Pages

Friday, April 26, 2019

செல்வங்கள்..


அந்த காலத்தில், பொதுவாக பெரியவர்களை வணங்கும் போதும்., திருமணங்களில் பெரியவர்கள் மணமக்களை வாழ்த்தும் போதும், "பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க.!" என்று வாழ்த்துவது வழக்கம்.  "பதினாறு" என்பது பதினாறு வகையான செல்வங்களை குறிப்பது என்பது நாமெல்லோரும் அறிந்ததே.! இருப்பினும் நகைச்சுவைக்காக அப்பப்பா.. ஒன்றிரண்டையே சமாளிக்க முடியலே.. இதிலே பதினாறு வேறேயா? என்று பதினாறையும் குழந்தைச் செல்வமாக மட்டுமே குறிப்பிட்டு தெரிந்தோ , தெரியாமலேயோ கிண்டல் செய்பவர்கள் வேறு ரகம்.  இதில் தெரிந்து வாழ்த்தியவர்கள் இவர்களின் நகைச்சுவையை ரசிப்பதை தவிர  வேறு  வழியில்லாதவர்களாக ஆகி விடுவார்கள்.

இந்த பதினாறு வகையான செல்வங்களை  ஒரு மனிதனுக்கு அன்புடனே தந்தருள வேண்டுமென ஆதிகடவூரில் வாழ்ந்தருளும்  அன்னை அபிராமி அம்பிகையை வேண்டி அவளருள் பெற்ற அபிராமி பட்டர் இவ்வாறு  உளமுருக பாடியுள்ளார். 


அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம் அழகுபுகழ் பெருமை இளமை அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள்வெற்றி ஆகுநல் லூழ்நுகர்ச்சி தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ சுகானந்த வாழ்வளிப்பாய் -(அபிராமி அந்தாதி பதிகம்)


இந்த பதினாறு செல்வங்களும் ஒருவரது (அது ஆண், பெண் இரு பாலாராகிலும் சரி) வாழ்வில்  அனைத்தும் ஒருசேர கிடைக்கப் பெற்றால், அவரை விட புண்ணியம் செய்தவர்கள் இந்த உலகில் வேறெவரும் இல்லை என்றே கூறலாம்.  ஆனால் மேற்கூறிய அனைத்தும் முற்றிலுமாக அனைவருக்கும் கிடைக்குமா என்றால் அது சந்தேகந்தான்..! 


பொதுவாக அக்காலத்தில், படிப்பறிவு மிகவு‌ம் இருப்பவர்களுக்கு, மேற்கொண்டு படிக்க வசதி (பணம்) இருக்காது. பணமிருப்பவர்களுக்கு கல்வியறிவு சற்று அலட்சியம் காட்டி சென்றுவிடும். அப்படியே இரண்டும் அமைந்தாலும், நோயோ, வேறு வகையான தொந்தரவுகளோ அமைந்து நீண்ட நெடுவாழ்வு  குறைந்து போய் விடும். இல்லை.. நல்லபடியாக திருமணம் நடந்து இல்லறவாழ்வு நன்றாக இருந்தாலும் குழந்தைச் செல்வம் இல்லாது ஆயுள்  முழுக்க கவலைகளை சுமக்க நேரிடும். இப்படி ஒன்றிருக்க ஒன்றில்லாது அமைவதைதான் "விதியின் செயல்" என ஏற்றபடி, காலம் நம்மையும் காலத்தை நாமுமாக கடத்தி  வந்தோம். 


