்பதெல்லாம் சுத்தமாக மறந்து விட்டது. கனவில் யாருக்கு அனுசரணையாக பேசினேனோ, அவரே  மிகவும் கொஞ்ச நேரத்தில் கோபமாக வெளியிலிருந்து வந்து கையிலிருக்கும் ஒரு இரும்பு  "வாளி" போன்ற கனமான பொருளை என் மேல் வீசுகிறார். முகத்தில் வந்து வேகமாக விழுந்த அதன் பாரம் தாங்காமல் நான் அப்படியே கீழே சுருண்டு விழுகிறேன். கொஞ்ச நேரம் கழித்து என்னுடன் பேசிக் கொண்டிருந்த வேறொருவர் என் பெயரை பல முறை கூவி அழைக்க நான் நனவுலகத்திற்குள் வந்து  விழுந்து அவசரமாக பதற்றத்துடன் எழுந்தேன்.

கனவுகள் பலதும் அர்த்தம் இல்லாமல் சிலசமயம் வருகின்றன. நாம்தான் அதற்கு ஒரு அர்த்தம் உண்டு பண்ணி கலக்கம்/மகிழ்ச்சி என்று அடைகிறோமோ என நான் எப்போதும் நினைப்பதுண்டு. 

எல்லா கனவுகளும் அதன்படியே வாழ்வில் நடப்பதில்லை. சில கனவுகள் நடந்து விடுமோ என்ற பயத்தை  நமக்குள் ஏற்படுத்தி நடத்திக்காட்டி விதியின் அருகில் இருக்கும் தைரியத்தில் நம்மை பார்த்து எக்களிப்புடன் சிரிக்கும் சுபாவம் கொண்டவை. ....சமயத்தில் சில மழையில் நனைந்த தீபாவளி வெடியாய் பிசுபிசுத்து நம்  பயத்தை பற்றிய  அக்கறை கொள்ளாதது போல் ஒதுங்கி விடும் பழக்கங்களை உடையவை.. .. 

அன்றாடம் நாம் பேசும் பேச்சுக்களே, நடந்த விஷயங்களே சில நேரம் கனவாக வருவதுண்டு. பலசமயம் எதற்கும், யாருடனான சம்பந்தமே இல்லாமலும்  கனவுகள் வருவதுண்டு.

 சில கனவுகள் விடியலில் கண் திறந்ததும் மறந்து விடும். ஆனால், இது நான் கண் விழித்ததே இந்த கனவினால்தான் என்பதினால், "இது காலன் என் மீது தன் பாசம் வீசி கொல்லும் கனவாக எனக்கு அன்று காலையிலிருந்து ஒரே கலக்கம்..." ஏற்பட்டது. "அதிகாலை கடந்த அந்தக் காலையில்,  கொஞ்சம் தாமதமான பொழுதில் வந்ததுதான் இந்த கனவு எனவே பலிக்காது என வீட்டிலுள்ளவர்கள் சமாதானபடுத்தினாலும், அன்றைய தினம் முழுதும் கனவின் நிஜப்பார்வைகள் வந்து  என்னை சலனபடுத்தியபடி இருந்தது." அதன் பின் தினசரி வெவ்வேறாக  வந்த கனவுகளில் அது இப்போது மறக்கவும்  தொடங்கி விட்டது. மற்றபடி எப்போதும் நடப்பதை (விதியை) யாரால் தடுக்க முடியும்? 

தான் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் தன் காலிலுள்ள காற்றை நம்பி வாழும்   "இதைப்"  பற்றிய ஒரு சிந்தனையில் எழுந்த ஒரு கவிதை.... பதிவுலகத்தில் எத்தனையோ பேர்களின்  ஆழமான அழகான கவிதைகளை படித்த பின், இதை கவிதை எனச் சொல்வதற்கும் எனக்கு மனமில்லை. . இருப்பினும்.... ஒரு...உரைநடைக் 

கவிதை. . பாராமுகம்...  .

விரும்பிச் சொல்லும்

சிறு விஷயங்களையும், 

விருப்பமின்றி புலம்புவதையும், 

விருப்பத்தோடு ஆமோதித்து, 

வித்தியாசங்கள் ஏதுமின்றி, 

"உச்" கொட்டியுள்ளாய்... 

என் வேதனைகள் தீர்ந்திடவே

வெகு நாட்களுக்கு பின், 

வேலை ஒன்று கிடைத்ததை

வேறெங்கும் சொல்லாமல், 

நான் வீடு தேடி வந்ததும் 

விருப்பமாய் உன்னிடம் பகர்ந்தும், 

உன் முகமும் காட்டவில்லை. 

