Pages

Sunday, May 31, 2015

நட்பை தேடி...

வணக்கம் நட்புறவுகளே.!



மூன்று வாரங்களாக வலையில் உலாவ இயலாமைக்கு முதலில் மன்னிக்கவும்..

இராமாயணத்தில், இராமர் கடலை கடந்து யுத்ததிற்குச் செல்ல அனுமான், ஜாம்பவான், சுக்ரீவன் போன்றவர்கள் பாறைகளைக் கொண்டு பாலம் அமைத்து உதவிகள் செய்த போது அணில்களும் தன் பங்காக சிறு சிறு கற்களை சிரமத்துடன் புரட்டிப் போட்டு இராமனிடம் நற்பெயர் வாங்கி சிறப்புற்றதாம். அதன் அடையாளமாக இராமர் தன் நன்றி கலந்த அன்பை தெரிவித்து, அதை தன் கையில் ஏந்தி பாசமாக அதன் முதுகில் தடவி சிரமத்தை குறைத்து ஆசுவாசபடுத்திய காரணத்தால்தான், அணில்களின் முதுகில் அவர் கை விரல்களின் தடமாக மூன்று கோடுகள் உள்ளன, என இன்றளவும் அந்தக் ௬ற்று நம்ப படுகிறது. அது மாதிரி தமிழை சிறப்பிக்கும் வகையில் வலையுலகில் சிறப்புற பயணித்து வரும் பெரும் ஜாம்வான்களிடையே அதே தமிழ் மேல் உள்ள சிறு ஆர்வத்தால், நானும் ஒரு அணிலாக உலாவிக் கொண்டிருக்கிறேன் என்பதை 2014 டிசம்பரில் அணிலாக நான் என்ற என் பதிவில் சுட்டிக் காட்டியிருந்தேன். அந்த அணிலின் கடமைகள்இன்னமும் சிறிது காலம் அணிலாக நீ வந்தால் சுற்றி வந்தால் நன்று.” என அன்பான கடமையுணர்வோடு எச்சரித்ததால் கடமையை கருத்தில் கொண்டு மீண்டும் காணாமல் போய் விட்டேன். மன்னிக்கவும்.

ஆயினும் வலையுலகில் சகோதரத்துவ உறவோடு என்றும் இருக்கிறேன் என்ற எண்ணம் இந்தஅணிலுக்கும்ஒரு நிறைவான மன உற்சாகத்தை எந்நாளும் தந்து கொண்டேயிருக்கிறது. அது என்றும் குறையாமலிருக்க அந்த ஆண்டவனை மனதாற வேண்டிக் கொள்கிறேன். அடிக்கடி காணாது போய் நடுநடுவே எட்டிப் பார்க்கும் என்னை (இந்த அணிலை) மறவாதிருக்கும் அன்புள்ளத்தினர் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்




நான் படித்ததில் பிடித்ததை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 
இதை ஏற்கனவே நீங்கள் படித்து அறிந்திருந்தாலும், எனக்காக மீண்டும் படிப்பதற்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.


"விலகி நிற்பவர்கள் வெல்லுவதில்லை
வெல்ல நினைப்பவர்கள் விலகுவதில்லை:
நீல் ஆம்ஸ்ட்ராங்...
இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்...
ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?...
பல பேருக்கு தெரியாது...
அவர், எட்வின் சி ஆல்ட்ரின்...
இவர் தான் நிலவுக்கு சென்ற
அப்பல்லோ விண்கலத்தின் பைலட்... அதாவது விமானி...
ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர்.
மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக
நியமிக்கப்பட்டார்...
நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர்.
மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்
பட்டார்...
அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி...
இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து, "பைலட் பர்ஸ்ட்"... என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.
இடது காலை எடுத்து வைப்பதா?... வலது காலை எடுத்து வைப்பதா?
என்றல்ல...
"‘நிலவில் முதன் முதலில்
கால் எடுத்து வைக்கிறோம்.
புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது.
புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’"...
தயக்கத்தில் மணிக்கணக்காக
தாமதிக்கவில்லை...
சில நொடிகள்தான்
தாமதித்திருப்பார்...
அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது, "கோ-பைலட் நெக்ஸ்ட்..."
நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்...
உலக வரலாறு ஆனார்...
உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது...
திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின்
காரணமாக தாமதித்ததால்
இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.
முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும்
என்பது மட்டுமல்ல... தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்...
இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...
ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது...
நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி...
பலருக்கு தன்னுடைய தவறுகளை கலைவதில் தயக்கம்...
தவறுகளை தட்டிக் கேட்க தயக்கம்...
அடுத்தவர்களை பாராட்டுவதில் தயக்கம்...
ஏன், சிலருக்கு இந்த தகவலை நண்பர்களுக்கு பகிர கூட தயக்கம்...
சரியானதை செய்ய தயங்கினால், தவறானதை தான் செய்ய கொண்டிருப்போம்...
எனவே, நல்ல விஷயங்களில்...
தயக்கத்தை தவிர்ப்போம்...
தலைநிமிர்ந்து நிர்ப்போம்."