இப்போது காலத்தை நாம் அனுசரித்து போகிறோமா ? இல்லை காலம் நம்முடன் அனுசரிக்கிறதா? புரியவில்லை... ஆயினும் "தனமெனும்" பணம் மட்டும் அதுவும் தெய்வ சங்கல்பமாக ஒரு மனிதரின் வாழ்க்கையில் அமைந்து விட்டால், உலகில் எதை வேண்டுமானாலும் பெறலாம் என்ற நிலை வந்துள்ளது. மேலைநாடுகளிலும் சென்று உயர் கல்விகள் பெற தகுந்த வசதிகள் , வாழ்வில் அத்தியாவசிய தேவைகளை, இல்லை, தத்தம் ஆசைகளை நிறைவேற்றி கொள்ளும் வசதிகள், எந்த நோய்க்கும் தீர்வாக மருத்துவ வசதிகள், எமனுடன் இயன்ற வரை போராடும் துணிவு, இப்படியான வாழ்வுக்கு பணமிருந்தால் போதுமென்ற நிலை உருவாகி விட்டது. 


அன்னை, தந்தையையும், அன்பையும், தவிர அனைத்தையும் பணம் கொடுத்து வாங்கி விடலாம் என்று சொல்வார்கள். ஆனாலும் ஒரு உயிரின் முதலும், முடிவும்  என்றுமே "படைத்தவன்"  கையில்தான் உள்ளது என்பதையும் அனைவருமே உணர்ந்துள்ளோம். ஒரு உயிரின் "முடிவின்" நிமிடத்தை "அவன்" எழுதிய பின் அந்த நேரத்தை மாற்றியமைக்க நாம் பணத்தைக் கொண்டு எவ்வளவு பேரங்கள் "அவனுடன்" நடத்தினாலும், நிச்சயம் தோல்வி நமக்குத்தான் என்பதும் நாம் அறிந்ததே... 


இந்த செல்வம் இல்லாதவர்கள், அமையாதவர்கள்.. ஏழைகள் என முத்திரை குத்தப்பட்டு சமூகத்தில்  ஒர் ஓரமாக ஒதுக்கப்படுகிறார்கள். அவர்களது வாழ்க்கை  எல்லாவற்றிலும் ஒரு கேள்விக்குறியாக அமைந்தாலும்,  பலருக்கு, மற்றச் செல்வங்கள் ஒரளவு துணையாக நின்று அவர்களது வாழ்வை நகர்த்திக் கொண்டு நகர்கிறது. 


பணத்திற்கு அதிபதியான அன்னை மஹாலக்ஷ்மியும் நிலையாக ஒரிடத்தில் தங்காமல், உலகில் அவரவர்களுடைய பூர்வஜென்ம புண்ணியத்திற்கு ஏற்ற மாதிரி ஒரு குறிப்பிட்ட காலங்களுக்கு மாறிக்கொண்டேயிருக்கும் தன்மை உடையவள். அதன்படி ஏழை, பணக்காரன் ஆவதும், பணக்காரன் தீடிரென்று நொடித்து  பணவசதிகளை இழப்பதும்,  கர்மாக்களின் கணக்குப்படி நடந்தவாறே உள்ளன. பிறப்பிலிருந்து, இறப்பு வரை கஸ்டஜீவனம்  செய்வதும், இல்லை பிறப்பிலிருந்தே பணத்தில் புரண்டு வாழ்வில் சகல சௌபாக்கியங்களை பெறுவதும் அவரவர் ஊழ்வினைப் பயனே.! 


ஒரு கதை...

ஒரு முனிவர் சிறுவயதிலிருந்தே சுக போகங்கள்அனைத்தையும் துறந்து பக்தியுடன் காட்டில் தவமியற்றி வரும் போது. அன்னை மஹாலஷ்மியானவள் அவரிடம் சிறிது காலம் தான் தங்கியருள வேண்டிய நிர்பந்தத்தை உணர்த்தி, அவர் வாழ்க்கையோடு உடனிருப்பதாக சொல்லி வந்து நின்றாள். முனிவர் முதலில் மறுத்தாலும், அவளின் கடமையை செய்ய விடாது  தடுப்பது தர்மமகாது என எண்ணி ஒப்புதல் தந்தார். ஆயினும், "அம்மா வரும் போது சொல்லிக் கொண்டு வந்த நீ என்னை விட்டு போகும் போது சொல்லிக் கொண்டு செல்ல வேண்டும்" என வேண்டுகோளுடன் கூறியதும் அதற்கு மஹாலக்ஷ்மி சம்மதித்து அவருக்கு அருள் புரிய தொடங்கினாள்.

