Pages

Thursday, December 18, 2014

குறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 5

ஆணிவேர்.. 
______________
 முயலுதல் என்பது பல வேராகினும்,
முழுமையாய் நாம் வளர்ந்து நின்றிட,
அதிர்ஷ்டம் என்ற அந்த அதிசயந்தான்,
ஆணி வேராக அமைய வேண்டும்.


வரட்டு ஜம்பம்
_____________________ 
ஆணவமும்,  அகம்பாவமும்,
வறட்டு ஜம்பத்தின்
அடையாள முத்திரைகள்


நேற்று..இன்றுநாளை...
______________________________
இன்று என்றொரு இனிய வசந்தத்தை,
இன்முகம் காட்டி உபசரிக்க  நாம் தவறியதால்,
நாளை என்பது  நல்ல நண்பனாகினும்,
நாம் நடுங்கியே தினமும் நலமிழக்கிறோம

போலி நாகரீகம்
______________________
பொய்யும்,  பித்தலாட்டமும்,
போலி நாகரீகத்தின்
ஸ்வீகார குழந்தைகள்….

எதார்த்தம்..
_______________
அடுத்தவர் தோல்வியை பரிகசிக்கும் போதும்,
நம் வெற்றியைக்கண்டு பெருமிதித்தப் போதும்,
"நேரம்" என்ற பிராயசித்தத்தை எதார்த்தம் 
எகத்தாளச் சிரிப்பொன்றுடன், விட்டுச்செல்கிறது...


படங்கள்: நன்றி கூகுள்

இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்

Tuesday, December 16, 2014

குறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 4

6) அந்திச்செம்மை



பணி சிறப்பென நிலவு புகழ்ந்ததில்,
சூரியனின் களைப்பு முகத்தில்
மேலும் கனிந்தது சிவப்பு


7) கவிதை


வெற்றுத்தாளும், எழுதுகோலும்
பல காலம் போரிட்டாலும்,
இடையில் வந்து குதிப்பது ..


8)   பாராட்டு…..

சாதனைக்கு நீ உயிரோட்டம்
நீ, மட்டும் இல்லையென்றால்,
சாதிப்பது வெறும் சவமாகும்


9)   இறைவழிபாடு….

வாழ்வின் சுகமான நெடும்
பயணத்திற்கு நடத்திடும்
சிறப்பு வேள்விகள்


   10)   கனவு….

பகலில் தொலைத்ததை
தூக்கத்தின் துணையுடன்,
இரவில் பெறும் முயற்சி!


இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்



இன்னும் வளரும்...

Friday, December 12, 2014

இறைவா நீ எங்கும் இருக்கிறாய்…(பகுதி 2)

உன் வேளை சரியில்லையென, வேறுபட்ட மனதோடு சிலர்,

உள் அர்த்தத்தில் வெவ்வேறு விதமாய் சொல்லிச்சென்றனர்.!

நேரங்கள்தான்
 இவையென்று, காலநேரம் பார்க்காமல்,

நேர்த்தியாய் பலர், “நேர்ந்து கொள்ளவும் தூண்டிவிட்டனர்.!
தடுக்கி விழும் போதெல்லாம், தடுக்கி விடும் கோவில்களில்,

தனியாகவிருக்கும் உனை சிறப்பாக பூஜிக்க சில பரிந்துரைகள்,

தப்பாமல் தினம் வந்து, தயங்காமல் என் செவிகளிலே,

தளர்வில்லா பேச்சினிடையில், தவறாமல் வந்தடையும்.!
அத்தனையும் செவிமடுத்து, “நித்தம் நித்தம் உனை மறவாது,

பித்தனைப்போல் சுற்றிவந்து, பலவிதமாய் உன் உரு கண்டும்,

எத்தனைக்காலமாய், ஏங்கி நின்றேன்! உன் இருப்பிடமும் சொல்ல,

இத்தனைக்கும் ஓர்நாள், இன்றுவரை ஏன் எதிர்வந்து நிற்கவில்லை.?
ஆலயம் தொழுவதை அக்கறையோடு செய்து, அனுதினமும் உன்னை

அன்போடு வணங்கி, “அமைவதெல்லாம் உன் அருளால்தான் என

மனதளவில் நம்பி, எதுவும் நயந்து வேண்டாது நீ" தந்ததே போதுமென,

மனதாற இருந்த செயல் மற்றெவருக்கும் தெரியாதன்றோ.?

இவ்வளவும் அறிந்த நீ இடுக்கண் வரும் முன் களையாது,

இருந்தவிடமும் விட்டு நகராது, நான் இத்தனை நாள் கண்ட ஓர்

உருவில் என் எதிரிலும் வாராது, மற்றவர்களோடு மற்றவராய் மறுத்து

உதறுவதும் ஏனோ.? இவ்வுருவிலெல்லாம் நீ இல்லையென்றால்
இறைவா நீ எங்கிருக்கிறாய்….? இறைவா நீ எங்கிருக்கிறாய்….?

இருக்கும் இடத்தை, தெள்ளத்தெளிவாக உணர்த்தாயோ..? என

அரற்றிய குரலுக்கு பதிலாய், அசரீரியாய் மறுகுரல் என் மனதிலிருந்து

அரைகணத்தில் அருமையாகத்தானே விழித்தழைத்தது.!
௬டு விட்டு ௬டு பாயும் உன்னுயிர் ௬ட்டுக்குள்,

௬ர்ந்தே நீயும் பார்த்திருந்தால், என்னுயிரே, உன்னுயிராய்

இயக்கத்தின் அற்புதமாய், இசைந்திருக்கும் அதிசயத்தை,

இன்பமுடன் கண்டுகொண்டு இறைவனாக உணர்ந்திருப்பாய்.!
உன்னையும் அறிந்து கொள்ளாமல், உண்மைதனை புரியாமல்

உன்னுள் குடியிருக்கும் என்னையும் உணரந்து கொள்ளாமல்,

என்னைத்தேடி தினம், எனக்கு தினத்துக்கொன்றாய் பெயர் சூட்டி

என்னையும் துன்புறுத்தி, வாழ்வை எட்டிக்காயாய் திணறடித்தாய்.!
ஆத்மாவும் நானே.! உன்னிலிருக்கும் பரமாத்மாவும் நானே.!

