Pages

Friday, June 28, 2019

மூன்றாம் அன்னை...

அனைவருக்கும் வணக்கம்.

கொஞ்ச நாட்களாகவே இந்த "படித்துறை பெரியவர்" சம்பந்தப்பட்ட கதைகள் விதவிதமான கோணத்தில் நம் நட்புறவுகள் அனைவரும் எழுதி வருகிறோம். அவரவர் தத்தம் பாணிகளில் சுவையான கதைகளை கண்களுக்கு முன் நிஜமானவையாக கொண்டு வந்து விட்டார்கள்.

 சமீபத்தில் கூட சகோதரி கீதா ரெங்கன் அவர்கள் இந்த படமின்றி, ஆனால் அந்த பெரியவரின் சோகங்களை கண் முன் கொண்டு வந்து மனதை நெகிழ வைத்து விட்டார்.

எனக்கு தெரிந்த முறையில் நானும் இந்த கதை எழுதி எங்கள் ப்ளாகிற்கு அனுப்பி அனைவரும் படித்து நல்லதொரு கருத்துகளை தந்து என்னை ஊக்கப்படுத்தினார்கள். எ. பிக்கு வந்து கருத்துக்கள் தந்தஅனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இதை மனமுவந்து வெளியிட்ட "எங்கள் பிளாக்" கிற்கு என் மனம் நிறைந்த மகிழ்ச்சிகளையும் மனமார்ந்த நன்றிகளையும் அன்புடன் சமர்ப்பிக்கிறேன்.

இன்றும் எ. பியில் சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் சென்றுவந்த பயணக் கட்டுரையில், கோமுகி ஆற்றை படம் பிடித்து போட்டதை பார்த்தவுடன், அந்த ஆற்றங்கரையும், படிகளையும் கண்டவுடன் இந்த "பெரியவர்"  நினைவு வந்தாக கருத்தில் குறிப்பிட்டுள்ளேன். ஏனோ சோகங்கள் மனதை அழுத்தும் போது இந்த கதைகள் நினைவுக்கு வருகின்றன. என் பதிவிலும் இடம் பெறட்டுமே என்ற ஒரு அழுத்தமான மனச்சலனத்தில் இங்கேயும் பகிர்கிறேன்.
மீண்டும் இங்கு வந்து படிப்பவர்களுக்கும் என் பணிவான  நன்றிகள்.

நன்றியுடன்
உங்கள் சகோதரி.



ஆற்றின் சலசலத்து ஓடும் நீரையே கண் கொட்டாது பார்த்தபடி இருந்தார் விச்சு. உலகத்தின் தாயும் தந்தையுமான ஈஸ்வரனின் பெயரை, பெற்றோர்கள் அன்பாக தன் பிள்ளைக்கு இட்ட பெயராகிய அழகான விஸ்வநாதனை சுருக்கி அவருக்கு கிடைத்த  மற்றொரு பெயர்.

அப்படி  அழைக்கும் போது ஒரு உரிமை வருவதாக ஊர், உறவு அனைவரும் அழுத்திச் சொல்லியே அந்தப் பெயர் மறு பேச்சின்றி ஸ்திரமாக நிலைத்துப் போனது.

வாய் தன்னிச்சையாக மந்திரங்களை ஜபித்தபடி இருந்தாலும், கண்களும் மனமும் தறி கெட்ட குதிரையாக அலை பாய்ந்தபடி இருந்தன.  இன்று என்னவாயிற்று எனக்கு? கேள்விகள் மனதில் பூக்க ஆரம்பித்தன.

மனதுக்குள் ஆயிரம் சிந்தனைகள் இருந்தாலும், கைகூப்பி, கண்மூடி யாருடைய செய்கைகளையும் கண் வழியே மனதில் இருத்தாது, ஓடும் ஆற்றின் சங்கேத  பாஷையான சலசல வென்ற வார்த்தைகளை மட்டும் உள்ளிருத்தியபடி, அந்த ஜீவனுக்குள் இறைவனின் நாமாவளிகளை உச்சரித்து உருவேற்றி இந்த உலகை சற்று மறந்திருப்பதே அவரின் தவமாகும்.

அந்த நேரம் அவரின் ஆத்மார்த்த தவம் செய்யும் நேரம். அதிகாலை எழுந்து காலை கடன்களை முடித்து இந்த ஆற்றங்கரை அழகை ரசித்தபடி, இங்கு வந்து விட்டால், ஒரு இரண்டு மணி நேரம் இவர் தனக்காகவே  ஒதுக்கப்பட்ட நேரமாகவே  கருதுவர்.

இந்த நேரத்திற்காக  அவர் அதிகாலை கண் விழித்ததும், செய்யும் வேலைகளை என்றுமே செய்ய தவறியதில்லை. தன் மனைவி  இருக்கும் போதே அவள் உடல் நிலைக்காக அடுக்களைக்குள் அவளை அதிகம் விடாமல், காலை  காப்பியிலிருந்து இரவு வரை பார்த்து பார்த்து  செய்தவர்.