"உச்" சென்ற  ஒலியும் எழுப்பவில்லை.

இது நாள் வரை என்

பார்வையில் மட்டும் பட்டு, 

என் வெறுமை என்னும்

கனத்த போர்வை விலக்கி, 

பழகிய பாசத்திற்காகவோ ,

இல்லை, நீ இருக்குமிடத்திற்கு

குடக்கூலிகள் என்ற ஏதும்

நிர்பந்திக்காத என்

நியாய உள்ளத்திற்காகவோ, 

பதிலுக்கு உன் விடைகளாய், 

"உச்" சென்ற ஒலியை மட்டும்

பாரபட்சம் ஏதுமின்றி, 

பகிர்ந்து வந்த பல்லியே.. .!

இதற்கெல்லாம் இனியதாய் ஒர்

பதிலேதும் சொல்லாமல்,  

பயங்கர அசட்டையுடன் நான்

பல தடவைக்கும் மேல், 

பாராமுகங்கள் காண்பித்ததில், 

பரிதவித்த ஒரு மனதோடு

இன்று  நீ என் 

பார்வையில் படாமல், உன்

பாதை மாறி போனாயோ...? 

ஒரு வாரத்துக்கு மேலாக இது மேலே பரணின் கதவில் நின்று கொண்டு தினமும் காலையிலிருந்து இரவு வரை பார்வையில் பட்டதோடு மட்டுமில்லாமல்,"எங்கே ஏதாவது உணவு பண்டங்களை சுவைக்கும் ஆசையில் அருகே நெருங்கி வந்து விடுமோ..?" என்ற கவலையில் மேலே ஒரு பார்வையும், கீழே அடுப்பில் ஒரு பார்வையுமாக ஒருவார காலம் தள்ள வைத்தது. பின், என் பார்வையின் சூடு பொறுக்காமல், அது இடம் மாறி அதன் விதித்த விதிப்படி எங்கோ சென்றதில் எழுந்த "கவி" தைதக்கா, தைதக்கா என வந்து குதித்தது. எப்படி உள்ளதென நீங்கள்தான் சொல்ல வேண்டும். 

நான் பதிந்த இரண்டின் இறுதியிலும் விதி என்றதும், விதியின் கணக்கும் ஒரு கவியாக "நானும்" என்றபடி ஆசையோடு வந்துதிக்க, . உங்களுக்கும் ஆட்சேபனைகள் ஏதும் இருக்காதென்ற நம்பிக்கையில் அன்புடன் அதையும் இந்தப் பதிவுக்குள் இறங்க சம்மதித்தேன். 

அந்தக்.. . 

கவிதை..விதியின் கணக்கு... 

பூட்டிய வீடு என்றாலும்,

புழங்கும் வீடாகி போனாலும்,

தினமும், ஒரே மாதிரி 

கூட்டிக் கழித்து, பெருக்கிப்

பார்த்தால், இறுதியில்

குவிவது குப்பைகள்தான்

நம் மனதாகிய மாளிகையிலும், 

அன்றாடம் குவியும் கணக்கற்ற 

குப்பைகளை களைவதும், 

களைந்ததை கழிக்காமல், 

கூட்டிப் பெருக்கி, வகுத்துப் 

பார்த்து பத்திரப்படுத்துவதும்

கடவுள் போடும் நான்கு விதிப்

பயன்களை ஒத்த கணக்குதான். 

அவ்வாறான மனக்கணக்குகளில்

கணக்குகள் பிறழ்ந்தால், 

கணக்கின்றி துயர் பெறும் நாம்

விதி(யின்) விலக்காக வரும் 

விடைகளை மட்டும் விரும்பி, 

நம்முடையதான கணக்கில்

சேர்த்து நம் பயி(முய)ற்சி என்கிறோம். 

இதில் வகைகள் வேறாயினும், 

இறுதி வடிவம் பெறுவது 

விதியின் விருப்பத்தில் விளையும்  

வித்தியாசமற்ற விடைகள்தான்.. 

வலியதாகிய விதியின் கணக்கில்

வரும் விடைகள் அனைத்துமே

அவை ஆரம்பத்திலேயே

வலியுறுத்தி நிர்ணயத்தவைதான்.

விபரங்கள் யாவும் அறிந்தும், 

விபரமில்லாமல், மனம் வருந்தி, 

விதியை சபித்து, நொந்து போவதும்

வாழ்வில் நாம்  பெற்று வந்த 

விதி தந்த  வரங்கள்தான்.. 


இப்பதிவை படித்து  நல்லதொரு கருத்துக்களை தரும் என் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு என் பணிவான நன்றிகள்.... 🙏...