படங்கள்: நன்றி கூகுள்

Sunday, May 10, 2015

மனதோடு நான்...

நீ கற்றது கைமண் அளவு ௬ட இல்லை. ஆனால் கனவு மட்டும் கடலை விட பெரிதாய். ..இன்னும் அதனினும் பெரிதாய்….ஆகாயம் அளவு இருக்குமாஇல்லை அதை விடவும் பெருசா..சே! சே! இதுரொம்ப பேராசை.. இது எப்படி சாத்தியமாகும்?  இதை எவ்வாறு நீ சாதித்துக் காட்டுவாய் ? மனசு கேலியாய்  குதித்துக் கொண்டே இடித்துக் காட்டியது.
  
நீ கனவில் எப்பவாவது கட்டிய அழகிய கோட்டைகளை ௬ட இடித்து தள்ளி விடட்டுமா?” என்று தைரியமாக என்னை அணுகி கேட்டது.”

அதுசரி! இப்ப அதை இடிச்சிட்டு அந்த இடத்திலே என்ன பண்ண போறே..? இருக்குற இடத்தைஃ பிளாட் போட்டு வித்து  பணம் சம்பாதிக்க போறியா? இல்லை யாருக்காவது தானமா எழுதி தந்து போற வழிக்கு புண்ணியம் சம்பாதிக்க போறியா? அட.. என்னதான் செய்யப் போறே, சொல்லேன்?” என்று சள்ளென்று ஒரு நிமிஷம்  கோபப்படவும், மூஞ்சியை தூக்கி வச்சுகிட்டு, இரண்டு நாளா பேச்சு வார்த்தை  எதுவுமில்லாமே, ஒரே டல்லா எதுலேயும் பிடித்தம் காட்டாது சோம்பேறியாய் ஆனது.

அப்பறம் வந்த கொஞ்சுண்டு கற்பனைக்கு மதிப்பு கொடுத்து கொஞ்சமா சாதனையின் முதல் படியருகே இருந்த ரொம்ப தூரத்துக்கு அப்பால் காலை எடுத்து வைத்து, பெற்ற அன்னையிடம்,” எனக்கு சாதனை பட்டியலில் இடம் பிடிக்கனும்னு ரொம்ப ஆசைம்மா.!”  நான் எப்படியாவது இதில் சாதித்து காட்டுவேனா? சொல்லேன்.! என்னையும் சாதனையிலே சிறந்தவங்கன்னு எல்லோரும் ஏத்துக்குவாங்களாம்மா.? என்று கேள்விகளாய் கேட்கும் போதும், அந்த மனசு நகைப்புடன் நையாண்டி பார்வைதான் பார்த்தது.

நீ திருந்தவே மாட்டியா? எல்லாரையும் மாதிரி, எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு எப்பவும் போல இருந்து, எப்படியெல்லாம் வாழலாம்ன்னு யோசிக்காமே, எப்ப பாத்தாலும், ஏதாவது வித்தியாசமா சாதிக்கனும்! நாலு பேர் பாராட்டனும்ஏன் இந்த வீபரீத ஆசை உனக்கு? அதுக்கெல்லாம் ஒரு அதிர்ஷ்டம் வேண்டாமா? “ஆசை இருக்கு தாசில் பண்ண.”! அப்படிங்கிற பழமொழியெல்லாம், உனக்குதானே கண்டு பிடிச்சது.! என்று அதன் மனம் போனபடி கண்டபடி பேச ஆரம்பிச்சதும், இந்த வாட்டி எனக்கு மூடு அவுட் ஆனது .