அவ்வூரின்  உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்று விட்டார் விஸ்வநாதன் . அந்த கால கட்டத்தில் அன்னைக்கு அன்னையாக அவர் மனைவி அவர் கெளரவத்திற்கு பங்கம் வராமல், தாங்கள் பெற்ற மூன்று ஆண் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி, வாலிப வயது வந்ததும் அவர்கள் காலில் நிற்கும் சமயத்தில், மூத்தவனுக்கும், இரண்டாவது பையனுக்கும் மணமுடித்து தன் கடமையை செய்து அவர் தோளோடு தோளாக நின்று துவளாமல்தான் இருந்தாள்.

திருமணமான மூன்று வருடங்களில் வேலை பார்க்கும் இடத்தில்  பதவி உயர்வு பெற்று இரண்டு மகன்களும் வெளிநாட்டில் பணிபுரிய வாய்ப்பு வந்து செல்லும் போதும் மனம் தளராமல்" வாழ்க்கை வசதிகளை அவர்களாவது அனுபவிக்கட்டும்"  என்று மனதாற வாழ்த்தி அனுப்பியவள்தான்.

இவர் "அனைவரும் சேர்ந்திருந்த பழைய காலத்தை எண்ணி  குழந்தைகளை எப்படி விட்டு பார்க்காமல் இருப்பது" என்ற போதும் கூட  சமாதானமாக தேற்றியவள்தான்.  மூன்றாமவன் கல்லூரி முடித்து அங்கேயே ஒரு வேலை கிடைத்து அமர்ந்தவுடன் இவனாவது தங்களுடன் இருக்கட்டும் என்ற எண்ணத்திலோ என்னவோ.... சற்று  ஓய்ந்து சோர்ந்து போனாள்...

இத்தனை நாள் எனக்காகவும்,  குழந்தைகளுக்காகவும்  மாட்டாய் உழைத்து ஓடாய் தேய்ந்த அவளுக்கு நாம் செய்யக் கூடாதா என்ற நினைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக இவர் அவளின் பொறுப்பு புகளை ஏற்றுக் கொண்டார்.

அந்த சமயத்தில் மூன்றாவது பையனுக்கும் தக்க இடத்தில் பெண் கூடி வரவே, மனமொப்பிய திருமணத்திற்கு வெளிநாட்டிலிருந்து இரண்டு அண்ணன்கள், தத்தம் குடும்பத்துடன்  வந்திருந்து குடும்பத்தை கலகலப்பாக்கி, விடுமுறை முடிந்ததும், புறப்பட்டு சென்றனர்.

அப்போதும்  பெற்றோர்கள் இருவரும் சிறிது காலம் தம்முடன் வந்து தங்கலாமென பெரியவன் சொன்ன போது விஸ்வநாதன்  அவசரமாக மறுத்தார்.  புது மருமகளை தனியே விட்டு எப்படி வருவதென்று அந்த பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.  "சரி... உங்கள் செளகரியம். ... " என்றபடி பிள்ளைகள் செல்ல பழைய வாழ்க்கை திரும்பவும் திரும்பியது விஸ்வநாதனுக்கு.

மருமகள் வந்த புதிதில் சற்று  மனம் தயங்கினாலும்,  அவளின் சில இயலாமை நேரத்தில்  இவரின் உபசாரங்கள் தேவையாகி போனதில், காலப்போக்கில் இனிதாகவே  அவளும் அவற்றை ஏற்க தயாராகி விட்டதால் இவரின் சங்கோஜங்கள் மறைந்தே போயின. மாமியாரின் உடல் பலவீனமும்  சற்றே மோசமாக, அவரை கவனிக்கும் பணியில் இவரது  காலை கடமைகளும் அவளுக்கு பழக்கப்பட்டு விட்ட  ஒன்றாயின.....

காலம் "என்றுமே ஒரே மாதிரி திசையில் பயணப்பட எனக்கு விருப்பமில்லை"  என்பதை விஸ்வநாதனின் மனைவியை தன்னுடன் அழைத்துக் கொண்டு சுழன்று சென்று காண்பித்தது.  தன் அம்மாவின் அன்பிற்கு பிறகு அவளின் மொத்த அன்பையும் இவளிடமே பெற்று வந்த விஸ்வநாதன் அவளும் மறைந்தவுடன், ரொம்பவே தளர்ந்து போனார்.

பிள்ளைகள் வந்து துக்கத்தை சுமந்து, ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறி, செல்லும் போது அப்பாவை ஒரு மாற்றத்திற்காக தங்களுடன் வந்து தங்கிச் செல்ல அழைத்த போதும், இவர் மறுத்து விட்டார். சட்டென்று  மனதின் பழைய நினைவுகளை உதறி வர விருப்பமில்லை எனக் கூறி தவிர்த்து விட்டார். பிள்ளைகளும்  மேற்கொண்டு வறுப்புறுத்த இயலாமல், இளையவனிடம் கவனமாக பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு புறப்பட்டுச் சென்றார்கள்.

நெருங்கிய உறவு பிரிந்ததென்றால் காலம் வேகமாக பறக்கும் என்பார்கள். அதன்படி அது காலில் சக்கரம் கட்டிய மாதிரி உருண்டோடிச் சென்றது.  வழக்கப்படி வருந்தும் தன் மனதை செப்பனிட்டபடி,    தன் கடமையை செய்யும் பணியில் விஸ்வநாதனின் நேரமும், பொழுதும் ஓடிக் கொண்டேயிருந்தது.

