Sunday, April 28, 2013

போலி

கல்லூரிக்கு புறப்பட்டு கொண்டிருந்த நளினி ஆளுயர நிலை கண்ணாடி முன் நின்று தன் அழகை தானே ரசித்து கொண்டிருந்தாள். லைட் நீல நிறத்தைக் கொண்ட புடவையும், அதே நிறத்தில் பிளவுசும் அவளை அழகு தேவதையாக்கி கொண்டிருந்தன. இந்த நேரத்தில் மோகன் தன் அருகில் இருந்தால் தன்னை எப்படியெல்லாம் வர்ணிப்பான். அந்த நினைப்பு அவள் உள்ளத்தில் எழுந்ததுமே, அவளது அழகிய அதரங்களில் ஒரு புன்னகை நெழிந்தோடியது.
"நளினி" என்ற குரலைக் கேட்டதும் இனிய கனவுகளில் உலாவி கொண்டிருந்தவள் "பொத்"தென்று கீழே விழுந்து விட்டதை போன்று உணர்ந்தாள்.
சட்டென்று திரும்பி பார்த்தவள் அங்கு தன் அம்மா அன்னபூரணி கையில் பால் டம்பளருடன் நிற்பதை கண்டதும் " என்ன அம்மா ?"
என்றாள் சற்றே சிடுசிடுப்புடன்.
"நளினி, உனக்கு பரீட்சை முடிய இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன?" என்று கேட்டாள் அன்னபூரணி.
"மூன்று...." மொட்டையாக பதில் வந்தது நளினியிடம் இருந்து. தன் அழகை பூரணமாக ரசித்து திருப்தி அடைவதற்குள் அம்மா குறிக்கிட்டு விட்டாளே என்ற எரிச்சல் அவளுக்கு.
"நளினி, உனக்கு பரீட்சை முடிந்து விடுமுறை விட்டவுடன், உன் திருமணத்தை முடித்து விடவேண்டும், என்கிறார் உன் அப்பா. அதற்க்கேற்றாற்போல், வரன்கள் வேறு வந்து கொண்டிருக்கின்றன. நேற்று கூட ஒரு வரன் வந்திருக்கிறது... இதோ, பையனின் போட்டோவை அனுப்பி இருக்கிறார்கள். உனக்கு பிடித்து இருக்கிறதா என்று பார்..."
அன்னபூரணி நீட்டிய போட்டோவை வாங்காமல், ஜன்னல் அருகே போய் நின்றவள், வெளியே தெரியும் நீல நிற வானத்தையே சற்று நேரம் வெறித்து பார்த்துகொண்டிருந்தாள். பிறகு, "எனக்கு இப்போது திருமணம் வேண்டாமம்மா... நான் இன்னும் மேலே படிக்க போகிறேன். இதை நீ தான் அப்பாவிடம் சொல்லி அப்பாவின் சம்மதத்தை வாங்கி தரவேண்டும்.." அவள் குரல் கெஞ்சியது.
"இதையெல்லாம், நீயே உன் அப்பாவிடம் சொல்லிக்கொள். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் நாங்கள் பார்க்கும் பையனைத்தானே  நீ திருமணம் செய்துகொள்ளவேண்டும்.." என்ற அன்னபூரணியின் குரலில் சற்று கண்டிப்பு ஒலித்தது.
ஜன்னல் அருகே நின்று கொண்டிருந்த நளினி திரும்பி, அன்னபூரணியை உற்று பார்த்தாள். பின் "நீங்களெல்லாம், உங்கள் பெற்றோர் பார்த்த பையனையே திருமணம் செய்து கொண்டு என்னத்தை கண்டு விட்டீர்கள்?" என்று எகத்தாளமாக கேட்டாள். அந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், அன்னபூரணி திணறிகொண்டிருந்த போதே, மேஜை மீதிருந்த புத்தகங்களை அள்ளி கொண்டு, "நான் கல்லூரிக்கு சென்று வருகிறேன்.." என்ற சொல்லையும் உதிர்த்து விட்டு சிட்டென பறந்தாள்.