ஆதியந்தம் தொட்டு, உன்னை அகலாதிருப்பவனும் நானே.!

பட்டுவிடும் மேனிக்குள், தொட்டுவிடும் தொலைவிலிருப்பவனை

பற்றிக்கொண்டு வாழாமல், தொலைத்து விட்டழும் தொட்டில்

குழந்தையாய், குமைந்து கொண்டும், குமுறிக்கொண்டும்,

குற்றமுள்ள மனிதனாய், ஏன் குவலயத்தில் வாழுகின்றாய்…? 
இனியேனும், அங்கு இங்கு என்று அலைந்து திரியாமல், உன்

இன்னுயிரை "நானென்று" உணர்ந்து கொண்டு, என்னுயிர்தான்,

அனைத்துயிரும் என்பதையும் புரிந்து கொண்டு, அன்புடனே  

அணைத்து விடு என்னையே.! அருள் பிறக்கும் உண்மையே.!”
ஓடி வந்த குரல் கேட்டு ஒரளவு தெளிவு பெற்றேன்.! நம்முள்

ஒளிந்து கொண்டிருப்பவனும் அவனென்று அறியப்பெற்றேன்.!

இனி விழைந்து தேடி அவனுருவத்தை என்னுள் தக்கவைக்கும்

இன்செயலை விரைந்து செயலாற்ற "அவன்துணை வேண்டினேன்.!

நானடைந்த இவ்வின்பமதை தாமறியச்சொல்லுகின்றேன்.!

தானடைந்தால் போதுமென்று தக்கணமும் எண்ணவில்லை.!
அறிந்தவர் அனைவருமே, தன்னுயிரை தலைவனாக்கி

அனைத்துயிரும்,“அவனே எனும் தத்துவத்தை தலையாக்கி,

அனைவருக்கும் உதவுவதே அவன் சேவை என்று மெய்யாக்கி,

அறிந்தவற்றை பிறர் அறியச்செய்து தலைசிறந்து வாழ்ந்திடுவோம்.

படங்கள்: நன்றி கூகுள்

இறைவா நீ எங்கிருக்கிறாய்….? (பகுதி 1)


இறைவா நீ எங்கிருக்கிறாய்….?

வேழ முகமாய், வேதங்களுக்கு முதல்வனாய்,

வேண்டும் போதெல்லலாம், உனைக் காண்கிறேன்.!

பன்னிருகை வேலனாய், பக்தர்களை ரட்சிப்பவனாய்,

பக்திப்பரவசத்தில் பயணிக்கையில், உனைக் காண்கிறேன்.!


பாம்பணையில் பள்ளிக்கொள்பவனாய், பரந்தாமனாய்,

பாதாதிகேசம் படிய பணிந்துவந்ததில், உனைக் காண்கிறேன்.! 

கைலாயத்தில் நடனம் செய்யும், நடராஜனாய் உந்தனையே,

கைக்௬ப்பித்தொழும் போதெல்லாம், உனைக் காண்கிறேன்.!

அன்னையாய் ஆதியாய், ஆதிபராசக்தியாய் ஆபத்பாந்தவியாய்,

அன்போடு அழைக்கும் நிமிடமெல்லாம், உனைக் காண்கிறேன்.!

சக்தியும், சிவனுமாய், சடுதியில் சங்கடங்கள் களையும்,

சகல தெய்வங்களாயும், சரணிப்பதில் உனைக் காண்கிறேன்.!

ஆண்டுகள் பலதும் கடந்தும், அவனன்றி எதுவும் இல்லையென,

ஆணித்தரமாய் பதிந்த மனதுடனே, அவனியிலே வாழுகிறேன்,

ஆனாலும், பாராமுகம் காட்டி மனம் பரிதவிக்க வைப்பதில்,

ஆனானபட்டவன் நீ என்பதை பரிதாபமின்றி புரிய வைக்கிறாய்.!

நஷ்டங்களும் கஷ்டங்களும் நகர்ந்தே வந்து வாழ்வதனை

நாமறியா போதினிலே, நலம் குலைக்க செய்ததினால்,

சுற்றமென சூழ்ந்தவர்கள், சுற்றிலும் நடந்ததும், நடப்பதும் 

சூழ்நிலைதான், ஊழ்வினைதான் எனச்சுட்டியும் உணராமல்,
இறைவனை முறைப்படி துதிக்கவில்லை.! “நீ எவரிடமும்

இன்முகமும் காட்டவில்லை.! இவ்விரண்டும் நீ செய்திருந்தால்,   

நஷ்டங்களும், கஷ்டங்களும் நாளும் உனை தேடிவந்து

நலமறிய நாடியிருக்காது, என நாச்சுழட்டி நவின்று சென்றனர்.!
இறைவனிடம் பாராமுகம், இனியேனும் காட்டாதே.!” எனச்சுற்றி

இருப்பவர்கள் பகரும் போது இயல்பை காட்டிலும்
 உனைத்

தேடும் உணர்வு, என்னுள் தேயாமல் அதிகமாய் வளர்கின்றது.!

தேடுதல் பணியில் இப்பாராமுகம்,! உனக்கா! எனக்கா! புரியவில்லை .!