ஆற்றங்கரை தவம் முடிந்து வந்ததும் உடை மாற்றி உணவருந்தி பேரனோடு சிறிது பொழுதை கழித்த பின் தன்னறைக்குள் சென்று தாழிட்டு கொண்டால் மாலைதான் மறுபடி அவரை காண முடியும். மனைவியின் மறைவுக்குப் பின் தனது அறையில் அமர்ந்து அவர் தன் நாளில் பாதியை எவருடனும் அதிகம் பேசாமல், கழிப்பதை வீட்டிலுள்ள மகன், மருமகளுக்கு வித்தியாசமாக பட்டது. அது போக தன் அலமாரியின் சாவியை தன் பூணூலில்  எப்போதும் முடிந்திருக்கும் அவரை அவர் மகன் உட்பட வீட்டில் அனைவரும் கேலியாக பேசும் போதும் அதை ஒரு நாளும் ஒரு விஷயமாக பொருட்படுத்தியதில்லை....

அன்று மகன் வந்து வாசல் திண்ணையில் தன்னருகே  அமர்ந்ததும் ஏதோ பீடிகையாய் பேச வந்திருக்கிறான் என புரிந்து கொண்டார்.

"அப்பா... நா சொல்றதை நிதானமா கேளுங்க.. இந்த ஒரு மாசத்துல நா எத்தனையோ வாட்டி உங்ககிட்டே எடுத்து சொல்லியாச்சு... நீங்க பிடிவாதமா மறுத்துண்டே இருக்கேள்.. நல்லா யோசிச்சு பாருங்க.. பெரியண்ணா தினமும் ஃபோன் செஞ்சு அப்பா என்ன சொல்றார் ... உன்னோட முடிவு என்னன்னு கேட்டுண்டே இருக்கான்.. . எத்தனை நாள்தான் இந்த வேலையிலேயே கட்டிண்டு அழப் போறே. . உனக்கு  ரெண்டு குழந்தையாச்சு... புரிஞ்சுக்கோங்கிறான்...  நம் மன்னியின் அண்ணாவோட சொந்த கம்பெனிதாம்பா.. நான் பாத்து வைக்கிற அந்த கம்பெனியில நல்ல போஸ்ட்.. போகப்போக நல்ல உயர்வு வந்தா நீயும் இங்க வர்றதுக்கு சான்ஸ் இருக்குங்கிறான்.... எல்லாரும் சேர்ந்திருந்தால் நல்லாதானே இருக்கும்"னு சொல்றான். அவன் சொல்றதுலே என்னப்பா தப்பு? ..... அம்மாவும் நம்மை விட்டு போயாச்சு. இனி இந்த ஊர்ல என்னப்பா இருக்கு? சரி.. உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா இந்த வீட்டை விக்க வேண்டாம்... வாடகைக்கு விட்டுட்டாவது, நாம டெல்லிக்கு போயிட்டா, சீக்கிரம்  அந்த கம்பெனியில ஜாயின் பண்ணி குழந்தைகளும் ஸ்கூல் தேடி கரெக்டா இருக்கும்பா.. அவரும் எத்தனை  நாளைக்கு அண்ணா மன்னிக்காக யாரையும் வேலையிலே போடாம வெயிட் பண்ணிகிட்டிருப்பா சொல்லுங்கோ"... அவன் பேசிக் கொண்டே போனான்..

விஸ்வநாதன் ஏதும் பேசாது நிலம் பார்த்து யோசித்தவர் " அது எப்படிடா?  பழகின இடத்தை விட்டு திடீர்ன்னு எப்படிப்பா கிளம்புறது..... இந்த ஊரும், நீரும் நான் பிறந்ததிலிருந்து எனக்கு பழகிப் போச்சுடா.. அதனால்தான் உன் அண்ணன்கள் அழைச்சப்போ கூட என்னாலே சட்டுன்னு நகர முடியலே... இப்ப கூட நீ மட்டும் வேணா, இல்லையில்லை... நீங்க எல்லோரும் கிளம்புங்கோ....  நான்  எப்படியோ  இங்கேயே இருக்கேன்.. வர்றதை பத்தி அப்புறமா பாத்துக்கலாம்... "

அவரை மேற்கொண்டு பேச விடாது இடைமறித்தான் அவன்.

" அது எப்படிப்பா.. . அம்மா இருந்தாலாவது  பரவாயில்லை... உங்களை தனியே இங்கே விட்டுட்டு நாங்க மட்டும் எப்படி?" இத்தனை நாளா அதுக்காகத்தான் எங்கேயும் போகாமே இருந்தேன்...