திகைத்துபோய் நின்று கொண்டிருந்த அன்னபூரணிக்கு தன் மகள் கேட்ட கேள்வியும் சரியெனவே பட்டது. ஆம், அவள் செல்வநாயகத்தை திருமணம் செய்து கொண்டு என்னத்தை கண்டு விட்டாள். செல்வநாயகம் பெயருக்கேற்றாற்போல் செல்வத்தின் நாயகராகவே விளங்கினார். பணம் இருந்தது அவரிடம்.. ஆனால் குணம் இருந்ததா?
மூர்க்க தனமாக மனைவியிடமும், மகளிடமும் சத்தம் போடுவார் சில சமயங்களில், ஆனால் பாகாய் உருகுவார் சில வேளைகளில். நிலையற்றது அவரது மனம். அதனால் அவரிடம் மனைவி மகள் வேலைக்காரர்கள் எல்லோருமே எப்படி பேசுவது என்பது தெரியாமல் நடுநடுங்குவார்கள். அவர் அவ்வாறு என்னிடம் நடந்து கொள்வதால் தான் நளினி அப்படி கேட்கிறாள் என்று நினைத்து கொண்டே அறையை விட்டு வெளியே வந்து மாடிப்படிகளில் இறங்கி சமையல் அறைக்குள் புகுந்தாள் அன்னபூரணி.
கல்லூரியிலிருந்து கலகலவென சிரித்து பேசியபடி வெளியேறி கொண்டிருந்த மாணவிகளின் கும்பலிலிருந்து  வெளிப்பட்ட நளினி தங்கள் வீட்டு கார் வந்திருக்கிறதா என்று சுற்று முற்று பார்த்தாள்.
"அம்மா! கார் அங்கே இருக்கு போவோமுங்களா?" குரல் வந்த திசையில் திரும்பினாள் நளினி.
"அடடே!! சண்முகம், நீங்கள் இங்கேயா இருக்கிறீர்கள்? நான் உங்களைத்தான் தேடி கொண்டிருக்கிறேன். அப்போதே வந்து விட்டீர்களா?" என்றாள் நளினி.
"இல்லையம்மா, நான் இப்பொழுது தான் வந்தேன். காரை எடுக்கட்டுமா?" என்றார் டிரைவர் சண்முகம்.
"இல்லை சண்முகம், எனக்கு பிரைவேட் கிளாஸ் இருக்கிறது. அதனால் நீங்கள் காரை விட்டுவிட்டு வீட்டிக்கு போங்கள். கிளாஸ் முடிந்ததும் நானே காரை எடுத்துவருகிறேன்."
"வேண்டாம் அம்மா.. அய்யா சத்தம் போடுவார்.. நீங்க முடிச்சிட்டு வாங்க, நான் அதுவரைக்கும் கார்ல காத்துக்கிட்டு இருக்கேன்."
"வேண்டாம் டிரைவர், நீங்கள் புறபடுங்கள், எனக்கு கிளாஸ் முடிய வெகு நேரம் ஆகும். நீங்கள் அப்பாவின் ஆபீசுக்கு பெரிய காரை எடுத்துக்கொண்டு போக வேண்டாமா."
ஒரு மட்டும் போக மனமில்லாமல் அவ்விடத்தைவிட்டு நகர்ந்த டிரைவரை பார்த்து ஒரு பெருமூச்சுவிட்ட நளினி, அவர் தலை மறைந்ததும் காரை ஸ்டார்ட் செய்தாள். கார் "பீச்"சை நோக்கி விரைந்தது. காரை ஓட்டி சென்ற நளினியின் மனம் மிகவும் சஞ்சலப் பட்டது. காலையில் தான் அவ்வாறு அம்மாவிடம் பேசியிருக்க கூடாதோ! பாவம் அம்மாவின் மனம் எவ்வளவு வருத்த பட்டிருக்கும்.