இந்த பாழும் காலம் இருக்கே,! அதுக்கு யாரையும்  கொஞ்சங்௬ட மதிக்கிறது பிடிக்காது.” நான்தான் கடவுளின் பிரதிநிதி! என்னோட கடமையை நான் பேசாமே பண்ணிகிட்டு போயிட்டே இருப்பேன். உங்களுக்கு எங்௬ட வர்றததுக்கு விருப்பம் இருந்தா வாங்கன்னு ஒரு அழைப்பை வச்சிட்டு பின்னாடி நாம வர்றோமா! இல்லையான்னு ௬ட பாக்காமே ஒரு கவலை இல்லாமே ஜாலியா போய்கிட்டே இருக்கும். எப்படியும் நம்ம பின்னே இவங்க வந்துதான் ஆகனுங்கிறது அதுவே முடிவு பண்ணின மாதிரி ஒரு அலட்சியம், அதோட பிடியிலே யாரு சிக்கிருக்கங்க, இவங்க எப்படிபட்டவங்க, தாங்கற சக்தியெல்லாம் இவங்களுக்கு இருக்கா, இல்லையா ? இவங்களுக்கு கஸ்டத்தை தரலாமா, ௬டாதாங்கற எந்தவித எண்ணமும் இல்லாமே, நான் என்ன தந்தாலும் அதை ஏத்துகிட்டு பேசாமே, நான் கை காட்டுற திசையிலே உன் பயணத்தை நீ தொடர்ந்துதான் ஆகனுங்கிற மாதிரி ஒருஅதிகார மனப்பான்மை. வேறுவழி.? அதுகாட்ற பாதையிலே போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்.!

அப்புறம் என்ன! காலத்தோட உருண்டு எழுந்து (அட! எத்தனையோ அடிகள் வேற பட்டாச்சு! ஐயோ! அப்பா! வலிக்குதே அப்படின்னு கத்தினாலும், வலியோட அவஸ்த்தையை பத்தியோ, வலிமையை பத்தியோ அதுக்கு கவலையே கிடையாது.) நடுவுலே நின்னு கொஞ்சம் திரும்பி பாத்தா, நமக்கு பின்னாடி எவ்வளவு பெரிய பாதை.! இத்தனையுமா கடந்து வந்துருக்கோம்.! எப்படி? இந்த பாதையிலே  சந்தோசமா குதியாட்டம் போட்டு நடந்து வர்றாமே, ஏதோ சிந்தனையுடன், பெரிய மேதாவியா ஆகப்போறோம்னு ஏதோ கோட்டையை பிடிக்கிற மாதிரி, பொழுதை கழிச்சு இப்படி ஓடி வந்திருக்கோமே.!  அப்படின்னு நான் கொஞ்சம் தயங்கி யோசனை பண்ணும் போது, மறுபடி மனசு வந்து முன்னாடி குதிச்சது.

பாத்தியா.? அதுக்குதான் அப்பவே சொன்னேன். உன்னை மாதிரி இருக்கறவங்க எல்லாரையும் மாதிரி  ஜாலியா இருக்காமே, ஏதோ யோசிச்சு, யோசிச்சு பெரிசா என்னத்தை சாதிச்சிட்டே!. ஒண்ணுமில்லை., நீ எதிர்பார்த்த மாதிரி யெல்லாம் உன்னாலே வர முடிஞ்சதா? என்று பேச ஆரம்பிக்க………

இதோ பாரு.! நா படிச்சதை வச்சுகிட்டு ஏதோ என் கனவை இப்பத்தான்  நனவாக்கி வந்துகிட்டிருக்கேன். அது போதும் எனக்கு.! அப்படி கனவை நிலையான கட்டடமாக்கறதுக்கு,  ரெண்டு தூண்கள் ரொம்ப உதவியா நின்னு கொஞ்சம் தாங்கிபிடிச்சது.! இப்ப ஏதோ ஊரு உலகத்துக்கு என்னை தெரியாட்டியும் , ஒரு பத்து பேருக்காவது இந்த பதிவுலகத்திலே என்னை தெரிஞ்சிருக்கு. அந்த சந்தோஷமும் நிம்மதியும் இந்த பாக்கி இருக்கிற ஆயுள் முழுக்க போறும்.!அந்தவகையிலே , அன்னிக்கு எங்க அம்மாகிட்டே சொன்னமாதிரி, ஒரு சாதனையாதான் இது நடந்திருக்கு. இந்த குட்டி சாதனையை என்அம்மாவுத்தான் நான் பரிசா தரப்போறேன். என் அம்மா இப்ப இருந்திருந்தா, என்னோட இந்த சின்ன சாதனையை பாத்தே இது எப்படிப்பான்னுரொம்ப சந்தோசபட்டு இருப்பாங்க. ஆனா, அதுக்கும் நான் கொடுத்து வைக்கலே.! என் குரல் கம்மலில் மனசு நெருடலாய் ஒரு பார்வை பார்த்தாலும், ஏதும் பேசாது கொஞ்சம் அமைதி காத்தது.