" அதானே பாத்தேன். நாம நல்லபடியா முன்னுக்கு வர்றது அவருக்கு என்னிக்குமே பிடிக்காதே.. பெரியவா ரெண்டு பேர் மேலேயும் மட்டுந்தான் இவாளுக்கு அக்கறை... இல்லாம போனா அவாளை மாதிரி நம்மையும் எப்பவோ வெளி நாட்டுக்கு அனுப்பிச்சி அழகு பார்க்க மாட்டாளா?  எல்லாம் சுயநலம்... தங்களுக்காக நம்மளை இங்கே தக்க வைச்சுண்டவர்தானே உங்க அம்மா...அதே போல் இவரும்  இப்போதைக்கு ஏதேதோ பேசி சமாளிக்கிறார்".. . மருமகளின் வார்த்தைகள் சாட்டையால் மனதில் அடிக்க  சடாரென்று எழுந்து தன்னறைக்குள் புகுந்தார் விஸ்வநாதன் ...

" நான்தான் பேசிகிட்டு இருக்கேனே.. நீ எதுக்கு தேவையில்லாமே நடுவிலே வர்றே?" மகன் கடிந்து கொள்வதும், அதற்கு அவள்  "ஆமாம், நீங்க கிளி பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லிண்டே இருப்பேள்.. உங்க அப்பா காதுலே வாங்கனாதானே..
தினமும் ஆத்தங்கரைக்கு போறதும், ஆத்துக்கு வந்ததும் ரூம்லே போய் அடைஞ்கிறதுந்தான் உங்க அப்பாவுக்கு தெரியும். அப்படி என்னதான் இருக்கோ அந்த அறையிலே.... இந்த ஒரு வீட்டை தவிர்த்து வேறு என்ன சொத்தா  இருக்கு நமக்கு? அதுவும் பங்குலே போயிடும்.... கொஞ்சம் முன்னேறி அவங்களை மாதிரி காசு சேர்த்து வச்சாதானே பிற்பாடு நமக்கு செளகரியமா இருக்குன்னு அவருக்கு புரியாதா? என்று கொஞ்சம் சத்தமாகவே முணமுணப்பதும் அவருக்கு கேட்டது.

மறுநாள் காலை வழக்கம் போல்  எழுந்து ஆற்றங்கரைைக்கு நீராட செல்லும் முன் பாலை காய்ச்சி, காப்பி குடிக்கலாம் என அடுக்களை சென்றவருக்கு சற்று அதிர்ச்சி...

காலை கடமைகளை அவருக்கு முன்னமேயே எழுந்து மருமகள் ஆற்றிக் கொண்டிருந்தாள். அவள் பார்வை "இன்னமும் எனக்கு உங்கள் மேல் கோபம் குறையவில்லை" என்றது. கொஞ்ச நாட்களாகவே இவரின் உபசாரங்களை அவள் புறக்கணித்து வந்தவள் இன்று காலை காப்பியிலேயே ஆரம்பித்த  மாதிரி தெரிந்தது.

"நீங்கள் எங்கள் பேச்சை கேட்பதில்லை.... நாங்கள் உங்கள் உதவிகளை மட்டும் ஏற்க வேண்டுமாக்கும்..." என்ற புறக்கணிப்பு கொடி அங்கு பறந்து கொண்டிருந்ததை உணர்ந்தார்.

ஒரு பேச்சும் இல்லாமல் தனக்கு முன் வைக்கப்பட்ட காப்பியை, உணவுப் பொருளை நாம் அவமதிக்க கூடாதென்ற எண்ணத்தில் விழுங்கி விட்டு, அகன்றார் விஸ்வநாதன்.

மகனைப் பற்றியோ, சற்றேறக்குறைய வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டிருக்கும் மருமகளின் நினைவோ "தாத்தா நானும் வருவேன் " என்று தினமும் அடம் பண்ணும் இரண்டரை  வயது பேரனின் பாசத்தையோ, "இந்த தாத்தா எப்பவுமே அப்படித்தான்...  நான் சிறு குழந்தையா இருக்கும் போது கூட என்னை கைப்பிடித்து அழைத்துப்போ....என அப்பா தினமும் சொல்லி அலுத்து விட்டு விட்டார். அப்போதே என்னை கூட்டிண்டு போகாதவர் இப்போ உன்னை மட்டும் எப்படி.? . என்ற அலட்சிய பாவம் கண்ணுக்குள் வார்த்தைகளாய் தெரிய, பள்ளிக்கு தன்னை தயார் செய்து கொண்டிருந்த எட்டு வயது பேத்தியின் கோபப்பார்வையையோ, அவரை என்றுமே எதுவுமே செய்ததில்லை.

இன்றும் மெளனமாக  வழியில் எந்த காட்சிகளிலும் மனதில் பிடிபடாதவராய் நடந்தார்.

"விச்சு.. என்ன இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் போது விடியறதுக்குள்ளே....... காலங்கார்த்தாலே, சீக்கிரமே கிளம்பிட்டே?..
வழியில் தன்னை போன்றவர்களின் கேள்விகளுக்கு, எப்போதும் போல் அமைதியான புன்னகையுடன் பதில் கூறியவாறு ஆற்றங்கரையை தொட்டு விட்டார்.

மேல் துண்டை இடுப்பில் சுற்றிய வண்ணம் வேட்டி சட்டையை துவைத்து வைத்து விட்டு,  ஆற்று நீரின் சலசலப்பு பாஷையை உள் வாங்கியபடி ஆற்றின் படிககல்லின் மேல் அமர்ந்தார்.