<<<மோகன் நாளைதானே என்னை சந்திப்பதாக கூறியிருக்கிறார். நாளை சந்திக்கும் போது அவரிடம் தனக்கு பையன் பார்ப்பதை கூறி அவரை பெண் கேட்க வரசொல்ல வேண்டும்.>>>
கார் கடற்கரையை அடைந்ததும் அதிலிருந்து இறங்கினால் நளினி. கடற் கரையில் அவ்வளவாக கூட்டமில்லை. காரை பூட்டி விட்டு கடலை நோக்கி நடந்தாள். கதிரவனின் கிரணங்கள் அவளது பொன்னிற உடலின் மீது பிரகாசித்து அவளது அழகை அதிகபடுத்தியது. அவளும் மோகனும், கடற்கரைக்கு வந்தால் ஒரு படகின் மறைவில் தான் அமருவார்கள். அந்த திசையை நோக்கி கண்களை செலுத்தியவள் அங்கு மோகன் இருப்பதை கண்டு ஒரு கணம் மகிழ்ச்சி அடைந்தாள்.
<மோகன்..> என்று அழைக்க நாவெடுத்தவள், அடக்கி கொண்டாள். அவன் அருகில் ஒருபெண் நெருக்கமாக மிக---மிக----நெருக்கமாக அமர்ந்திருப்பதை கண்டு, மெதுவாக அவர்கள் அறியாமல் கவனிக்காமல், அவர்கள் அமர்ந்திருந்த படகின் மறுபக்கத்தில் அமர்ந்துகொண்டு அவர்கள் உரையாடலை உன்னிப்பாக கேட்கத்தொடங்கினாள் நளினி.
"நான்சொல்வதை நம்பு.. உண்மையாக நான் அந்த நளினியை லவ் பண்ணவில்லை" என்றான் மோகன்.
"அவளையே சுற்றிகொண்டிருந்து, விட்டு அவளை காதலிக்கவில்லை என்றால் எந்த குருடனும் நம்ப மாட்டான்.." என்றாள் அவள் கோபத்துடன். "ஸில்லி, உனக்கு எத்தனை தடவை சொல்வது... எப்படி சொல்வது என்றே எனக்கு புரியவில்லை, நானும் நீயும் வருடகணக்கில் நேசிப்பது அவளுக்கு தெரியாது... நான் அவளைத்தான் உயிருக்குயிராக காதலிப்பதாக, நம்பிக்கொண்டிருக்கிறாள், அந்த பைத்தியகாரப் பெண்... நான் அவளிடம் இருக்கும் பணத்தைத்தான் "லவ்" பண்ணுகிறேன். அவளும், நான் கேட்கும் போதெல்லாம், பணமும் நகையுமாக எப்படியாவது கொண்டு வந்து தந்து கொண்டிருக்கிறாள். நாம் இருவரும் இருக்கும் இந்த ஏழ்மை நிலைக்கு, அவள் தரும் பணம் மிகவும் உதவியாக இருக்கிறது. இன்னும் அவளிடம் இருந்து, ஒருபெரிய தொகையாக கறக்க ஒருதிட்டம் வைத்திருக்கிறேன்.. அந்தபணத்தை கறந்தவுடன் நாம் இந்த ஊரை விட்டு வேறு எங்காவது சென்று திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடலாம்.." என்றான் மோகன்.
"உண்மையாகவா!!! அந்த பெண்ணை அப்படி ஏமாற்றுவது தப்பில்லையா??" அந்தபெண்ணின் குரலில் சற்று பயம் தொணித்தது...
"ஏய்! விட்டால், நீயே அவளிடம் சென்று சொல்லி விடுவாய் போலிருக்கிறதே... அவளை நானா ஏமாறச்சொன்னேன்??? அவளுடைய பணத்திமிர் அவளைஏமாறச்சொல்கிறது." அந்த கயவன் தன் காதலியை சமாதானபடுத்த ஏதேதோ சொல்லிக் கொண்டேயிருந்தான்...
நளியின் தலையில் ஒருபெரிய பாராங்கல்லை தூக்கிப்போட்ட உணர்ச்சியுடன் சிறிதுநேரம் கடலையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். கடல்அலைகளை போல அவள் மனமும் கொந்தளித்தது. மீண்டும் அவர்கள் அறியாமல் காரை வந்தடைந்தாள்.  காரை திறந்து உள்ளே அமர்ந்தவள், இத்தனை நேரம் நெஞ்சில் குமுறி கொண்டிருந்த உணர்ச்சிகளை கண்களின் வழியே கொட்டித்தீர்த்தாள்.