அப்போ உன்௬டவே இத்தனை வருசம் ஓடி வந்திருக்கேனே.! என்னதான் நக்கலா உன்னை பேசினாலும், நீ நினைச்சதெல்லாம் நல்லபடியா நடக்கனும், நீ எதிர்பாக்கறது எல்லாம் உனக்கு கிடைக்கனும்ன்னு, என் மனசுகுள்ளேவேண்டிக்கிட்டு உன்௬டவே சுத்தி சுத்தி ஓடிவந்தேனே.! என்னை விட உனக்கு……

ஆமா, எனக்கு என் அம்மாதான் பெருசு.! அம்மாங்கிற ஒரு ஜீவன் என்னை சுமந்து பெத்து பாதுகாக்கலைன்னா, நான் ஏது? என் ௬ட சுத்தி வர்ற நீதான் ஏது? அதனாலே நீ என்ன நினைச்சாலும் எனக்கு என் அம்மாதான் பெருசு.! இந்த பெருமையும் பரிசும் அவங்களைத்தான் சாரும். அவங்ககிட்ட அன்னிக்கு சொன்ன மாதிரி, என்னோட இந்த  சின்ன ஆசையை இன்னைக்குமுருகன்அவர் அருளாலே நிறைவேத்தியிருக்கார். அதுவும் மீண்டும் கனவா போயிட ௬டாதேன்னு, அந்த கனவையே என் பேரோடும் சுமந்துகிட்டு, என் அம்மாவுக்கு, எனக்கு கிடைச்சிருக்கிற   “இந்த நன் நாளை எப்படியாவது பரிசா  தரனும்னு என் உயிரையும்  என் பேரோடு கொஞ்ச நாள் தங்க வைன்னு அந்த ஆண்டவனைவேண்டிக்கிட்டு சுத்தி வந்தேன். இப்ப புரியுதா? இதை எங்கம்மாவுக்குதான் நா தர விருப்ப படறேன்னு”, என்றதும் மனசு லேசான முனகலுடன்….

உன் ஆசை சரிதான்! ஆனாலும், நா சொன்னதையெல்லாம் இவ்வளவு பிரமாதபடுத்தி எழுதுறே.! இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் இவ்வளவு பில்டப்பான்னு உனக்கு நிறையவெகுமதிகிடைக்கிறப்போ  நீ என்னை புரிஞ்சிப்பே.! என்றபடி புகை மாதிரி தோற்றத்துடன் ஒரு வழியாக கலைந்து போகஅப்பாடாஎன்றிருந்தது எனக்கு.

பின்னே என்னங்க.! ஒரு மட்டும் கஸ்டபட்டு எப்படியோ எழுதி தட்டுத் தடுமாறி நூறாவதுபதிவை அணுகிய இந்த சந்தோஷத்தை என் தாயுடன் பகிர்ந்து கொண்டு, அந்த தாய்க்கு பரிசாக தர நான் நினைத்தது தவறா? அதுவும் இந்த அன்னையர் தினத்துக்குகென்றே யதேச்சையாய் அமைந்திருக்கும்  இந்தப்பதிவான நூறை என் அன்னைக்குத் தராமல், வேறு யாருக்கு தருவது சொல்லுங்கள்..?

இத்தனையும் தந்த அந்த ஆண்டவனுக்கும், தூணாகி எனை நிமிர்த்திய என் சந்ததிகளுக்கும், என் எழுத்துக் கட்டடத்தின் உறுதிக்கு உதவியாக  வாழ்த்திப் பாராட்டி அந்த உறுதியில் தொய்வின்றி இத்துனைக்காலம் நான் நிலைத்து நிற்க உறுதுணையாய் வலம் வந்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும், இதை முதலில் பணிவோடு சமர்பித்து பின்  என் அன்னைக்கு இதை பரிசாக்குகிறேன்.