அனைவருக்கும் அன்னையாகிய
தாமிரபரணி "எந்தவித கவலையையும் என்னிடம் கூறி விட்டு நிம்மதியாய் இரு" என்றபடி சிரித்தவாறு சொல்லிக்கொண்டே ஓடிக்கொண்டிருப்பது போல் தோன்றியது இவருக்கு.

"பெரியவனும், சின்னவனும் எப்படியோ நல்லபடியா  படிச்சு முன்னுக்கு வந்து இப்போ வாழ்க்கையிலே நல்லாயிருக்காங்க.... அவங்களுக்கும் தலா ரெண்டு பையன்களாகவே ஆண்டவன் கொடுத்திட்டான். அவங்க மேல் படிப்புக்குன்னு நீங்க உங்க அப்பா சொத்து பத்துக்கள் உங்களோடு சேமிப்புன்'னு, அவங்க கேக்கறப்பல்லாம் கொடுத்தீங்க  மூன்றாமவன் உங்களைப் போல்  படிப்பு முடிந்ததும் மேற்படிப்புக்கு ஆசைபடாமே நம்மளோடவே இங்கேயே தங்கிட்டான். இப்போ அவனுக்கும்  கல்யாணமாகி ஒரு பொண்ணும், பையனும் பிறந்தாச்சு... அதனாலே என் பேத்திக்கு எனனோட நகையெல்லாம், உங்க அம்மா வேறு நா கல்யாணமாகி வரச்சே எனக்கு போட்ட நகைகளையும் , இவனுக்கே கொடுக்கலாம்ன்'னு நினைக்கிறேன். உங்களுக்கு சம்மதந்தானே?" என மனைவி தன் கடைசி நாட்களில் முடியாமல் சொன்னது நினைவுக்கு வந்தது.

அவள் கையை அன்புடன் பிடித்துக் கொண்டவாறு, " இப்போது அதுக்கு என்ன அவசரம்... காலம் வரும் போது நீயே உன் பேத்தி பெரியவளானதும்,சந்தோஸமா கொடுக்கலாம்.. "என்று இவர் சமாதானமாக கூறியதும், அவள் ஒரு புன்னகையுடன் இவர் கையை லேசாக அழுத்தி விட்டு மெளனமானாள். அந்த அழுத்தத்தில் "என் விருப்பம் அதுதான்" என்ற தீர்க்கமான முடிவும் இருந்ததை புரிந்து கொண்டார்.

அவளின் கட்டளைப்படி, மனப்பூர்வமாக அவள் தரும் அவளது நகைகள் மட்டுமல்லாது, அவள் பேரில் இருக்கும் இந்த வீட்டையும், தங்கள் காலத்திற்கு பின் தன் மூன்றாம் மகன் மட்டும் அனுபவிக்க வேண்டுமென்று, கடிதம் எழுதி கையொப்பமிட்டு கொடுத்த  ஒரு வாரத்தில்  அவள் மறைந்ததை, அவளின் கடைசி ஆசையை நிறைவேற்ற, தன் மகன்கள் வெளி நாட்டிலிருந்து இம்முறை அம்மாவின் வருட நினைவு நாளுக்கு வரும் போது நிதானமாக பேசி அவர்களின் முழுச் சம்மதம் பெற்று எழுத்து பூர்வமாக  தன் மகனிடம்  தான் ஒப்படைக்க நினைத்ததை கூறும் முன் தப்பாக புரிந்து கொள்ளும் மருமகளை நினைக்கையில் சங்கடமாக இருந்தது விஸ்வநாதனுக்கு.

மூன்று மகன்களையும் பார்த்து, பார்த்து ஒன்று போல் வளர்த்து விட்ட தன் மனைவி  தன் சம்பாத்தியத்தில் சாமர்த்தியமாக குடும்பமும் நடத்தி, சேமித்ததை, குழந்தைகள் படிப்புக்கு செலவழித்த போதும் துணையாய் நின்று ஊக்கமும் அளித்தாள்.  அதே சமயம் கடைசி மகனின் படிப்பில் அவனின் விருப்பத்திற்கு மாறாக அவனை நிர்ப்பந்தப்படுத்தவும் இல்லை.

 "ஒருவரை கட்டாயப்படுத்தி செய்யும் செயல்களில் வீண் சிரமங்கள்தான் பலனாக கிடைக்கும்" என்பாள். அவன் விருப்பம் அவன் எந்த வேலைக்கு போக வேண்டுமென தீர்மானிக்கிறானோ அது படி நடக்கட்டும்.  யார் மீதும்  விருப்பமின்றி சுமைகளைை  ஏற்ற கூடாது என்பது அவளின் எண்ணம்...... வீட்டுக்கு   வந்த மருமகளால், அவளுக்கு எத்தனை உபகாரங்கள் செய்து மகளாக பாவித்தும், இதை புரிந்து கொள்ளும் பக்குவம் வரவில்லையே? ஏன்? வேறொரு இடத்திலிருந்து வந்ததினால் இவர்கள் பாசங்களை உணரும் சக்தி இல்லையோ?