தன்னை உயிருக்குயிராக அவன் காதலிப்பதாக சொன்னதல்லாம் வாயளவே.. <<தன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, ஆபீஸில் ஒருவரிடம் கடன், பணமுடையில் என்னசெய்வதென்று தெரியவில்லை>> என்று அவன் உள்ளம் உருக பேசி தவித்த போது அவளும் இரக்கபட்டு, தன் அப்பா அம்மாவுக்கு தெரியாமல் பணமும் நகையுமாக அவன் கையில் தாரை வார்த்தெல்லாம் வீண்.
இந்த லட்சணத்தில் எனக்கு பணத்திமிராம்... வெறுப்புடன் பல்லை கடித்தவள், நல்லவேளை, இப்பொழுதாவது இவன் குணத்தை பற்றி தெரிந்து கொள்ள கடவுள் ஒருநேரத்தை ஏற்படுத்தி கொடுத்தாரே, என்று நிம்மதி பெருமூச்சு விட்டவளாய் காரை கிளப்பினாள்...
தனிமையாக சிறிது நேரம் இருக்க வந்தவளுக்கு, அந்த தனிமையில் இனிமை  கிடைக்கவில்லை... உள்ளத்தின் வெப்பத்தை போக்க குளிர்காற்றை நாடி வந்தவளுக்கு, அந்த வெப்பம் பன்மடங்கு பெருகியதுதான் மிச்சம்...
நேராக வீட்டை வந்தடைந்தவள், காரை வாசலில் நிறுத்தி விட்டு மாடிக்கு தன்னறைக்கு சென்று உடை மாற்றிக் கொண்டவள், மனஅமைதிக்காக ரேடியோவை திருப்பினாள்..
<<<ஆல்இண்டியரேடியோ... சென்னை வானொலி நிலையம்... திரைகானம்.. முதலில் பட்டாம்பூச்சி என்ற படத்தில்..
டி.எம் செளந்தரராஜன்... எஸ் ஜானகி...>>> அறிவிப்பாளரின் குரலை தொடர்ந்து பாடல் ஒலிபரப்பானது.
"எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி,
அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி,"
பட்டென்று ரேடியோவை மூடினாள் நளினி.
அப்போது காப்பி எடுத்து கொண்டு உள்ளே நுழைந்த அன்னபூரணியை கண்டதும் நளினியின் கண்கள் கலங்கின.
காலையில் அம்மாவை எடுத்தெறிந்து பேசியதிற்க்குத்தான் கடவுள் தண்டனை கொடுத்து விட்டாரோ!!! காப்பியை மேஜை மேல் வைத்து விட்டு "கிளாஸ், முடிந்ததா நளினி, டிரைவர் வந்து சொன்னார்.." என்று கேட்டவாறே அங்கிருந்து நகரமுற்பட்ட அன்னபூரணியை தடுத்து நிறுத்தியது நளினியின் குரல்.
"அம்மா, என்னை மன்னித்துவிடு, காலையில் உன் மனம் புண்படும்படியாக பேசி விட்டேன் உங்கள் விருப்பப்படியே நேற்று பார்த்த அந்த பையனையே கல்யாணம் செய்து கொள்ள எனக்கு சம்மதம் அப்பாவிடமும் நீயே சொல்லிவிடு."
அன்னபூரணி மகிழ்ச்சியுடன் மகளை நோக்கினாள்  "உண்மையாகவா சொல்கிறாய், நளினி? "ஆமாம்! அம்மா, உண்மையாகத்தான் சொல்லுகிறேன்."
மகளின் உறுதியான குரலில் தாய் மிகவும் சந்தோஷமடைந்தாள், அவளுக்கு தெரியுமா தன் மகள் காதல் என்பது ஒரு போலி வாழ்க்கை, பொழுதுபோக்கு என்பதை புரிந்துகொண்டு விட்டாள் என்று......
<<<பெற்றவர்கள் பார்ப்பதிலே பெருமை என்னவோ....
அவர் மற்றவையும் பார்பதினால் நன்மை அல்லவோ.......>>>>
அந்த பாட்டு எங்கேயோ பாடிக் கொண்டிருந்தது..........

No comments:

Post a Comment