அதை சோதித்து பார்க்க விருப்பம் கொண்ட முனிவர், அந்நாட்டு அரசனின் விருப்பமின்றி  சில செயல்களை அவனுக்கு எதிராக வலுக்கட்டாயமாக செய்யப் போக அன்னையின் அருளினால், அவையனைத்தும்  அரசனுக்கு நலம் பயக்கும் செயல்களாக மாறி முனிவருக்கு பெருமையையும், புகழையும் ஏற்படுத்தி தந்தன.


முனிவரின் அத்தனை தவறான செயல்களையும் உடனிருந்து அரசனுக்கு அனுகூலமாக மாற்றுவித்தவள் அன்னையே.! இதை முனிவரும் உணர்ந்து கொண்டார். சில காலங்களுக்குப்பின் அரசனின் நன்மதிப்பையும், நாட்டு மக்களின் மரியாதையையும் பெற்று அரசனின் விருப்பத்திற்கேற்ப மறுப்பேதும் கூறாது அரண்மனையிலேயே தங்கியிருந்தார் முனிவர்.


ஒரு நாள் முனிவர் தனக்கென்று கிடைத்த அபூர்வ மாங்கனியொன்றை  அதில்  அரண்மனையிலேயே இருக்கும்  அரசனுக்கு எதிரிகள் விஷமேற்றி யிருந்ததை  அறியாமல் அரசனுக்கு தரும் போது, அரசனும் தம் மதிப்பை பெற்ற முனிவர் தந்ததாயிற்றே எனஆர்வத்துடன் அதை உண்ணப் போகும் தறுவாயில், அரண்மனை வைத்தியரால் அந்த உண்மை கண்டுணரப்பட, முனிவரின் மேல் கோபம் கொண்ட அரசனின் மனைவி, அமைச்சர்  ஆகியோர் முனிவரை ஈவிரக்கமின்றி கொல்லும்படி ஆணையிட்டனர். 


அரசன் அதை தடுத்து "எத்தனையோ தடவை தன்னை காத்தவரை கொல்ல வேண்டாம். அவரை காட்டுக்கு அனுப்பி விடுங்கள்"என உத்தரவிடவே மறுநாள் அவரை காவலாளிகள் கடுமையான இழிச்சொற்கள் கூறி, காட்டில் கொண்டு விட்டனர். செல்லும் வழியெங்கும் மக்களும் அவரை தூற்றினார்கள். அவரும்  மாங்கனியை அரசனுக்கு தருவதாக அரசன் இருப்பிடம் நோக்கிச் செல்லும் போது  அன்னை மஹாலக்ஷ்மி அவர் முன் தோன்றி, " குழந்தாய்.! இன்றுடன் உன்னுடனான என் வாசம் முடிந்தது. ஆதலால் நான் உன்னை விட்டு அகலுகிறேன்" என கூறி விட்டு மறைந்ததை நினைவு கூர்ந்தார். 


அன்னையின் துணையினால், தன் வாழ்வில், ஏற்பட்ட மாற்றங்களையும், ஆண்டியாக வாழ்ந்த தான் அரமணை வாசத்தில் வாழ்ந்ததையும், புகழும், பெருமையும், தேடி வந்ததையும், இன்று அவள் அகன்றதால், பழையபடி காட்டிற்கு  இழிசொற்கள் சூழ வந்ததையும் கண்டுணர்ந்த முனிவர், அன்னையின் புகழ் பாடி அவளை தொழுது விட்டு தம் பழைய தவ வாழ்க்கையை எவ்வித சலனமுமின்றி தொடரவாரம்பித்தார். 