இவ்வளவு பெரிய பொறுப்பை தன் மகனின் வருவாய் குறைவு என்ற ஒன்றின் காரணமாக,  அதனால் அவன் மேல் கொண்ட கழிவிரக்கத்தினால், தன் வசம் ஒப்படைத்து விட்டு போயிருக்கும் மனைவியுடன், மானசீகமாக தனிமையில் இருந்து பேசுவதை தவறாக நினைப்பதை எண்ணி வருந்தாமல் இருக்க அவரால் இயலவில்லை.

அம்மா தாமிரபரணி.... "அம்மாவின் மடி சாய்ந்து வேதனைகளை பகிர்ந்து கொள்வது போல், உன்னிடமும் என் அன்னையின் நினைவுகளை, மனைவியின் பிரிவுகளை சொல்லி, உன் ஓட்டத்தின் நடுவிலேயே உன்னையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறேன்.

அன்னைக்குப்பின் அன்னையாக வழி நடத்தியவளிடம் பேசாமல், மனதின் பாரங்களை யாரிடம் சொல்வது? இரண்டு அன்னைகளை வாழ்வில் தவற விட்டு விட்டேன். என் பாவங்களை போக்கி, என் மனதை உன் தூய்மையால் நிறைத்து, என் உடல் அழுக்கோடு, உள்ளத்து அழுக்கும் களைந்து, என் உணவாகி, உயிராகி கலந்த உன்னை எப்படி பிரிவேன்? இருவரை பிரிந்த பின், இப்போது உன்னையும் விட்டு பிரிந்திருக்கச் சொன்னால் எப்படி? அதை நீயும் நானும் எப்படி சகிக்க முடியும்?  என் உயிர் இருக்கும் போது  அந்த சம்பவம் நடந்து விடுமா? தாயே.. பதில் சொல்லு...

மனசின் விம்மலுடன் முகம் மூடிய கூப்பிய கரங்களில் கண்களிலிருந்து வழிந்த நீர் கை விரலிடுக்குகள் வழியாக வெளிப்பட்டு தாமிரவருணி நீருடன் கலந்து கொண்டது.

இப்போதும்  உன்னிடந்தான் என்னோட ஆற்றமைகளை சொல்ல முடியும். அம்மா தாமிரபரணி.... . அன்னையாக உன் தோள் சாய்ந்துதான் தினமும் என் சுமைகளை உன்னிடம் இறக்குகிறேன்.." மனதினில் மந்திரங்களுக்கு முன்பாக வார்த்தைகளை கோர்த்த மாலைகளாக தொடுத்து அன்னை தாமிரபரணிக்கு மனதுக்குள்ளாகவே சூட்டினார்.

அம்மாவிடம் சஞ்சலங்களை கூறிய பிறகு வருத்தம் வடிந்து, பறவையின் லேசான இறகை போல், மனசு நிம்மதியை சந்தித்த மாதிரி இருந்தது.

எழுந்து மெள்ள படி இறங்கி நீரை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டவர், ஒரு நமஸ்காரத்துடன் நீரில் அமிழ்ந்து தன்னை தூய்மை படுத்திக் கொள்ள துவங்கினார். காலை இன்னும் ஒர் அடி எடுத்து வைத்து நகர்ந்த போது சட்டென பள்ளமான இடத்திற்கு சென்று விட்டதை உணர்ந்தார். மேலெழும்ப விடாமல், இத்தனை நேரம் அமர்ந்திருந்த கால்கள் பிடிவாதம் பிடிக்க  இன்னமும் நீரின் அடியில் தன உடல் இழுத்துச்செல்வதை உணர முடிந்தது.
அந்த நேரத்திலும் தன் பூணூலில் இருந்த தன் அலமாரியின் சாவியை இன்று யதேச்சையாக கழற்றி தன் மனைவியின் புகைப்படம் இருக்கும் மேஜையின் மேல் அவளருகே வைத்து விடடு  வந்ததை  உறுதிப்படுத்திக்கொண்டார்.

ஐயோ..  இந்த விச்சு மாமா நேத்து மணல் எடுத்த இடத்தில் ஆழத்தில் மாட்டிக் கொண்டார் போலும்... ஆளேயே காணோமே....சீக்கிரம் யாராவது வந்து காப்பாத்துங்கோ.....

இவ்வளவு நாழி இங்கேதான் உட்கார்ந்திருந்தார்... இப்பத்தான் குளிக்க கீழே இறங்கினார்... சீக்கிரம் இங்கே வாங்கோ..வாங்கோ..

கூச்சல்கள்... யாராரோ அலறும் சத்தங்கள் லேசாக காதில் மோதி தேய்ந்தன.. மனசு லேசாக போன மாதிரி உடம்பும் காற்றில் மிதப்பது போல் தோன்றியது. நினைவு சறுக்கல்கள் நடுவே, தான் வேறு இடத்திற்கு செல்வதையும்  உணரமுடிந்தது.

