Sunday, July 17, 2011

காத்திருப்பு



குடங்கள் காத்திருந்தன!
குடிநீரை சுமந்து செல்வதற்காக!
தண்ணீர் வண்டியும் வந்த பாடில்லை!
தாகம் தீரவும் வழியில்லை!
தொலை தூரத்தில் பார்வையை பதியவைத்து

தொய்வில்லாமல் அமர்ந்திருந்தார்கள் அவர்கள்!
பகலில் பளு சுமந்து பழுதின்றி பணியாற்றி குடிநீருக்காக
இரவில் கண்விழித்து இன்னல் படுபவர்கள்.
ஒருசாண் வயிற்றுக்காக,
எண்சாணையும் வருத்தி
ஆண் பெண் என்ற பாகுபாடின்றி
அனைத்து வர்க்கமும் பாடுபட்டால்தான்,
அரைவயிறு சோறாவது,
அவ்வப்போது பகிர்ந்துண்ணமுடியும் இவர்களால்!

எப்போதோ இணைத்த தெரு குழாய்களில்
எப்பொழுதுமே குடிநீர் வரவின்றி, அதன்
சுவாசம் நின்று போனதில் தெருநாய்களின்
வாசமானது இவர்களின் துரதிர்ஷ்டம்!
தேர்தல் பல வந்தாலும் அடிப்படை
தேவைகளை பெறவில்லை இவர்கள்!
மாலையும் மங்கிவிட்டது...
மயங்கிசரிந்தது கண்ணும் மனமும்...
இருள் சூழ்ந்து இனி "நாளை" என பகல்,
இருளிடம் விடை பெற்று கொண்டது.
இனி இரவில் சிறிது கண் துயின்றால்தான்
இயலாமையை விரட்டிவிட்டு
பகலவன் வருவதற்குள் பதறி எழுந்து
பணி செய்ய இயலும் இவர்களால்!

காத்திருப்போரின் பொறுமை சிதைந்து,
முனங்கல்களும் சினங்களும் வெளிவந்தன.
முடிவில் வந்தது...
குறை தீர்க்கும் குடிநீர் அல்ல!
குமைந்த நெஞ்சங்களின்
வெறுப்பும் வேதனையும் ஏற்படுத்திய
வெதும்பல்களின் விளைவால் வந்தது
இவர்களின் விழி நீர்!
இவர்களின் விழிநீரை சேகரித்து, வடித்திட்டு
வீதிகளில் ஓடவிட்டிருந்தாலும்,
அத்தனை தெருகுழாய்களிலும்
ஆதரவாய் சிறிதுநேரம்
அன்புடன் கொட்டியிருக்கும்.

இனி நாளை பார்த்துக் கொள்ளலாம் என்ற
(அவ) நம்பிக்கையுடன்
களைப்புடன், கனத்த மனதுடன்,
கலைந்து போனார்கள் அவர்கள்.
குடங்கள் மறுபடி காத்திருக்க ஆரம்பித்தன!
நாளை (வாரா) வரும்
குடிநீரை சுமப்பதற்காக !!!

No comments:

Post a Comment