இந்தக் கதை அனைவரும் அறிந்ததுதான். அந்த முனிவரைப்போல உன்னதமான உள்ளத் தூய்மையும், எதையும் சமமாக ஏற்கும் மனோபாவமும் சாதாரண மனிதர்களுக்கு கைகூடி வராது. எத்தனைப் பிறப்பெடுத்தாலும் பிறவிகள்தோறும், சிந்தனையும் செயலும் இறைநாமத்தையன்றி வேறெதுவும் வேண்டாத பண்பை அடைந்திருக்க வேண்டும். அத்தகைய பண்பை அடைய ஆசைகளை களைந்தெறியும் கலைகளையும் கற்றிருக்க வேண்டும். இவ்விதமான அசுர சாதனைகளை அம்முனிவர் சென்ற பிறவிகளில் செய்திருந்ததால் அவருக்கு காடு மேடு அனைத்தையும் சரிசமமாக எடுத்துக்கொள்ள எளிதில் சாத்தியமாயிற்று. 


"பணமென்றால் பிணமும் வாய் திறக்கும்" என்பது முதுமொழி. ஆனால்,"காதறுந்த ஊசியும் வாராது கடைகாண் வழிக்கே"என்று உண்மை உணர்ந்து உபதேசித்தார்  பட்டினத்தார். இத்தனைக்கும் அவர்  தன் இளமையிலிருந்தே பணத்திலே  அதிக நாட்டம் கொண்டு இரவு பகலாக உழைத்து பணமீட்டி, பணத்தால் அத்தனை வசதியும் அனுபவித்து, ஒரு காலகட்டத்தில் ஊழ்வினையின் நல்லருளால்  ஞானம் பெற்றவர்.. அவ்வருளும் அனைவருக்கும் எளிதில் வாய்த்து விடாது. அதற்கும் எத்தனையோ பிறவிகளில் "அவனருளை"  அநேக சிரமங்களிடையே சேகரித்திருக்க வேண்டு்ம். 





இதை குறித்து பகிரும் போது இந்த அருமையான பாடலும் நினைவுக்கு வந்தது. அதையும் பகிர்ந்துள்ளேன்.

மேற்கூறிய இந்த பதினாறு வகையான செல்வங்கள் பெற இன்னும் எத்தனை பிறவியோ? ஆனால் இந்த  பதினாறு வகையான அர்த்தங்களை இந்தப் பிறவியில் படித்துணரலாம் எனத் தோன்றுகிறது. அதை உங்களோடு பகிர்ந்துள்ளேன். நீங்களும் இதை ஏற்கனவே படித்திருப்பீர்கள்.. எனினும் என் பதிவையும், பதிவோடு இதையும் படிப்பீர்கள் என நம்புகிறேன். 


நன்றியுடன் உங்கள் சகோதரி... 

      -----------------------------------------------
பதினாறு வகையான அர்த்தங்கள். 

எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...

2]தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்*.
[இது எனக்கு பிடித்த முதல் வரிகள்-உங்களுக்கு...?]


3] உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...

4] குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்.

5] வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்.

6] ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது *ஊமையாய்* இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது *செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள்.

7] சங்கடங்கள் வரும் போது *தடுமாற்றம்* அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது *தடம்* மாறாதீர்கள்.

8] வளமுடன் [பணமுடன்] வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சனைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி *நீங்கள்* நன்றாக அறிவீர்கள்.. யார் உண்மையான நண்பர்கள் என்று...?
[இது எனக்கு பிடித்த இரண்டாவது வரிகள்-உங்களுக்கு..? 

9] ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு-நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு *நீங்கள்* மட்டுமே காரணம்.

10] நீங்கள் சிரித்துப் பாருங்கள்! உங்கள் முகம் உங்களுக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பாருங்கள்; உங்கள் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.

11] அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.

12]வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய  பேச்சையும் கேட்பவர்.

13] எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.

14]நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை *முட்டாள்* என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழு 
*நம்பிக்கையையே* ஆகும்.

15] அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் *திறமை* படைத்தவன் என்பதே அர்த்தம்.

16]மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை.
அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!