நெஞ்சில் ஏற்பட்ட வலி நடுவே "விச்சு, நீ பிறந்ததிலிருந்து, அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் என அனைவருக்கும் உன் கடமைகளை சரியா பண்ணிட்டே... இன்னமும் ஏன் வருத்தப்பட்டு மனசை வருத்திக்கிறே?. . எங் கூட வர்றியா?  உன் அம்மாக்கள்கிட்டே உன்னை பத்திரமா சேர்த்துடுறேன். நிம்மதியா இருக்கலாம். வர்றியா... மென்மையான குரல் ஒன்று காதருகே கேட்டது.

விச்சுவிற்கு தன் பயணம் சுகமாக இருப்பது போல் அவருக்கு தோன்றியது.

சற்று நேரத்தில் "விச்சு, என் கிட்டே வந்துட்டியா  கண்ணே"  அம்மாவின் குரல் மிக அருகிலேயே கேட்டது.

கரையில் ஒரே கூச்சலும், கும்பலுமாக இருந்தது.தாமிரபரணி தன் இயல்பு மாறாமல் எப்போதும் போல் சலசலவென்று சத்தமிட்டபடி ஓடிக்கொண்டிருந்தாள்.
========================================

இது என்னுடைய பதிவில்  நூற்றி எழுபத்தைந்தாவது வெளியீடு என நினைக்கிறேன். இன்னமும் இருபத்தைந்து எழுதினால்.. இருநூறுகளை சந்திக்கலாம். ஆனால் கணக்கு "அவனிடந்தான்" உள்ளது. அவன் கணக்கில், அவன் இந்த கணக்கை யெல்லாம்  பார்க்க மாட்டான் என்பதினால் வந்த கணக்கிற்கு மகிழ்ந்து கணக்கிட்டு காட்டி விட்டேன். 🙏😀

Tuesday, June 25, 2019

கதம்ப புகைப்படங்கள்..

சூரியனின் விண்ணப்பம்.... 


மழை வருது.. மழை வருது... குடை கொண்டு வா..! வெண்மேகமே..


இதோ.. இதோ.. நீ சொல்லி நான் மறுத்திருக்கிறேனா? காற்றுக்கும் தூது சொல்லி விரைவுபடுத்தி விட்டு குடையுடன் வருகிறேன். ஆனால், அதற்குள் மழை மேகங்களின் அன்பு பிடிக்குள் காணாமல் போய் விடாதே.!


 அட..! நீ சொன்னவுடனே மழை மேகமும்  என்னுடன் உடனே ஆஜர் ஆகி விட்டதே.! ஐயோ பாவம்.! இந்த குருவியாரும் நனைந்திட போறாரே.! " குருவியாரே, மழை வருவதற்குள் பத்திரமான இடத்தை தேடு  போ.. போ.. உம் சீக்கரம்.."


மழை, மழை...எங்கும் சூழ்ந்த மழை.! சூரியனின் கட்டளைப்படி அவனுக்காக குடை கொண்டு வந்து தந்தாலும், கரு மேகங்களுடன் நானும் ஐக்கியமானதில், குடைகள் கை தவறி காற்றுடன் கலக்கின்றனவே.! என்ன செய்வேன்?


மழை வருவதை எச்சரித்து விட்டுப்போன வெண்மேகத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனால் உன்னை எங்கே தேடுவேன்? மழை வந்தால், எங்களுக்கும் சந்தோஷந்தான்.! நீ சொன்னவுடனே விரைவாக வந்த மழைக்கு ஒதுங்க எங்களுக்கு இப்போதைக்கு இந்த வீட்டு கம்பிகள்தான் அடைக்கலம்.


வரும் மழைக்கு குடை பிடிக்க வேண்டி சூரியன் வெண் மேகத்தை கேட்டான். வந்த மழை  பெய்து முடிக்கும் வரை எங்களை விரட்டாதே இருக்கும் இவ்வீட்டவர்களின்  கொடை மனந்தான் எங்களுக்கு குடை.


மழை வந்ததும்,  ஓட்டை குடை கொண்டு வந்து தந்த வெண்மேகங்களும், கரு மேகங்களாக மாறி, குடையும் பலவீனமாகி தாங்காது  காற்றரசன் கொண்டு போனதும் நல்லதற்கே..! கழுவிய பித்தளை தாம்பாளமாய் எப்படி ஜொலிக்கிறேன். இந்த ஆறும் அதற்கு சாட்சி. .!( அட.! நீங்களும்  அதனிடம் கேட்டுத்தான் பாருங்களேன்..!)


மழை பெய்தாலும், பெய்து நின்றாலும்,  இரவில் எங்களுக்கும்  ஒடுங்கிக் கொள்ள குருவி விட்டுச் சென்ற இந்த ஜன்னல் கம்பிகள்தான்.


ஏய்.! இந்த இருட்டிலே என்னை தனியா விட்டுட்டு எங்கே போனாய்? எனக்கு பயமாயிருக்கிறது என்பது ஒரு பக்கமிருந்தாலும், உனக்குத்தான் இருட்டிலே தனியா போக கொஞ்சமாவது தைரியமிருக்கா?


ஹப்பாடா.! ஒரு வழியா வந்திட்டியா? இப்ப இந்த இருட்டிலே நாம் இருவர்தான் ஒருவருக்கொருவர் துணை. நாளை காலை மழையின் விடாப்பிடியான பிடியில் மறைந்திருக்கும் சூரியன் களைப்புத்தீர வெளி வந்ததும், நீ யாரோ.! நான் யாரோன்னு பறந்து போயிடுவோமோ...! அப்படி போக மாட்டோம்னுதான் நம்புகிறேன். நாளையும் என்னுடன் துணையாக இருப்பாயா ?