இதில் அன்னையின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாய் , எனக்கு என் மகள் அனுப்பிய சில வரிக் கவிதைகளை இத்துடன் அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணமாக்குகிறேன் . இதை ஏற்கனவே நீங்கள் அறிந்திருந்தாலும், எனக்காக மீண்டும் என் பதிவிலும் வலம் வரும்  இதை படிக்கும் அனைவருக்கும் பணிவுடன் என் நன்றியையும் சமர்பித்துக் கொள்கிறேன்.   
                                                 
             
நன்றி.!  நன்றி!   நன்றி!

இது அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம்.

=================== 
அப்பா கட்டிய 
வீடாயிருந்தாலும் 
அது நமக்கு 
அம்மா வீடுதான் ! 
=================== 
அடுப்படியே 
அம்மாவின் 
அலுவலகம் ! 
அன்பு மட்டுமே 
எதிர்பார்க்கும் சம்பளம் ! 
=================== 
காய்ச்சல் வந்தால் 
மருந்து தேவையில்லை ! 
அடிக்கடி வந்து 
தொட்டுப்பார்க்கும் 
அம்மாவின் கையே 
போதுமானது ! 
=================== 
இவ்வளவு 
வயதாகியும் 
புதுச்சட்டைக்கு 
மஞ்சள்வைத்து 
வருபவனைக் 
கேலி செய்யும் 
நண்பர்களே .......... 
அது, 
அவன் வைத்த 
மஞ்சள் அல்ல ! 
அவன், 
அம்மா வைத்த 
மஞ்சள் ! 
=================== 
டைப்பாய்டு வந்து 
படுத்த அம்மாவுக்கு 
'சமைக்க முடியவில்லையே'
என்கிற கவலை ! 
=================== 
'அம்மா தாயே'
என்று 
முதன் முதலில் 
பிச்சை கேட்டவன் 
உளவியல் மேதைகளுக்கெல்லாம் 
ஆசான் ! 
=================== 
எந்தப் பொய் 
சொல்லியும் 
அம்மாக்களை 
ஏமாற்றிவிடமுடியும் 
'சாப்பிட்டு விட்டேன் '
என்கிற 
அந்த ஒரு பொய்யைத்தவிர ! 
=================== 
அத்தி பூத்தாற்போல 
அப்பனும் 
மகனும் 
பேசிச்சிரித்தால் 
விழாத தூசிக்கு 
கண்களை தேய்த்துக்கொண்டே 
நகர்ந்து விடு்கிறார்கள் 
அம்மாக்கள் ! 
=================== 
வெளியூர் செல்லும் 
பிள்ளைகளின் 
பயணப்பைக்குள் 
பிரியங்களைத் 
திணித்து வைப்பவர்கள் 
இந்த அம்மாக்கள் ! 
=================== 
பீஸ் கட்ட 
பணமென்றால் 
பிள்ளைகள் 
அம்மாவைத்தான் 
நாடுகின்றன ........ 
காரணம், 
எப்படியும் 
வாங்கிக் கொடுத்துவிடுவாள் ! 
அல்லது 
எடுத்துக் கொடுத்துவிட்டு 
திட்டு வாங்கிக்கொள்வாள் ! 
=================== 
வீட்டுக்குள் 
அப்பாவும் 
இருந்தாலும் 
அம்மா என்றுதான் 
கதவு தட்டுகிறோம் ! 
=================== 
அம்மாக்களைப் 
பற்றி 
எழுதப்பட்ட 
எல்லா 
கவிதைகளிலும் 
குறைந்தபட்சம் 
இரண்டு சொட்டுக்கண்ணீர் 
ஈரம் உலராமல் ! 
=================== 
அகில உலக 
அம்மாக்களின் 
தேசிய முழக்கம் 
இதுதான் .......... 
"எம்புள்ள 
பசி தாங்காது! "

#பிடித்திருந்தால்_மற்றவர்களுடன்  பகிர்ந்து_கொள்ளுங்கள்...

அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

கடைசியாக எனக்கு பிடித்த பாடல் ஒன்றை, உங்களுக்கும் பிடிக்குமென்று நினைத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கவிஞர்  வாலி இயற்றிஇளையராஜா இசையமைத்து, எஸ். பி. பியின் அருமையான குரலில் மனம் கவர்ந்த பாட்டு. நானாக  நானில்லை தாயே.!