மலர்களின் ரசனை...


வானம் நமக்கு தோழன்.. காற்றும், மழையும் நண்பன். காற்றில் பொன்னூஞ்சல் ஆடி இலை மெத்தை தேடி நாம் வந்த வேளை இது..!


ஆகா.. இந்த பாட்டை  முன்பே எங்கேயோ.....எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே.!  சரி.! சரி.! எங்கே கேட்டாலும், அந்த வானமும், காற்றும். மழையுந்தான் நமக்கும் தோழன், நண்பன் எல்லாமும்.. நாமும் அந்த பெருசின் உடன் பிறப்புகள்தானே! இதோ இந்தப் பாட்டையும் கொஞ்சம் கேளு...


மலர்களிலே பல நிறம் கண்டேன்.. திரு மாலவன் வடிவம் அதில் கண்டேன்.


பச்சை நிறம் அவன் திருமேனி....


பவள நிறம் அவன் செவ்விதழே....


மஞ்சள் நிறம் அவன் தேவி முகம்....


வெண்மை நிறம் அவன் திருவுள்ளம்....


மலர்களிலே பல மணம் கண்டேன்.  திரு மாலவன் கருணை மனம் கண்டேன். 


பாடல் எல்லாவற்றையும் கேட்டாயா? என்னவொரு ரசனை இந்த மலர்களுக்கு. நாம்தான் கொஞ்சமும் எவ்வித ரசனையுமின்றி நெடிதுயர்ந்து வளர்வதிலேயே கவனமாக இருந்து விட்டோமோ ?


அப்படியெல்லாம் ஒன்றுமில்லை... நம்மை படைத்தவன் சொல்கிற கடமையைதான் செய்கிறோம். சூரியன் தன் பாதுகாப்புக்கு "குடை கொண்டு வா" எனச் சொல்வதற்கு காரணமாயிருந்த மழையையே நாம்தான் தோற்றுவிக்கிறோம். அந்த பெருமையொன்றே  நமக்கு போதாதா? மேலும் நம்மிடையே மலர்களையும், காய் கனிகளையும் உண்டாக்கும், மரங்கள் இல்லையா? யாருக்கு எது கிடைக்கிறதோ அது தப்பாமல் அவர்களுக்கு கிடைக்கும்.


 உண்மையான பேச்சு.! இப்படி பூங்காவில்,


கண்களுக்கு விருந்தாக, சோர்வுறும் ஒரு மனதிற்கு இதமளிக்கும் விதமாக,


பார்க்க வரும் அனைவருக்கும், பார்வையாளர்களாக நாங்கள் வளர்ந்து நிற்கவில்லையா ?


பூவும், காயுமாக பலனளிக்கும் விதமாக நாங்களில்லையா? ஒவ்வொருவருக்கும் ரசனைகள் மாறுபடும். இந்த உலகத்தில் நம்மை ரசிப்பவர்களும் இருக்கிறீர்கள். அந்த திருப்தி போதும் நமக்கு...




ஆவ்... என்ன விவாதமிங்கே.! பொல்லாத ரசிப்புக்கு பெயர் போனவர்கள் இவர்கள்... காட்டின் ராஜாவாக கவலைகள் ஏதுமின்றி உலாத்திய  என்னை வலுக்கட்டாயமாக கொண்டு வந்து  இந்த சிறு இடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க வைத்து வேடிக்கை பார்க்கிறார்கள். கூண்டுக்குள் நடமாடும் இவர்களை நான் கூட்டின் வெளியிலிருந்து பார்ப்பதாக அவ்வப்போது கற்பனை செய்து கொள்கிறேன். இல்லையென்றால், என் ஒரு உறுமலுக்கு இவர்கள் அந்த கூண்டிலிருந்து வெளியே ஓடி விடுவார்கள். எங்கே...!.!.! கூண்டை திறந்து ஒரு நடை உள்ளை வந்து என்னைத் தொட்டு, என்னுடன் பேசி ரசிக்கத் சொல்லுங்கள் பார்க்கலாம்.... தினமும் ஓராயிரம் பார்வைகளை சந்திக்கிறேன். ஒன்றிலும் ரசிப்புத் தன்மையே இல்லை....



அதென்னவோஉண்மைதான்..  நான் நடந்து வரும்போதெல்லாம் என்னைப் பார்த்து, என் நடையை பார்த்து ரசிக்காது, கையிலிருக்கும் சின்ன ஒளிப் பெட்டியை இயக்கி, அதில் என்னை அவர்களுடன் இணைத்துக் கொள்வதிலேயே நாட்டமாக இருக்கிறார்கள். என்னவோ போ. ! இந்த நடையில் கால் ஓய்ந்ததும் படுக்க இடம் போட வேண்டியதுதான்!....

ஆங்காங்கே எடுத்த படங்களை இணைத்து ஒரு கதம்பமாய்... ரசித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 🙏